“இதில் இருக்கிற எல்லாப் புகைப்படங்களும் டாட் சமையல் ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்றுவரை நடந்தவற்றுக்கு உதாரணம்! மோஸ்ட்லி டாட் வேலை செய்த இடங்கள், அவர் பிரெண்ட்ஸ், சேர்ந்து வேலை செய்தவர்கள் என்று எல்லோரையும் இங்கே காணலாம். சுருக்கமாகச் சொன்னால் என் அப்பாவின் கனவுலகம் இது!” லில்லி, தகப்பன் செல்லம் என்று அப்படியே தெரிந்தது. ஒவ்வொருமுறை ‘டாட்’ என்று சொல்கையிலும் அவள் விழிகளில் அவ்வளவு மகிழ்வு, பெருமிதம்!
ஒன்று ஒன்றாகப் பார்த்தபடி மெல்லப் படியேறினாள், ஒலிவியா.
“அப்பா முதன் முதல் செஃப் என்று வேலை தொடங்கியதே உங்கள் நாட்டில் தான்.”
“எனக்குத் தெரியும், வாசித்திருக்கிறேன்.” என்றாள், ஒலிவியா.
“இந்தா இந்தப் படத்தைப் பாருங்க.” லில்லி சுட்டிய இடத்தில் சற்றே பெரிய சட்டத்தினுள் இருந்த புகைப்படத்தில் பார்வை பதித்தாள், ஒலிவியா.
குழுப்படம் தான். “இதுதான் அப்பா உங்கட நாட்டில் வேலை செய்த ரெஸ்டாரண்ட்.”
“ஓ! இப்பவும் இந்த ரெஸ்டாரண்ட் சிட்னியில் இருக்கு.” என்றவள் பேச்சு நின்றிட்டு. பார்வை, அச்சட்டத்தினுள் மேய்ந்தது. ஆண்கள் பெண்கள் கிட்டத்தட்ட இருப்பது ஆட்கள் வரை நின்றார்கள். அதில் நடுநாயகமாக இருபுறமும் இரு பெண்களைத் தோளோடு அணைத்தபடி நின்றது, இளைஞன், ஆரோன் டேல்.
எவ்வளவு நேரம் பார்த்து நின்றாளோ, “என் அப்பா, அப்போ இன்னமும் வடிவு! நிறையப் பேர் காதலித்துள்ளார்கள். ஆனால், என் அப்பா காதலித்த ஒரே பெண் என் அம்மா தான்!” பெருமையோடு சொன்னாள், லில்லி. மற்றவர்களும் வந்து சேர, மெல்ல இறங்கி வந்த ஒலிவியா முகம் அவள் அங்கில்லை என்றது.
அதை வேர்த் கூட அவதானித்தான். “என்ன திடீரென்று அமைதியாகிட்டாய்? ஆர் யூ ஒகே?” என்று கேட்டவனுக்குச் சிறு முறுவல் தான் பதிலாகக் கிடைத்தது.
அன்று நடுயிரவு தாண்டிய போதும் ஒருவருக்கும் கலைந்து செல்ல மனமில்லை.
“நாளையிரவு ஃபிளைட். ஷொப்பிங் செய்யவும் வேண்டும்.” கிறிஸ்டினாதான் எல்லோரையும் கிளப்பினார்.
“வெய்ட் வெய்ட்” என்று, மகள்மாரோடு உள்ளே ஓடினார், ஆரோன். திரும்பிவரும் போது மூவர் கரங்களிலும் பெரிய பெரிய பெட்டிகள்!
மேசையில் வைத்துவிட்டு, “உங்கள் எல்லோருக்கும் எங்கள் சார்பாக சின்னப் பரிசு!” மனைவியை அருகில் இழுத்து நிறுத்தி, அவர் கையால் எல்லோருக்கும் வழங்கியவர், “கடைசியாக… ஹேய் டார்லிங் கம் கம்!” ஒலிவியாவை அன்போடு அழைத்தார்.
அதுவரை தன் கையில் வைத்திருந்த ஒரு பெட்டியை அவள் கையில் வைத்தவர், “பிரித்துப் பார், உனக்கு மிகவுமே பிடிக்கும்!” என்றார், பளபளத்த விழிகளோடு.
“அது என்ன ஒலிவியாவுக்கு மட்டும் ஸ்பெஷல்?” எல்லோரையும் தள்ளிக்கொண்டு அவளருகில் வந்து நின்ற வேர்த், தானே வாங்கிப் பிரித்தான்.
உள்ளே…
ஒலிவியா இதயம் நின்று முக்கி முனகித் துடித்தது. அந்தளவுக்கு அதிர்வோடு ஆரோனைப் பார்த்தாள்.
அவள் சந்தோசத்தில் திக்கு முக்காடி நிற்கிறாள் என்று கணித்த ஆரோன், “இது என் மிகப்பெரிய சொத்து! என் கைப்பட, என நண்பர்கள் கைப்பட என்று எழுதிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரெசிப்பீஸ், சமையல் குறிப்புகள், நுணுக்கங்கள் இதில் உள்ளன. இதை வைத்திருப்பதற்கு மிகப் பொருத்தமானவள் நீ தான்!” என்றுவிட்டு, அவளை அன்போடு அணைத்து விடுவித்தவர் விழிகள் கலங்கிப் போயிருந்தன. அவர் குடும்பத்தாரோ, உச்சபட்ச அதிர்வோடு அவரைப் பார்த்தார்கள்.
“ஆரோன்!” மனைவியின் அழைப்பில் அவரைப் பார்த்தவருக்குச் சட்டென்று அவர் மனநிலை புரிந்தது. பிள்ளைகளையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, சிறு சிரிப்போடு கதைத்தார்.
“இது எந்தளவுக்கு எனக்கு முக்கியமானது என்று உனக்குத் தெரியும் சோஃபியா. ஏன் நம் பிள்ளைகளுக்கும் தெரியும். இதை என் பிள்ளைகளில் ஒருவருக்குக் கொடுக்க வேண்டும் என்று பெரிதும் ஆசைப்பட்டேன். அதனால் என்ன? ஒவ்வொருவரும் தத்தமக்குப் பிடித்ததைச் செய்ய உரிமை கொண்டவர்கள், என்னைப் போலவே! இந்தப் புத்தகம் எனக்குப் பிறகும் நம் வீட்டில் இருந்தால் நினைவுச் சின்னம் மட்டுமே! அதுதான் பொருத்தமானவளிடம் சேர்த்திருக்கிறேன். அவள் மூலம், இது, வாழ்ந்து கொண்டிருக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு!” என்றவர் கண்கள் கண்ணீரில் பளபளக்க, துடித்துப் போனார், சோஃபியா.
“ஏன் இப்படியெல்லாம் கதைக்கிறாய் ஆரோன்?” விம்மலோடு கணவர் நெஞ்சில் சாய்ந்துகொண்டார், அவர். ‘அதைத் திருப்பி வாங்கிவிடு ஆரோன். அது, உன் வாரிசுகளுக்கு உரித்தானது’ நெஞ்சுள் சொன்னவருக்கு, கணவரிடம் அதை எப்படிச் சொல்வது என்று இருந்தது.
ஆரோனின் மூத்த மகன், தாய் நினைத்ததைச் சொல்லிவிட்டான்.
“என்ன என்றாலும் அது எங்கள் சொத்து. அதை எப்படி நீங்கள் கொடுக்கலாம்? நாங்கள் இல்லையென்றால் எங்கள் குழந்தைகளில் ஒருவருக்கு இத்துறை பிடிக்கலாம் டாட். ஒலிவியாவுக்கு வேறு பரிசு கொடுக்கலாம். குறை நினைக்க வேண்டாம் ஒலிவியா!” என்றவன், வேர்த் கரத்தில் இருந்த புத்தகத்தை வாங்க முனைந்தான்.
“நோ! நான் பரிசளித்தது பரிசளித்தது தான்!” தீர்மானமாகச் சொன்னார், ஆரோன். அந்தப் புத்தகத்தை வாங்கி மீண்டும் ஒலிவியா கரங்களில் கொடுத்தவர், கலங்கி அதிர்ந்து நின்றவள் முதுகில் பாசத்தோடு தட்டிக் கொடுத்தார்.
கோபமாகப் பார்த்த மகனிடம் திரும்பியவர், “உங்கள் சொத்தாக நானே இருக்க, இது உங்களுக்கு எதற்கு? அது இருப்பதற்கு மிகவும் பொருத்தமான இடம் இதுதான்!” புத்தகத்தை இறுகப் பற்றியிருந்த ஒலிவியா கரத்தில் மெல்லத் தட்டிக் காண்பித்தார்.
“மிக விரைவில் இந்தச் சமையல் உலகமே திரும்பிப் பார்க்கும் சமையல் வல்லுநராக வருவாள் இவள். அதற்கு என் சிறு அன்புப் பரிசு!” என்றவர், அவளை அணைத்துக்கொள்ள விம்மி வெடித்து அழுதுவிட்டாள், ஒலிவியா.
“இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லை என்ன கிறிஸ்டினா? நீ பெஸ்ட் ஃபிரண்ட் அப்படி இப்படி என்கிறாயே. இப்ப என்ன வாயடைத்து நிற்கிறாய்? என்னை சிஷ்யன் என்பார், எங்களுக்கு எல்லாம் இல்லாத பரிசு… சில மாதங்களுக்கு முன்னர் கண்டவளுக்கா? இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்!”
ஏதிர்ப்புக் குரலை வலு ஆர்ப்பாட்டமாக எழுப்பிய வேர்த், அந்த இடத்தில், அதுவும் ஆரோன் வீட்டினரின் அனல் பார்வையைச் சற்றே தணிய வைத்தான்.
இருந்தாலும் அவர் மூத்த மகன் பார்வை ஒலிவியாவைக் கோபத்தோடு பார்த்ததை அவதானித்தவன், ‘அவளா கேட்டாள் முட்டாள்.’ மனதுள் அவனுக்கு நாலு திட்டுக் கொடுத்தான்.
நெஞ்சோடு அந்தப் புத்தகத்தை அணைத்துக்கொண்டு விழிக்கசிவோடு விடைபெற்று வாகனத்தில் ஏறினாள், ஒலிவியா.

