அத்தியாயம் 15
“Food, to me, is always about cooking and eating with those you love and care for.
– David Chang
இலண்டன் நகருக்கே உரிய வகையில் சிணுங்கிக் கொண்டிருந்தான்,வருணன். இளவேனிற்கால சில்லென்ற குளிர் வேறு. மாலைப்பொழுது மறைந்து கொண்டிருந்த வேளையில் எல்லோரும் ஆரோன் வீடு வந்திருந்தார்கள்.
மொத்தக் குடும்பமும் காத்திருந்து வாசலில் வந்து இன்முகத்தோடு வரவேற்றார்கள்.
இது என்ன வீடா, மாட மாளிகையா? வந்திறங்கிய ஒவ்வொருவரும் வியந்து நின்றுவிட்டே அவர்கள் வரவேற்பை ஏற்றுக்கொண்டார்கள்.
ஆரோன் டேல் குடும்பத்தினரோடு பிரத்தியேகமாக உரையாடும் சந்தர்ப்பம் கிடைக்காவிட்டாலும் இங்கு வந்ததும் நடந்த போட்டி நேரம் சந்தித்தவர்கள் தானே! இப்போது, மிக இயல்பாக அளவளாவ அந்த அறிமுகம் பெரிதும் உதவியது. அப்போதும், ஒவ்வொருவராக அறிமுகம் செய்து வைத்தார், ஆரோன் டேல்.
“இந்த சீசன் பெட்!” ஒலிவியாவைத் தோளோடு அணைத்து வரவேற்று அறிமுகம் செய்வித்தவேளை, ஆரோன் டேலின் கடைசி மகள் லில்லி முன்னால் வந்தாள். சட்டென்று ஒலிவியா கரத்தை இறுகப் பற்றிக்கொண்டவள், “எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும்!” என்றாள், மிகுந்த மகிழ்வோடு.
“அன்றைக்குப் பெரிதாகக் கதைக்கக் கிடைக்கவில்லை.” என்றவள், “யூ லுக்கிங் சோ ப்ரிட்டி!” ஒலிவியா முகத்தை ஆர்வமாகப் பார்த்து இரசித்தபடி அவள் சொன்ன விதத்தில், வாயை ஆவென்று திறந்த தோமஸ் வேர்த், தன் நெஞ்சின் இடப்பக்கத்தை இரு கைகளாலும் பற்றியபடி ஒரு போஸ் கொடுத்தான்.
ஆரோன், கிறிஸ்டினா மட்டுமா? ஒலிவியாவுமே அவனைத்தான் பார்த்தார்கள். பக்கென்று சிரித்தும் விட்டார்கள்.
“நீயும் மிகவும் அழகாக இருக்கிறாய்!” அவளை அன்போடு அணைத்துக்கொண்டாள், ஒலிவியா. அவளோ, ஒலிவியா காதைக் கடித்தாள். கேட்ட ஒலிவியாவின் முகம் குங்குமாகச் சிவந்திட்டு. கண நேரமேயென்றாலும் வேர்த் பார்வையோடு உரசி மீண்டது, இவள் பார்வை.
“சொல்லுங்க, உண்மையா?” மீண்டும் காதைக் கடித்த லில்லி பதிலுக்காகக் காத்திருக்க, அவள் தலையை மெல்லக் கலைத்தபடி, “செஃப் உங்கட சமையலறையை எங்களுக்குக் காட்டுவீங்களா?” பேச்சை மாற்றிவிட்டாள், ஒலிவியா.
போட்டி முடியும் வரை, அது சம்பந்தமாக வெளியாட்களோடு பேச்சு வைத்துக்கொள்ளவே கூடாது என்பது, மிகவும் கண்டிப்புடன் சொல்லப்படும் விடயம். அப்படியிருக்க அவள் கேட்டது!
“நீயும் வேர்த்தும் லவ்வா?” என்று அந்தச் சிறுமி கேட்டது காதுகளில் எதிரொலித்தது.
அப்படியென்றால்…அப்படியான யூகம் வரும்படி ஒளிபரப்பாகுதோ! வீட்டினர், துர்க்கா என்று இனி அவள் சொல்ல ஒன்றுமில்லையோ! கடைக்கண்ணால் வேர்த்தைப் பார்த்தாள். இவளையே பார்த்து நின்றவன் என்னவென்பதாக புருவமுயர்த்தினான்.
பதில் சொல்லாது சிறு முறுவலோடு பார்வையை விலக்கிக்கொண்டாள், ஒலிவியா.
எல்லாமே சில நொடிகளுள் நிகழ்ந்தவை தான். மகள் என்ன கேட்டிருப்பாளென்ற யூகம் ஆரோனுக்கு இருந்தது. இங்கு வந்த அன்றிலிருந்து இதைத்தானே கேட்கிறார்கள். செல்ல மகள் காதை மெல்லப் பிடித்து முறுக்கினார். போட்டி பற்றிய கதையே இருக்கக் கூடாது என்று குடும்பத்தாரிடம் கண்டிப்போடு சொல்லியிருந்தார். அப்படியிருக்க… முந்திரிக்கொட்டை!
“சமையலறையைப் பார்ப்பது மட்டுமல்ல, உனக்கு விருப்பமானது எதையாவது சமைத்தும் தரலாம். நீ என்ன சொல்கிறாய் சோஃபியா?” ஒலிவியாவுக்குப் பதில் சொல்லிவிட்டு, மனைவியைப் பார்த்தார், ஆரோன்.
“அதேதான், சாப்பிட நாங்கள் எல்லோரும் காத்திருக்கிறோம் ஒலிவியா!” என்ற சோஃபியா, “லில்லி, ஆரியா இவர்களை அழைத்துச் சென்று சமையல் பகுதி, வீடு என்று எல்லாம் காட்டுங்கோவன்.” மகள்மாரிடம் சொன்னார்.
இளையவர்கள் வீட்டினுள் நுழைய, மற்றவர்கள் கலகலத்த படி வீட்டின் பின்புறமாகச் சென்றார்கள்.
முன்புறத்துக்குப் போட்டியாக பின்புறம் மிக மிக நேர்த்தியாக இருந்தது. உயரமாக இருந்த கம்பித்தூண்களில் மெர்குரி மின்குமிழ்கள் ஒளிர்ந்ததில் இருளவன் தோற்றுப் போயிருந்தான். ஆழம் குறைவானதாக வட்டவடிவிலான நீச்சல் குளம் ஒன்று, பக்கத்திலேயே நீளவாக்கில் பெரிய நீச்சல் தடாகம். சற்றே தள்ளி வகை வகையான மரங்கள் கொடிகள்! சுற்றத்தை இரசித்தபடி அங்கு போடப்பட்டிருந்த இருக்கைகளை நிறைத்தார்கள்.
“டின்னர் என் கையால் தான், பார்பிகியூ!” என்ற ஆரோன், “குடிக்க கொறிக்க வேண்டியதுகள் தாராளமாக எடுத்துக்கொள்ளுங்கள்!” அன்போடு உபசரித்தபடி, அதுவரை வெள்ளை விரிப்பால் மூடியிருந்த நீள மேசையை அவர்கள் பார்வைக்குக் கொண்டு வந்தார்.
“லெட்ஸ் ஸ்டார்ட் த பார்ட்டி!” குதூகலக் கூவலோடு முதல் ஆளாக எழுந்த வேர்த், ஆரோனின் மகன்மார் இருவரையும் இழுத்துக்கொண்டு நகர்ந்தான். பின்புறம் எழுந்த கலகலப்புக் குரல்களைச் செவிகளில் வாங்கிக்கொண்டே வீட்டினுள் சென்றவர்கள் முதலில் சமையலறைக்குள் உள்ளிட்டார்கள்.
முதல் குடிக்க சாப்பிட எடுத்துக்கொண்டு பார்ப்போமே என்று உபசரித்தாள், ஆரியா. அங்கிருந்த பெரிய வட்ட மேசையில் விதம் விதமான பேஸ்ட்ரி வகைகள், பானங்கள் என்றிருக்க, ஒவ்வொருவரும் தமக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொண்டார்கள்.
ஒலிவியா கரம், கோக் டின் ஒன்றைத் தனதாக்கியிருந்தது. அதைக் குடிக்கவெல்லாம் ஆர்வம் இருக்கவில்லை. நல்ல பிரமாண்டமாக இருந்த அந்தச் சமையலறையை இஞ்ச் இஞ்சாக உன்னிப்பாகக் கவனித்தாள். ஆரோன் டேலின் யூ டியூப் சானலில் அவர் வீடுகளில் இருக்கும் சமையலறைகளைப் பார்த்திருக்கிறாள். இப்போ நேரில் பார்க்கையில்…
இதைப்போலவே ஒரு சமையலறையை நான் என் வீட்டுக்கு என்று உருவாக்க வேண்டும். இவள்தான் மனதில் தீர்மானமே செய்துகொண்டாள் என்றால், பின்னால் வந்த போட்டியாளர்களும் அதைத்தான் சொல்லிக்கொண்டார்கள்.
சின்னச் சிரிப்போடு நகர்ந்தவள் முன்னால் ஒரு தட்டை நீட்டினாள், லில்லி.
“எடுக்கவில்லையா? அப்பா தான் செய்தார். சாப்பிட்டுப் பாருங்க, மிகவுமே ருசியாக இருக்கும்.” சிறு சிறு உருண்டைகளாக இருந்தது… மினி கட்லட்ஸ்.
நன்றி சொல்லி எடுத்துக் கடித்தாள். உண்மையில் வெகு சுவையாக இருந்தது. அரைத்த இறைச்சி, வெங்காயம், ஸ்பைசஸ் அதிலும் பிளாக் பெப்பர்!
“மிகவுமே ருசியாக இருக்கு!” ருசித்தபடி நகர, “என்னுடைய அப்பாவின் உலகம் இது. இதேபோன்று மாடியில் ஒரு சமையலறை உண்டு. பேஸ்மென்ட்டிலும் உண்டு.” என்றாள், இவர்கள் கதைத்ததைக் கேட்டபடி வந்த, ஆரியா.
“வாவ் வாவ்!” வியந்த சாம், “உங்களில் யார் அப்பாவின் சமையல் வாரிசு?” என்று கேட்க, இருவரும் ஒருவர் ஒருவரைப் பார்த்துக்கொண்டார்கள். ஒரு சேர உதட்டைப் பிதுக்கி, “ஒருவருமே இல்லை என்றால் நம்புவீங்களா? நம்பித்தான் ஆக வேண்டும், ஏனென்றால் எங்கள் வீட்டில் அப்பாவைத் தவிர மிகுதி யாருக்குமே சமையலில் நேரம் செலவழிப்பதில் விருப்பமே இல்லை.” கண்சிமிட்டியபடி சொன்னாள், லில்லி.
“எங்கள் நால்வருக்கும் நன்றாகச் சாப்பிட மட்டுமே பிடிக்கும். என் அம்மாவுக்கும் அதுதான்.” ஆர்யா சொல்லிவிட்டுச் சத்தமாகச் சிரித்தாள்.
“குட்டியா ஒரே ஒரு ஆறுதல் என்ன தெரியுமா ஒலிவியா, இரண்டு அண்ணன்களின் காதலிகளுக்கும் லைட்டா சமையல் தெரியும். ஒரு கோப்பி தாயாரிக்க, முட்டை பொரிக்க, சுடுதண்ணி வைக்க இப்படி..” லில்லி அபிநயத்தோடு சொல்ல அந்த இடத்தில் சிரிப்பலை எழுந்தது.
அப்படியே கதைத்தபடி வரவேற்பறைக்குள் வந்தவர்கள் ஆவென்று நின்றுவிட்டார்கள். வெளியில் இருந்து பார்த்ததை விடவும் பிரமாண்டமும் நவீனமுமாக இருந்தது, உள்ளே.
அதிலும் அரைவட்டமாக வளைந்து சென்ற மாடிப்படிச் சுவர் முழுவதும் வெவ்வேறு வடிவிலான சட்டங்கள் மாட்டப்பட்டிருந்தது மிகவும் வித்தியாசமாக வடிவாக இருந்தது.
ஒலிவியா கால்கள் அங்கே நகர்ந்தன. “பார்க்கப் போறீங்களா?” அவள் கையைப் பற்றியபடி நடந்தாள், லில்லி.

