அன்பெனும் பூங்காற்றில் – 2

அத்தியாயம் 2 .

ராம் வீட்டில்…
காலையில் எழுந்ததிலிருந்து சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார் ராதா. ஐம்பது வயதிலும் இளமையுடனும் சுறுசுறுப்பாகவும் இருப்பவர், வழமைபோல, வங்கியொன்றில் முகாமையாளராகப் பணியாற்றும் கணவன் ரத்தினத்தை வேலைக்கு அனுப்பி வைத்தபின், முதல்நாள் ஊர் திரும்பியிருக்கும் செல்லமகனுக்குப் பிடித்தமான வகையில் மத்தியானச் சமையலைச் செய்வதில் ஈடுபட்டிருந்தார்.
அவரது மூத்தமகள்கள் இருவரும் திருமணம் முடித்து கொழும்பில் வசித்து வருகின்றனர்.
சிறுவயதிலிருந்து படிப்பிலும் விளையாட்டிலும் கெட்டித்தனத்துடன் விளங்கிய மகன் ஜெயராம், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்து அங்கேயே விரிவுரையாளராகி, இப்போது, மேல் படிப்புக்காக இந்தியா சென்று திரும்பி வந்திருக்கிறான்.
மகனைப் பற்றி நினைத்தவாறே, வேலைகளைச் செய்து கொண்டிருந்தவரின் கவனத்தைக் கலைத்தது, மகனின் கார்ச் சத்தம்! கை வேலைகளை அப்படியே விட்டுவிட்டு அவசரமாக வாசலுக்கு விரைந்தார் ராதா.
‘‘ராஜா, என்ன இவ்வளவு கெதியா வந்திட்டாய்! களைத்துப் போய் வந்த பிள்ளை சொன்னாக் கேட்காமல்…சரி சரி பையைத் தா!” கரத்தை நீட்டிய தாயை முறுவலுடன் பார்த்தான் ராம்.
‘‘என்னம்மா, இதெல்லாம் ஒரு பாரமா? விடுங்க நானே கொண்டு வருகிறேன்!’’ சமையலறைக்குள் சென்று தான் வாங்கி வந்தவற்றை வைத்துவிட்டு, ‘‘ஹப்பப்பா! என்ன வெயில்மா! குடிக்கக் குளிராக ஏதாவது தாங்கோ.’’ என்றபடி, வரவேற்பறையில் வந்து அமர்ந்துகொண்டான்.
தாய் கொண்டு வந்த குளிர்பாணத்தை வாங்கிக்கொண்டே, ‘‘கார்கில்ஸ்ல வைத்து நம்ம மஞ்சுவைக் கண்டேன்மா!’’ சொல்லும் போதே, தன்னை ‘நெட்டைக்கொக்கு’ என்றவளின் முகம் அழையாமலே நினைவுக்கு வர, அசட்டையாக விலக்கிவிட்டு, ‘‘நரேன் தந்த பார்ஸலும் இருக்கும்மா; பின்னேரமாக அவர்கள் வீட்டுக்கு போய்வர வேண்டும். எப்படியும் நாலுமணிக்குப் பிறகு சிவா வேலையிலிருந்து வந்துவிடுவான் தானே?’’ வினவ,
‘‘ம்ம்ம்…வந்திடுவார்!” என்றவர், “போன வெள்ளிக்கிழமை மஞ்சுவையும் அம்மாவையும் அவள் அண்ணியோடு நல்லூரில் கண்டு கதைத்தனான் தம்பி. மஞ்சுவின் அண்ணி என்ன அருமையான பிள்ளை! சிவா கொடுத்து வைத்த பிள்ளை!’’ என்றவர், தான் தொடந்து கதைத்தால் எதைக் கதைப்போம் என்பதையும், தன்மகன் என்ன செய்வான், சொல்லுவான் என்பதையும் நன்கறிந்திருந்த படியால்,
‘இத்தனைநாள் பிரிவுக்குப் பிறகு வீட்டுக்கு வந்த பிள்ளையை ஏன் குழப்புவான்!’ என நினைத்தவாறே, ‘‘அப்ப..நான் சமையலைப் பார்க்கிறேன் ராசா; நீ கொஞ்சம் ஓய்வாக இரு!’’ சமையலறை நோக்கி நகர்ந்தார்.

மாலை ஐந்து மணியளவில், திருநெல்வேலி குமாரசாமி வீதியிலுள்ள தன் வீட்டிலிருந்து நண்பன் சிவா வீட்டிற்கு புறப்பட்டான் ராம்.
மஞ்சு ஏற்கனவே ராமைச் சந்தித்தது பற்றிச் சொல்லியிருந்ததால், அவன் வரவை எதிர்பார்த்தபடியே எல்லோரும் காத்திருந்தனர் .
மஞ்சுவின் அண்ணா சிவா, ராம், கொழும்பில் வைத்தியராகப் பணிபுரிந்து கொண்டிருக்கும் நரேன் மூவரும் மிக நெருங்கிய நண்பர்கள்.
இவர்களில் ராம் மட்டும் வணிகத்துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்ததால், உயர்கல்வியை ஒன்றாகக் கற்காவிடினும், அவர்களது பள்ளிப்பருவ நட்பு, இன்றும் அதே நெருக்கத்துடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது .
வாசலில் வைத்தே தன் நண்பனை அன்புடன் அணைத்து வரவேற்ற சிவா, ‘‘வாடா வா. உன்னால் என் கல்யாணத்துக்கு கூட வர முடியாமல் போயிற்று என்ன? இப்ப சரி வந்தாயே!’’ என, சில மாதங்களின் முன் நடந்த திருமணத்தில் நண்பன் கலந்து கொள்ளவில்லையே என்கின்ற மனவருத்தத்துடன் சொல்லிக்கொண்டே, உள்ளே அழைத்துச் சென்றான்.
‘‘கோபிக்காதைடா மச்சான்! எவ்வளவோ முயற்சி செய்தேன், அப்படியிருந்தும் வர முடியாமல் போயிற்று. நீயும் திடீரென்று தானே சொன்னாய்! ஸாரிடா மச்சான்.’’ என்றான் ராம், உண்மையான வருத்தத்துடன்.
‘‘அட, விடுங்க ராமண்ணா! இப்ப நீங்க வந்துதான் என்ன செய்திருப்பீங்க? அண்ணாவை கொஞ்சம் சரி சிரிக்க வைத்திருப்பீங்களா சொல்லுங்க பார்ப்போம்? அது கூட செய்ய முடியாத நீங்கெல்லாம் ஃப்ரெண்ட்ஸ்! கல்யாண ஃபோட்டோஸ் ஒன்றிலும் மருந்துக்கும் அண்ணா சிரிக்க இல்ல; ஏதோ தன்னைக் கட்டாயக் கல்யாணம் செய்விக்கின்ற மாதிரி!’’ கலகலத்தவாறே வந்த மஞ்சுவை முறைத்தான் தமையன் சிவா.
‘‘சரி சரி போதும், போய் டீ கொண்டு வாம்மா..’’ தொடர்ந்தவன், ‘‘இந்த வாயை எப்படித் தான் அவன் சமாளிக்கப் போகிறானோ! அவன் தலையெழுத்து அப்படியிருந்தால், யாரால் என்ன செய்ய முடியும்!’’ முனகியவாறே ராமைப் பார்த்தான்.
ராமோ, விரிந்த முறுவலுடன் மஞ்சுவைப் பார்த்தான்.
தமையன் சொன்னதை இலேசாக காதில் வாங்கிக் கொண்டவளோ, ‘‘கடவுளே! நீங்க எல்லாம் எனக்கு அண்ண்ண்ணன்..’’ தலையில் அடித்துக்கொண்டே, உள்ளிருந்து அவள் தந்தை வருவதைக் கண்டதும், நல்ல பிள்ளை போல் அவ்விடம் விட்டகன்றாள் .
பல நாட்களுக்குப் பிறகு சந்தித்துக் கொண்ட நண்பர்கள் இருவரும் நீண்ட நேரமாய் அளவளாவிக் கொண்டிருந்தனர். அவர்களுடன் சிவாவின் பெற்றோரும் இணைந்து கொண்டனர்.
‘‘தம்பி, பொழுது பட்டுவிட்டது, இங்கேயே சாப்பிட்டுவிட்டுப் போகலாம்; இருங்கோவன்!’’ என்றார், சிவாவின் தாய்.
அவரது அன்புக்கு மறுப்புச் சொல்ல விரும்பாத ராம், ‘‘இனி இங்க தானே ஆன்ட்டி இருக்கப் போகிறேன்; என்றாலும் சாப்பிட்டுவிட்டே போகிறேன். அம்மாவுக்கு கால் பண்ணிச் சொல்லிவிட்டால், எனக்காக காத்திருக்க மாட்டார்கள்!’’ என்றவாறே அழைத்து, சிறிது தாமதமாக வருவதாகக் கூறிவிட்டு, தொடர்ந்து அரட்டை அடித்துக் கொண்டமர்ந்திருந்தனர் .
இரவுணவைத் தயாரிக்க உதவிகளைச் செய்த மஞ்சு, ‘‘ஹப்பாடா ஒரு மாதிரி இரவைக்குப் புல்லுக்கு ஏற்பாடு செய்தாச்சி!’’ கதவின் பின்னால் தொங்கிய துணியில் ஈரக் கைகளைத் துடைத்துக்கொண்டே நெடிய மூச்சுடன் சொன்னாள்.
‘‘ஏதோ நீயே தனியாகச் செய்த மாதிரி பெரிசா சலித்துக் கொள்கிறாய்மா!’’ அவளின் தாய் கேலியாய்ச் சொன்னதையும் பொருட்படுத்தாது, ‘‘அண்ணி, அண்ணாவை சாப்பிடக் கூப்பிடுகிறேன்!’’ என்றவாறே வந்தவள், சிவாவும் ராமும், ‘நரேன்’ என்று கதைத்துக் கொண்டிருந்துவிட்டு, தன்னைக் கண்டதும் நிறுத்தியதைக் கண்டும் காணாத மாதிரி, ‘‘சொல்லுங்க ராம் அண்ணா, வேற என்ன விசேஷம்!’’ என்றாள் அமர்த்தலாக!
ராமோ, நண்பனைப் பார்த்துக்கொண்டே, ‘‘விசேஷம்…ஹ்ம்ம்ம்..நீர் தான்டா சொல்ல வேண்டும்; என்னிடம் அப்படி ஒன்றுமில்லை!” முறுவலித்தவன், “ஆனால், உமக்கு மிகவும் வேண்டியவர் இந்த பார்ஸலை உம் கையில் கொடுக்கச் சொல்லித் தந்தார்!’’ தன்னருகில் வைத்திருந்த ஒரு பெரிய பையை எடுத்து அவளிடம் கொடுத்தான்.
தமையனைப் பார்த்தவாறே, ‘‘தேங்க்ஸ்ணா..’’வாங்கியவள், உள்ளே ஓடிச் சென்று தானும் தங்கையுமாய் பாவிக்கும் அறையிலிருந்த அலுமாரியில் வைத்துவிட்டு திரும்பி வந்து, ‘‘ராமண்ணா..வாங்கோவன் சாப்பிடுவோம்!’’ என்றதும், ‘‘பார்த்தியாடா உன் தங்கச்சியை! பார்ஸல் கொடுத்த பிறகுதான் சாப்பிட வரட்டாம்!”’ கேலி செய்தான் ராம்.
‘‘ஹைய்யோண்ணா! முதலே சாப்பிடக் கூப்பிடத் தான் வந்தேன். நீங்க அதற்குள் பார்ஸலைத் தந்ததால், நம்ம மணி கண்ணில் பட்டுட்டாலும் வீண் பிரச்சினை ஏன் என்று உள்ளே கொண்டு போய் வைத்துவிட்டு வந்தேன்!’’ அவசரமாகச் சொன்னாள் மஞ்சு.
‘‘சரி சரி…அதை விடும்; அப்படியே நம்பிட்டேன். நீர் சொல்லி ஒன்றை நம்பாமல் இருப்பேனா!’’ மீண்டும் கேலி!
‘‘அது யாரு மஞ்சு… காலம உம்மோடு கடையில் நின்றது?’’ திடீரென்று ஆராயும் குரலில் கேட்டான் ராம்.
அருகிலிருந்த சிவாவோ, தன் மனைவி வந்து எட்டிப் பார்த்து விட்டுச் செல்வதைக் கண்டு, ‘‘வா ராம்… சாப்பிட்டுக் கொண்டே கதைப்போம்.’’ இருக்கையை விட்டு எழ, ‘‘கொஞ்சம் பொறுடா.’’ தடுத்தவன், ‘‘சொல்லும் மஞ்சு, அது யார்?’’ விடாமல் வினவ, அவனை ஆச்சரியமாய்ப் பார்த்த சிவா, ‘‘யாரைக் கேட்கிறான் மஞ்சு?’’ தங்கையிடம் வினவினான்.
‘இவர் ஏன் ஸ்ரீ பற்றி இவ்வளவு ஆவலாய் விசாரிக்கிறார்? விடுப்ஸ் கதைக்கிற ஆள் இல்லையே!’ மனதிலெழுந்த சிந்தனையுடன் தமையனைப் பார்த்தவள்,
‘‘அது வந்து…நம்ம ஸ்ரீதான் அண்ணா. நானும் அவளும் தான் கார்கில்ஸ் போயிருந்தோம்!’’ என்றவள்,
‘‘அவள் என் ஃப்ரெண்ட் அண்ணா. ஏன் அவளை உங்களுக்கு தெரியாதா?’’ அதெப்படி தெரியாமல் இருக்கலாம் என்ற பாவனையில் கேட்டாள்.
‘‘இல்லையே! மயூரியைத் தெரியும். ஆனால், இவவ ஒரு நாளும் கண்டதாக நினைவில்லையே!’’ அவளை முன்னர் கண்டிருக்கிறோமா என, நினைவுகளில் தேடிக் கொண்டே சொன்னான் ராம்.
‘‘அதெப்படி நீங்க கண்டிருப்பீங்க!? பொம்பிளப் பிள்ளைகளை நிமிர்ந்து பார்த்தால் தானே! போங்கண்ணா, நீங்க எல்லாம் சுத்த வேஸ்ட்! நான் மட்டும் உங்க மாதிரி இருந்திருந்தால்..” குறும்புடன் விழிகளை விரித்தாள் மஞ்சு.
“ஹ்ம்ம்…என்ன செய்வது!? பொம்பிளப் பிள்ளையா, அதுவும் இந்த சிடுசிடு மணிக்கு மகளா, சிவாவுக்கு தங்கச்சியாகப் பிறந்திட்டேனே!’’ நீண்ட பெருமூச்சு விட்டாள்.
ராம் முறுவலுடன் கேட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து, ‘‘அதுவும் பாருங்க! இந்தியா எல்லாம் போய் வந்திருக்கிறீங்க; என்ஜாய் பண்ணத் தெரியாத ஆளா இருக்கிறீங்களே!’’ கேலியாகத் தொடர்ந்தாள்.
‘‘போதும் மஞ்சு. இவன் உன் லெக்ஸ்ஷரரா வரப் போகிறான்; இனிச் சரி வாயை அடக்கிப் பேசு!’’ தமயனாக இடையிட்டு, கடிந்து கொண்டான் சிவா.
‘‘விடடா விடு. என்னோட தானே..’’ சமாதானமாகச் சொன்ன ராம், ‘‘ஆனால் தாயே, கம்பசில மட்டும் இப்படி அண்ணா.. அண்ணா.. என்று ஏலம் போட்டு அறுத்திடாதேயும்!’’ முன்னெச்சரிக்கையாகச் சொன்னவன், ‘‘சரி வாங்க சாப்பிடுவோம்!’’ என்றெழுந்தான்.
‘‘ராமண்ணா…ஏன் ஸ்ரீயைக் கேட்டீங்க?’’ மறக்காது கேட்டாள் மஞ்சு.
ஒரு கணம் நிதானித்தான் ராம். ‘அப்போ, காலம தான் மோதினதை மஞ்சுவிடம் சொல்லவில்லை..ஏன்?!’ நினைத்தவாறே,
‘‘அது வந்து மஞ்சு… ஹா…ஹா…’’ சிரிக்கத் தொடங்க, குழப்பத்துடன் அவனைப் பார்த்தனர் சிவாவும் மஞ்சுவும்.
அவன் விடாது சிரிக்க, ‘‘டேய் ..என்னவென்று சொல்லிவிட்டுச் சிரி!’’ என்றான் சிவா.
‘‘ராமண்ணா! மேல இறுக்கி இருந்த ஸ்க்ரு கழண்டு போய்ட்டுதோ!?’’ முறைப்பும் கேலியுமாகக் கேட்டாள் மஞ்சு.
அவனோ, முகம் கொள்ளாச் சிரிப்புடன், கடுகடுப்பாகப் பார்க்கும் அண்ணன் தங்கையை பார்த்தவன், ‘‘அது ஒன்றுமில்லை… வேண்டாம்டா, களைத்துப் போய் வந்தனி ஆறுதலாக இரு! அப்பாவே சாமான்களை வாங்கிக்கொண்டு வரட்டும் என்று அம்மா சொல்லச் சொல்லக் கேட்காமல் கார்கில்ஸுக்குப் போய், ஒரு தவ்வளிட்ட(கொஞ்சம் குள்ளமாக இருப்பவர்களை கேலிக்கு இப்படிச் சொல்வார்கள்) என்னமா வேண்டிக் கட்டிக்கொண்டேன் தெரியுமா? ஹா..ஹா.. அதை நினைத்தால் இப்போதும் சிரிப்புத் தான் வருதுடா!’’ என்றான், மறையாத நகைப்புடன்.
அதைக் கேட்டுக் கொண்டிருந்த கற்பூரபுத்தி கொண்ட மஞ்சு, அவனை ஆச்சரியமாய்ப் பார்த்தாள்.
‘‘ராமண்ணா! அப்போ…அந்த மன்மதக்குஞ்சு நீங்களா?!’’ கலகலத்துச் சிரிக்கத் தொடங்கினாள்.
‘‘இதென்ன மஞ்சு! உன்னைத் திருத்தவே முடியாதா? ஏன் இப்படிக் கக்களம் கொட்டிச் சிரிக்கிறாய்? விடிய விடிய எவ்வளவு சொன்னாலும், எரும மாட்டில் மழை பெய்தது மாதிரித்தான் என்ன? உன் தங்கையைப் பார்; இருக்கிற இடம் தெரியுதா என்று!’’ மகளின் நகைப்போலி கேட்டதும், தந்தை மணியம் இரவுநேர அர்ச்சனையை ஆரம்பிக்க, அத்தோடு அப்பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்த இளையவர்கள், வெவ்வேறு மனநிலைகளில் எழுந்து சாப்பிடுவதற்காக உள்ளே சென்றனர்.

error: Alert: Content selection is disabled!!