அண்டர் பான்ரியில் இருந்து பெரிய வெள்ளைத் தாளை எடுத்து விரித்து வைத்தாள். ஸ்டார்ட்டர், மெயின், டெஸெர்ட் என்று எழுதி, என்ன என்ன தேவை, எந்த உருவில் பிரசென்டேஷன் என்றெல்லாம் வகைப்படுத்தத் தொடங்கியிருந்தாள்.
மிகுதி நால்வரும் என்ன இலேசானவர்களா? அந்த இடமே உயிர்பெற்றிருந்தது. நடுவர்கள், அவர்களின் சிறு சிறு செயலையும் உன்னிப்பாக அவதானித்தபடி அமைதியாகச் சுற்றி வந்தார்கள்.
ஐவருக்கும் கூப்பிட்ட குரலுக்கு எது எங்குள்ளது என்று காட்டுவதற்காக, அங்குச் சமையலறையில் வேலை செய்பவர்கள் தயாராக நிற்க, போட்டி ஆரம்பமாகியது.
ஒலிவியாவின் ஸ்டார்ட்டர் பற்றிக் கேட்டபடி கமரா அவளை நோக்க, மைக், அவள் முன் நீண்டிருந்தது.
வெற்றிலை, ஏலம், சீரகம் கலந்த ஐஸ் கிரீம் தயாரிப்பிலிருந்தவள் நகர்ந்து, “என்னுடைய ஸ்டார்ட்டர் ஒரு துண்டு கிங் பிஷ், மவுன்டெயின் பெப்பர், உப்பு, மன்ட்ரிஸ்(Muntries), மைக்ரோ ஹெர்ப்ஸ் பினிஷ் வித் கிறீன் வோட்டர்!” சொல்லிக்கொண்டே, கூடைக்குள்ளிருந்த பெரிய கிங் பிஷ்சை எடுத்து வெட்டுவதற்கு ஏதுவாக வைத்தாள்.
அப்போதே அவள் தயாரிக்கவுள்ள மெயின் டிஷ் மற்றும் டெஸெர்ட் பற்றியும் கேட்டு ரெகொர்ட் செய்து கொண்டார்கள்.
“மெயின் கோர்ஸ் மெனு… அம்ம்ம்… லாம்ப் பாக்ஸ்ட்ராப்(lamb backstrap) வித் மாஷ்ட் பொட்டாட்டோ(mashed potato) அண்ட் மேப்பில் கிளேஸ்ட் பேபி கரட்ஸ்(Maple-glazed baby carrots)” சுருக்கமாகச் சொன்ன வேகத்தில், கூரான கத்தியை எடுத்து வைத்துக்கொண்டே,
“டெஸர்ட் – வெற்றிலையில் வறுத்த தேங்காய்த்துருவலைத் தூவி, துண்டுகளாக்கிய பேரிச்சம் பழம் மற்றும் வெற்றிலை, ஏலம், சீரகம் கலந்த ஐஸ் கிரீம் ஸ்கூப், மேலே ருசியான கிரஞ்சி கன்டிட் ஃபென்னெல் தூவி செர்வ் செய்ய இருக்கிறேன்.” என்றதும், “வாவ்! மிகவும் புதியதாக இருக்கிறதே! அது பற்றிச் சுருக்கமாகச் சொல்லுங்களேன்” என்றார், அங்கு நின்ற உதவி இயக்குனர்.
“சில மாதங்களுக்கு முதல், என்னோடு யுனியில் படிக்கிற பெங்காலி பிரெண்ட் வீட்டுக் கலியாணத்துக்குச் சென்றிருந்தேன். அப்போதுதான் முதல் முதலில் இந்த ஐஸ்கிரீம் சுவைத்தேன். அந்த இன்ஸ்பிரேஷன் தான் இன்றைக்கு நான் செய்யப் போவதற்குக் காரணம்.” அவசரம் அவசரமாகச் சொன்னபடி மீன் வெட்ட ஆயத்தமாகி இருந்தாள்.
“பெஸ்ட் ஒஃப் லக் ஒலிவியா!” என்றவர்கள், அடுத்த போட்டியாளர் நோக்கிச் சென்று விட்டார்கள்.
அடுத்தடுத்து என்னென்ன செய்ய வேண்டும் என்பது தலைக்குள் வலம் வந்தபடி இருக்க, ஒரு பக்க மீனை வெட்டி, சதைப்பகுதியை எடுத்துவிட்டு மறுபுறம் திரும்பியவள், மெல்ல எட்டி ஐஸ் மெசினை பார்த்த அதே நேரம் வலக்கை பிடித்திருந்த கத்தி அசைந்திருந்தது. கண்ணிமைப்பொழுதுதான், நடுவிரலில் சுர்ரென்று இருந்தது. “ஆஆ… டாமிட்!” கையை உதறியவாறே “மெடிக்” என்றவள் விரலைத் தூக்கிப் பார்க்க, குபுகுபுவென்று இரத்தம் வழிந்து கொண்டிருந்தது.
‘நகத்தோடு விரல் வெட்டுப்பட்டுட்டோ!’ முதலில் அப்படித்தான் எண்ணினாள்.
“மெடிக்!” சற்றே குரல் உயர்த்த நினைத்தாள். கிர்ரென்று அந்த மண்டபமே சுற்றிச் சுழன்றது. அங்கிருந்த கிச்சன் டிசுவை இழுத்தெடுத்து விரலை அழுத்திப் பிடித்தபடி கண்களை மூடிக்கொண்டு கீழே அமரவும், “மெடிக் ப்ளீஸ்!” என்றவாறே, ஆரோன் ஓடி வந்து பிடித்துக்கொள்ளவும் சரியாக இருந்தது.
“இஸ் தட் பேட்?”
“யா ப்ரோபப்லி” என்றவள் குரல் நலிந்து வந்தது.
“ஷோ மீ!” இரத்தத்தில் நனைந்திருந்த டிசுவை அகற்றவும் மெடிக் வந்து சேர்ந்திருந்தார்கள்.
“இஸ் தட் கோயிங் டு ஸ்டிச்?” மெடிக் என்று வந்தவரிடம் விசாரித்தார், ஆரோன். எத்தனையோ போட்டிகளில் இப்படியான விடயங்களைக் கண்டிருந்தாலும் மிகவுமே பதற்றமாக உணர்ந்தார், அவர்.
“நொட் எ ஸ்டிச்…” என்ற மெடிக், வெட் நாப்கினால் அவள் கரங்களை விரைந்து சுத்தம் செய்தார். பின்னர் ஒரு பவுடரைத் தூவி, புதிய டிசுவால் சுற்றி, “பொத்திப் பிடித்துக்கொள்!” என்றார்.
அவள் மெடிக்ஸ் என்றதும் விருட்டென்று நகர்ந்தது, வேர்த்தான். அவனைப் பிடித்து நிறுத்திய ஆரோன், “இரு நான் பார்க்கிறேன்” என்று விட்டு வந்திருந்தார். அந்த வார்த்தைகளை விடவும் அவர் பார்வை நிறையவே சொல்லிக் கண்டிப்பதை உணர்ந்தவன் மனதுள் மிகவுமே விசனப்பட்டான். இதில் அவன் விருப்பத்துக்குரியவள் நலம் உண்டே. அதுவே அசையாது நின்றிருந்தான். இருந்தாலும் அருகிலிருந்த கிறிஸ்டினாவை நன்றாகவே முறைக்கத் தவறவில்லை. அவள் தானே நடந்ததை எல்லாம் ஆரோனிடம் ஒப்பித்தது.
இப்படி நின்றவனால் ஒரு கட்டத்தில் முடியவில்லை. அவர்களை நோக்கி நகர்ந்தான்.
“நீ ஓகே வா?” அவன் குரலில் விசுக்கென்று திரும்பியவள், சுரந்த விழிகளோடு பார்த்தாள். வேர்த் நிலையோ? தள்ளி ஒரு நடுவராக நிற்க மிகவுமே கடினமாக இருந்தது. அதுவும் அவள், “ஐம் கெட்டிங் டிஸ்ஸ்சி(dizzy)” என்றபோது அப்படியே தன் நெஞ்சில் சாய்த்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது. தவிப்போடு ஆரோனைப் பார்த்தான்.
அவர் கை அவளைத் தோளோடு அணைத்துக்கொண்டது.
“கதிரை ஒன்று கொண்டு வாருங்கள்!” சத்தமாகச் சொன்னபடி, “ஒன்றுமில்லை ஒலிவியா, கண்களை மூடிக்கொண்டு பத்து வரை எண்ணு!” என்று சொல்ல, அவள் பார்வையோ தவிப்பும் தத்தளிப்புமாகத் தன் சமையல் மேடைக்குச் சென்றிட்டு.
“சின்ன விசயம் யோசியாதே ஒலிவியா!” கிறிஸ்டினா சொல்லிவிட்டு, “மற்றவர்களைப் பார்க்கலாம், நீ வா!” என்று, வேர்த்தை இழுத்துக்கொண்டு சென்றுவிட்டார். மிகுதி நால்வர் பார்வை இங்கு வந்து போனாலும் அவர்கள் சமையலில் தடை இருக்கவில்லை.
கண்ணீர் வழிய விண்ணென்று வலித்த விரலிலிருந்த டிசுவை விலக்கிப் பார்த்தாள், ஒலிவியா.
“oh! மெடிக்…இஸ் ஸ்டில் ப்ளீடிங், லைக் மேட்!” என்ற ஆரோன் குரலில் வேர்த் தலை அவர்களை நோக்கித் திரும்பியது.
“நீ அதில் சென்று நின்று அவளை இன்னமும் வீக் ஆக்காதே வேர்த்!” கிறிஸ்டினா குரல் எச்சரித்தது. செவிகளும் பார்வையும் அவளிடம் இருக்கத் தள்ளியே நின்று கொண்டான், அவன்.
“யு ஹேவ் கட் இன்டு டீப்!” என்று மெடிக் சொன்னபோது, ஆரோன் கொடுத்த ஜுஸைக் குடித்து முடித்திருந்தாள், ஒலிவியா.
“இப்போதைக்கு இரத்தம் வராதவாறு கட்டுப்போட்டு விடுங்கள், நான் சமையலைத் தொடர வேண்டும். ப்ளீஸ்!” என்றவள், விரலில் கட்டும் கையில் கையுறையுமாக மீண்டும் சமையலைத் தொடர்வதற்குள் இருபது நிமிடங்கள் கடந்து விட்டிருந்தன.
“ரிலாக்ஸ் ஒலிவியா. எக்ஸ்ட்ரா 20 மினிட்ஸ் தரப்படும்.” என்ற ஆரோன், “விடு, இந்த மீனையும் இறைச்சியையும் நானே வெட்டித் தருகிறேன்.” என்று முன்வந்தார்.
“இல்லை இல்லை நானே செய்கிறேன்.” பிடிவாதமாக மறுத்து விட்டாள், அவள்.
முகம் சிவந்து களைத்துத் தெரிந்தாள். அப்பப்போ வலியில் முகம் சுருங்கினாள், இருந்தபோதும் மிக வேகமாக ஒன்று ஒன்றையும் செய்தாள். நிகழ்ச்சிப் பொறுப்பாளரே அவள் அர்ப்பணிப்பை நடுவர்களிடம் சிலாகித்துக் கதைத்தார்.
“ப்ரௌட் ஒஃப் மை கேர்ள்!” அதற்கு மேல் அவளிடம் கதைக்க முடியவில்லை, வேர்த்தினால். விழிகளால் சிரித்தவள், அவன் வார்த்தைகளால் விரலில் சுர்ரென்று உணர்ந்த வலி மறந்தவளாகச் செயற்பட்டாள்.
மீன் இறைச்சி வெட்டி, உருளைக்கிழங்கு அவித்து மசித்து, கரட்டை எடுத்துத் தயார் செய்து, தேங்காய்த் துருவல்களை வறுத்து வைத்து என்று, ஒன்று ஒன்றையும் அவள் செய்ய செய்ய ஆரோன் டேல் உண்மையில் அவளில் தன்னையே கண்டார். தனக்கென்று சமையல் வாரிசு இல்லை என்பது அவர் மனத்திலுள்ள பெருங்குறை! அதை அவ்வளவாகக் குடும்பத்தாரிடம் கூட வெளியிட்டதில்லை. இப்போது, இக்கணம், அது மிகவும் பெருங்குறையாகத் தெரிந்தது.
‘இவள் ஏன் என் மகளாகப் பிறக்கவில்லை?’ என்று கூட ஏங்கிப் போனார்.
இடையில், நான்கு தடவைகள் புதிதாகக் கட்டுப் போட்டு கிளவ்ஸ் மாற்றி இருந்தாலும் மிகவும் திருப்தியாகவே அனைத்தையும் செய்து முடித்திருந்தாள், ஒலிவியா.
“ஸ்டார்ட்டர் செர்வ் செய்வதற்குத் தயாராகுங்கள்!” என்று கிறிஸ்டினா சொல்கையில், “இதோ, உங்கள் தயாரிப்புகளைச் சுவைக்க நம் விருந்தினர்கள் வருகிறார்கள்!” ஆரோன் டேல் ஆரவாரமாகச் சொல்ல, உற்சாகக் குரல் கொடுத்து வரவேற்றான், தோமஸ் வேர்த்!
உள்ளிட்டவர்களில், ஆரோன் டேல் பிள்ளைகள் நால்வர், மூத்த மகன்மார் காதலிகள், ஆரோன் காதல் மனைவி என்று, அவர் மொத்தக் குடும்பமே இருந்ததில் எல்லோருக்குமே ஆச்சரியம்.
அன்று, மிகச் சொற்பமான புள்ளிகள் வித்தியாசத்தில், மெயின் மெனுவில் பரிமாறபட்ட மீன் ட்ரை ஆக இருந்தது என்ற முக்கிய காரணத்தின் அடிப்படையில் சாம் போட்டியிலிருந்து நீக்கப்பட்டிருந்தான்.
அதேநேரம், மிகவும் ருசியாக மட்டுமல்லாது பரிமாறப்பட்ட டெஸர்ட் எல்லோர் கவனத்தையும் கவர்ந்து அதிக புள்ளிகளைப் பெற்றுக் கொடுத்து,முதலாவது இறுதிச்சுற்றுகான போட்டியாளராக ஒலிவியாவை மாற்றி இருந்தது.

