அத்தியாயம் 14
‘Food is symbolic of love when words are inadequate.’
– Alan D. Wolfelt
அவுஸ்ரேலியா புறப்பட முழுதாக இரு நாட்கள் இருந்தன. அரையிறுதிப் போட்டி முடிந்து இருப்பிடம் வரவே நடுயிரவாகியிருந்தது. மறுநாள் மாலை, எல்லோரையும் தனது வீட்டுக்கு வரும்படி அன்புக்கட்டளை விடுத்திருந்தார், செஃப் ஆரோன் டேல். பகல் பொழுதை வீணாக்குவானேன்! திட்டமிட்டுவிட்டே உறங்கச் சென்றிருந்தார்கள்.
ஒலிவியா, சிலமணி நேரம் தான் உறங்கியிருப்பாள். அதுவும் ஆழ்ந்த உறக்கமில்லை. இறுதிப்போட்டிக்குத் தெரிவாகியது மனம் நிறைந்த மகிழ்வு என்றால், குறுகிய காலத்தில் அறிமுகமாகிய நேசம் இருக்கிறதே! காலாகாலமாகப் பழகிவரும் உணர்வை, உவகையைத் தந்து அவளை ஒருவழி பண்ணுகிறது. தாய் தந்தை, சகோதர சகோதரிகளுக்கு, தன் மனம் கவர்ந்தவனை அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்ற பேராவல் அவளுள்.
அதுமட்டுமா? துர்க்கா முன்னால் அவனை இழுத்துச் சென்று நிறுத்தி… நினைத்தாலே முகம் சிவந்து தடுமாறிப் போகிறாள், இவள்.
“அவள் உன்னைக் கொல்லப் போறாள் ஒலிவியா!” முணுமுணுத்தாள்.
இதற்குள் ஆழ்ந்த உறக்கம் என்பது அண்டுமா?
இருள் முற்றாகப் பிரிய முன்னரே எழுந்து பரபரவென்று தயாராகிவிட்டாள். இந்தப் போட்டிக்கு வந்ததிலிருந்து ஹாஃப் பாண்ட் அல்லது ஜீன்ஸ், ஒரு டீ ஷர்ட் என்று தான் அணிவாள். நீண்ட நேரம் அணிந்திருக்க, அங்கிங்கு என்று மணித்தியாலக் கணக்கில் பயணம் செய்ய, ஓடியாடி வேலை செய்யவென அதுவே வசதியாக இருந்தது. நிறைய நாட்களுக்குப் பின்னர் சட்டையை அணிந்து கொண்டாள்.
பேபி பிங்கில் வெள்ளை சிவப்பு என்று, குட்டி குட்டியாக மலர்கள் தூவிய சட்டை அணிந்த பூங்கொத்தென மிளிர்ந்தாள், அவள். மறக்காது டயானா தொப்பியை எடுத்துக் கைப்பையோடு வைத்துக்கொண்டாள்.
அடுத்து என்ன? கொஃபி மேக்கரில் இரு கோப்பைகளுக்கான நீர் ஊற்றுகையில் அவள் இதழ்கள் இரகசிய முறுவலில் மெல்ல விரிந்தன.
‘வருவான்’ அவள் மன எதிர்பார்ப்புப் பொய்யாகவில்லை, கதவு மெல்லத் தட்டுப்பட்டது. ஓடிச் சென்று டோர் ஹோலில் ஒற்றைக் கண்ணைச் சுருக்கி வைத்துப் பார்த்தவள் கரம் கதவைத் திறந்து இருந்தது.
அவன் தனியாக வரவில்லை. அவனை முந்திக்கொண்டு நுழைந்தது, கோப்பி வாசனை! கையிரண்டிலும் இரு கோப்பைகளோடு உல்லாச மலர்வோடு உள்ளிட்டான், தோமஸ் வேர்த்.
“குட் மோர்னிங்… ஹனி! நன்றாகத் தூங்கினியா? கைவிரல் இப்போ எப்படி இருக்கு?” என்றவன் பார்வை, நின்று நிதானமாக அவளை மேலிருந்து கீழாக ஆராய்ந்தது.
“யூ லுக் கோர்ஜியஸ்!”அவளைத் தடுமாற வைத்தபடி, அங்கிருந்த மேசையில் கோப்பிக் கோப்பைகளை வைத்தவன் மறுநொடியே அவளைத் தன்னுள் கொண்டு வந்திருந்தான். அப்போதும் நினைவாக அவள் இடக்கையைப் பற்றி, “இப்ப எப்பிடி இருக்கு? வலி இருக்கிறதா?” கைவிரலை ஆராய்ந்தான்.
அவன் காதல் மட்டுமா, இந்த அக்கறையும் கரிசனையும் தானே அவன் மீது தலைகுப்புற விழ வைத்தது.
“பரவாயில்லை, தட்டுப்பட்டால் ப்ளீட் பண்ணுது.” ஷேவிங் லோஷன் வாசத்தில் பளபளத்த கன்னத்தில் அழுத்தமாகவே உதடுகளை ஒற்றியெடுக்க, விழிகள் சுருங்கப் பார்த்தவன் எச்சரிக்கை செய்தான்.
“கிறிஸ்டினா வேவு பார்க்க பார்க்கத் தப்பிப்பிழைத்து வந்தது உன்னோடு அமர்ந்து கோப்பி குடிக்க மட்டுமே!” என்றுவிட்டு வாய்விட்டுச் சிரித்தான்.
“நீ என்னைக் கோப்பியை மட்டுமே குடிக்க விட வேண்டும்!” சொல்லிக்கொண்டே, சொன்ன சொல்லுக்கு மாறான செயலில் ஈடுபட்டான், “வாங்குவதை உடனுக்கு உடன் திருப்பிக்கொடுப்பது இந்த தோமஸ் வேர்த் பரம்பரை வழக்கம் பெண்ணே!” என்றபடி.
கடிகார முட்கள் சிறிதும் பெரியதும் போட்டிபோட்டுக்கொண்டு ஓடியும் மிஞ்சி மிஞ்சிப் போனால் கால் மணித்தியாலம் தான் கடந்திருக்கும், திரை இழுத்துவிடப்பட்ட யன்னல் வழியாக, கீழ்வானம் சிவந்து வருவதை விழிகளில் பெருங்கனவோடு பார்த்தபடி, அருகருகே நெருங்கி அமர்ந்திருந்து சூடான பானத்தைத் துளிதுளியாகப் பருகினார்கள்.
“சில வருடங்களாக வெறுமையாக இருந்த என் மனத்தில், வாழ்வில், இந்தளவு வண்ணமயமான வெளிச்சம் வரும் என்று, நான் இந்தப் போட்டிக்கு நடுவராக வந்து புகுந்தேனே அப்போது துளியும் எண்ணவில்லை!” திடுமென்று சொன்னான், தோமஸ் வேர்த்.
அவன் முகத்துக்கு வந்த அவள் பார்வை நேசத்தில் மின்னியது. அவன் வாழ்வு, அதில் இருந்த பெண், அவன் தொழில் பிடிக்காது விட்டு விலகியது என்று எல்லாமே அவனைத் தெரிந்த எல்லோருக்குமே தெரியும். அப்போ அவன் இரசிகைக்கு! ஒலிவியாவுக்கு அதைப்பற்றியெல்லாம் கதைக்கவே பிடிக்கவில்லை.
“என் வாழ்வில் வண்ணங்களுக்குக் குறைவே இருக்கவில்லை.” என்றவள், “இரு வருடங்களுக்கு முன்னர், உன்னால் என் காதல் முறிந்ததே அப்போது கூட விழுந்து விழுந்து சிரித்தேன் நான். ஆனால், அப்போது, இப்படி நான் தள்ளி நின்று துளித்துளியாக இரசித்தவன் இவ்வளவு அருகில் எனக்கே எனக்கென்று…” சொல்லிக்கொண்டு வந்தவள் தொண்டை கமற, அவன் தோளில் தலை சாய்த்துக்கொண்டாள்.
“நீ எப்போதுமே என்னோடு இருப்பாய் அல்லவா?” தவிப்போடு கேட்டவளை இறுக அணைத்துக்கொண்டவன், “உனக்கு அதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம், இந்தக் கோப்பி மீது ஆணை! இல்லை இல்லை நீ நேற்றுத் தந்தாயே அந்த Carolina Reaper chilli pepper மீதே ஆணையிட்டுச் சொல்கிறேன்!” விளையாட்டாகச் சொன்னான்.
“விளையாடாதே வேர்த்! என் அப்பா அம்மா போல் நாமும் வாழ வேண்டும். அதுதான் என்னுடைய பெரும் ஆசை, கனவு!” மெல்லச் சொன்னவள் விருப்புக்கு, எப்போதும் துணை நிற்பதாக மனதுள் உறுதியாகத் தீர்மானம் செய்து கொண்டான், வேர்த்.
அவனுக்கு, செஃப் ஆரோன் டேல், சமையலில் மட்டுமல்ல குடும்ப வாழ்விலும் குரு! அந்த மனிதன், சமையலை நேசிப்பதற்கு மேலாக மனைவி பிள்ளைகளை நேசிப்பவர். அவர் போல் தாமும் வாழவேண்டும் என்று ஏங்காதவர்கள் இல்லையென்றே சொல்லலாம். நெருங்கிய வட்டத்தில் கூட அந்த மனிதரைப் பொறாமையாகப் பார்ப்பவர்கள் உண்டு. அவர் தொழில், பெயருக்கும் புகழுக்கும் இல்லை, குடும்ப வாழ்வு பார்த்து.
‘அவர் நான்கு பிள்ளைகள் பெற்றிருக்கிறார், நாம் ஐந்தாகப் பெறுவோம் ஹனி!’ மனதுள் சொல்லிக்கொண்டவன் தன்னைச் சுற்றிப் பிள்ளைகள் நெருக்கியடிப்பது போன்றொதொரு நினைவில் மலர்ந்து முறுவலித்தவன், தன் முகத்தையே பார்த்திருப்பவளைச் சீண்டிட முனைந்தான்.
“நிச்சயம் உன் கனவுக்குத் துணை நிற்க முயலுகிறேன்!” என்று கண்ணடித்துச் சொன்னவன், அவள் முறைப்புக்கு, தலையால் ஒரு முட்டுக்கொடுத்தான்.
“உன்னிடம் ஒன்றைச் சொல்ல வேண்டுமே. நேற்றிரவு விடைபெறுகையில் செஃப் ஆரோன் என்ன சொன்னார் தெரியுமா?” என்றவன், அவர் போலவே குரலை மாற்ற முயன்றபடி சொன்னான்.
“இங்கே பார் மேன், என்னுடைய கேரியரில் எத்தனை போட்டிகள், போட்டியாளர்கள்! அவர்களுள் ஒலிவியா மிகவுமே பிரத்தியேகமானவள் என்று என் உள்ளம் உணர்கிறது. நீ எப்போதுமே அவள் வாழ்வில் மகிழ்வை மட்டுமே கொடுக்க வேண்டும். அவள் எப்போதும் இப்போ இருக்கும் மகிழ்வோடு இருக்க வேண்டும். எனக்கு அந்த உறுதி தருவாயா என்று, கண்கள் கலங்கக் கேட்டிருந்தார் தெரியுமா? ஒலிவியா என்பவள், மொத்த ஹோம் குக்கிங் குழுவுக்கும் அன்புக்குரியவள். சீசன் டென் பட்டாம்பூச்சி! ஆனால், எனக்கு… என் வாழ்வு அவள்! நீங்கள் கேட்ட உறுதி தந்தாயிற்று செஃப் என்றிருந்தேன்!” என்ற போது அவன் கண்கள் கலங்கிவிட, ஒலிவியா விழிகளோ முத்தெனக் கண்ணீரை உருளச் செய்தன.
அடுத்த சில நிமிடங்களில், அவளிடம் இருந்து விடைபெற்றுச் சென்று தன்னறையைத் திறக்க முனைய எதிர் அறை திறந்து கொண்டது.
“ஹேய் குட் மோர்னிங்!” என்றவனுக்கு, “நீ ஒரு சீட்! சுயபுத்தி வேணாம் சொல் புத்தியும் இல்லை.” என்று கிறிஸ்டினா ஆரம்பிக்கவே இடையிட்டிருந்தான், வேர்த்.
“ஓ கிறிஸ்டினா! அவள் காலையில் எழுந்து விட்டாள். ஒன்றாக அமர்ந்திருந்து கோப்பி குடித்தோம். நீ எழுந்தது தெரிந்திருந்தால் உன்னோடு சேர்ந்து குடித்திருப்பேன்… இல்ல குடித்திருப்போம்.” என்றவன் முதுகு விடைக்க அடி வாங்கியபடி தன் அறைக்குள் பாய்ந்தான்.
இப்படி, அந்த நாளின் வர்ணம் மிக்க புலர்வை மேலும் அழகாக்கியது, நகரைச் சுற்றிப் பார்க்கவென்று புறப்பட்டது.
வந்த அன்றே நகரைச் சுற்றிப்பார்த்து விட்டவர்கள், இன்று தாம் ஷொப்பிங் செல்லப் போவதாகச் சொல்லிவிட்டார்கள். ஒலிவியா, வேர்த், கிறிஸ்டினா மேலும் நிகழ்ச்சிக்குழுவினரில் மூவர் சேர்ந்து ஊர் சுற்றிப்பார்க்கப் புறப்பட்டார்கள்.
இங்கிலாந்தின் கலாச்சாரத் தலைநகரை அரைநாள்ப் பொழுதில் பார்ப்பதென்றால்… யோசித்த ஆரோன் டேல் தான், சுற்றுலாப் பயணிகளுக்கான பேருந்தில் செல்லுங்கள் என்றிருந்தார். அப்படியே ஒரு மணி நேரம்தான் வெஸ்ட்மினிஸ்டர்ல இருந்து கிரீன்விச் வரைக்குமான சைட் சீயிங் தேம்ஸ் குரூஸ். அதையும் முடித்து விட்டு எங்கள் வீட்டுக்கு வரச் சரியாக இருக்கும் என்றிருந்தார்.
“எனக்கும் உங்களோடு வரவும் பொழுதைக் கழிக்கவும் விருப்பம். ஆனால், நான் நின்று கவனிக்க வேண்டிய வேலைகள் சிலது உண்டே! அதுவும் என் விருப்பத்துக்கு உரியவர்களுக்காக!” என்றும் இருந்தார்.
அதன்படி சென்றவர்கள், இரண்டு தட்டுப் பேருந்தின் மேல்தட்டில் சென்று அமர்ந்துகொண்டார்கள். வேர்த் மனம் ஒலிவியாவின் அருகண்மையை நாடியோடியது. அவள் பார்வையும் இதையேதான் உணர்த்தியது. போட்டியின் நடுவராக நிகழ்ச்சிக்குழுவினரோடு சேர்ந்து வந்தான், அவன்.
அப்படியே, வழிகாட்டியின் கம்பீரக் குரலில் இலண்டன் மாநகரைக் கண்குளிரக் கண்டு கழித்தார்கள்.
பக்கிங்காம் பலஸ், நுண்ணிய கட்டிடக்கலையம்சம் கொண்ட செயின்ட் போல் கதீட்ரல் என்பவற்றில் இறங்கிச் சென்று சுற்றிப் பார்த்தார்கள்.
இலண்டன் கோபுரத்தைச் சுற்றி நடந்துவிட்டு 1661 ஆம் ஆண்டு முதல், இலண்டன் கோபுரத்தில் சேமிக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டு வருகிற கிரவுன் ஜூவல்ஸைப் பார்வையிட்டார்கள்.
அப்படியே, இலண்டன் மாநகரின் வானளாவிய கட்டிடங்களைப் பார்த்தபடி சென்று, தேம்ஸ் நதியில் ஒரு மணி நேர குரூஸ் பயணத்தில் ஏறினார்கள்.
இடையே ஸ்கொட்ச் எக்ஸ், பை அண்ட் மாஷ், பிஷ் அண்ட் சிப்ஸ் என்று கிடைத்தவற்றை வாங்கிச் சுவைத்தபடி சென்றார்கள்.
வெஸ்ட்மின்ஸ்டரிலிருந்து கிரீன்விச் வரையிலான தேம்ஸ் ஆற்றின் மீதான பயணத்தில், ஷேக்ஸ்பியரின் குளோப், டவர் பிரிட்ஜ் மற்றும் லண்டன் டவர் போன்றவற்றைப் பார்த்தவர்கள், மறுநாள் ஷொப்பிங் எங்கு எங்கு செல்வது என்று கதைப்படியே திரும்பி வந்து, சற்றே ஆறியிருந்துவிட்டு, ஆரோன் டேல் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.

