அன்பெனும் பூங்காற்றில் 7 – 1

அத்தியாயம் 7.

இரவுணவின் பின், தம்பி அம்மா அப்பாவுடன் அரட்டை அடித்தவாறே தொலைக்காட்சி பார்த்து விட்டு, படுக்கைக்குச் சென்ற மயூ, அப்போதுதான் நினைவு வந்தவளாய் தனது கைபேசியை எடுத்துப் பார்த்தாள் .
அதில், காலையில் பேசாது இருந்த அதே இலக்கத்திலிருந்து சில அழைப்புக்களும், ஒரு எஸ் எம் எஸ்ஸும் வந்திருந்தது!
யாராயிருக்கும் என்ற பதற்றமும் எதிர்பார்ப்புமாக குறுஞ்செய்தியை வாசித்தவள், சிந்தனை இரேகைகள் நெற்றியில் தவழ கட்டிலில் அமர்ந்திருந்தாள்.
இவள் கைபேசி வைத்திருப்பதே ஒரு அவசரத் தேவைக்காகத் தான்! தாயும் தந்தையும் வேலைக்குச் செல்வதால் சுரேனும் மயூவும் கைபேசி வைத்திருந்தாலும், மிக நெருக்கமானவர்கள் தவிர யாருக்கும் அவர்களின் கைபேசி இலக்கம் தெரியாது.
‘அப்படியிருக்க, கொழும்பில் யாருக்கு என் நம்பர் தெரியும்?’ யோசித்தவள், மீண்டும் ஒருதரம் அக்குறுஞ்ச்செய்தியில், விழிகளை ஓடவிட்டாள்.
‘இன்று தொடங்கும் இப்புதிய பயணம், மிகவும் அழகாய், நிறைவாய், பல புதிய அனுபவங்களுடன் அமைய, என் அன்பு வாழ்த்துக்களும் ஆசிகளும்!’ என, ஆங்கிலத்தில் இருந்தது அச்செய்தி.
‘‘யாரிது?!’’ குழப்பத்துடன் முணுமுணுத்தவள், யாராயிருக்கும் என்று ஒரு ஊகமும் வாராது போகவே, ‘பேசாமல் அம்மாவிடம் காட்டிவிடுவோம்.’ என, நினைத்தவளுக்கு, திடீரென ஒரு சிறிய, ஆமாம்! மிகச் சிறிய சந்தேகம் தோன்றியது!
‘அப்படியும் இருக்குமா? அல்லது நான் தான் சும்மா சும்மா கற்பனை பண்ணி ஏமாறப் போகிறேனா? இவ்வளவு நாட்களும் கூட ஏமாந்து கொண்டு தான் இருகிறேனா? கடவுளே! முருகா!!’ தலையை கைகளில் தாங்கியவளின் விழிகள், மெல்ல மெல்ல கட்டுப்பாட்டை இழக்க, கண்ணீர் தளும்பி அவள் கன்னம் வருடிச் சென்றது.
‘பேசாமல் இந்த நம்பருக்கு கால் பண்ணிப் பார்ப்போமா?’ சிறிது நேரத்தில் நினைத்தவள், அதற்கும் துணிவு வராமல் அந்த எண்ணத்தையும் கைவிட்டுவிட்டு, ‘சரி எதுவென்றாலும், நாளைக்குப் பார்ப்போம்!’ என்ற முடிவுடன் மின்விளக்கை அணைத்து விட்டு மனச்சோர்வுடன் படுக்கையில் சாய்ந்தாள்.
ஆனால், அவள் வருந்தி வருந்தி அழைத்தும், உறக்கம் ‘உன் அருகிலும் வரமாட்டேன்!’ என்று போக்குக் காட்ட, அவள் அழையாமலேயே அவனின் நினைவுகள் அவளை வலம் வந்து, தொட்டுத் தொட்டுப் போக்குக் காட்டின!

மயூ வீட்டிலிருந்து இரு வீடுகள் தள்ளி வசிக்கும் ரவியின் நீண்டநாள் தோழன் ராகவன் குடும்பமும், கொழும்பில் வசிக்கும் அவர் தங்கை பூரணி குடும்பமும், இவர்கள் குடும்பத்துடன் மிகவும் நட்பும் நெருக்கமும் கொண்டது!
ரவியின் பிள்ளைகளான அகில், மயூரி, சுரேன், ராகவனின் பிள்ளைகளான மலர், மது மற்றும் பூரணியின் மகன்கள் சத்தியன், நித்தியன் அனைவரும் சிறு வயது முதல் நண்பர் கூட்டமாய், ஒருவர் ஒருவருடன் சண்டைக்குச் சண்டையும், சேட்டைக்குச் சேட்டையுமாய் கலகலப்பாகப் பழகி வந்தனர்.
அதிலும் மயூவின் அண்ணன் அகிலும் சத்தியனும் சமவயதில் இருக்கவே, அவர்களிடையே ஏற்பட்ட நட்பு, இவர்கள் நெருக்கத்தை இன்னும் அதிகரித்தது.
ஒவ்வொரு வருட நல்லூர்த் திருவிழாவின் போதும், பூரணி குடும்பத்தின் வருகையை யாழில் உள்ளவர்களும், யாழ் செல்வதை பூரணி குடும்பமும் ஆவலாக எதிர்பார்த்திருக்கும் வகையில் அமைந்திருந்தது இவர்கள் நட்புறவு.
ஒரு கட்டத்தில், ஏறக்குறைய நான்கு வருடங்களுக்கு முன், இந்நெருக்கம் தொடராமல் தளர்ந்து போனது!
ராகவன், தனக்கும் தன் மனைவிக்கும் நீண்ட நாட்களாக மனதிலிருந்த ஆசையெனச் சொல்லி, தன் மூத்தமகள் மலருக்கு, தங்கையின் மூத்தமகன் சத்தியனை மாப்பிள்ளை கேட்டார்.
இப்படி ஒரு போது எண்ணிப் பார்த்திராத பூரணி, தமையன் நம்பிக்கையாகக் கேட்ட விதத்தில் அதிர்ந்தார்!
‘‘எங்களுக்கு அப்படி ஒரு எண்ணம் சிறிதும் வந்ததில்லை அண்ணா! உங்களுக்கு எப்படி இப்படி ஒரு எண்ணம் வந்தது? நான் அப்படி ஒரு போதும் சொன்னதோ செய்கையில் காட்டியதோ இல்லையே!’’ வார்த்தையை விட, தொடங்கியது பிரச்சனை!
சொந்த மருமகனுக்கே மகளைத் திருமணம் முடித்து வைத்தால், அவள் வாழ்வு நம்பிக்கையானதாக பாதுகாப்பானதாக இருக்கும் என்றும், தன் கோரிக்கையை தங்கை ஒரு போதும் மீற மாட்டாள், ஆசையாக ஏற்றுக்கொள்வாள் என நினைத்தே, தன் விருப்பத்தை வெளியிட்டார் ராகவன்.
அதற்கு, தங்கை சொன்ன பதிலும், அதைச் சொன்ன விதமும் கொஞ்சமும் பிடிக்காததால், இயற்கையிலேயே மிகுந்த ரோசக்காரரான ராகவன் சினமே கொண்டார்.
அவர் நம்பிக்கை பொய்த்துப் போனதில் மனதில் அடி வாங்கியவர், தன் தங்கை தன்னை அவமானப்படுத்தியதாகவே நினைத்தார்.
‘‘யாரைப் பார்த்து என்ன வார்த்தை கேட்டாய்? எல்லாம் பணம் செய்கின்ற வேலை! உன் பணத்துக்கு முன் சொந்த அண்ணா வேண்டாதவனாகிப் போனேனா?’’ ஏதேதோ சொல்லி, அங்கே தேவையற்ற வாக்குவாதங்கள் கைகோர்த்துக் கொண்டன!
முடிவில், ‘‘இனி உன் குடும்பத்துடன் எந்த உறவும் வேண்டாம். வீட்டை வீட்டு வெளியே போ!’’ என்ற ராகவன், தங்கையுடனான தம் உறவுக்கு ஒரேயடியாக முற்றுப் புள்ளி வைத்து விட்டார்.
இவ்வாறுதானே உறவுகள் நட்புகளுக்கிடையில் பல முறிவுகளும் பிரிவுகளும், சின்னச்சின்ன பேசித் தீர்க்கக்கூடிய காரணங்களுக்காய் ஏற்படுகிறது! அதுவே இவர்களிற்கிடையிலும் மிகவும் அழகாய் நடந்தேறியது!
காலம் கடந்து சிந்தித்துப் பார்த்தால், பல கோபங்களுக்கும் பிரிவுகளுக்கும் பொருத்தமான ஒரு சில காரணங்களைக் கூட கண்டு பிடிக்க முடியாது இருக்குமல்லவா? இங்கும் அப்படித்தான்!
பேசி, சமாதானமாக முடித்திருக்க வேண்டிய விடயம், வார்த்தைகள் தடித்ததில் பிரிவுக்கு வழி செய்தது.
பெரியவர்களால் ஏற்பட்ட பிளவால், பிணக்கால், துடித்துப் போனதென்னவோ ஒன்றாகச் சுற்றித் திரிந்த இளம் உள்ளங்கள் தான்.
அன்றைய நாளில், தம் மாமா வீட்டை விட்டு உடனே புறப்பட்டது சத்தியன் குடும்பம்.
புறப்படும் வேகத்தில் மயூரியைத் தேடி அவள் வீட்டுக்கு விரைந்தான் சத்தியன்.
நடந்த பிரச்சனையைக் கேள்விப்பட்டு, வாய்விட்டுச் சொல்லவோ பிரித்தறியவோ முடியாத வேதனையுடன், தங்கள் வீட்டின் பின்னுள்ள மாமரத்தின் கீழ் அமர்ந்திருந்தாள் மயூரி!
அவள் முன்னால் அவசரம் அவசரமாக வந்து நின்ற சத்தியன், அவளிடம் சொன்ன…இதுவரை அவள் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கும் வார்த்தைகள், ‘‘மயூ! நீ எனக்கு மிகவும் முக்கியம். நான் உன் நினைவுடனே என்றைக்கும் இருப்பேன். இதை விட, இப்போ எப்படி உனக்குச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லம்மா; கவனமாகப் படி; அப்பா அம்மா ஆசை நம்பிக்கையைக் காப்பாத்து; அது தான் முக்கியம்.’’ என்பதே!
பதினைந்து வயதில், இன்னதென்று பிரித்தறிய முடியாமல் தத்தளிக்கும் பருவத்தில், தனக்கு மிகமிகப் பிடித்தவன் கலங்கியவாறே சொன்ன வார்த்தைகளைத் தன் இதயத்தில் பொக்கிஷமாய் பத்திரப்படுத்தினாள் மயூ.
கடந்து வந்த வருடங்களில் அவன் கூறியதன் அர்த்தத்தை உயிர் நேசமாக எண்ணி, அவனின் வார்த்தைகளுக்கு பார்த்துப் பார்த்து உயிர் கொடுத்து, அவனையே தன் மணாளனாக நினைத்து, அவன் வரவை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள் இவள்.
அன்று கிளம்பிப் போனவனோ, அவன் குடும்பத்தினரோ இந்த நான்கு வருடங்களில் இதுவரை யாழ்நகர்ப் பக்கம் வரவேயில்லை!

error: Alert: Content selection is disabled!!