அத்தியாயம் 13
‘If you really want to make a friend, go to someone’s house and eat with him… the people who give you their food give you their heart.’
– Cesar Chavez
அடுத்த நாள் மாலைப் பொழுது…
அரையிறுதிச் சமையல்போட்டிக்குத் தயாரான மூவரும் இரு சுற்றுகளை எதிர்கொள்ள வேண்டும் என்றார்கள். அதோடு, இலண்டன் நாட்டின் பிரபல சமையல் கலை வல்லுநர்கள் நால்வர் சிறப்பு நடுவர்களாகவும் வருகை தந்திருந்தார்கள்.
அவர்களால் பாராட்டப்பட்ட மகிழ்வில் ஒலிவியா பார்வையாளர்களோடு அமர்ந்து கொண்டிருக்க, போட்டி ஆரம்பமாகியிருந்தது. பதற்றமின்றி ஒருவனை அதுவும் உரிமையோடு இரசித்தபடியிருந்தாள், அவள்.
அப்பப்போ இரகசிய பார்வைப் பரிமாற்றங்களோடு அந்த அரையிறுதிப் போட்டியை மதிப்பீடு செய்து கொண்டிருந்தான், வேர்த்.
முதல் சுற்று, ஒரு மணி நேரம் கொடுத்திருந்தார்கள். அடுத்த சுற்றுக்கு எழுபத்தியைந்து நிமிடங்கள். வழமை போலவே மூவரும் மிகவும் திறமையாகவே சமைத்திருந்தார்கள். எங்களை மிகவுமே இக்கட்டான நிலையில் நிறுத்திவிட்டீர்கள். உங்கள் மூவரையும் நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். மூவருக்குமே பிரகாசமான எதிர்காலம் உண்டு என்று, அவர்களைக் கௌரவித்த பின்னரே முடிவுகளைச் சொன்னார்கள். கண்ணீரோடு, டொறதி வெளியேறியிருந்தாள்.
“இதோ,ஹோம் குக்கிங் சீசன் பத்தின் இறுதிப் போட்டியாளர்கள்!” என்று நடுவர்கள் கூவ, இரு ஆண் போட்டியாளர்கள் நடுவே நிமிர்வாக நடந்து வந்தாள், ஒலிவியா.
“ஒலிவியா, உன் இம்யூன் பின் பாவிக்கும் தேவையே இல்லாது போய்விட்டது. அதை நீயே வைத்திருக்கலாம்!” என்று சொல்லிப் பாராட்டினார், கிறிஸ்டினா.
அடுத்த அரை மணி நேரம் பாராட்டுகளில் முடிந்திருக்க, திடுமென்று, அதோடு அன்றைய நாள் முடியவில்லை என்றார், கிறிஸ்டினா. ஆரோனும் வேர்த்து கேள்வியாக நோக்கினார்கள்.
“இந்த அரையிறுதிப் போட்டி நாளை மேலும் சிறப்பாக்குவோமா?” கலகலவென்று ஆரம்பித்தார், கிறிஸ்ட்டினா.
“முதல் வேலையாக நீங்கள் இருவரும் இப்படி வந்து நில்லுங்கள்.” ஆரோன், வேர்த் இருவரையும் தள்ளிச்சென்று தன்னைப் பார்க்கும் படி திருப்பி நிறுத்திவிட்டு, கண்ணடித்தபடி வந்து தன்னிடத்தில் நின்றார்.
“இதில் நான் தனியாக நின்றால் எப்படி? அம்…ஒன்று செய்வோமே, இறுதிப் போட்டிக்குத் தெரிவான மூவரையும் என்னோடு நடுவர்களாக இருக்கும்படி அழைக்கிறேன்.” என்று அவர் சொன்னதும் ஆரவாரம் அதிகரித்தது.
ஆரோனும் வேர்த்தும் தம்முள் பார்த்துக்கொண்டார்கள். சற்றே குழம்பியும் போனார்கள். அவர்கள் இருவருக்கும் தெரியாது நிகழ்ச்சிக்குச் சுவாரசியம் சேர்க்க கிறிஸ்டினாவும் ஹோம் குக்கிங் குழுவும் போட்ட திட்டமிது!
“இப்போ இங்கு நடக்கப்போவது போட்டியல்ல…பெருஞ்சமர்!” என்றபடி, பெரிதாக கைதட்டி ஆரவாரித்தான், இறுதிப் போட்டியாளனில் ஒருவன்.
“எங்களை வைத்து விளையாடுகிறீர்களோ?” ஆரோன் கேட்ட விதத்தில், “ஐயையோ இது கிறிஸ்டினா சொல்லித்தந்தது. அதை அப்படியே சொன்னேன்.” என்றான், அவன்.
சிரிப்பலை எழுந்து ஓய்ந்தது. “இன்னமும் இறுதிப்போட்டி இருக்கிறது, மூவரும் நினைவில் வைத்திருங்கள். அதிலும் நாங்கள் தான் நடுவர்!” பொய் வெருட்டல் விட்டான், வேர்த்.
“கைஸ்! நீங்கள் இருவருமே தலைசிறந்த சமையற்கலை வல்லுநர்கள். அப்படியிருக்க, இப்படியான சின்ன சின்ன போட்டிகளுக்குப் பயப்படலாமா?”
சீண்டலாக ஒலிவியா கேட்க, “வேண்டாம்…” கழுத்தை நெரிப்பது போல் செய்தான், வேர்த்.
“ஒலிவியா… யு டு டார்லிங்! எதிர்பார்க்கவில்லை. சோ சாட்!” அழுகிற குரலில் சொன்னார், ஆரோன்.
அவளோ அழகாகச் சிரித்தாள். கிறிஸ்டினாவோடு ஹை பை கொடுத்துக்கொண்டாள்.
“இப்போது இங்கே நம் அன்புக்குரிய செஃப் வேர்த் மற்றும் செஃப் ஆரோனுக்கிடையில் பெரும் போட்டி நடக்கவிருக்கிறது.” கிறிஸ்டினா சொல்ல,
“உங்களுக்கு ஒரே ஒரு நிமிடம் தான் தரப்படும். இருவரும் மற்றவருக்கு என்று ஒரே ஒரு கீ இன்க்ரிடியன்ட் தெரிவு செய்து எடுத்து வாருங்கள். அதைப் பிரதானமாக வைத்துத்தான் இன்றைய சமையல்!” கிறிஸ்டினா முடிக்க, நடுவர்கள் இருவரும் ஓடினார்கள். கூடியிருந்தவர்களின் கொல்லென்ற சிரிப்பலை அவர்களைக் கலைத்துச் சென்றது.
சென்ற வேகத்தில் திரும்பி வந்தவர்கள் ஒற்றைக்கை பின்புறமாக ஒளிந்திருந்தது.
காட்டுங்கள் என்றால்… ஆரோன் மிளாகாய், வேர்த் பட்டர்!
“என்ன நினைத்து இதை எனக்கென்று எடுத்தாய்?” நெற்றி சுருங்கக் கேட்டார், ஆரோன்.
“உங்கள் திறமைக்கு இதெல்லாம் ஒரு விடயமா என்ன? அப்படியிருக்க, எனக்கென்று இதைக் கொண்டுவந்து பழிவாங்கி விட்டீர்களே! என் பிரியத்துக்குரிய தலைவரிடமிருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை!” சோகமாகச் சொல்லி, நெஞ்சில் டம் டம் என்று குத்தி வேர்த் போட்ட நாடகத்தில், வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தார், கிறிஸ்டினா. அவ்விடமே சிரிப்பலைதான்.
“போதும் போதும்! ஹோம் குக்கிங் போட்டி என்றால் சும்மாவா என்ன? இன்னுமொரு விடயம் சொல்ல மறந்தே போனேன். இதில் தோற்பவருக்கு பனிஸ்மென்ட் உண்டு! கட்டாயம் நிறைவேற்றியே ஆகவேண்டும்! அது என்னவென்றால்…” இழுத்தார், கிறிஸ்டினா. பின்புறமிருந்து கரத்தை முன்னால் எடுத்து விரித்தால் …
“Carolina Reaper chilli pepper… ” கூவினாள், ஒலிவியா.
“ஓ நோ!” என்று சொல்லவும் செய்தாள். பார்வை வேர்த்திடம் பாய்ந்திருந்தது. போட்டி ஆரம்பத்தில், இதைப் பாவித்து ஒரு போட்டியாளர் சமைத்ததைச் சிறிதாகச் சுவைத்துவிட்டு, வேர்த் பட்ட பாடு! ஐஸ்கிரீம், தயிர் அது இதுவென்று வாயில் கொட்டி சுற்றிச் சுழன்றானே!
“வேறு ஏதாவது கொடுப்போம்!” என்றவளை, குறும்பாகப் பார்த்த கிறிஸ்டினா, “இப்ப உனக்கு என்ன பிரச்சினை? அவர்களில் ஒருவருக்குத்தான் இது!” சீண்டினார்.
“அவளை விடுங்க, நான் இந்தப் போட்டிக்கு வரவே இல்லை.” பின் வாங்கினான், வேர்த்.
“சரி சரி, இதில் ஒரு கடி, சிறு துண்டு சாப்பிட்டால் சரி.” என்று, அவனோடு மல்லுக்கட்டி ஒப்புக்கொள்ள வைத்தார், கிறிஸ்டினா.
“அறுபது நிமிடம் தான். டைம் ஸ்டார்ட் நவ்!” சொல்லி முடிய, கடகடவென்று சமையல் ஆரம்பித்திருந்தார்கள்.
ஆரோன் அனுபவம் ஒரு ஒரு கட்டத்திலும் மிகவும் அழகாக வெளிப்பட்டது. அவ்வளவு இலகுவான மனநிலையில் இருந்தார். முதல் வேலையாக நல்ல சாயம் போட்டுத் தேநீர் ஊற்றினார்.
“வேர்த்… மை டியர் யங் போய்! டீ …” அவனுக்கு ஒன்றை நீட்ட வெகுவாக முறைத்தான், அவன்.
சிரித்தபடி அவன் சமையல் மேடையில் வைத்துவிட்டு, பிஸ்கட் பெட்டியை உடைத்து அதில் சிலதுகளை எடுத்து வைத்துக் கடித்தபடி தேநீரை உறிஞ்சினார்.
நேரம் போவதை சாம் நினைவுபடுத்த, சிரிப்போடு நகர்ந்தவர் பாஸ்தாவுக்கு மாவைக் குழைத்தார். பட்டர் சோசில் பாஸ்தா மனக்கண்ணில் மிதக்க மிதக்க முறுவலோடு வேலைகளைச் செய்தவரைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருந்தது. எல்லோருமே அதைக் கதைத்துக்கொண்டார்கள்.
அவருக்கு நேரெதிராக மிகவுமே பதற்றமாக இருந்தான், வேர்த். வெற்றி பெற வேண்டும் அதுவும் ஒலிவியா முன்னால்.
கடைக்கண்ணால் பார்த்தால், இதழ்களில் உறைந்து நின்ற முறுவலோடு இவனையே தான் பார்த்திருந்தாள்.
“வேர்த், ஸ்வீட் சில்லி சோஸ் சிக்கன் ஃபிரை வித் வைட் ரைஸ் நிச்சயம் சுவையாகவே இருக்கும். யோசியாமல் இங்கே கவனத்தை வைத்துச் செய்!” அவனருகில் வந்து அடிக்குரலில் சொல்லிச் சென்றார், கிறிஸ்டினா.
இப்படியே அந்த அறுபது நிமிடங்களும் அவர்களை ஊக்கப்படுத்தும் பெயரில் கிறிஸ்டினாவும் மற்றவர்களும் சுற்றிச்சுழன்று கடித்துத் தள்ளினார்கள். சாம், டொறத்தி போட்டியிலிருந்து வெளியேறியதால் மிகவுமே சோகமாக இருந்தவர்கள், உருண்டு பிரண்டு சிரித்து, தம் கவலை மறந்தார்கள்.
சரியாக அறுபது நிமிடங்கள் முடிய, “ஸ்டெப் அவுட்” ஒலிவியாதான் கத்தினாள்.
மூன்று பைனலிஸ்ட் மற்றும் கிறிஸ்டினா நடுவர்களாக இரு டிஸ்களையும் சுவைத்துப் பார்த்தார்கள், தம் கருத்துக்களைக் கூறினார்கள். அதிலும் மூன்று பைனலிஸ்டும் நடுவர்கள் போலவே கதைத்தார்கள். ஒலிவியா நின்ற தோரணை கூட ஆரோன் போலவே இருந்ததில் அவர் விழிகள் விரியப் பார்த்து நின்றார்.
அந்தப் போட்டியில் வெற்றி ஆரோன் வசமாக, கத்திக்கொண்டு ஓடத் தொடங்கிய வேர்த் இறுகப்பிடித்து நிறுத்தப்பட்டான். பலியாடு நிலையில் நின்றவன் முன்னால் அவன் காதலியே Carolina Reaper ஐ நீட்டினால் …
“என்ன மேன் நீ? இவ்வளவு யோசிக்கிறாயே, சரி நானும் ஒரு துண்டு சாப்பிடுகிறேன்.” சிறு தட்டில் ஒலிவியா ஏந்தியிருந்த மிளகாயில் ஒரு துண்டை எடுத்த வேகத்தில் வாயிலிட்டுச் சப்பத் தொடங்கிவிட்டார், ஆரோன்.
ஆஆஆஆ
அதற்கே கத்தி விட்டான், வேர்த்.
பின், சற்றுக் கிட்டே சென்றவன் பார்வை ஒலிவியா உதட்டில்!
“ஒன்றே ஒன்று தந்துவிடு, இதிலுள்ள முழுதும் சாப்பிடுகிறேன்!” கண்ணிமைப் பொழுதில், அவளுக்கு மட்டுமே கேட்கும் வண்ணம் முணுமுணுத்திருந்தான்.
திகைத்தவள், தன்னையுமறியாது பின்னால் ஓரடி எடுத்து வைத்தாள்.
“ப்ளீஸ், இந்த ஷொட் வேண்டாமே! முதல் டெலிட் செய்து விடுங்கள்! பிலிப் தயவு செய்து கட் பண்ணி விடுங்கள்!” ஓடிச் சென்று கமரா சகிதம் நின்றவர்களோடு அவன் மல்லுக்கட்ட, கலைத்து கலைத்து மொத்தினார், கிறிஸ்டினா.
“அப்படி என்னதான் சொன்னவர்?” சக போட்டியாளர்கள் கேள்விக்கு, ஒலிவியா என்ன பதில் சொல்வாள்?
பட்டென்று பதில் வராது அலங்க மலங்க விழித்தவளைப் பார்க்க ஆரோனுக்குச் சிரிப்பாக இருந்தது.
“என்னையும் சாப்பிடச் சொன்னவர்.” முணுமுணுத்துத் தப்பித்துக்கொண்டாள்.
இறுதியில், ஒரு சிறு துண்டை கிறிஸ்டினா அவன் வாய்க்குள் தள்ள, அவன் அதைச் சப்பிவிட்டு ஒரு முழுக்கோப்பை ஐஸ்கிரீமை விழுங்குவது பார்த்து அந்த இடமே வெடிச் சிரிப்பால் நிறைந்து போனது.
ஓவியாவும் பெரிதாகவே சிரித்துவிட்டாள்.
அவளைப் பார்த்தவன், “வாங்காமல் விடமாட்டேன்” வாய்விட்டே சொல்லி, படீரென்று ஆரோனிடம் ஒன்று வாங்கிக்கட்டினான்.

