அத்தியாயம் 5.
இரவுணவின் பின், தனியொருத்தியாய் அனைத்தையும் ஒதுக்கி, மிச்சமாகிய உணவை குளிர்சாதனப் பெட்டியில் பத்திரப்படுத்திய ரஞ்சி, தன் மனதிலெழுந்த ஆத்திரத்தையும் இயலாமையையும் அப்பப்போ, தான் செய்யும் வேலைகளில் காட்டிக் கொண்டிருந்தார்.
மனைவியின் வழமையான இந்நடவடிக்கைகளால் சிறிதும் பாதிப்படையாத கணவரோ, தொலைக்காட்சியில் ஆழ்ந்திருக்க, அவர்களின் இரு பெண்பிள்ளைகளும் அறையினுள் பாடப்புத்தகங்களுக்குள் ஆழ்ந்திருந்தனர்.
மணமான புதிதில் இலகுவாக உருண்ட ரஞ்சியின் வாழ்க்கைச் சக்கரங்கள், வருடங்கள் உருண்டோட ஓட இலேசாகத் தடுமாறத் தொடங்கியது.
‘குடும்ப வண்டி செல்ல, ஏதோ, முடிந்தளவு பணம் தருவது மட்டுமே என் கடமை!’ என, நினைக்கும் ஆண்களின் அணியைச் சேர்ந்தவர் ரஞ்சியின் கணவர்.
அவ்வளவாகப் பொறுப்பற்ற, அசட்டையான கணவனின் நடவடிக்கையை ஆரம்பத்தில் சாதாரணமாக எடுத்த ரஞ்சியால், மூத்த மகன் பிறந்து பலவருட இடைவெளியில், அடுத்தடுத்து இரு பெண் பிள்ளைகள் பிறந்து, அவர்களும் வளர்ந்து வர வர, பயம் பற்றிக் கொண்டது.
பிள்ளைகளின் வருங்காலத்தைப் பற்றிக் கவலை கொண்ட அத்தாய்க்கு, கண்முன் தெரிந்த ஒரே நம்பிக்கை தன் கணவனல்ல, அன்புமகன் நரேன் தான்!
இது ஒன்றும் நம் சமுதாயத்துக்கு புதிதல்லவே!
காலா காலமாய் வீட்டின் ஆண்பிள்ளைகள் தந்தையின் பொறுப்புக்களைச் பகிர்ந்து கொள்வதும், அதை பெற்றவர்களே எதிர்பார்ப்பதும் மிக இயல்பானது தானே! அதுதான் இங்கும் நடந்தது.
அப்படி, தான் பாசத்தைக் கொட்டி நம்பிக்கையுடன் வளர்த்த ஒரே மகன், தன்னையும் தங்கைகளையும் ஒரு போதும் தவிக்கவிடான் என்ற உறுதியான நம்பிக்கையில் இதுவரை இருந்த ரஞ்சியின் எண்ணமோ, சில காலமாக அவனின் சில நடவடிக்கையால் ஆட்டம் கண்டுள்ளதே!
கணவன் பொறுப்புக்கள் குறைந்தவர் என்ற போதும், கலங்காமல் நிமிர்ந்து திடமாய் நின்றவரின் மனம், மகனின் நடவடிக்கையால் கலங்கித் தவிக்கத் தொடங்கியது.
அம்மனப்பயமே அவரை ஆட்டி வைத்து, ‘என்ன பாடு பட்டாவது, அவனை என் வழிக்கு கொண்டு வருவேன்!’ என, சூழுரைக்க வைத்தது!
கணவரின் வேலை யாழிலிருந்து கொழும்புக்கு மாறியதால், மருத்துவம் கடைசி வருடத்தில் படித்துக்கொண்டிருந்த மகனை அறையொன்றில் இருந்து படிக்க விட்டுவிட்டு, குடும்பமாக கொழும்புக்கு குடிபெயர்ந்தவர்கள், கடந்த ஐந்துவருடங்களாக கொழும்பு வெள்ளவத்தையிலுள்ள வாடகை மாடிக் குடியிருப்பொன்றில் வசித்து வருகின்றனர்.
பெண்பிள்ளைகள் கொழும்பில் நல்ல பாடசாலையொன்றில் படித்துக் கொண்டிருக்க, யாழில் மருத்துவப்படிப்பை முடித்தாலும், உள்ளகப் பயிற்ச்சியை கொழும்பில் செய்த நரேன், அங்கேயே தொடர்ந்து வேலையும் செய்யத் தொடங்கியிருந்தான்.
கணவர், வேலை காரணமாக வெளிமாவட்டங்களுக்குப் போய் நாள் கணக்கில் தங்குவதால், இவர்களுக்கு நிரந்தரமான ஒரே ஆண் துணையாக இருப்பதும் நரேனே!
அதுமட்டுமின்றி, எகிறி வரும் விலைவாசியில் கொழும்பில் ஒருவர் உழைப்பில் வாடகை வீட்டில் வாழ்வதென்பது மிகவும் பெரிய சாதனையே! இவர்களது குடும்ப வண்டி இலகுவாக சுழல்வதற்கு, கைநிறைய உழைக்கும் மகனும் முக்கிய காரணம்.
இப்படிப் பல வழிகளிலும் மூத்தவனைச் சார்ந்திருந்தது அக்குடும்பம்!
இப்படியிருக்க, தன்னையே உருக்கித் தான் வளர்த்த பிள்ளை, தாயின் விருப்பத்தையோ ஆசையையையோ கொஞ்சமும் மதிக்காது, தன் இஷ்டத்துக்கு செயல்பட நினைப்பது மிகுந்த மனவேதனையைத் தந்து, அதற்கு காரணமானவர்களை எல்லாம் திட்டித் தீர்க்க வைத்தது.
அறையில் படித்துக்கொண்டிருந்த ரஞ்சியின் மூத்தபெண், தாய் சமயலறையில் எழுப்பிய பாத்திரங்களின் ஒலியிலிருந்தே அவரது கோபமான மனநிலையை ஓரளவுக்கு ஊகித்து, தாயிடம் சென்றவள், ‘‘அம்மா… இன்னும் முடியவில்லையா? நான் ஏதாவது செய்து தரவா?” என்றாள் பரிவுடன்.
‘‘அதெப்படி சரியா எல்லாம் முடியும் போது வந்து கேட்பாய்? நீ ஒன்றும் செய்து தர வேண்டாம்; என்னால் முடிந்தமட்டும் எல்லாவற்றையும் நானே செய்கிறேன்! எல்லோரும் எல்லாவற்றையும் என் தலையிலேயே போடுங்க; என்னால் முடியாத போது என்ன செய்யப் போறீங்க? பார்க்கத்தானே போகிறேன்!’’ மகளுக்கு சொல்வது போல, தொலைக்காட்சியுடன் ஒன்றிப் போயிருந்த கணவனுக்குச் சொன்னார் ரஞ்சி.
அதைப் புரிந்து கொண்ட மகளும், ‘இந்த அப்பாவுக்கு எவ்வளவு சொன்னாலும் காதில் விழாது; அம்மாவுக்கு வேற வேலையில்லை…விசர்!(பைத்தியம்)’ நினைத்தவள், ‘‘இப்ப ஏன்மா கோபப்படுறீங்க? ஏதாவது தேவையென்றால் எங்களிடம் சொன்னால் செய்து தரமாட்டோமா?’’ என்றாள், ஆதங்கமும் பாசமுமாய்!
‘‘ப்ச்…வேண்டாம்மா…நீ போய்ப் படி; எல்லாப் பாடத்திலும் நல்லா பாஸ் பண்ணினால் அண்ணா சந்தோசப்படுவான்; டியூசனுக்கே எவ்வளவு செலவு செய்கிறான்!’’ என்றவர், தன் வேலைகளில் மூழ்கினார்.
தாயின் மன எரிச்சலுக்குக் காரணகர்த்தாவான நரேனோ, கொழும்பு வீதிகளின் போக்குவரத்து நெரிசலில் நீச்சல் அடித்து, நெளிந்து வளைந்து ஒருவாறு அரசினர் வைத்தியசாலையை வந்தடைந்து, மோட்டாரை அதற்குரிய இடத்தில் நிறுத்திவிட்டு, ஹெல்மட்டையும் பையையும் எடுத்துக் கொண்டு ஓய்வறையை நாடிச் சென்றவன், சகவைத்தியர்களுடன் சிறிது நேரம் உரையாடிய பின், தனது அன்றைய பணிகளில் மூழ்கிப் போனான்.
பின், கிடைத்த ஓய்வில், தன் அழைப்பை எதிர்பார்த்திருக்கும் தன்னவளிற்கு அழைத்து சிறிது நேரம் உரையாடியவன், அவளுடன் பேசுகையில் எப்போதும் தொற்றிக் கொள்ளும் உற்சாகத்தால் இன்றும் நிறைந்தபடி கைபேசியை அணைத்து வைத்தான்.
கைபேசியை அணைத்தாலும் அவனுள்ளத்தில் பொங்கியெழுந்த நினைவலைகளோ, கட்டுக்குள் அடங்காது தம் பாட்டில் சுற்றிச் சுழன்று வலம் வரத் தொடங்கின!
பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே ஆரம்பித்த சிவாவின் நெருங்கிய நட்பு, அவர்கள் வீடு வரை சென்று, இவனையும் அவர்களில் ஒருவராக்கி இருந்தது.
கண்டிப்பையும் கட்டுப்பாட்டையும் காட்டும் சிவாவின் தந்தைக்கே, நரேனையும், அவன் பழக்க வழக்கங்களையும், எதையும் எதிர்பார்க்காமல் எல்லோருக்கும் உதவும் அவன் குணத்தையும் மிகவும் பிடிக்கும். கடைசி வருடங்களில் இவனும் தனியே தங்கியிருந்து படிக்க, இவர்களின் நட்பு இன்னமும் நெருக்கமானது!
இப்படியிருக்கையில் தான், ஒரு நாள் சிவாவின் தங்கை மஞ்சுவுக்கு, பக்கத்து வீட்டுப்பையன் காதல் கடிதம் கொடுக்க, தன் நண்பனுடன் சேர்ந்து நரேனே அப்பையனுடன் கதைத்து அவனை எச்சரித்து, இதனால் மஞ்சுவை உண்டு இல்லை என்று பண்ணிய அவளின் தந்தையின் கோபத்தைத் தணித்து, சமாதானமும் செய்து வைத்தான் .
சில மாதங்களுக்குப்பின், அவனே, மஞ்சுவின் பேச்சாலும் நடவடிக்கையாலும் கவரப்பட்டு, இருவரும் காதலில் கட்டுண்டனர்.
முதல் முதல் அவளிடம், தன் காதலைச் சொன்ன நாளை நினைத்தால், இன்றும் இவனுக்கு அடங்காத நகைப்பு பீறிடும்!
அதுவரை, சாதாரணமாக அவர்கள் வீட்டுக்கு போய்ப் பழகி வந்தனுக்கு, அவள் தன் முன்னால் அடி வாங்கிய அந்த நிகழ்வின் பின், ஏனோ தெரியவில்லை, அவள் புதியவளாகவே தெரிந்தாள்.
அவள் செய்கைகளையும், துடுக்குத்தனைத்தையும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் இரசிப்பதே அவனது வேலையாகிப் போனது!
அதுவும், அவள் தன்னை ஒவ்வொருமுறையும் வம்புக்கிழுக்கும் போதெல்லாம், ‘வாயைக் கொடுத்து, வீணாக வேண்டி கட்டுவானேன்!’ என்று ஒதுங்கிச் செல்பவன், பின் அவளுடன் வாயாடுவதில், சின்னச் சின்ன வாக்குவாதங்களில், ஒருபோதுமில்லாதவாறு நிறைந்த மகிழ்வையே உணர்ந்தான்.

