அன்பெனும் பூங்காற்றில் 9 – 1

அத்தியாயம் 9 .

இடையில் மூன்று மணிநேரம் விரிவுரைகள் எதுவுமில்லாததால், கொளுத்தும் வெயிலில் வீடு திரும்பிய ஸ்ரீயின் முகம் சோர்ந்து போய் இருப்பதைப் பார்த்த அவளின் தாய், ‘‘இன்றைக்கு கம்பஸ் எப்படிப் போச்சு? ராகிங் இருந்ததா?’’ அறியும் ஆவலில் வினவினார் .
அதற்கு அவளோ, ‘‘எப்போதும் போலத்தான்மா, நாங்க பின் பக்கத்தால் வந்திட்டோம்; இனி இரண்டரை மணிபோல போக வேண்டும்!’’ என்றபடி முகம் கழுவுவதற்காக பின் பக்கமாகச் செல்ல, தாயாரும் அவளுக்கு உணவை எடுத்து வைக்கச் சென்றார்.
வழமையாக வெளியே போய் வந்தால் வள வளவென்று நடந்தவற்றை தன்னிடம் ஒப்பிப்பவள் இன்று அமைதியாகச் சாப்பிடுவதைப் பார்த்து, ‘‘ஏன்மா ஒரு மாதிரி இருக்கிறாய்?’’ அன்பாய்க் கேட்டவருக்கு புன்னகையைப் பதிலாகக் கொடுத்தாள் மகள்.
சிறிது பொறுத்து, தன்னையே ஆராயும் தாயைப் பார்த்தவள், ‘‘இல்லம்மா..ஒன்றுமில்ல. சாப்பாடு நல்லா இருக்கு!’’ சமாளித்து, அமைதியாக உண்டு முடித்து, ‘‘எனக்கு கொஞ்சம் கணக்குகள் செய்ய இருக்கு…’’ என்றவாறே தன்னறைக்குள் புகுந்து கொண்டாள்.
‘‘ம்ம்…ஏதோ ஃப்ரெண்ட்ஸுக்குள்ள சண்டை போல! அதுதான் ஒரு மாதிரி இருக்கிறாள்; பின்னேரமும் இப்படியே இருந்தால் கேட்டுப் பார்ப்போம்!’’ என நினைத்தபடி, பாடசாலை முடிந்து இளைய மகன்கள் வர நேரம் இருப்பதால், தொலைக்காட்சியை இயக்கிக் கொண்டமர்ந்தார் அவள் தாயார்.
அறையினுள் சென்று படிக்கும் மேசையில் அமர்ந்த ஸ்ரீயினுள், சற்றுமுன், தனக்கும் சினேகிதிகளுக்கும் நடந்த வாக்குவாதமும் அது யாரால் நடந்ததோ அவனின் நினைவும் போட்டி போட்டுக் கொண்டு வந்தது!
விரிவுரையை முடித்த ராம், அடுத்த விரிவுரையில் சந்திப்போம் என்று சென்றபின், அமைதியாக வெளியில் வந்தவர்கள், அடுத்த விரிவுரைக்கும் போய்விட்டு பல்கலையை விட்டு வெளியில் வந்ததும், இத்தனை நேரமாக, தோழிகளுடன் மனதுள் கட்டிப் புரண்டு சண்டை போட்டுக் கொண்டிருந்த ஸ்ரீ, நேரடியாக போர்க் கொடியைத் தூக்கினாள்.
இதெல்லாம் நமக்கு ஜுஜுப்பி என்ற வகையில், வரிந்து கட்டிக் கொண்டு அவளுடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டாள் மஞ்சு.
‘‘ஏன்டி லூசி, உங்க ராமண்ணா தான் எங்களுக்கு பாடம் எடுக்கப்போறார் என்று சொல்ல இல்லை?’’ ஸ்ரீ.
அவள் கேட்ட விதம் பார்த்து, ‘‘ஹாஹா.. ஹைய்யோ….ஹாஹா.’’ பாதையில் செல்பவர்கள் முறைத்துக்கொண்டே திரும்பிப் பார்க்கும் வண்ணம், கெக்கலி கொட்டிச் சிரித்தாள் மஞ்சு.
அவள் சிரிப்பு, ஸ்ரீயின் கோபத்தை மேலும் விசிறியது!
‘‘மென்டலாடி நீ? இப்போ எதற்கு இப்படிப் பல்லைக் காட்டுகிறாய்? பார், அந்த ஐயா உன்னை முறைத்துக்கொண்டு போகிறார்; முதல் இளிக்கிறதை நிறுத்துடி!’’ அடிக்குரலில் சொன்னவள், அவர்கள் சண்டையை இரசித்தபடி வரும் மயூவையும் முறைத்தாள்.
‘‘முதல், அவளைச் சிரிக்க வேண்டாமென்று சொல்லடி மயூ!’’ அவளிடமும் சீறினாள் ஸ்ரீ.
எப்பவாவது இப்படிக் கோபப்படும் ஸ்ரீயை, அவள் கோபப்படும் அழகை இரசிக்க விரும்பிய தோழிகள் இருவரும், ஒருவர் ஒருவரைப் பார்த்துக் கண்ணடித்துச் சிரித்துக் கொண்டார்கள்.
‘‘ஸ்ரீ செல்லம், அப்படிச் சொல்லியிருந்தால், அவரை முதல் முதலாப் பார்த்த போது, ஹா…ஹா…இலையான் வாய்க்குள்ள போனது கூடத் தெரியாமல் வாயைத் திறந்து கொண்டு, ஹா…ஹா… உன் கொட்டப் பாக்குக் கண்களையும் உருட்டிக் கொண்டு ஒரு காட்சி தந்தாயே! அட அட! என்ன அழகு! அதை நாங்க எப்படிப் பார்க்கிறது சொல்லு? உண்மையாகவே அந்தக் கண்கொள்ளாக் காட்சியைப் காண வேண்டுமென்று தான்டி உனக்குச் சொல்லவில்லை.’’ நகைப்போடு சொன்ன மஞ்சு, “அதோடு..” நிறுத்தி, ஸ்ரீயை முறைத்தாள்.
‘‘நீ அவரோட மோதினதை எங்களிடம் மறைத்தாயே, அதற்கும் சேர்த்து!’’ மஞ்சு விட்ட இடத்திலிருந்து தொடர்ந்த மயூ, குறும்புச் சிரிப்புடன் சொல்லி முடித்தாள்.
ஸ்ரீயோ, தோழிகளை அடங்காக் கோபத்துடன் முறைத்தாள்.
‘‘ஏன்டி எருமைகளே! நீங்க எல்லாம் ஒரு ஃப்ரெண்டா?’’ என்றவாறே, தன் சைக்கிளை வேகமாய் முன்னால் விட, அவளைக் கலைத்துப் பிடித்த நண்பிகள், ‘‘சரிடி, நீ தான் அப்படி ஒரு காட்சி தந்தாய்; பராவாயில்லை விடு! அவரை அன்றைக்கு அந்தளவுக்குத் திட்டினாய். ஆனால், ராமண்ணா… ஹா…ஹா…உன்னைப் பார்த்து…ஹா…ஹா…’’ அடக்க முடியாது மீண்டும் சிரித்தாள் மஞ்சு.
‘‘நீ கவனித்தாயாடி மயூ, கொஞ்ச நேரம் ராமண்ணாவின் பார்வை நம்ம ஸ்ரீயை விட்டு அகலவே இல்லை!’’ தொடர்ந்து சொல்ல, ‘‘ம்ம்ம்…பார்த்தேன்… பார்த்தேன். பிறகு நாம இருந்த பக்கமாகத் திரும்பவே இல்லை!’’ விரிந்த முறுவலுடன் சொன்ன மயூ, ஸ்ரீயின் கோபத்தில் கன்றிய முகத்தைப் பார்த்ததும், ”சரி விடுங்கடி, இதுக்கெல்லாமா சண்டை போடுவது?’’ சமாளிக்க முயன்று, ‘‘ஆனால் ஸ்ரீ, எனக்கென்னவோ ராம் அண்ணா முதல் மோதலிலேயே அவுட் என்றுதான் தோன்றுது!’’ அடக்கிய புன்னகையுடன் முடித்தாள் .
வழமையாக, மஞ்சு கிண்டல் கேலிகள் பண்ணினாலும், சிரித்துவிட்டு பேசாதிருக்கும் மயூவே இன்று இப்படிச் சொன்னதும், மிகுந்த கோபம் கொண்டாள் ஸ்ரீ.
‘‘உங்களுக்கு வேறு கதையே இல்லையா? இது என்ன பேச்சு? இங்க பாருங்க, என்னோட இப்படியெல்லாம் கதைக்காதீங்க!’’ சீறியவள், வழமையாக அவள் வீட்டுக்கு நேராக வர முடியுமென்றாலும் தோழிகள் தத்தம் வீடுகளுக்குப் போன பின், ஆஸ்பத்திரி வீதியால் தன் வீட்டுக்கு வருபவள், இன்று, நேராக, பலாலி வீதியால் வீடு வந்து சேர்ந்தாள்.
அவர்கள் தன்னிடம் ராம் பற்றி மறைத்தார்கள் என்பதை விட, ராமைத் தன்னோடு சேர்த்து பகிடி பண்ணியதே, அவளது எரிச்சலையும் கோபத்தையும் அதிகமாக்கியது.
இப்போது, சற்றுமுன் நடந்ததை, பொறுமையாக நினைத்துப் பார்க்கையில், அக்கோபமும் எரிச்சலும் மெல்ல மெல்ல விலக, முகத்தில் மென்னகை அரும்பு விட்டது.
‘‘நாங்களும் எங்க சண்டைகளும்!’’ தனக்குத்தானே சொல்லிச் சிரித்தவள், ‘என்றாலும் இவரை மாதிரி ஒருத்தரைக் காதலித்து விட்டுட்டு இன்னொருத்தரைக் கட்ட, அந்தப் பெட்டைக்கு(பெண்ணிற்கு) எப்படித் தான் மனம் வந்ததோ!’ நினைத்தவள் மனதில், அன்று மஞ்சு ராமைப் பற்றிச் சொன்னவை வந்து போனது.
பல்கலையில் படிக்கும் காலத்தில், ஒன்றாகப் படித்த ராமும் மதியும் இரு வருடங்களுக்கும் மேலாக காதலித்திருக்கிறார்கள்.
இறுதிப் பரீட்சை முடிந்து சில நாட்களில், அமெரிக்காவில் உள்ள வைத்தியரைத் திருமணம் பேசி முடித்துவிட்டதாகக் கூறி, திருமணப் பத்திரிகையைக் கொடுத்த மதி, ‘‘என்னை மன்னிச்சிடுங்க ராம்! நம்ம விஷயம் அப்பாவுக்குத் தெரிய வந்ததில், அவசரம் அவசரமாக கல்யாணம் முற்றாக்கிவிட்டார்!’’ என்றவள், அதிர்ந்து போய் நிற்கும் அவனைப் பார்த்துச் சிறிதே சிறிதாக தயங்கினாள்.
பின் தயக்கத்தை தவிர்த்து, ‘‘ நீங்க இன்னமும் வேலை கூட பார்க்கத் தொடங்கவில்லை; அப்பா ஒருநாளும் இந்தக் காதலுக்கு ஒப்புக் கொள்ளமாட்டார் ராம்; என்னை மறந்திடுங்க!’’ மிகச்சாதாரணமாகச் சொல்லிச் சென்று விட்டாள்.
அவள் மீது உண்மையான நேசம் வைத்து, அவளே தன் வருங்கால மனைவி என, வீட்டினர் சுற்றம் எல்லோருக்கும் தெரிந்திருந்த வேளையில், அவளது மறுப்பினால் தடுமாறிக் கலங்கிப் போனான் ராம்.
அதன்பின், தன்னைத் தானே வெறுத்து ஒடுங்கிய ராம், அதிலிருந்து அவன் நண்பர்கள், பெற்றவர்கள் துணையால் மிகவும் கஷ்டப்பட்டு மீண்டு, இன்று இந்த நிலைக்கு வந்ததே பெரிய விடயம் என்று கூறிய மஞ்சு,
அதன் பின் எவ்வளவோ முயன்றும், அவன் திருமணத்தைத் தவிர்த்து வருவதாகவும், பெண்களைத் தள்ளியே வைப்பதாகவும் கூறியிருந்தாள்.
அதை நினைத்துப் பார்த்தவளுக்கு, ராமை நினைக்க பாவமாக இருந்தது.
‘ஏன் தான் இந்த பொல்லாத காதலைச் செய்வான்?! பிறகு தவிப்பான்!’ என நினைத்துக் கொண்டவள், ‘நாம மட்டும் இந்த காதல் கத்தரிக்கா என்றதிலிருந்து விலகியே இருக்கவேண்டும்!’ என்றெண்ணிக்கொண்டே, அடுத்த விரிவுரைக்குச் செல்வதற்காகத் தாயராகினாள்.
*****
இன்னும் இரண்டே இரண்டு நாட்கள்; முதல் வருட மாணவர்களை வரவேற்கும் விதமாக, இரண்டாம் வருட மாணவர்கள் ‘வெல்கம்’ பார்ட்டி வைப்பதற்கு!
முதல் வருட மாணவர்கள், ‘ஹப்பா! இன்னும் இரண்டு நாட்களுக்குச் சமாளித்துவிட்டாள், அதன் பிறகு இந்த ராகிங் தொல்லைகளிலிருந்து விடுதலை!’ என நினைத்துக் கொண்டிருந்தனர்.
அதே உணர்வுடன் அன்று கம்பஸிலிருந்து வீடு திரும்பிய ஸ்ரீயை ‘‘இப்பவும் ராகிங் இருக்கா ஸ்ரீ?” என்றவாறே, தேங்கி நிற்கச் செய்தார் அவள் அன்னை.
அவர் கேட்ட விதத்திலில் எழுந்த வியப்புடன் அவரைப் பார்த்தாள் மகள்.

error: Alert: Content selection is disabled!!