ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்த, தனது மூத்த மகள் மலரின் திருமணத்துக்குக் கூட ராகவன் தங்கையை அழைக்கவில்லை.
நினைவுகள் தந்த கனத்தில் விழிகள் ஊற்றெடுக்க, தன்னை உயிராய்ப் பேணும் பெற்றோர், சகோதரங்களுக்கோ, தன் உயிர்த் தோழிகளுக்கோ சொல்லாமல், மனதில் பூட்டி வைத்திருக்கும் நினைவுகளுடன் ஒருதரம் வலம் வந்தவள்,
‘அன்றைக்கு அவர் அப்படிச் சொன்னதற்கு, நாள் செல்லச் செல்ல நான் விளங்கிக்கொண்ட அர்த்தம் தான் பிழையோ!’ எப்போதும் போல மனம் இன்றும் முரண்பட, ‘முருகா, நான் என்ன செய்ய? உனக்கு விருப்பமிருந்தால் என்னை அவருடன் சேர்த்து வை!’ தனக்கும் கடவுளுக்கும் மட்டுமே தெரிந்த தன் நேசத்துக்காக உருப்போட்டபடி, கண்ணீரைத் துடைத்தவாறே பிசையும் இதயத்தை அடக்கி, நித்திரை கொள்ள முயன்றாள் மயூ.
இதேவேளை கொழும்பில், நீண்ட நேரமாக, தனதறையின் ஜன்னலோரமாக நின்றிருந்தான் சத்தியன்.
தெள்ளத் தெளிந்த வானில் வலம் வந்தபடி, பார்ப்போர் உள்ளங்களை தனது பால்வண்ண ஒளியால் குளிர்வித்துக் கொண்டிருந்த வெண்மதியில் நிலைத்திருந்தன அவன் விழிகள்!
அவன் சிந்தையோ, நிலவு மங்கையின் அழகில் மயங்காமல், மனம் குளிராமல், தன்னுள்ளே உள்ள தவிப்பைப் போக்க வழி தெரியாமல் தடுமாறி நின்றது!
காலையில் தான் செய்த முட்டாள்தனமான வேலையை எண்ணித் தவித்துக் கொண்டிருந்தான் அவன்.
மாமா வீட்டிலிருந்து கோபித்துக்கொண்டு கொழும்பு வந்த அன்றே, ‘‘அம்மா, நான்…மயூவை விரும்புகிறேன்; அவளைத் தவிர வேறு யாரையும் என்னால் மனதில் நினைக்க முடியாது!’’ வெளிப்படையாகவே கூறிவிட்டான் இவன்.
ஏற்கனவே, தமையன் தன் வார்த்தைகளைத் தவறாகப் புரிந்து, தன்னுடன் கோபித்து விட்டாரே என்று கலங்கிக் கொண்டிருந்த பூரணி, மகனின் வாய்மொழி புரிந்ததும் அதிர்ந்துதான் போனார்.
‘‘தம்பி! என்னப்பா சொல்கிறாய்?’’ தவிப்புடன் வினவினார் .
‘‘ப்ளீஸ்மா, நான் முதலில் சொல்லி முடிக்கிறேன்; பிறகு உங்க முடிவைச் சொல்லுங்க!’’ தாயிடம் நேர்ப் பார்வையில் உரைத்தான் மகன்.
பெற்றோரின் மௌனத்தையே சம்மதமாகக் கொண்டு, ‘‘எப்போ, எப்படி என்று சொல்லத் தெரியவில்லம்மா; சின்ன வயதிலிருந்தே அவளை, அவளின் ஒவ்வொரு செய்கைகளையும் எனக்கு மிகவும் பிடிக்கும்; அது உங்கள் எல்லோருக்குமே தெரியும். ஆனால்..ஆனால்..’’ சிறுதயக்கம் ஊடுருவ, அருகிலிருந்த தாயின் கரங்களை இறுக்கப் பற்றிக் கொண்டான்.
‘‘என் கல்யாணம் பற்றி மாமா பேசும் போது மனதில் அவளின் நினைவு மட்டும் தான்மா வந்தது! பிறகு யோசித்தெல்லாம் பார்க்கவே தேவையில்லாமல், எனக்கு மனைவி என்றால், அது மயூ மட்டும் தான்மா. அதுமட்டும் நிச்சயம்மா. நம்மை விட அவர்கள் வசதியில் குறைவு என்பதைத் தவிர, அவளை வேண்டாமென்று சொல்ல வேறு ஒரு காரணமுமில்லை. வசதி வாய்ப்புகள் தான் இங்கே நம்மிடம் இருக்கே!’’ உறுதியான குரலில் சொல்லி முடித்தான் .
பெற்றவர்கள் இருந்த தோரணையே அவர்கள் இதை எதிர்பார்க்கவில்லை என்று விளங்கினாலும், தன் மனதைச் சொன்னதும் மிகவும் ஆறுதலாக உணர்ந்தவன், ‘‘ சரிம்மா, இனி நீங்க சொல்ல வந்ததை சொல்லுங்கோ..” என்றபடி, தாயின் மடியில் தலையைப் புதைத்துக் கொண்டான்.
கலங்கிய விழிகளைத் தன் மடியில் மறைத்த மகனைக் பார்த்த தாயுள்ளமோ பதறி விட்டது.
சிறு வயதிலிருந்தே படிப்பில் சுட்டியான மகன், தன் விருப்பங்களை நேரடியாக அழுத்தமாகச் சொல்லி, பெற்றவர் விருப்பத்துடன் நிறைவேற்றிக் கொள்வான்.
இதுவரை எதற்குமே அவன் கலங்கியதைக் காணாதவர், ‘இன்று இப்படித் தவிக்கிறானே!’ உள்ளத்தில் தவித்தவர், மகன் சொல்வதை அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்த கணவரைப் பார்த்தவாறே, ‘‘அது சரி ராஜா, மயூ சின்னப் பெண்! இதை அவளிடமும் சொல்லி விட்டாயா?” எனக் கேட்டவரின் குரலில் ஆதங்கமும், கண்டிப்பும் வெகுவாகக் கலந்திருந்தது!
தாயின் கேள்விக்கு, ‘இல்லை’ என்ற தலையாட்டலை பதிலாகக் கொடுத்தான் மகன்.
யோசனையோடு, மகனின் சிகையைக் கோதிக்கொண்டே, ‘இனி முடிவெடுக்க வேண்டியது நீங்கதான்..’ என்ற பாவனையில் கணவனை பார்த்தார் பூரணி.
அவரோ, ‘‘இப்பதான் இரண்டு குடும்பம் பிரிந்திருக்கு! இந்த நேரத்தில் இதை பற்றிக் கதைத்து நல்ல நட்பாக இருக்கிற அந்தக் குடும்பங்களையும் பிரிக்க வேண்டுமா?” என்றவர், “முதல், மலருக்கு நல்ல சம்பந்தமாகப் பார்த்துச் செய்து வைப்போம். மயூவும் அவள் படிப்பை முடிக்கட்டும்; அதற்குப் பிறகும்..’’ இழுத்தவர் , தாயின் மடியிலிருந்து தலை தூக்கிப் பார்த்த மகனை கூர்மையாக அளவிட்டார்.
‘‘நீ உன் முடிவில் உறுதியாய்…’’ சொல்லிக்கொண்டிருக்கும் போதே எழுந்தமர்ந்தவன், ‘‘என் முடிவு என்றும் மாறாதுப்பா!’’ உறுதியான குரலில் முடித்து வைத்தான்.
‘‘அதைத்தான் நானும் சொல்கிறேன்; பொறுத்திரு! காலம் வரும் போது நாங்களே உங்களைச் சேர்த்து வைப்போம்! ஆனால், மயூவுடன் தனிப்பட்ட முறையில் தொடர்பு வைத்துக் கொள்வதில் எங்களுக்குக் கொஞ்சமும் விருப்பமில்லை. ஏனென்றால், நீ அந்தப் பிள்ளையோட இதைப் பற்றிக் கதைத்து, அவவின் படிப்பையும் கெடுத்திடாதே! பிரச்சனையை பெரிதாக்காதே தம்பி.’’ என்றார், கண்டிப்பான குரலில்.
அன்று தந்தை கூறியதிலிருந்து அவர் பேச்சை மீறவில்லை இவன்! அவளுடன் எந்த விதத்திலும் தொடர்பும் கொள்ளவில்லை!
அதனால், அவன் பட்ட மனக்கஷ்டத்தை வார்த்தைகாளால் சுலபமாக விபரித்து விடவும் முடியாது.
தன் காதலால் பெரியவர்கள் மனம் நோகக் கூடாது, தன் மனதில் குடிவந்தவள் எந்த வகையிலும் பாதிப்படையக் கூடாது என்பது மட்டுமே அவன் எண்ணமாக இருந்தது.
கடந்து வந்த இந்த சில வருடங்களில், அவளுடன் தான் கழித்த இனிய தருணங்களின் நினைவுகளுடன் வாழ்ந்து வருபவன், தன் மாமாவுக்குத் தெரியாமலே, தன் நண்பனையே மாமாவின் மகள் மலருக்கு மாப்பிள்ளையாக்கி, அவள் திருமணம் முடித்து அவுஸ்ரேலியாவுக்கும் சென்று விட, மயூவும் தற்போது பல்கலைக்குப் போவதால், இனிச்சரி தனது விடயத்தை பெரியவர்களுடன் கதைத்து, ஒரு நல்ல முடிவுக்கு வரலாம் என்று நினைத்திருத்தான்.
அப்படியிருக்க, அவள் முதல் முதல் பல்கலை போவதால், பொறுக்க முடியாமல் வாழ்த்துவதற்காக அழைத்தவன், நீண்ட நாட்களுக்குப் பிறகு அவளின் குரலைக் கேட்டதும், அவள் சொன்ன ‘ஹலோ’ என்ற ஒற்றைச் சொல்லின் இனிமையை செவியால் வாங்கி உள்ளத்தினுள் நிரப்பிக் கொண்டே, பேசமுடியாது மௌனம் காத்தான்!
ஆனால் அவளோ, ஒருவித பரவசத்துடன் அழைத்தவனுக்கு, தாரளமாகத் திட்டுக்களை அனுப்பியதுமில்லாமல், பிறகு தன் அழைப்பை ஏற்கவில்லையென்றதும், வாழ்த்துச் செய்தியை எஸ் எம் எஸ்ஸில் அனுப்பிவிட்டுப் பேசாதிருந்தவன்,
தன் கைபேசி இலக்கம் அவளுக்கு தெரியாதென்பதால், ‘நிச்சயம் யார் அனுப்பியது என்று நினைத்துக் குழம்புவாள். ஆன்ட்டி அங்கிளிடம் காட்டினாள் என்றால் தேவையில்லாமல்…ஏன் திடீரென்று எனக் கேள்வி வருமே!’ என நினைத்து, சஞ்சலப்பட்டுக் கொண்டிருக்கிறான்.
இத்தனை நேரமாய் குழம்பிய சிந்தனையுடன் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தவன், ‘இரவு பதினொருமணியாச்சி தான், என்றாலும் பரவாயில்லை; இன்று அவளுடன் கதைக்காவிட்டால், ஒரு வேலையும் ஓடாது போலிருக்கே! இத்தனை வருடங்களாக வைராக்கியமாக இருந்தவனை, அவளின் குரல் என்ன பாடு படுத்துகின்றது!’ முறுவலுடன் நினைத்தவாறே எழுந்தவன், ஏதோ ஒரு வேகத்தில், மறுபடியும் அவளுக்கு அழைத்தான்.

