அன்பெனும் பூங்காற்றில் 4 – 2

இளைய மகன்கள் இருவரும் பள்ளிக்கும், கணவன் தங்களின் பலசரக்குக் கடையைத் திறக்கவும் சென்று விட, வீட்டை ஒதுக்கிக் கூட்டிக் கொண்டிருந்தார் ஸ்ரீயின் தாயார் !
‘‘போட்டது போட்டபடி எல்லாம் சிதறிக்கிடக்குது! பிள்ளைகள் வளர்ந்தால் வேலை குறையும் என்று பார்த்தால், இந்த வீட்டில் ஒன்றொன்றாய் கூடிக் கொண்டே போகுது!’’ புறுபுறுத்த படி, கண்ட இடங்களிலும் சிதறிக் கிடந்த பொருட்களை ஒதுக்கிக் கொண்டிருந்தவர், வாயிலில் விடாது ஒலித்த சைக்கிள் மணிச்சத்தத்தைக் கேட்டு, ‘‘ஸ்ரீ… யாரென்று பார்!” என்றவர், “வந்திருக்கிறது மஞ்சு என்று மணிச் சத்ததிலேயே தெரியுதே!’’ தொடர்ந்து சொல்லி, வீட்டின் பின்புறமாக கிணற்றடியில் துணிகளைத் தோய்த்துக் கொண்டிருந்த மகளை அழைத்தார்.
தாயின் குரலைக் கேட்ட ஸ்ரீ, ‘‘நான் குளிக்கக் கூட இல்லை; பத்துமணிக்குத் தானே மாதா கோவிலுக்குப் போவதென்று சொன்னாள்கள்!’’ முணுமுணுத்தவாறே வீட்டின் அருகால் நடந்து முன் பக்கமாய் வந்தவள், மஞ்சுவும் மயூவும் கேற்றுக்கு வெளியில் நிற்பதைப் பார்த்து, ‘‘ஏன்டி, வெளியில் நின்று ஊரைக் கூட்டுறீங்க? உள்ளுக்கு வாங்கோவன்!’’ அழைத்தாள்.
‘துணி தோய்த்த ஈர உடுப்போட நிற்க, ரோட்டில் போகிறவர்கள் எல்லாம் பார்த்துக் கொண்டு போகிறார்கள்.’ மனதில் தோழிகளைத் திட்டிய படி, அசையாது நிற்பவர்களைப் பார்த்து, ‘‘உள்ளுக்கு வாங்களேன்டி..’’ அலுப்புடன் அழைத்தாள்.
பூத்துக்குலுங்கி நிற்கும் நித்தியகல்யாணி மரத்துக்குப் பின்னால் மறைந்து நிற்பவளை பார்த்த மஞ்சுவோ, ‘‘ஏன்டி, ஒன்பது மணியாகப் போகுது; உனக்கு இன்னும் விடியவே இல்லையா? நீ முதல் இங்க வா; உன்னோட எங்களுக்கு வேற கதை வேண்டாம்; முக்கியமான ஒரு விஷயம் கதைக்க வேண்டும்!’’ கறாராகச் சொன்னாள்.
‘இவள்களுக்கு விசரா பிடிச்சிட்டுது! எதையோ கேட்டு உருட்டி எடுக்கப் போறாள்கள். என்னவாக இருக்கும்?’ நினைத்துக் குழம்பிய படி, ‘‘ப்ளீஸ்டி, உள்ளுக்கு வாங்க, நான் டப்பென்று குளித்துவிட்டு வருகிறேன்.’’ கெஞ்சவும், வேண்டா வெறுப்பாய் உள்ளே வந்தவர்கள் சைக்கிள்களை நிறுத்தி விட்டு, வீட்டின் முன் படிக்கட்டில் முறைப்புடனே அமர்ந்து கொண்டனர்.
அவர்களைப் புரியாமல் பார்த்த ஸ்ரீ, ‘‘உள்ளுக்குப் போய் இருங்களேன்டி; இதோ வாறேன்!” காக்காய் குளிப்பொன்றைப் போடுவதற்காக வந்த வழியால் திரும்பி ஓடினாள்!
விறுவிறுவென்று குளித்து, கோவிலுக்குப் போகத் தயாராகி வந்தவள், “ம்மா, அவர்களும் சாப்பிட்டிருக்க மாட்டார்கள்; எல்லோருக்கும் சாப்பாடு எடுத்து வையுங்க!” தாயிடம் சொல்லிவிட்டு முன்னறைக்குள் வந்தவள், தன்னைக் கண்டதும் முறைத்த தோழிகளை முறுவலும் ஆராச்சியுமாகப் பார்த்தாள். “என்னடி நடந்தது? இரண்டுபேரும் ஒரு மாதிரி இருக்கிறீங்க; ஏதாவது பிரச்சனையா?” அன்பாகக் கேட்கவும் செய்தாள்.
“ஆமாம், பிரச்சனைதான்; அதை உன்னிடம் சொன்னதும் தீர்த்து வைக்கப்போகிறாயா?” முறுக்கினாள் மஞ்சு.
“ஹா…ஹா…காலம காட்டி அங்கிளிடம் நன்றாக வாங்கிவிட்டாய் போலிருக்கே! அந்தக் கோபத்தைக் காட்ட நான் தானாடி கிடைத்தேன்?” கேலியாகச் சொன்னவள், தாய் உணவுகளை மேசையில் வைப்பதைப் பார்த்ததும், “பசியில் இருப்பீங்க, வாங்க முதல் சாப்பிடுவோம்; பிறகு சண்டைபோடலாம்.” என்று சொல்ல, “வாங்க பிள்ளைகள்; வந்து நேரகாலத்துக்கு சாப்பிடுங்க.” குரல் கொடுத்தார், ஸ்ரீயின் தாயார்.
அமைதியாகச் சாப்பிட அமர்ந்தவர்கள், காலை உணவாக இடியப்பம் சாப்பிடுவிட்டு, நேரமும் பத்தை நெருங்கவே, ‘‘கோலுக்குப் போய்விட்டு வருவோம்!’’ என்று புறப்பட்டார்கள்.
எதையோ கேட்கப் போவதாகச் சொல்லி கலகலத்துக் கொண்டு வந்தவர்கள், இதுவரை மௌனம் காக்க, பொறுமையை இழந்தாள் ஸ்ரீ!
‘‘என்னப்பா விஷயம்? ஏதோ கேட்க வேண்டும், அப்படி இப்படி என்று சொல்லிவிட்டு இடியப்பத்தை முழுங்கீட்டு அமைதியாக வாறீங்க!’’ முறுவலும் மென்மையுமாக வினவினாள் ஸ்ரீ.
எப்போதுமே பெரிதாக கோபப்படாமல், எதையும் சமாளித்து நடக்கும் ஸ்ரீயில் மிகுந்த பாசம் கொண்ட நண்பிகள் இருவரும், ‘என்ன தான் என்றாலும், நேற்று மறைத்து விட்டாளே! அதுவும் ஏன் மறைக்க வேண்டும்?!’ நினைத்தவாறே, முறைப்பைத் தொடர்ந்தனர்.
ஸ்ரீயின் தவிப்பைப் பார்த்து இலேசாக மனமிரங்கிய மயூ, ‘‘சரிடி, நான் நேராகவே கேட்கிறேன்; நேற்று கார்கில்ஸ்ல ஒருத்தர் மேல மோதினாய் தானே!’’ என்றதும், அதிர்ந்து குழப்பமாகப் பார்க்கும் நண்பியைப் கூர்மையாக அளவிட்ட மயூ, ‘‘அவர் யாரென்று உனக்குத் தெரியுமா ஸ்ரீ?’’ தோழியின் முகம் போன போக்கை இரசிப்புடன் பார்த்துக்கொண்டே தொடர்ந்தாள்.
‘‘பாரடி…பார். கேட்டதற்கு பதில் சொல்லாமல், கோழிக்கள்ளி போல முழிய உருட்டுறாள். சரியான அமசடக்கிக்(வெளிக்காட்டாமல் உள்ளுக்குள் வைத்திருப்பவள்) கள்ளிடி நீ!’’ தன் பங்கிற்கு முறைப்புடன் சீறினாள் மஞ்சு.
ஸ்ரீயோ, தோழிகள் இருவரையும் பரிதாபமாகப் பார்த்தாள். ‘கடவுளே இதுவா விஷயம்!? அப்போ அந்த மன்மதக்குஞ்சு நேற்று மஞ்சுவிடம் சொல்லியிருக்கிறார். அது தான் கோபமா? ஹப்பாடா!’ அவள் மனமுமோ ஆறுதல் கொண்டது!
‘‘அது…அது வந்துடி…கோபிக்காதேங்கடி செல்லங்கள்! அந்தாளில் மோதியதும் இவளிட்ட வந்து அவரைப் பற்றி திட்டிப் பேசினதை, அந்தாள் பின்னுக்கு நின்று கேட்டுவிட்டார். அதோடு, இவளும் அவரோட அப்படிப் பாசமலர் போலக் கதைத்தாளா? எனக்கு ஏனோ சொல்லத் தயக்கமாக இருந்ததடி. இது ஒரு சின்ன விஷயம்மென்று பேசாமல் விட்டேனே ஒழிய, உங்களுக்கு மறைக்க வேண்டுமென்றெல்லாம் நினைக்கவேயில்லை!’’ கடகடவென்று சொன்னவள்,
‘‘நானே அதை மறந்து போனேன், இனி ஏன் அவரைக் காணப்போகிறேன் என்று பேசாமல் விட்டுவிட்டேன்.” என்றவள், தோழிகளுள் நடந்த பார்வைப் பரிமாற்றத்தைக் கவனிக்கவில்லை.
‘‘என்ன தான் என்றாலும் நீ மறைச்சிட்டாய்; இப்போ நாங்கள் கேட்டதும் பூசி மெழுகுகிறாய்!’’ அப்போதும் முறைப்புடனேயே சொன்ன மஞ்சுவை செல்லமாக முறைத்தாள் ஸ்ரீ .
‘‘என்னடி மஞ்சு! இதெல்லாம் போய் ஒரு விஷயமென்று பெரிதாக்கிறாயே! முகத்தைத் தூக்கி வைச்சிருக்கிறாய்டி. என்றாலும் நீ கோபத்திலும் அழகோ அழகடி!’’ அடங்கிய முறுவலுடன் சொன்னதும், சைக்கிளை ஸ்ரீயின் அருகில் விட்ட மஞ்சு, ‘தொம்’ என்று அவள் முதுகில் ஒன்று கொடுத்தாள்.
‘‘செய்வதையும் செய்துவிட்டு, என் அழகை பற்றி கதைக்கிறாயா?’’ மீண்டும் முறுக்கிக் கொண்டாள்.
சளைக்காமல் சாமாதானக் கொடியை பறக்க விட்டுக்கொண்டே சென்ற ஸ்ரீ, பின், இலஞ்சமாக ஸ்பெஸல் ஐஸ்கீரீமும் வாங்கிக் கொடுத்து, ஒரு சின்ன விடயத்துக்கு கொடி பிடித்துக் கொண்டு உயரப்பறந்தவர்களை மெல்ல மெல்லக் கீழே இறக்கி, அப்படியே மாதாவிடமும் போய்த் திரும்பினர்.
உண்மையிலேயே நேற்று நடந்ததை இன்று அவள் தோழிகள் நினைவூட்டும் வரையிலும் அவள் மறந்து தான் இருந்தாள்.
ஆனால், அவர்கள் இன்று காலையில் அவளை போட்டு படுத்தியபாட்டிலும், ராமைப் பற்றி மஞ்சு சொன்னவைகளைக் கேட்ட பின்னும், ‘இனி அந்தாளின் முகத்தையும், அந்த எரிச்சல் பார்வையையும் மறக்கவே முடியாது!’ என்றே அவளுக்குத் தோன்றியது .

error: Alert: Content selection is disabled!!