அத்தியாயம் 8 .
‘‘கடவுளே! நாளைக்கு ஒன்பது மணிக்கு முதல் வகுப்பு இருக்கே! நான் இன்னமும்…ஹ்ம்ம…நித்திரை வருதில்லையே!’’ புலம்பியவாறே படுக்கையில் உருண்டு கொண்டிருந்த மயூ, தன்னருகிலிருந்த கைபேசி மணிச்சத்தத்தில் திடுக்கிட்டாள்.
‘‘ஐயோ! யார் இது? அதுவும் இந்தச் சாமத்தில்! எல்லோரையும் எழுப்பப் போகுதே!’’ பதைபதைப்புடன் யாரென்றும் பாராது அழைப்பை ஏற்றவள், ‘‘ஹலோ..” என்றாள், அவதியாக!!
தான் கதைப்பதற்குத் தாமதமானால், திரும்பவும் அழைப்பைத் துண்டித்து விடுவாள் எனப் பயந்த சத்தியன், ‘‘ஹலோ..’’ என்றான் அவசரமாக!
செவிகளில் நுழைந்த கணீர்க் குரலை, ஒற்ற சொல்லை வைத்தே உணர்ந்து கொண்டாள் மயூ!
அக்கணம், பலமாகத் துடித்த அவளின் இதயத் துடிப்பே, அவன் பெயரை ஆசை தீர உச்சரித்துக் கொண்டது!
நடுக்கமெடுத்த தன் கரம் கொண்டு கைபேசியை செவியோடு அழுத்திப் பிடித்தபடி, போர்வையை உதறி, படுக்கையை விட்டு எழுந்தமர்ந்தவள் வாயிலிருந்து, ஒற்ற வார்த்தை உதிரவில்லை!
விழிகளோ, கட்டுப்பாடின்றி கண்ணீரைக் கசிய வைத்தது!
எத்தனை நாட்கள்? இத்தனை வருடங்களில், எத்தனை எத்தனை தரங்கள் அவன் அழைப்பு வராதா என ஏங்கி, ஏமாற்றத்தில் துவண்டிருப்பாள்?!
எத்தனை நாட்கள், நேரில் காணமாட்டோமா எனக் காத்திருந்திருப்பாள்?!
ஒவ்வொரு வருடமும் நல்லூர்த் திருவிழாவுக்கு தவறாமல் வருபவர்கள், எப்படியும் வருவார்கள் என, ஒவ்வொரு திருவிழாவையும் ஏக்கமாகப் பார்த்திருந்தாளே! ஆனால், இதுவரை அடைந்ததென்னவோ முழுமையான ஏமாற்றமே!
இன்றைக்கு! ‘அப்போ… அவர் என்னை மறக்கவில்லை!’ உள்ளம் துள்ள நினைத்துக் கொண்டவள், ஏக்கமாய், அதே நேரம் மிகமிக ஆறுதலாய் உணர்ந்தாள்.
அதன் பின்னரே அவன் மௌனம் உறைக்க, ‘‘ஹலோ, லைனில் இருக்கிறீங்களா?’’ என்றாள், ஏக்கம் மறையாத மெல்லிய குரலில்!
தன் செவிவழி நுழைந்த அவளின் மெல்லிய கிசுகிசுப்பான ‘ஹலோ’ என்ற ஒற்றைச் சொல் தன்னுள் ஏற்படுத்திய மாற்றத்தை அனுபவித்து உறைந்து நின்ற சத்தியன், அவள் ‘‘இருக்கிறீங்களா?’’ என்றதும் தன்னுணர்வு பெற்று, அவள் குரலின் ஏக்கம் தாக்கினாலும், தனது உணர்வுகளை மிகவும் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு வெகு இயல்பாக உரையாட முயன்றான் .
‘‘ம்ம்ம்…மயூ, எப்படிம்மா இருக்கிறீர்? கதைத்து நிறைய நாளாச்சு இல்லையா?’’
‘நாட்களா? வருடங்களல்லவா!’ மனம் முணுமுணுக்க, ‘‘நான் நல்..லா இருக்கிறேன்.’’ வாய் மொழிந்தது! தொடர்ந்து, ‘‘நீங்க…எப்படி இருக்கிறீங்க?’’ என்றாள், கம்மிய குரலில்.
‘‘நல்லா இருக்கிறேன்மா. இரண்டு வருடங்களாக படிக்கவென்று இலண்டன் போயிருந்து போன கிழமை தான் வந்ததேன். உமக்கு விஷ் பண்ணலாமென்று காலையிலும் எடுத்தேன்!’’ என, இயல்பாகக் கதைக்கத் தொடங்க, மயூவும் தன்னைச் சுதாகரித்துக் கொண்டாள்.
‘கதைக்கவே மாட்டாரா என நான் ஏங்கியவர் கதைத்திருக்கிறார், இப்போதைக்கு பேசாமல் கதைப்போம்!’ என நினைத்து, தொடர்ந்து பொதுவாக உரையாடி கைபேசியை வைத்தாள்.
இதுவரை வா வா என வருந்தி வருந்தி உறக்கத்தை அழைத்தவள், இப்போதோ, அதற்கு முழுமையாக விடை கொடுத்தனுப்பி இருந்தாள்!
தான் நினைத்து நினைத்து உருகிக் கொண்டிருந்தவன், தன்னை இன்னமும் நினைவில் வைத்திருக்கிறான் என்பதே, அவளை ஆனந்தம் கொள்ள வைத்தது!
விழிகளின் தேடலுக்கு விடை கிடைக்கவில்லை என்றாலும், அவள் உள்ளத் தவிப்புக்கும் அவஸ்தைக்கும் அவனின் ஒத்த தொலைபேசி அழைப்பே மருந்தென அமைந்தது.
‘எல்லாம் சரியாகிவிடும்; முருகன் துணை செய்வார்!’ என்ற நம்பிக்கை, அவள் மனம் முழுதும் இதமாகப் பரவியது!
‘அண்ணாவிடம் தான் என் நம்பர் வாங்கி இருப்பார்; எதற்கும் விடிந்ததும், இவர் எடுத்து விஷ் பண்ணினார் என்று அம்மாவிடம் சொல்ல வேண்டும்!’ என்ற முடிவோடு, நீண்ட நாட்களுக்குப் பின் இனிய மனநிலையில் மெல்ல மெல்ல உறக்கத்தைத் தழுவிக் கொண்டாள் மயூ.
நீண்ட இடைவெளியின் பின், தன் அன்புக்குரியவளுடன் உரையாடிய உவகையை அணுவணுவாய் இரசித்தவாறே, உறக்கமின்றிப் புரண்டு கொண்டிருந்தான் சத்தியன் .
தன் மாமா குடும்பத்துடன் ஒரு இணக்கம் ஏற்படமுன், எந்தவிதமான ஆசைகளையும் அவள் மனதில் வளர்த்துவிடக் கூடாது என்று பொதுவாகக் கதைத்திருந்தாலும், அவளும், தன்னை போல தவிக்கிறாள் என்பதை நன்கறிந்தவனால், ‘அந்தக் குட்டிப்பெண்ணை இப்படி வருத்த வேண்டியதாய் இருக்கே!’ என, மனம் வெதும்பாமலும் இருக்க முடியவில்லை.
ஆனாலும், இருக்கும் பிரச்னையை பெரிதுபடுத்தாது, யாரையும் புண்படுத்தாது சுமுகமாகத் தீர்த்தே அவளைச் சேர நினைத்தவன், ‘எல்லாம் சரியாகும் நாள் தூரத்தில் இல்லை!’ என, தன் மனதைச் சமாதானம் செய்த படி விழிகள் மூடினான்.
சத்தியன் யாழ் வருவது தடைபட்டாலும், உண்மை நட்புக்கு தூரமெல்லாம் ஒரு தடையா என்ற வகையில், சத்தியன், அகில் நட்பு தடையின்றித் தொடர்ந்தது.
மயூவின் அண்ணா அகில், பேராதனையில் படித்துக் கொண்டிருந்ததால், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தன் நண்பன் வீட்டுக்குப் போய் வந்தான்.
இது ரவிக்கும் ராகவனுக்கும் தெரியுமென்றாலும், ராகவனால் அகிலை தடை செய்யும் அளவுக்குப் போக முடியவில்லை. தன் தங்கை குடும்பத்துக்கும் தனக்கும் தானே பிரச்சனை என்று நினைத்தவர் எதுவுமே பேசாது இருந்து விட்டார் .
பின்பு, அகிலுக்கு கொழும்பில் வேலை கிடைக்கவே, அவனை வேறு எங்கும் தங்க விடாது தங்கள் வீட்டிலேயே தங்கச் சொல்லி பூரணியும் சத்தியனும் எவ்வளவோ வற்புறுத்தியும், அதற்கு மறுத்தவன், அவர்கள் வீட்டிக்கு அருகிலேயே ஒரு அறையில் இப்பொது தங்கியிருக்கிறான் .
*****
‘‘மயூ…மயூ, இதென்னடா ஒருநாளும் இல்லாமல் இப்படித் தூங்குகிறாய்! எழும்பும்மா, மணி ஏழாகப் போகுது!’’ நேரத்தோடு எழுந்து சுறுசுறுப்பாக இயங்கும் மகள், இத்தனை நேரமாக எழவில்லை என்றதும், ‘ஏதாவது வருத்தமோ?’ என நினைத்த ராஜி, உள்ளே வந்து தொட்டுப் பார்த்தவர், அப்படியேதுமின்றி அமைதியாக அசந்துறங்கும் மகளின் மலர் முகத்தை பார்வையால் வருடியவாறே மெல்லத் தட்டி எழுப்பினார்.
உறக்கக் கலக்கம் அகலாமல் விழிகளை இலேசாகத் திறந்தவளோ, ‘‘ம்மா ப்ளீஸ்! இன்னும் கொஞ்சநேரம்!!’’ மறுபுறமாக புரண்டு படுத்தாள்.
‘‘செல்லம்! மணியைப் பாருடா; நீ இன்றைக்கு கம்பசுக்குப் போகவில்லையா?’’ தாயின் குரல் தெளிவாக செவி வழி நுழைய, திடுக்கிட்டு மணியைப் பார்த்தவாறே துள்ளி எழுந்தாள்.
‘‘ஏம்மா! இவ்வளவு நேரமாக நான் தூங்கினேனா?!’’ ஆச்சரியக் குரலில் கேட்க, தாய் தமக்கையை எழுப்புவதைக் கேட்டுக்கொண்டே வரவேற்பறையில் படித்துக் கொண்டிருந்த அவள் தம்பியோ, ‘‘ஹைய்யோ இல்லக்கா! நீ இவ்வளவு நேரமாய் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தாய்!’’ என்றான், கேலியாக!
‘‘பொறுடா வாறேன்…டான்ஸ் ஆடிக் காட்ட…’’ தம்பியை முறைத்தவாறே, ‘‘இதோ வாறேன்மா…’’ தாயை, கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து விட்டு, மின்னலென குளியலறைக்குள்சென்று மறைந்தாள்.
ஒரு நாளுமில்லாமல், இவ்வளவு நேரமாய் மகள் உறங்கினாள் என்பதில் குழம்பிய ராஜி, அவளது துள்ளலையும் சந்தோஷத்தையும் பார்த்து மிகவும் மனம் மகிழ்ந்தார்.
‘இந்தப் பிள்ளைக்கு அப்பப்ப என்ன நடக்குமோ! ஒரு நேரம் நல்லா இருப்பாள், மறுதரம் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு திரிவாள்!’’ நினைத்தவர், அவளது மேசையில் இருந்த கடல்புறா கதைப் புத்தகத்தைப் பார்த்து விட்டு, ‘‘அதுதானே பார்த்தேன்! இரவிரவா கதைப்புத்தகம் வாசித்திருக்கிறாள்; பிறகெப்படி நேரத்துக்கு எழும்புவது?!’ முணுமுணுத்தபடி, சமையலறையினுள் சென்று மறைந்தார்.
முதல் நாள்! முதலாவதாக ஆங்கிலம் முடிந்ததும், முகாமைத்துவக் கணக்கியல் பாடத்துக்காக அருகிலிருந்த விரிவுரை மண்டபத்தில் சென்று முதலாவது வரிசையில் அமர்ந்தனர் தோழிகள் மூவரும்.
அமர்ந்ததிலிருந்து, மற்றவர்களுடன் அறிமுகம் செய்து கதைத்துக் கொண்டிருந்தாலும் தோழியர் தம்முள் இரகசியமாய் குசுகுசுப்பதைக் கவனித்த ஸ்ரீ, ‘‘எனக்குச் சொல்லாமல் என்னடி விஷயம்? இரண்டு பேரும் இப்படி இரகசியம் பேசிச் சிரிக்கிறீங்க?’’ அறியும் ஆவலும், தனக்குச் சொல்லவில்லையே என்கின்ற மனச்சுணக்கமும் அவள் குரலில் கலந்து கிடந்தது!
‘‘அதுதான்டீ விசயமே! உனக்கும் அது தெரிய வரும்; கொஞ்சம் பொறுடி!’’ என்ற மஞ்சு, இலேசாக முறைத்த ஸ்ரீயைப் பார்த்துக் கேலிச் சிரிப்பை உதிர்த்தவாறே, ‘‘நாம் விரும்பியோ விரும்பாமலோ சிலரைப் பார்க்க மாட்டோம் என்று நினைத்தாலும், பார்க்க வேண்டி வரலாம் ஸ்ரீ!’’ தொடர, அவள் கரத்தில் நறுக்கென்று கிள்ளிய மயூ, ‘‘கொஞ்சம் வாயை மூடிட்டு இருப்பா; என்ன நடக்குதென்று பார்ப்போம்!’’ மஞ்சுவிடம் குனிந்து இரகசியமாய்ச் சொன்னாள்.
ஸ்ரீயோ, தோழிகள் இருவரும் தன்னைக் கேலி செய்கிறார்கள் என்ற மனச் சுணக்கத்துடன், தனது பெரிய சிஆர் கொப்பியை விரித்து, முதல் பக்கத்தில் எழுதியிருந்த பெயரை மேலாக விளம்பி எழுதத் தொடங்கினாள்.
தாம் தங்களுக்குள் பேசி சிரித்துக் கொண்டது அவளுக்கு பிடிக்கவில்லை, கோபத்தை உண்டு பண்ணிவிட்டது என்று தெரிந்தும், அதனை பெரிதுபடுத்தாமல், அவளைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே அருகிலிருந்த மற்றைய பிள்ளைகளோடு கதைத்துக் கொண்டிருந்தனர் மஞ்சுவும் மயூவும்!
மாணவர்களின் சிரிப்புப் பேச்சுச் சத்தங்களால் நிறைந்திருந்த விரிவுரை மண்டபம் திடீரென்று அமைதியானது.
‘‘சார்…வாறார் போல…’’ என நினைத்து, எழுதிக் கொண்டிருந்ததை மூடி விட்டு, பக்கவாட்டில் திரும்பிய ஸ்ரீ, நிமிர்வும் மிடுக்குமாகச் சென்று மேடையேறுபவனை நம்பமுடியாத திகைப்பில் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளின் தோழிகளோ, விரிவுரையாளராக வந்த ராமை பார்த்ததும் ஸ்ரீ அதிர்ந்து முழிப்பதைப் பார்த்து, பொங்கியெழும் நகைப்பை அடக்கியபடி இருந்தனர்.
‘இந்த நெட்டைக் கொக்கா எங்களுக்கு பாடம் எடுக்கப் போகுது! அப்ப ஜெயராம் என்றால், அது…ராம்! ஹைய்யோ சரி தானே! இவள்கள் ஒரு வார்த்தை சொல்லவில்லையே! அது தான் இந்தச் சிரிப்பா? வகுப்பு முடிந்து வெளியில் போனதும் இருக்கு ராசாத்திகளுக்கு!’ தோழிகளுக்கு மனதில் திட்டிக்கொண்டே, அவனையே தொடர்ந்த தனது விழிகளைத் தாழ்த்தி தலையைக் குனிந்து கொண்டாள் ஸ்ரீ.
‘கடவுளே! அன்றைக்கு என்னவெல்லாம் சொல்லித் திட்டினேன்!’ தன்னையே நொந்து கொண்டவளுக்கு, தலையை உயர்த்தவே சங்கடமாக இருந்தது!
தான் வந்ததும் வணக்கம் கூறி எழுந்த மாணவர்களை கையசைவால் இருத்திய ராம், ‘‘யாரும் எழுந்து வணக்கம் சொல்லத் தேவையில்லை; மரியாதை மனதில் இருந்தால் போதும்; இது பாடசாலை இல்லை, அதனால், என்னோடு நட்பாகவே எல்லோரும் பழகலாம்!” முறுவலித்தான்.
பின், முதல் நாள் என்பதாலும் நேற்றைய வரவேற்பில் தான் கலந்து கொள்ளாமையாலும், வரிசையாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டே வந்தவன், முதல் வரிசையின் கடைசியில் பொங்கும் சிரிப்பை அடக்கிக் கொண்டு குறும்பு கொப்பளிக்கும் விழிகளுடன் மஞ்சுவைக் கண்டதும், அவளிருந்த நிலை பார்த்துத் தன்னுள் எழுந்த நகைப்பை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான்.
‘இப்போ நான் சிரித்தால், இந்த வாயாடி என்னை ஒரு வழி பண்ணிவிட்டுத்தான் விடுவா!’ நினைத்தபடி, அவளையும் அவளருகில் அமர்ந்திருந்த மயூவையும் பார்த்து சிநேகமாகத் தலையசைத்தவன், மயூவின் அருகில் தலையைக் குனிந்து கொண்டிருக்கும் உருவத்தில் விழிகள் நிலைக்க, யோசனையாக நெற்றியைச் சுருக்கினான்.
தொடர்ந்து, நன்றாக ஊன்றிப் பார்த்து அடையாளம் கண்டு கொண்டதும், ஆச்சரியப் பார்வையை மஞ்சுவின் மீது திருப்பினான்.
அவளோ, குறும்புப் பார்வையும் அடக்கிய நகைப்புமாக அமர்ந்திருந்தாள்.
அன்று, ஸ்ரீயும் தன்னோடு பல்கலை வருவதை மறைத்திருக்கிறாள் என்றுணர்ந்து கொண்டவன், கணப்பொழுதில் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு பொதுவாகக் கதைத்து, தனது முதல்நாள் பாடத்தைத் தொடக்கினான்.
அதன் பின், அவன் மறந்தும் அவர்கள் பக்கம் பார்க்கவில்லை !
ஸ்ரீயோ, தன் விழிகளை அவன் புறமாக நகர்த்தவேயில்லை!

