அத்தியாயம் 4.
அதிகாலையிலேயே துயில் கலைந்தெழுந்த ராஜி, வழமை போல தனது காலைக்கடன்களை முடித்துவிட்டு சமையலறைக்குள் வர, அங்கு, ஏற்கனவே எழுந்திருந்த மயூரி தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தாள்.
வழமை போல, மகள் விரைவாய் சமையலுக்குரிய ஆயத்தங்களை செய்து கொண்டே தேநீர் தயாரிப்பதை வாஞ்சையாய் பார்த்தவர், ‘‘மோர்னிங்டா ராஜாத்தி!’’ அவள் தலையை அன்பாகத் தடவினார்.
‘‘மோர்னிங்மா! தேத்தண்ணி போட்டுவிட்டேன் குடியுங்க; அப்பாவுக்கும் தம்பிக்கும் கொடுத்து விட்டு வருகிறேன்!’’ சொல்லிச் செல்லும் மகளைப் பார்த்தவரின் மனமோ, முழுமையாய் நிறைந்திருந்தது.
விளையாட்டு, படிப்பு, பழக்கவழக்கம் என்று எதிலுமே சோடை போகாமல், பார்க்கிறவர்கள் ஆசைப்படும் விதத்தில் வளர்ந்துள்ள முத்தான மூன்று பிள்ளைகள்!
தாமிருவரும் வேலை செய்து கொண்டே, சிறுவயதிலிருந்து அவர்களை வளர்ப்பதற்காகப் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் பஞ்சாய்ப் பறக்க, பெருமையால் மனம் நிறைந்தார் அத்தாய்!
‘‘தேத்தண்ணியைக் குடிக்காமல் என்ன யோசிக்கிறீங்கம்மா?’’ கேட்டவாறே வந்த மகளுக்கு, முறுவலைப் பதிலாகத் தந்தவர், தேநீரை அருந்தி முடித்து மகளுடன் சேர்ந்து வேலைகளைச் செய்தவாறே, ‘‘இன்றைக்கு என்ன செய்வதாகத் திட்டம்? மூன்று பேருமாக ஏதாவது நினைத்து வைத்திருப்பீங்களே!’’ விசாரித்தார் .
‘‘வியாழக்கிழமை தானே! கொலைவிலக்கு மாதா கோவிலுக்கு போக வேண்டும். பத்துமணி போல போவோமென்று கதைத்திருக்கிறோம்; வேறு பிளான் ஒன்றுமில்லை.’’ அவள் சொல்கையில், குடித்து முடித்த தேநீர்க் கோப்பைகளுடன் வந்த அவள் தம்பி சுரேன், ‘‘ஏன்கா! திங்கள் குழந்தையேசு, செவ்வாய் அந்தோனியார், வியாழன் மாதா…ஹ்ம்ம்… வெள்ளி நல்லூர் முருகன்… இந்த சனி, ஞாயிரு, புதனுக்கும் யாரிட்டையாவது அப்பாய்மென்ட் வைக்கலாமே!’’ வம்புக்கிழுக்க, அவன் முதுகில் ஒன்று செல்லமாக வைத்தாள் மயூ.
‘‘இங்க பார், நீ மட்டும் போகாமலா இருக்கிறாய்? ஆனால் என்ன! நீங்க கும்பிடப் போறதில்லை; வேற வேற வேலைகளிற்க்கு…’’ என்றவள், அவன் முறைக்கவும், ‘‘நீங்க அடிக்கிற கூத்தெல்லாம் தெரியும்டா தம்பிப் பையா!’’ என்றாள், கேலி முறுவலுடன்.
இவர்களின் ஆர்ப்பாட்டங்களைப் பார்த்தவாறே அடுப்பில் வேலையாய் இருந்த ராஜி, ‘‘அதென்ன வேலைடா சுரேன்? அதுவும் கோவிலில்?’’ என்றவர், நமுட்டுச் சிரிப்புடன் மகனைப் பார்த்து, ‘‘இங்க பாரு ராஜா! எதைச் செய்தாலும் எங்களுக்கும் சொல்லிவிட்டு செய்டா; அந்தரம் ஆபத்துக்கு நாங்களும் உதவுவோமே!’ விரிந்த புன்னகையுடன் முடித்தார்.
‘‘அம்ம்ம்மா…’’கத்தினான் சுரேன். ‘‘ஹைய்யோம்மா! அப்படி எல்லாம் ஒன்றுமில்லை!” அசடு வழிந்தபடி மெல்ல அவ்விடத்தை விட்டு நகர, அவர்களின் பேச்சைக் கேட்டவாறே வந்த தந்தை ரவி, ‘‘சுரேன், நாங்களும் இந்த வயதைக் கடந்து தான் வந்தோம்டா! நடத்து நடத்து..’’ தன் பங்கிற்கு வம்பிழுத்தார்.
‘‘போங்கப்பா. அக்கா ஏதோ சும்மா சொல்கிறா…அதற்குப் போய் ஒரு அப்பாவிச் சின்னப்பிள்ளையை எல்லாருமாகச் சேர்ந்து கேலி செய்றீங்களே!’’ என்றான் பாவமாக!
‘‘என்றாலும், அக்கா போல சாமியாரினியா யாராலும் இருக்க முடியாது!’’ என்றவாறே அப்பால் நகர, அப்பொழுது, ராஜியின் மனதிலும் அதே எண்ணம் தான் எழுந்தது.
ராஜி ரவி இருவருமே சிறுவயதிலிருந்து தமது பிள்ளைகளுக்கு வழிகாட்டியாய் இருந்தார்களே ஒழிய, ‘‘கட்டாயமாய் நீ இதைச் செய்! இப்படி இரு!’’ என, ஒரு போதும் வற்புறுத்தியதில்லை.
நல்லது கெட்டது இரண்டையும் பகுத்துக் கூற வேண்டிய இடத்தில் கூறி, தமது பிள்ளைகள் மூவருடனுமே நல்ல நட்புடனே பழகினர். அதுமட்டுமின்றி, பிள்ளைகளின் நண்பர்களுடனும் அப்படியே பழகி வந்தனர்.
பிள்ளைகளும் ஒருவருக்கு ஒருவர் நட்பும் பாசமும் உடையவர்கள் என்றாலும், மூத்தவன் அகில், மயூரி சுரேனை விட வயதில் பெரியவன் என்பதால், அவனுக்கு இளையவர்கள் மீது மிகுந்த பாசமும், அக்கறையும் !
மயூரியும் இரு ஆண் பிள்ளைகளுடன் வளர்ந்ததாலோ என்னவோ, சிறுவயதிலிருந்தே மிகுந்த துடுதுடுப்பாகவும் கலகலப்பாகவும் இருப்பாள். இப்பொழுதும் அது குறையாதிருந்தாலும், கடந்த சில வருடங்களாக அவள் தனக்குள் தானே ஒடுங்கிக் கொள்வதாக ஒரு எண்ணம் ராஜிக்கு!
பாடசாலையில் நண்பிகளுடன் சேர்ந்து மதவேறுபாடுகளின்றி கோவில்களுக்கு தேவாலயங்களுக்குப் போய் வருபவள், சமீப காலமாக கூடுதலாக அவற்றில் ஒன்றி விட்டது போலத் தெரிகிறது அவருக்கு!
வீட்டிலும் படத்தறையில் விளக்கேற்றி வணங்கும் போதும், நீண்ட நேரத்தின் பின் கலங்கிய விழிகளை மறைத்தவாறே அவள் செல்வதை பலமுறை கவனித்திருப்பவர், எத்தனையோ விதங்களில் கேட்டுப்பார்த்தும், அவளிடமிருந்து கிடைத்த விடை, ‘‘அப்படியெல்லாம் ஒன்றுமில்லைம்மா!’’ என்பதே!
மயூ பற்றிய தனது மனக்குறையை கணவன் மற்றும் மூத்த மகன் அகிலுடன் பகிர்ந்து கொண்ட போது, கிடைத்த விடையோ, ‘‘அவள் படிப்பில், பரீட்சையில் பாஸ் பண்ண வேண்டுமென்று திரிகிறாள்; வேறொன்றுமில்லை. இல்லாததை எல்லாம் யோசித்துக் குழம்பி மற்றவர்களையும் குழப்பாதீங்க!” என்பதே!
தன் செல்லமகளைப் பற்றி யோசித்துக்கொண்டே, அவள் செய்தது போக மீதியிருந்த சின்னச்சின்ன வேலைகளைச் செய்த ராஜி, ‘என்னதான் என்றாலும் ஏதும் பெரிதாக இருக்காது! அப்படியிருந்தால், இந்தளவுக்கு திறமையாக உயர்தரத்தில் பாஸ் பண்ணியிருப்பாளா? எல்லாம் படிப்பு பற்றிய யோசனை தான் போல! அதுதானே இப்போ பிள்ளைகளுக்கு பெரிய சுமையாக இருக்கு!’ நினைத்தவாறே, பாடசாலை செல்லத் தயாராவதற்காகச் சென்றார்.
பாடசாலைக்கு தயாராகிய சுரேன் சென்ற பின், தாங்களும் புறப்பட்டனர் ராஜியும் ரவியும்.
அப்பொழுது, அவசரம் அவசரமாக கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே வந்த மஞ்சு, வாசலில் தயாராக நின்ற ரவியையும் ராஜியையும் பார்த்து, ‘‘குட்மோர்னிங் ஆன்ட்டி, அங்கிள்; என்ன ஸ்கூலுக்கு வெளிக்கிட்டாச்சா?’’ தன் சைக்கிளை நிறுத்தி விட்டு அவர்களருகில் வந்தாள்.
மஞ்சுவின் குரல் கேட்ததும், ‘இதென்ன இவள் இவ்வளவு வெள்ளனவே வந்திருக்கிறாள்!’ என்றெண்ணிக் கொண்டே வெளியே வந்த மயூ, ‘‘என்னடி அவசரமாக வந்திருக்கிறாய் போல! ஏதாவது பிரச்சனையா?’’ என்றாள் யோசனையாக.
‘‘பிரச்சனையா?! ஹா..ஹா..அதுவும் எனக்கு…ஹா..ஹா…நானே பிரச்சனை! எனக்கு எப்படிடீ பிரச்சனை வரும்?..ம்ம்ம்..’’ ஆர்ப்பாட்டமாய்ச் சொன்னாள் மஞ்சு.
‘‘அது தானே! நான் சொல்ல நினைக்க, முந்திக்கொண்டு நீரே சொல்லிவிட்டீர்!’’ கேலி செய்த ரவியைப் பார்த்து, ‘‘அது தானே அங்கிள், பாருங்க, உங்க மகள் இப்படிக் கேட்டு என்னை இன்சல்ட் பண்ணிவிட்டாளே!’’ இப்படி, அவர்களுடன் சிறிது நேரம் கலகலத்தவள், அவர்கள், ‘‘போய் வருகிறோம்; கவனம்!’’ என்று கிளம்பிய அடுத்தநொடி, ‘‘அடியேய், கெதியா வெளிக்கிடு; இன்றைக்கு அந்த ஸ்ரீ மாட்டை ஒரு கை பார்க்க வேண்டும்! கெதியா கெதியா…” அவசரப்படுத்தினாள்.
‘‘ஏன்டி…என்ன நடந்தது? முதல் அதைச் சொல்லு! நான் இன்னும் சாப்பிடவுமில்லை…பசிக்குதடி.’’ என்றவளை முறைத்தவள், ‘‘எல்லாம் சொல்கிறேன். நானும் தான் சாப்பிடவில்லை. மணியின் அர்ச்சனை தான் எனக்குக் காலைச் சாப்பாடு! செவிடு போல பேசாமல் வாறேன். வா, இரண்டு பேரும் போய் ஸ்ரீ வீட்டில சாப்பிடுவோம்; ஆன்ட்டி ஏதாவது செய்திருப்பார்!’’ முடிவாகச் சொன்னாள்.
‘இனி இவள் என்ன சொன்னாலும் கேட்கமாட்டாள்!’ என்றுணர்ந்த மயூ, ‘‘சரிடி..அப்போ அப்பிடியே மாதா கோவிலுக்கும் போய்விட்டே வருவோம். கொஞ்சம் உள்ள வந்திரு; நான் வெளிக்கிட்டுக் கொண்டு வருகிறேன்; பத்து நிமிஷம்டி!’ உள்ளே விரைந்தாள் .

