அழகிய சவால் நீ – 1

அத்தியாயம் 1

 

‘A recipe has no soul. You, as the cook, must bring soul to the recipe.’

Thomas Keller

 

 

“ஹேய்ய்ய்!” சந்தோசக் கூச்சலால் குலுங்கி நின்றது, அச்சொகுசுப் பேருந்து.

 

ஒலிவியாவினுள் வியாபித்திருந்த பதற்றம், ஆர்வத்தைத் தாறுமாறாக மென்று தின்று விடும் போலிருந்தது.

 

“இருபது நிமிட தூரம், இரண்டே நிமிடங்கள் போலப் போயிற்றே!” ஆர்ப்பரித்தபடி நுனி இருக்கைக்கு வந்திருந்தாள்,மியா. இருவரும் கடைசி வரி இருக்கையில் அமர்ந்திருந்தார்கள்; மற்றவர்கள் இறங்கும் மட்டும் பொறுக்க வேண்டுமே!

 

ஒலிவியா முகம், மெல்ல யன்னல் கண்ணாடியை உரசியது. விழிகள், அச்சொற்ப நொடித்துளிகளில் முன்னே தெரிந்த உயரமான கட்டிடத்தை ஆரத்தழுவி நின்றன.

 

பல வருடங்களாகவே தொலைக்காட்சியில் பார்க்கும் கட்டிடம் தான்; நேற்றும் அதற்கு முதல் நாளும் இக்கட்டிடத்தின் பிறிதொரு பிரிவுக்குள் சென்றிருந்தார்கள்.

 

அவள் வலக்கரம், அணிந்திருந்த வெள்ளை வெளேரென்ற ஏப்பிரனை மெல்ல வருடிற்று. இறுதியாகத் தெரிவாகிய முப்பது பேர், குடும்ப அங்கத்தவர்கள் சூழவிருக்க, தரப்பட்ட எழுபத்தைந்து நிமிடங்களில் தமக்கு விருப்பமான உணவைத் தயாரித்திருந்தார்கள். அதை வைத்தே போட்டியில் பங்கு கொள்ளப்போகும் இறுதி இருபது பேர்கள் தெரிவானார்கள்.

 

ஆரவாரித்த குடும்பங்களிடையே, மூன்று நடுவர்கள் பாராட்ட, தாய் கையால் ஏப்ரன் அணிந்துகொண்ட அந்நொடி இருக்கிறதே! அக்கணம் உணர்ந்த வானில் பறக்கும் இதத்தை, மகிழ்வை இப்போதும் புத்தம் புதிதாகச் சுவாசித்தாள், ஒலிவியா.

 

நேற்று, நிகழ்ச்சி பற்றிய தெளிவான விளக்கங்கள், சந்தேகங்களுக்கு விடைகள், சமையல் உபகரணங்களின் அறிமுகம் என்று முழுநாளும் இங்குதான். அசைவ, சைவ உணவுகள் கூட சமைத்துப் பார்த்தார்கள். கோழியும் மீனும் இலாவகமாக வெட்டுவது எப்படி என்ற செய்முறை விளக்கம் பார்த்துவிட்டு, நேற்றிரவு, தமக்கென்று ஒதுக்கப்பட்ட சமையலறையை ஒரு வழி பண்ணியவர்களும் உண்டு.

 

மொத்தத்தில் உதவியாளர் குழு, இவர்கள் எதிர்கொள்ளப்போகும் சவால்களுக்கு அவர்களை ஆயத்தப்படுத்தி இருந்தார்கள். போட்டி பற்றிய தெளிவை விதைத்திருந்தார்கள். எனினும் இந்தப் பிரதான கட்டிடத்தினுள் செல்லவில்லை. போட்டிக்கான பிரதான நடுவர்கள் மூவரையும் சந்திக்கவுமில்லை.

 

சிறுவயதிலிருந்தே வக்கீலாக வேண்டும் என்பது ஒலிவியா விருப்பம். அவள் ஒவ்வொரு அடியும் அதை நோக்கியதாகவே இருந்தது. தாயும் தகப்பனும் வழிகாட்டிகளாக, உறுதுணையாக இருந்தார்கள். அதுவே, ஆஸ்திரேலிய முதல் தர பல்கலைக்கழகமான, ‘University of Melbourne’ இல், மிக இலகுவாக நுழைய வைத்துமிருந்தது. இரண்டாம் வருடத்தில், விரிவுரையாளர்கள் மனம் கவர்ந்த மாணவியாக, கல்வியில் சற்றும் விலகாது தான் சென்று கொண்டிருந்தாள். கூடவே, பகுதி நேர வேலை என்று தேடுகையில், தன் அன்னையின் ‘பேஸ்ட்ரி கேக் ஷொப்’ இல் சென்று நிற்கவில்லை. மிகப் பிரபல்யமான கிரிமினல் லோயரிடம் வேலையும் கிடைத்திருந்தது கூடுதல் மகிழ்வு.

 

அந்த நேரத்தில், மனதாழத்தில் அடங்கிக் கிடந்த சின்னஞ்சிறு அவா உரமாகவே உயிர் கொடுத்துக்கொண்டது; கனவிலும் நினைத்திராத விசயம் இது!

 

எல்லாவற்றுக்கும் காரணம் இவள் உயிர் நண்பி, துர்க்கா! உடன் பிறந்த தம்பி தங்கைக்கும் அவளுக்கும் வித்தியாசம் உணர்ந்ததும் இல்லை. இவளோடுதான் வக்கீலுக்குப் படிக்கிறாள். கடந்த பத்து ஆண்டுகளாக, தொலைக்காட்சியில் தனக்கென்று பிரத்தியேக இடம் பிடித்த ‘ஹோம் குக்கிங்’ என்ற பிரபல்யமான நிகழ்ச்சிக்கு, இருவரும் தீவிர இரசிகைகள். துர்க்காதான் விண்ணப்பம் நிரப்பி அனுப்பியதும். கடைசியில்…ம்ம்ம்…பெருமூச்சு விடுவதைத் தவிர வேறு வழியில்லை.

 

இறுதி முப்பது வரை தெரிவாகிய துர்க்கா, சுகயீனம் காரணமாக கடைசித் தெரிவுக்கு வர முடியவில்லை. இல்லையோ, இப்போது ஒலிவியா அருகண்மையில் இருந்திருப்பாள்.

 

கனவுகள், சில சின்ன சின்ன விருப்பங்கள், பழம் நழுவி பாலில் விழுவது போல் நடந்து விடுகையில், எம்மால் அதை நம்ப முடிவதில்லை. அந்த நிலையில் தான் ஒலிவியா இருந்தாள்.

 

சிறு வயதிலிருந்தே சமையல் மீது காதல் கொண்டவள், அவள். ஒற்றை வாழைப்பழத்தைக் கூட ரசனையாக மினக்கெடுதலோடு வெட்டி வைத்து மேலே கொஞ்சமாக நட்ஸ், உலர்ந்த பழங்கள் தூவிச் சாப்பிடுபவள்.

 

அப்படியான நேரங்களில் வீட்டில் வாங்கும் கடி இருக்கிறதே!

 

நினைவுகளின் உரசல் உதட்டில் முறுவலாக நெளிந்திட்டு. மனம், சொந்த ஊரான ‘ஆமடேல்’ நோக்கித் தாவிற்று. அம்மா, அப்பா, தம்பி, தங்கை, துர்க்கா வீட்டினர் எல்லோர் மனமும் இங்குதான் இருக்கும்.

 

“ஒலிவ்யா நீ இறங்க இல்லையா?” தோளில் தட்டிவிட்டுச் சென்றாள், மியா. பத்து வருடங்கள் ஆர்மியில் இருந்தவள், மூன்று பெண் குழந்தைகளுக்குத் தாய். மூத்தவளுக்கு நான்கும் கடைசி மகளுக்கு ஒரு வயதும் என்றிருந்தாள்.

 

அவள் பின்னால் சென்று பேருந்திலிருந்து இறங்கினாள், ஒலிவியா.

 

ஏசி விடைபெற்ற வேகத்தில் பக்கென்று மோதினான், ஆதவன். எல்லோரும் துள்ளி ஓடி, பெரிய இரும்புக் கதவை அகலத் திறந்து உள்ளிட்டார்கள்.

 

தயாராக இருந்த புகைப்படக்கருவிகளுக்கு வேலை வந்துவிட்டது. விழிகளைச் சுழலவிட்டபடி, ஆர்ப்பரித்தவாறே நகர்ந்த போட்டியாளர்களினது ஒவ்வொரு சிறு அசைவுகளையும் பற்பல கோணங்களில் பத்திரப்படுத்தத் தொடங்கியிருந்தன. ஸ்ஸ்ஸ்ஸ் என்ற சத்தத்தோடு பறந்த ட்ரோன் கமரா வேறு, வலு சிரத்தையாக அவர்கள் நகர்வுகளை அச்செடுத்துக்கொண்டது.

 

அதைப்பற்றியெல்லாம் யார் கவனிப்பது? இந்தப் போட்டிக்கென்று வந்த புதிதில், புகைப்படக்கருவிகள் அவர்களுள் பலத்த தாக்கம் உண்டு பண்ணியதை மறுக்கமாட்டார்கள். இப்போது பழகிவிட்டது. அவர்கள் தம் வேலை, இவர்கள் தம் வேலை.

 

‘எடிட்டர்கள் மிக மிக இரசனை மிக்கவர்கள். பிறகென்ன!’ முறுவலோடு எண்ணியது, ஒலிவியா மனம்.

 

‘Home Cooking Hall Melbourne’

 

ஹோம் குக்கிங் முதல் எழுத்து ‘H’ முகட்டில் பெரிதாகப் பொறித்திருக்க உயர்ந்து நின்றது, அக்கட்டிடம். அகன்ற பாதையில் இருமருங்கிலும் ரோசாக்கள் பூத்துக் குலுங்கின. போட்டியாக, பலவகை மலர்கள் தம்மைப் பார் என்றழைத்தன. நடுவில் ‘H’ வடிவில் பெரிதாக அமைக்கப்பட்டிருந்த தொட்டிக்குள் சமையலுக்குப் பயன்படும் பலவிதமான மூலிகைகள் செழித்து வளர்ந்திருந்தன. அது தவிர்த்து, இருமருங்கும் இருந்த பரந்த தோட்டத்திலும் மூலிகைகள், பழ வகைகள், மரக்கறி வகைகள் செழித்து நின்றன.

 

“வாவ்!” முன்னால் சென்ற சிலர் அதனுள் நுழைந்து இலைகளைக் கிள்ளி நசித்து முகர்ந்து பார்த்தார்கள்; இன்னும் சிலர் வாயிலிட்டுக் கொண்டார்கள்.

 

ஒலிவியாவும் நுழைந்தாள். மீண்டும் ஆமடேல்… அவள் வீட்டு நினைவு. அவர்கள் வீட்டின் பின்புறம், நிலத்திலும் சாடிகளிலும் ஹேர்ப்ஸ் பெட்டிலும் சின்ன சின்னப் பத்தையாக, பலவகையான ஹெர்ப்ஸ் வைத்திருக்கிறார்கள். அதெல்லாம், அவள் தாய் லிசியின் கைவண்ணம்.

 

“உள்ளே போகலாம்.” வழிநடத்தி வந்த உதவி இயக்குனர் சொல்ல, ‘த கிரேட் ஹோம் குக்கிங்’ கட்டிடத்தினுள் நுழைய ஆயத்தமானார்கள்.

 

ஒலிவியாவினுள், இதுவரை இல்லாத ஒரு வகைப் பதற்றம்.

 

கனவை, விருப்பை அடைந்ததாக மகிழ்ந்திருந்தாளே! அது உண்மையான மகிழ்வா? இக்கணத்திலிருந்து, இவள், இந்தப் போட்டியில் செய்யப்போகும் ஒவ்வொரு சமையல் செய்முறையும் ‘என் பெஸ்ட் ஆக இருக்க வேணும். இறுதி வரை சென்று வெற்றி கிடைத்தால் யாருக்குச் சந்தோசம் இல்லை. அதைக் கடந்து, இந்த மாபெரும் சமையல் போட்டியில் எப்போதும் எங்கோ ஓர் இடத்தில் என் செய்முறைகள், நான் சமைக்கும் விதங்கள், அந்த நேரப் பதற்றங்களை, சவால்களைக் கையாளும் விதங்கள் என்று, பேசப்பட வேண்டும். ஆசையாகத் தொடர்ந்த படிப்பில் விடுப்பு எடுத்து, கனவை நோக்கி வந்திருக்கிறேன்…’ எண்ணமோட, நின்று நிதானித்துத் தன்னைத் தானே தயார்ப்படுத்திக்கொண்டாள், அவள்.

 

சுற்றி நின்ற இருபது பேரில், வயதில் சிறியவள் இவள்தான். பத்தொன்பது வயதில், அவளுக்கு மிகப்பெரிய விசயமிது.

 

உள்ளே சென்றவர்கள், “ஓஓஓஓஓ மைய்ய்ய் கோட்!” இராகமாகக் கூவினார்கள். ஒலிவியா பார்வை, முன்னே நின்றவர்களைத் தாண்டி உள்ளே சென்றிட்டு.

 

“ஆஆஆ!” கொஞ்சமும் நம்ப முடியவில்லை. விரிந்த வாய் அப்படியே இருக்க நிலத்தில் அமர்ந்து விட்டாள்.

 

ஒற்றை வட்ட ஒளி குவிந்திருக்க, அதன் கீழே…

 

இந்தக் கணத்தை, சத்தியமாக யாருமே கனவிலும் நினைத்திருக்கவில்லை. அவர்கள் முன்னால், எப்போதாவது சந்திக்க மாட்டோமா என்றேங்கிய சமையல் உலகின் ஜாம்பவான்!

 

“குட் மோர்னிங் அன்ட் வெல்கம் மை டியர்ஸ்! ஹோம் குக்கிங் சீசன் டென் உங்களை அன்போடு வரவேற்கிறது! நான் ஆரோன் டேல், செஃப் ஆரோன்!”

 

அவருக்கா அறிமுகம்? போட்டியாளர்கள் சந்தோசக் கூச்சலிட்டார்கள். முறுவலோடு பார்த்தார், செஃப் ஆரோன். அதன் பின்னால் சாதித்த பெருமை! விழிகளில் கூட அது தெறித்திட்டு. ஒவ்வொருவரினதும் ஆச்சரியத்தை, மகிழ்வை மிகவும் நிதானமாக ரசித்து உள்ளெடுத்துக் கொண்டார்.

 

இத்தனைக்கும் பிரேமையில் இருந்தாள், ஒலிவியா.

 

 

error: Alert: Content selection is disabled!!