அன்பெனும் பூங்காற்றில் – 6

அத்தியாயம் 6 .

பல்கலைக்கு செல்லும் முதல் நாள்!
இத்தனை நாட்கள் பட்ட கஷ்டத்தின் பலனை, கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பை நல்ல விதமாகப் பயன்படுத்தி முதல் வகுப்பில் தேறுவதே நோக்கமாய், சுவாமிப்படங்களின் முன் கண் மூடி நின்று, நீண்ட நேரமாகத் தன் பிரார்த்தனைகளை கடவுள் பாதங்களில் வைத்தாள் மயூரி.
‘‘மயூம்மா…வந்து சாப்பிடு; நேரமாகுது!’’ தாயின் குரல் கேட்டு, தனது பிரார்த்தனைகளை முடித்து, கொஞ்சமாக விபூதியும் இட்டுக்கொண்டு சாப்பாட்டறையில் சென்றமர்ந்தவளால், உண்ண முடியாமல் பலவகைப் போராட்டங்கள், கலக்கங்கள் மனதை நிறைத்திருந்தது.
பல்கலை அனுமதி கிடைத்த இந்த சில மாதங்களில், சீனியர் மாணவ மாணவர்களுக்கு நோட்ஸ் எழுதிக் கொடுத்தே களைத்துப் போனவர்கள், இனியும் எது எது காத்திருக்கின்றதோ என்ற அச்சம் மிகுதியால், சாப்பாட்டை கொறித்துக் கொண்டிருக்க, மகள் உண்ணாது யோசனையாய் இருப்பதைப் பார்த்த ராஜி, ‘‘என்னடாம்மா…கொஞ்சம் தயக்கமாக இருக்கா? எல்லாம் கொஞ்ச நாளைக்குத் தானே! பிறகு சரியாகிடும்; முதல் சாப்பிடு!’’ என்றார் பரிவுடன்.
அப்போது, அருகில் வந்தமர்ந்த அவள் தந்தையும், ‘‘மஞ்சு கூட இருக்கும் போது உனக்கென்னம்மா பயம்? அதெல்லாம் சமாளிக்கலாம்; சாப்பிடுடா.’’ என்றதும், முன்னிருக்கையில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த தம்பி சுரேனோ, ‘‘ஹாஹா..அப்பா…ஹாஹா’’ பெரிதாக நகைக்கத் தொடங்கினான்.
திடீரென்று சிரிக்கும் மகனைக் கேள்வியாக நோக்கிய ரவி, ‘‘என்ன விஷயம் சுரேன்? சொல்லிவிட்டு சிரியுங்க.’’ என்றார், அறியும் ஆவலில். ‘‘ஹைய்யோப்பா! மஞ்சுக்கா கூட இருப்பது தான் பிரச்சனையே! இல்லையாக்கா?’’ என்றவன், ‘‘என்ன என்னத்தை இழுத்து வைக்கப் போறாவோ! கடவுள் தான் உங்களைக் காப்பாற்ற வேண்டும்!’’ நகைப்பை நிறுத்தாது தொடர்ந்தான்.
இதைக் கேட்டதும் இறுக்கம் மெல்ல விலக, அவனுடன் இணைந்து நகைத்தாள் மயூ.
‘‘உண்மை தான்டா! அவள் சீனியர்ஸ்சையே ராக் பண்ணுவாள்; அவளோட சேர்ந்து நாங்க தான் முறையாக வாங்கிக்கட்டப் போகிறோம்!’’ அளவளாவிக் கொண்டே காலை உணவை உண்டு முடித்தவர்கள், மஞ்சுவும் ஸ்ரீயும் இன்னமும் வராததால், தாம் போய் வருவதாகக் கூறி பெற்றவர்களும் சகோதரனும் பாடசாலை செல்ல, தோழிகள் வருகைக்காகக் காத்திருக்கத் தொடங்கினாள் மயூ.
அப்பொழுது கைபேசி சிணுங்கவே யாரென்று பார்த்தவள், தமையன் அகில் கொழும்பிலிருந்து அழைத்திருக்கவே, அழைப்பை ஏற்று, ‘‘என்ணண்ணா, நல்லா இருக்கிறீங்க தானே!’’ என்றவள், ‘‘நேற்றிரவு தானே எடுத்தீங்க…’’ தொடர, இடைமறித்தான் தமையன்.
‘‘இல்லம்மா, நீ கம்பசுக்கு போய்விட்டாயா என்று பார்க்கத் தான் சும்மா எடுத்தேன். சரி, கவனமாக போய்ட்டு வா; நான் இரவைக்கு எடுக்கிறேன்!’’ அழைப்பைத் துண்டித்தான்.
‘‘சரிண்ணா.’’ அவனுக்கு ‘பை’ சொல்லி கைபேசியை அணைத்து, புத்தகப் பையினுள் வைக்கப் போக, அவள் கையை விட்டுப் போக மனமின்றி, மீண்டும் சிணுங்கியது அது!
‘யாரிது திரும்ப? நேரமும் போகுது, இன்னமும் அவர்கள் இரண்டு பேரையும் காணவில்லை. முதல் நாள் கொஞ்சம் நேரத்துக்குப் போவோம் என்றால்…’ நினைத்தபடி எடுத்துப் பார்த்தவள், பரிச்சயமற்ற புதிய நம்பர் ஒளிரவே, ‘யாரிது? எடுப்போமா விடுவோமா?’ கணநேரம் யோசித்தாள்.
‘சரி, எடுத்துப் பார்ப்போம்!’ என்ற முடிவுடன் இயக்கி, ”ஹலோ..” என்றவள், அழைத்தவர் பக்கத்திலிருந்து எவ்வித சத்தமும் வராது போகவே, மீண்டும் மீண்டும் அழைத்துப் பார்த்தவள், ‘‘ஹலோ…யாரிது? எடுத்தால் கதைக்க வேண்டும், இல்லாட்டி ஏன் எடுகிறீங்க?’’ மனதில் எழுந்த எரிச்சலை மறைக்காது சீறிய வேகத்தில் கைபேசியை அணைத்து பையினுள் வைக்கவும், அவள் தோழிகள் வரவும் சரியாக இருந்தது.
தோழிகளுடன் கதைத்தவாறே சைக்கிளில் செல்லும் போதும் மீண்டும் மீண்டும் கைபேசி சிணுங்க, ‘‘அது யாரடி? எடுத்துப் பாரேன்!’’ என்றாள் மஞ்சு.
‘‘விடுடி, ஏதோ விளம்பரத்துக்கு எடுக்கிறான்கள்; கொஞ்ச முதல் வீட்டில் நிற்கும் போதும் எடுத்தான்கள்.’’ என்றவளுள், ‘யாராயிருக்கும்?!’ என்ற யோசனை ஓடிக் கொண்டிருந்தாலும், அதைப் புறந்தள்ளி வைத்துவிட்டு, சந்தோசம் ஒருபுறமும் கலக்கம் மறுபுறமுமாய் பல்கலைக்குள் நுழைந்தாள்.
பிரதான வாயிலால் நுழையும் போதே, ‘‘சைக்கிளை விட்டிறங்காமல் நேர ஆடிட்டோரியத்தடிக்கு விடுங்கடி.’’ என்றவாறு மஞ்சு முன்னால் செல்ல, மிகவும் தயக்கமாக இருந்தாலும் எதுவும் செய்ய முடியாத ஸ்ரீயும் மயூவும் அவளைத் பின்தொடர்ந்தனர்.
புதிதாக மருண்டு கொண்டு வரும் மாணவ மாணவிகளை, பிரதான வாயிலில் வைத்தே இறக்கி ராக் பண்ணிக் கொண்டிருந்த சீனியர்ஸ் கூட , இவர்களைப் புதியவர்கள் என்று நினைக்கவில்லை.
நேரே ஆடிட்டோரியத்துக்கருகில் சைக்கிளை நிறுத்திய மஞ்சு, திருட்டு முழிகளுடன் தோழிகள் வருவதைப் பார்த்து விரிந்த புன்னகையுடன், ‘‘ நீங்க ஃப்ரசஸ் என்று உங்க முகத்திலேயே எழுதி ஒட்டி இருக்குடி. அதை அவங்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. சரி வாங்க, ஆடிட்டோரியம் திறந்திருக்கு போயிருப்போம்!” உள்ளே நுழைந்து, முதல் வரிசையில் நடுவில் சென்றமர, அவளைத் தொடர்ந்து இவர்களும் சென்றமர்ந்தனர்.
சிறிது நேரத்தில் விரிவுரையாளர்கள், நிர்வாகத்தினர், முதல்வருட மாணவர்களை வரவேற்று அடிப்படை நடைமுறைகளைச் கூறிய பின், நாளையிலிருந்து வகுப்புக்கள் நடைபெறும் எனக்கூறி விடைபெற, வெளியே வந்தவர்கள், ஒவ்வொருவரும் வங்கிக் கணக்கு ஆரம்பிப்பதிலிருந்து செய்ய வேண்டிய ஆரம்ப நடைமுறை வேலைகளைச் செய்வதற்காகச் செல்ல, தாங்களும் சென்று அவ்வேலைகளை முடித்தவர்கள், விட்டால் போதுமென்று வீட்டுக்குக் கிளம்பினர்.
‘‘ராமண்ணா வரவில்லை, ஏனோ தெரியவில்லையே!’’ யோசனையாகச் சொன்னாள் மஞ்சு.
‘‘யாரைச் சொல்கிறாய்?” ஸ்ரீ வினவ, மஞ்சுவோ, மயூவைப் பார்த்து நாக்கைக் கடித்து விட்டு, ‘‘அது ஒன்றுமில்லடி, ராம் அண்ணா வீடு குமாரசாமி லேனுக்க தான் இருக்கு. நிறைய நாளாச்சு போய்; வாங்கடி ஒருதரம் போய்விட்டு வீட்ட போவோம்!’’ கதையை மாற்றினாள்.
‘‘அங்கேயா! போடி, நான் வரவில்லை. நீ மட்டும் போய்விட்டு வாவன், நாங்க வீட்ட போகிறோம்!” வெகுவாகத் தயங்கினாள் ஸ்ரீ.
‘‘என்னடி இது, நல்ல கதையாய் இருக்கே! நீ கேட்டால் நான் எல்லா இடத்துக்கும் வரவேண்டும்; நான் கேட்டதும் இப்படிச் சொல்வாயா? நீ வருகிறாயா இல்லையா மயூ?’’ எகிறினாள் மஞ்சு.
‘‘சும்மா வாடி ஸ்ரீ. நான் முதலும் இரண்டு தரம் இவளோடு போயிருக்கிறேன்; ஆன்ட்டி நல்லாக் கதைப்பார். சும்மா ஒருதரம் போய் தலையைக் காட்டிவிட்டு போவோமே,வா…வா.’’ இடையிட்ட மயூ, ஒருவாறு ஸ்ரீயையும் இழுத்துக்கொண்டு ராம் வீட்டை நோக்கிச் சென்றனர்.
அங்கே, அவர்களை அன்பாக வரவேற்ற ராமின் தாயார், முதல் நாள் பல்கலை அனுபவங்கள் பற்றிக் கதைத்துக்கொண்டே, ‘‘தம்பிக்கு வங்கியில் முக்கியமாக ஒரு வேலை இருந்ததால் காலையில் வேலைக்குப் போகத் தாமதமாயிற்று; கொஞ்சம் முதல் தான் போறான்!’’ என்றவர், அவர்களை மதியம் அங்கேயே சாப்பிடும்படி வற்புறுத்தி உணவைக் கொடுத்தார்.
‘‘ஒரு மணித்தியாலம் மட்டும் இடைவேளை விட்டு பிறகு விரிவுரை இருந்தால், மூன்று பேரும் இங்கயே வந்து சாப்பிடுங்க; முதல் நாள் சொன்னீங்க என்றால் போதும்.’’ அன்புக் கட்டளையிடவும் செய்தார்.
‘‘ஹைய்யோ ஆன்ட்டி, உங்களுக்கு ஏன் கஷ்டம்! நாங்க காலையில் லஞ்ச் கொண்டு வருவோம்; இல்லாட்டியும் கன்டின்ல சாப்பிடலாம்!’’ என்று மயூ சொல்ல, மஞ்சுவும் அதை ஆமோதித்தாள்.
‘‘அதுக்கில்லம்மா. அப்பாவும் பிள்ளையும் காலையில் போனால் பின்னேரம் தான் வருவார்கள். பிறகும் தோட்ட வேலை, அந்த வேலை, இந்த வேலை என்று இருப்பார்கள்மா.’’ என்றவர், ‘‘இப்படிக் கலகலப்பாக இருந்தே எத்தனை நாளாச்சு! பிள்ளைகளைக் கல்யாணம் செய்து கொடுத்து அனுப்பியதோடு எல்லாம் போய்ட்டுது; அதனால்தான் சொன்னேன்!’’ கலங்கும் விழிகளை கஷ்ட்டப்பட்டு அடக்கியவாறு ஏக்கம் நிறைந்த குரலில் சொல்ல, ஓடிச் சென்று அவரைக் கட்டிக்கொண்டாள் மஞ்சு.
‘‘இதென்ன ஆன்ட்டி! உங்களுக்கு இப்ப என்ன வேண்டும்? ஒவ்வொரு நாளும் நாங்க சாப்பிட வாறோம்; நாலு கறிகளோடு வாய்க்கு ருசியா சமைத்து வைக்க வேண்டும்! சரியா?’’ அன்பாய் மிரட்டியவள், அவரின் கலக்கத்துக்கும் கவலைக்கும் காரணம் தெரியுமாதலால், அவரை மகிழ்ச்சிப்படுத்தும் விதத்தில் சிறிதுநேரம் இருந்து கதைத்துவிட்டே தத்தம் வீடுகளுக்குப் புறப்பட்டனர்.
ராம் வீட்டில், முதல் முறை என்ற தயக்கத்துடன் பெரும்பாலும் அமைதியாய் இருந்த ஸ்ரீ, ‘‘ஏன்டி, அவர் பேசாமல் ஒரு கல்யாணத்தைச் செய்தால், ஆன்ட்டி இப்படி கவலைப்பட மாட்டாரே! என்னவோ ஊருலகத்தில் நடக்காதது தனக்கு நடந்த மாதிரி முறைச்சுக் கொண்டு திரிந்தால், பாவம் அவவும் தான் என்ன செய்வார்?’’ என்றாள், எரிச்சலுடன்.
அப்படிச் சொன்னவளை அதிசயமாகப் பார்த்த மயூ, ‘‘உனக்கேன்டி ஸ்ரீ இப்படிக் கோபம் வருது? அவரவர் கவலை, அவரவருக்குத் தானே தெரியும்! சில விசயங்களை மறக்க நினைத்தாலும் அது கஷ்டம்டி; எல்லாம் பட்டால்தான் தெரியும்; சும்மா புத்திமதி சொல்வது போல இலகுவான வேலை வேறு ஒன்றுமே இல்லை தெரியுமா? நமக்கு என்று வந்தால் தான் தெரியும்!’’ தன் பங்கிற்கு தீவிரமாகச் சொன்னாள்
தோழிகளின் உரையாடல்களைக் கேட்டவாறே அமைதியாய் வந்து கொண்டிருந்த மஞ்சு, ‘‘ஹைய்யோ! போதும் போதும், நிறுத்துங்கடி! என்ன இரண்டு பேரும் அதிசயமாக ஒரேயடியாப் பொங்குறீங்க? அதற்குத்தானே நான் இருக்கிறேன். ம்ம்ம்.. பூவோட சேர்ந்து நாரும் மணக்கத் தொடங்குதோ!’’ என்றாள் கேலி நகைப்போடு!
அதைக் கேட்டதும் அவளருகில் வந்து கொண்டிருந்த மயூ , எட்டி அவள் முதுகில் ஒன்று கொடுத்தவள், ‘‘உனக்கு நீ பெரிய இவ என்ற நினைப்பு என்ன!’’ என்று சொல்லி, ஒருத்தரை ஒருத்தர் வம்பு செய்து கேலி பேசியபடியே தத்தம் வீடுகளுக்குச் சென்றனர்.

error: Alert: Content selection is disabled!!