அன்பெனும் பூங்காற்றில் – 1

அன்பெனும் பூங்காற்றில்!

அத்தியாயம் 1.

‘‘பெரிய மன்மதக்குஞ்சு என்ற நினைப்பு!’’ முணுமுணுத்தபடி, வேகமாய வந்த ஸ்ரீயிடம், ‘‘என்னடீ நடந்தது?! யாரைத் திட்டிக்கொண்டு வருகிறாய்?!’’ வினவினாள் மஞ்சு.
‘‘அதையேன் கேட்கிறாய்! தவறிப் போய் அங்கே நின்ற நெட்டைக் கொக்கில் மோதி விட்டேன். அதற்காக, ஒன்றுக்கு நாலுதரம் ஸாரி வேற சொன்னேன்! அப்படியிருந்தும், வேண்டுமென்றே வந்து மோதின மாதிரி முறைக்குதடி. அட..முறைச்சால் மட்டும் பரவாயில்லை; வாய்க்குள்ள திட்டி முணுமுணுக்குதடி…லூசு.. லூசு..’’ சிடுசிடுத்தாள் ஸ்ரீ.
‘‘யாருடி அது?! வா…காட்டு பார்ப்போம்; என்னவென்று கேட்டு விட்டால் போச்சு!’’ என்றவாறே, ஸ்ரீ வந்த பக்கமாகத் தன் பொருட்களடங்கிய வண்டிலைத் திருப்பிய மஞ்சுவோ, வியப்பால் விழிகள் மலர்ந்தாள்!
‘‘ராமண்ணா! எப்போ வந்தீங்க? எப்படி இருக்கிறீங்க? கண்டு ஒரு வருசத்துக்கு மேல் இருக்குமே!’’ என, மகிழ்வாகக் கதைக்கத் தொடங்க, யாரென்று திரும்பிப் பார்த்த ஸ்ரீ, நாக்கைக் கடித்துக்கொண்டு உறைந்து நின்றாள்!
‘ஹைய்யோ! இவளிடம் சொன்னதெல்லாம் இந்த ஆள் காதில் விழுந்திருக்கும் போல! அதைவிட, இவளுக்கு தெரிந்தவராகவும் இருக்கிறார்! யாராய் இருக்கும்? ஒருநாளும் இந்த முசுடக் கண்டதில்லையே! மூஞ்சியப் பாரு மூஞ்சியை! எட்டூருக்கு நீட்டிக் கொண்டு நிற்கிறார்!’ மனதில் திட்டித் தீர்த்தவள், அவன்புறம் திரும்பிய விழிகளை விலத்தி, தள்ளி வந்து நின்று கொண்டாள்.
தற்செயலாக மோதுப்பட்டு ‘ஸாரி’யும் சொன்னவளிடம் தான் வீணாக கோபித்துக்கொண்டதை உணர்ந்த ஜெயராம், மன்னிப்புக் கேட்கும் நோக்கில்தான் அவள் பின்னால் வந்திருந்தான்.
அவளோ, தனக்கு இத்தனை பட்டப்பெயர்கள் சூட்டித் தன் தோழியிடம் பேசியதை கேட்டவன், மன்னிப்புக் கேட்கும் எண்ணத்தை அப்படியே தூக்கிப் போட்டுவிட்டு, ‘ஓ..! மஞ்சுவின் ஃப்ரெண்டா?! அப்போ இந்தக் குதி குதிக்கவில்லையென்றால் தான் ஆச்சரியப்பட வேண்டும்!’ நினைத்தவாறே, அவள் கதைப்பதைக் கேட்டபடி ஓரமாக நின்றிருந்தான்.
மஞ்சு தன்னோடு கதைக்கத் தொடங்கியதும், அதிர்ந்து, குழப்பத்துடன் தள்ளி நின்றவளை கூர்மையாக அளவிட்டவன், பின், அவளைப் பொருட்படுத்தாமல் மஞ்சுவுடன் கதைக்கத் தொடங்கினான்.
ராமுடன் சிறிது நேரம் அளவளாவிய மஞ்சு, ‘‘பின்னேரம் கட்டாயம் வீட்டுக்கு வருவீங்க தானேண்ணா!’’ ஆவலுடன் கேட்டாள்.
‘‘கட்டாயம் கட்டாயம். இல்லையென்றால், நரேன் என்னை உண்டு இல்லையென்றாக்கி விடுவான்! வீடு போய்ச் சேர்ந்ததும், பார்ஸல் உம் கையிலிருக்க வேண்டுமென்று வெருட்டித்தான் அனுப்பினான்!’’ முறுவலுடன் கூறினான்.
சட்டென்று சஞ்சலத்துடன் தோழியைத் திரும்பிப் பார்த்த மஞ்சு, தன்னைச் சமாளித்தவாறே, ‘‘சரிண்ணா, பின்னேரம் பார்ப்போம்!” என்றபடி, நண்பியை நோக்கி நகர்ந்தவள், ‘‘வாடி ஸ்ரீ…அது யாரு அந்த நெட்டைக்கொக்கு என்று காட்டு!’ என, மறக்காது விட்ட இடத்திலிருந்து தொடங்க, அவளை நன்றாக முறைத்த ஸ்ரீ, மறந்தும் ராம் பக்கம் திரும்பியும் பார்க்கவில்லை.
‘‘பச்…ஒன்றும் வேண்டாம்டி. வா, நேரம் போய்ட்டுது; அம்மா நேரத்துக்கு வரச் சொன்னார்; பிறகு கத்துவாடி.’’ அவசரம் அவசரமாக பில் போடும் வரிசையில் போய் நின்று கொண்டாள்.
‘‘சரிதான் விடு! நீதான் கோபப்பட்டாய், இப்போ நீயே இப்படிச் சொல்கிறாய்!’’ என்றபடி, அவளின் பின்னால் வந்து நின்று கொண்டாள் மஞ்சு.
மஞ்சு, ஸ்ரீ இவர்களின் மற்றுமொரு உயிர்த்தோழி மயூரி, மூவருமே நேர்சரியில் இருந்து ஒன்றாகப் படித்தவர்கள்.
அதுமட்டுமின்றி, இன்னும் ஒருகிழமையில் ஆரம்பமாகும் பல்கலையாண்டில், முதலாம் வருட முகாமைத்துவப்(மானேஜ்மென்ட்) படிப்புக்கு மூவருமே தேர்வாகியுள்ளனர்.
அவர்களின் பின்னால் தானும் வரிசையில் நின்று பொருட்களை வாங்கிய ராம், அவர்களைத் தொடர்ந்து வந்து தனது கார் நிறுத்தியிருந்த அண்டர்கிரௌண்ட் நோக்கி நடந்தவன், தன்னையுமறியாது திரும்பிப் பார்த்தான்.
அவனையே திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டு சைக்கிள்களை எடுக்கப் போய்க் கொண்டிருந்த ஸ்ரீயோ, ‘ஹைய்யோ! நான் பார்த்ததை முசுடு கண்டுட்டுது!’ எண்ணியவாறே, அவசரமாகத் தலையை திருப்பிக் கொண்டாள்.
‘கார்கில்ஸ்’சிலிருந்து திரும்பி, யாழ் மார்டின் வீதியிலுள்ள ஸ்ரீ வீட்டிற்குச் சென்று, தாம் வாங்கிய பொருட்களைக் கொடுத்து விட்டு, தமது தோழியான மயூரியைப் பார்த்து வருவோம் என்ற எண்ணத்தில் அவள் வீடு நோக்கிச் சென்றனர் தோழிகள்.
மயூரியும் மஞ்சுவும் யாழ் நகரில் ‘டெம்பில்வீதி’யில் கொஞ்சம் தள்ளித் தள்ளி வசிக்கின்றனர்.
போகின்ற வழியில், தன் வீட்டிற்குச் சென்ற மஞ்சு, வாங்கி வந்த பொருட்களைத் தாயிடம் கொடுத்துவிட்டு, ‘‘மயூ வீடு வரை போய் வருகிறேன்மா!’’ போகிற போக்கில் சொல்லிவிட்டு துள்ளலாய் வெளியில் இறங்கினாள்.
‘‘எங்கே மறுபடியும் போகிறாய்? காலைல எழும்பினால், இந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு ஊர் சுத்துவதே வேலையாப் போச்சு!’’ திட்டத் தொடங்கிய தனது தந்தை மணியத்தின் பக்கம் திரும்பியும் பாராமல், அவர் கூச்சல் செவிகளில் விழாத பாவனையில் விறு விறுவென வெளியில் வந்தவள், ‘‘டீ…கெதியா எடு; மணி கத்துறார்! கொஞ்சம் நின்றால் இன்றைக்கு முழுவதும் இரண்டு பேருக்கும் அர்ச்சனை கிடைக்கும்!” சைக்கிளில் ஏறி விரைய, ‘‘நில்லுடி நில்லு!’’ பின்னால் விரைந்தாள் ஸ்ரீ.
கட்டுப்பாடுகளின் மொத்த உருவமே நான் எனும் தந்தை! அதிர்ந்து பேசாத அன்னை! வைத்தியராகப் பணியாற்றும் அண்ணா! பாசமே உருவான அண்ணி! பாடசாலையில் உயர்தரத்தில்(பிளஸ்வன்) படித்துக் கொண்டிருக்கும் தங்கை! இதுதான் மஞ்சுவின் குடும்பம்.

வீட்டின் பின்னறையில், அயர்ன் பண்ணிக் கொண்டிருந்த மயூரி, வீட்டு வாசலில் கேட்ட மணிச்சத்தத்தில், ‘மஞ்சு ஆட்கள் போல! ‘கார்கில்ஸு’க்கு வரவில்லை என்றதற்கே கோபப்பட்டாள்கள்!’ நினைத்தவாறே அயர்ன்பொக்ஸ்சைக் கழட்டி வைத்து விட்டு, ஓடி வந்து வாசல் கதவைத் திறப்பதற்குள், அழைப்புமணியை அழுத்தி அழுத்தி அதைக் கதறடித்து விட்டாள் மஞ்சு.
“ஹப்பப்பா…எருமை திறப்பதற்குள் என்னடி அவசரம்!” என்றவாறே கதவைத் திறந்த தோழியைப் பார்த்து, ‘‘கடைக்கும் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டு, பட்டப்பகலில் நித்திரையா கொள்கிறாய்?’’ கேலி செய்தவாறே ஆர்ப்பாட்டமாக உள்ளே நுழைந்தாள் மஞ்சு.
‘வேலையாக இருந்தியா மயூ?’’ கேட்டவாறே வந்தமர்ந்தாள் ஸ்ரீ.
‘‘ஆமாடி! கொஞ்சம் அயர்ன் பண்ணுகின்ற வேலை இருந்தது. கார்கில்ஸ் போய் வந்திட்டீங்களா?’’ன்றவள், ‘‘ஏதாவது குடிக்கிறீங்களா?’’ குளிர்சாதனப் பெட்டியிலிருந்த ஃப்ன்டாவை கிளாசில் ஊற்றி வந்து கொடுக்க, குடித்துக்கொண்டே மூவருமாக தம் அரட்டைக் கச்சேரியைத் தொடங்கினர் .
மயூ வீடுதான் வழமையாக இவர்களது அரட்டைக் கச்சேரி நடக்குமிடம்!
அரட்டை அடித்துக்கொண்டே மதிய உணவை உண்டவர்கள், ‘‘அம்மா அப்பா வரும் வரை இருந்துவிட்டு போங்கடி!’’ மயூவின் கெஞ்சலுக்கிணங்க, மேலும் சிறிது நேரம் இருக்கச் சம்மதித்தார்கள்.
‘‘மயூ, உனக்கு ஒன்று தெரியுமா?! இன்றைக்கு கடையில் வைத்து நம்ம ஸ்ரீ குட்டி, யாரிடமோ நல்லா வேண்டிக் கட்டிக் கொண்டாள்டி. அதற்கு அவளுக்கு ஒரு கோபம் வந்ததே! ஹப்ப்ப்பா! என்ன மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை மிஸ் பண்ணிவிட்டாய்! அவளுக்கே எப்பாவாவது தான் இப்படிக் கோபம் வரும். ஹா..ஹா…’’ திடீரென்று சொன்ன மஞ்சு, தன் தோழி சீறியதை நினைத்து, பெரிதாகச் சிரிக்கத் தொடங்கினாள்.
‘‘என்ன!? ஸ்ரீக்கு கோபமா?! யாரில்!?’’ வியப்புடன் வினவியபடியே ஸ்ரீயைப் பார்த்தாள் மயூ.
இவ்வளவு நேரமாய் தான் மறந்திருந்த நெட்டைகொக்குவின் நினைவு வர, சிரித்துக் கொண்டிருந்த மஞ்சுவை முறைத்தாள் ஸ்ரீ .
‘‘ஏன்டி…நான் யாரிடமாவது திட்டு வாங்கினால், இப்படித்தான் சிரிப்பாயா? அந்த லூசு யாரென்று தெரிந்தால், என்ன சொல்லுவாய்?’’ சொன்ன பின்னரே, தான் உளறியதை உணர்ந்து சட்டென்று நிதானித்து நிறுத்தினாள்.
‘இவளோ சரியான ஓட்டைவாய்! யாரென்று சொன்னால், பின்னேரம் அந்த மன்மதக் குஞ்சு இவள் வீட்டுக்கு வர, கேட்டு உண்டு இல்லை என்று ஆக்குவாள்; ஏன் வீண் பிரச்சனை!’ மனதில் சடுதியாய் முடிவெடுத்து, ‘‘யாரடி? எனக்குத் தெரிந்த ஆளா! சொல்லுடி!’’ ஆவலாய் கேட்ட மஞ்சுவையும், கேள்வியாய் நோக்கிய மயூவையும் ஒரு கணம் பார்த்தவள்,
‘‘விடுடி…விடு. எனக்கே யாரென்று தெரியாது. வாயில தவறி வந்திட்டுது! அந்த நேரத்தில் அந்தாள் என்ன டென்சனில் இருந்தாரோ! விடு விடு..’’ சமாளித்தாள்.
அதேவேகத்தில், ‘‘கொஞ்ச நேரம் டிவி பார்ப்போமா?’’ தொலைக்காட்சியை இயக்கினாள்.
அவள், ஒருமுறையும் இல்லாதவாறு தடுமாறி, மழுப்பி பேச்சை மாற்றவே, மஞ்சுவும் மயூவும் தங்களுக்குள் பார்த்துக் கொண்டவர்கள், ‘சரி விடு.’ தோள்களைக் குலுக்கிய படி, தாமும் தொலைக்காட்சியில் ஆழ்ந்தனர்.

error: Alert: Content selection is disabled!!