அத்தியாயம் 12
‘Cooking is an art and patience is a virtue. Careful shopping, fresh ingredients and an unhurried approach are nearly all you need. There is one more thing – love. Love for food and love for those you invite to your table. With a combination of these things you can be an artist’
Keith Floyd
மறுநாள்!
நேரத்துக்கே எழுந்துவிட்டாள், ஒலிவியா. உண்மையில் ஆழ்ந்து நிம்மதியாக உறங்கினாளா என்றால், அழகிய முறுவலில் இதழ்கள் விரிந்தன. முதல்நாள் காய்ச்சலில் கிடந்தவளா இவள் என்றளவில் புத்துணர்வோடு இருந்தாள். மனதுள் இருந்த எக்கச்ச மலர்வு கொடுத்த உரம் அது!
“I found a love for me…” முணுமுணுத்தபடி, காலைக்கடன்களை முடித்து விட்டு, சமையல் புத்தகமும் ஆவிபறக்கும் கோப்பியுமாக அமர்ந்த போது கதவு தட்டப்பட்டது. யார் என்று பார்த்தால், விழிகள் சுருங்கிய சிரிப்போடு உள்ளிட்டவன், அன்றைய விடியலை மேலும் மலர்ச்சியோடு எதிர்கொள்ள வைத்தான்.
உறக்கம் கலைந்ததுமே அவள் மனத்தில் எட்டிப்பார்த்த ஆசையே அவனைப் பார்க்க வேண்டும் என்பதுதான். அதற்குக் கண்டனத்தோடு குட்டுக் கொடுத்துவிட்டு இருந்தவளுக்கு எப்படி இருக்கும்? ஒரே பாய்ச்சலில் நெருங்கி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு தொங்க வேண்டும் போலிருந்தது. வைத்த கண் வாங்காது பார்த்து நின்றவள் அசைந்தாளில்லை.
அவளையே பார்த்தபடி உள்ளிட்டான், வேர்த். தன் உடலாலேயே கதவைச் சாத்தியவனின் ஒரு கையில் கோப்பிக் கோப்பை. அதை அங்கிருந்த மேசையில் வைத்த வேகத்தில் இறுகக் கட்டிப்பிடித்தான்.
“எப்படி இருக்கிறாய்? சுகம் விசாரிக்கவே வந்தேன்!” நடுவராக நலம் விசாரிக்கும் தொனிதான், செய்கை தான் நேர்மாறாக இருந்தது.
அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தவன், “ரெண்டே ரெண்டு நிமிடம்!” கிசுகிசுப்பாகச் சொன்னவன் அவள் காதலனாக நடந்து கொண்டான். சொன்ன சொல் மாறாதவனாக வெளியேறியும் இருந்தான். சும்மாவும் இல்லை, “நானும் உன்னை விரும்புகிறேன்!” என்று, அவள் வாயால் சொல்ல வைத்துவிட்டும் தான்.
போட்டி உச்சகட்டத்தில் இருக்கிறது. கூரான கத்தி தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கும் உணர்வைத் தருகிறது. சிறு சறுக்கல் போதும் ஒரே வெட்டு. போட்டிக்கு விடை கொடுக்க வேண்டியதுதான், அந்தளவுக்கு, எஞ்சி உள்ளவர்கள் சமையலில் சிறந்தவர்கள் என்று ஒவ்வொரு சவாலிலும் நிரூபித்தார்கள். ஒவ்வொரு சுற்றிலும் வெற்றியாளர் தேர்வு என்பது மிகச் சொற்ப வேறுபாடுகளில் தான் நிகழ்கிறது. அந்தளவுக்கு ஒவ்வொருவரும் உச்சபட்ச உழைப்பைப் போடத் தயங்காதவர்கள். இதற்கிடையில், இவள் என்ன செய்கிறாள்?
காதலுணர்வு புத்தியை முற்றாக வசப்படுத்தியிருந்தது. கண்சிமிட்டியபடி சென்றவன் பின்னே குடுகுடுவென்று சென்ற உள்ளத்தை இழுத்துப்பிடித்து நிறுத்தி, கைக்குள் இருந்த கோப்பியை ருசிக்கத் தொடங்கவே போதும் போதும் என்றாகி விட்டது. இந்த அழகில், அன்று மாலையில் நடக்கவுள்ள போட்டிக்கு ஆயத்தமாவது எப்படியாம்?
காதல் என்பது அவளுக்குப் புதிதல்லவே! முதற் காதல் மிகவும் அற்புதமானது, ஆயுள் உள்ளவரை அதன் எச்சத்தை நம்மில் விட்டுச் செல்லும் என்கிறார்கள். கவிகளும் காவியங்களும் அதை ஒருபோதும் மறுப்பதும் இல்லை. ஆனால், இங்கே நடப்பது?
புத்தம் புதிதான உணர்வின் பிடியில் அகப்பட்டுக் கிடந்தாள், ஒலிவியா. அதைத் தெள்ளென உணர்ந்தவள் தன் தடுமாற்றத்தை, தவிப்பை வெகுவாகவே இரசித்தாள். இரசிக்க வைத்தான், நேசித்தவன். இது ஒன்றும் கனவல்லவே என்று அவளைக் கிள்ளிப் பார்க்கவும் வைத்தான்.
“ஸ்ஸ்ஸ் ஒலிவியா!” வலித்த கையை மறுகையால் தேய்த்தபடி அமர்ந்திருந்தவளை நடப்புக்கு அழைத்து வந்திருந்தாள், டொறத்தி .
அவளோடு காலையுணவுக்கு என்று கீழேயுள்ள ரெஸ்டாரண்ட் வந்தால், அங்கு கிறிஸ்டினாவோடும் நிகழ்ச்சிப் பொறுப்பாளரோடும் அமர்ந்திருந்தான், வேர்த்.
உல்லாசப் பார்வையோடு எதிர்கொண்டவனைப் பாராதது போல் பாவித்து, பொதுவாகக் காலை வணக்கம் சொல்லிவிட்டு நகர்ந்து தன்னைக் காத்துக்கொண்டாள், இவள். இருந்தாலும் எவ்வளவுதான் எச்சரிக்கை, கண்டிப்பு என்று கொடுத்தாலும் விழிகள் சொல் கேட்டால்தானே? சும்மா நேரத்திலேயே அப்படித்தான், இப்போது அவன் எனக்கானவன் என்ற நிலையில்! இரகசியமாக அவனை நாடி ஓடியது, பார்வை.
காலையுணவு முடித்து எழுகையில், “வன் மினிட் ஒலிவியா” என்றழைத்த கிறிஸ்டினா, தனக்குக் கழுகுப்பார்வை என்று சொல்லாமல் சொன்னார்.
அருகிலேயே வேர்த் நின்றிருந்தான். இவளை அழைத்தவர், யெஸ் கிறிஸ்டினா என்று சென்றவளைப் பாராது வேர்த்தை முறைத்து நின்றார்.
“நீ காலையில் என்ன செய்தாய் என்பது எனக்குத் தெரியாது என்று நினையாதே!” என்று அவர் சிடுசிடுக்க, “ஓ டியர், உனக்கு வேலை என்னை உளவு பார்ப்பதோ!” உல்லாசமாகக் கேட்டான், அவன்.
“விளையாடாதே வேர்த்!” கண்டிப்போடு சொன்னவர், தன் முன்னால் தவிப்போடு நின்றவளை ஊன்றிப் பார்த்தார்.
“இங்கே பார் ஒலிவியா, ஒன்றை மட்டும் நன்றாக நினைவில் வைத்துக்கொள், நீ எங்கள் எல்லோர் நம்பிக்கைக்கும் பிரியத்துக்கும் உரியவள். இவனுக்கு மட்டுமானவள் இல்லை, அட்லீஸ்ட் இந்தப் போட்டி முடிவுறும் வரை!” என்றதும், இவள் வாய், “சொறி” என்றிருந்தது.
“இப்ப நீ எதற்கு சொறி சொல்கிறாய்?” என்ற வேர்த், கிறிஸ்டினாவோடு மல்லுக்கட்டத் தொடங்கிவிட்டான். மீண்டும் சில சொறிகளை உதிர்த்துக்கொண்டே நகர்ந்து விட்டவள், அறைக்குள் உள்ளிட்ட வேகத்தில் சமையல் புத்தகங்களை எடுத்து வைத்துக் கரைத்துக் குடிக்கவே தொடங்கிவிட்டாள்.
ஒலிவியா, அன்று மதியம் வரை அறையை விட்டு வெளிப்படவில்லை. ‘எந்தப் பிரிவில் எப்படியான சவாலாக இருக்கட்டும் விட்டுவிடுவதில்லை’ என்ற மன வைராக்கியம் எஃகுவின் உறுதியில் அவளுள் வியாபித்திருக்கவே, மிகுதிப் போட்டிகளுக்குத் தன்னைத் தயார் செய்தாள்.
அந்த மன வைராக்கியமே, அன்று மாலை தயாராகி நிற்கையில் காதலி ஒலிவியாவைப் பின்தள்ளி, போட்டியாளர் ஒலிவியாவை வலு நிமிர்வாகவே நிற்கச் செய்திருந்தது.
பரீட்சயமற்ற சமையலறை. சமையல் உலகமே கொண்டாடும் செஃப் ஆரோன் டேல் ரெஸ்டாரண்ட்! அதில் தாம் சமையல் செய்யப் போகிறார்களா! குதூகலத்தோடு ஆயத்தமாகியவர்கள் ‘வாவ் மொமெண்ட்’ என்ற உணர்வோடு படப்பிடிப்பு ஆரம்பத்துக்கு வந்திருந்தார்கள்.
அன்று காலையில், த்ரி கோர்ஸ் மெனு தயாரிப்பது என்றால் எந்த எந்த செய்முறைகள் உங்கள் முதல், இரண்டாம் தெரிவாக இருக்கும் என்று ஐவரிடமும் கேட்டிருந்தார்கள். குறித்துக் கொடுத்திருந்தார்கள். அப்படியென்றால் ‘சேவீஸ் சேலஞ்சா?’ என்ற கேள்வியோடு ரெஸ்டாரண்ட் வந்தால், அவர்கள் ஊகமே சரியென்றார்கள், நடுவர்கள்.
“கைஸ் வெல்கம்! கிளாட்லி வெல்கம் டு மை வேர்ல்ட்!” கைகள் தட்டி, ஆரவாரமாக வரவேற்ற ஆரோன் டேல், வந்து நின்றவர்களை ஆர்வமாகப் பார்த்தவாறே தொடர்ந்தார்.
“முதல் முதல் உங்களைக் காண்கையில் ஹோம் குக்கர்ஸ் ஆக அறிமுகமாகிய நீங்கள் ஐவரும், இதோ இப்போது வேர்ல்டு கிளாஸ் சமையல் செய்முறைகளை மிக இலாவகமாக நுணுக்கங்களோடு செய்ய வல்லவர்களாக என் முன்னால் நிற்கிறீர்கள். மிகவுமே குறுகிய காலப்பகுதிக்குள் இந்த முன்னேற்றம் சாத்தியமாகியுள்ளது. உங்கள் கடின உழைப்புக்கு நான் தலை வணங்குகிறேன்.” என்ற அவர் வார்த்தைகளைக் கேட்ட ஐவரும் மிகவும் பெருமையாக, கௌரவிக்கப்பட்டதாக உணர்ந்தார்கள்.
“இப்போட்டி இறுதியில் வெற்றியாளராகப் போவது என்னவோ ஒருவர் மட்டுமே! என்னைப் பொறுத்தவரையில் நீங்கள் ஐவரும் மிகவும் சிறந்த சமையல்கலை வல்லுநர்களாக மிளிர எல்லாத் தகுதிகளும் கொண்டவர்கள், வெற்றியாளர்கள்! அதை மனதில் இருத்திக்கொண்டு முன்னேறிச் செல்லுங்கள். இனி வரவிருக்கும் போட்டிக்கு மனமார வாழ்த்துகிறேன்!” என்று தொடர்ந்தார்.
அவர் வாய் உதிர்த்த வார்த்தைகளை, வெளிப்படுத்திய பாராட்டை அனுபவித்து மகிழ முதல், “இன்று, இங்கு நீங்கள் ஒவ்வொருவரும் இருபது இருபது பேருக்கு த்ரி கோர்ஸ் மெனு தயாரிக்க வேண்டும்.” என்றாரே பாருங்கள்.
ஐவரும், “ஆஆஆஆ” வாயை பிளந்தார்கள், முகங்களில் பதற்றமும் அப்பிக்கொண்டது.
“அதுவும் இரண்டரை மணித்தியாலத்தில்.” சேர்ந்துகொண்டார், கிறிஸ்டினா.
“முடிவில், ஒருவர் இங்கு வைத்தே எலிமினேட் ஆவார், மிகவும் சிறப்பாகச் செய்து முதலிடம் பிடிப்பவர் நேரடியாக ஃபைனல் போவார்!” என்றான், வேர்த்.
“அதன் பிறகு, எஞ்சியிருக்கும் மூவரோடு ஹாஃப் ஃபைனல் கூட இங்கே இதே இடத்தில் நாளை நடக்கவிருக்கிறது.” புத்தம் புதிதாக ஒரு செய்தியும் சொன்னார், செஃப் ஆரோன் டேல்.
போட்டியாளர்கள் ஐவரும் ஆடாது அசையாது நின்றிருந்தார்கள். மூளைக்குள், சமையல் பாத்திரங்களும் விதவிதமான சமையற்பொருட்களும் கூடவே அவர்களுமாகக் கை கலப்பில்!
“இதன்படி, இங்கிருந்து அவுஸ்திரேலியா செல்லும் போது, இறுதி மூன்று போட்டியாளர்கள், அதாவது நம்முடைய சீசன் பத்துக்கான இறுதிப்போட்டியாளர்கள் தெரிவாகி இருப்பார்கள்!” உரத்துச் சொன்ன கிறிஸ்டினா,
“அண்டர் பான்ரி, மற்றும் செஃப் ஆரோன் டேல் உங்களுக்கு என்றே ஒழுங்கு செய்துள்ள உங்களுக்குத் தேவையான அனைத்தும் அடங்கிய மிகப்பெரிய பான்ரி தயாராக உள்ளது. என்ன சமையல் செய்யப் போகிறீர்கள் என்று முடிவு செய்வதற்கு, பத்தே பத்து நிமிடங்கள் தரலாம்! தேவையான பொருட்களை எடுத்துக்கொள்ள வழமைபோலவே ஐந்தே ஐந்து நிமிடங்கள்.” என்றார்.
அதே கையோடு, “அந்தப் பத்து நிமிடங்களும் இப்போதிருந்து ஆரம்பிக்கிறது!” என்றார், ஆரோன் டேல்.
அதுவரையும், ஓரளவு உடற் சோர்வும் தட்டிக்கழிக்கவே முடியாத நேசத்தின் வாசமுமாக நின்றிருந்த ஓலிவியா, ஒரே உதறலில் அவற்றிலிருந்து மீண்டிருந்தாள்.

