அழகிய சவால் நீ – 16

அத்தியாயம் 16 ******

 

‘Food brings people together on many different levels. It’s nourishment of the soul and body; it’s truly love.’

– Giada De Laurentiis

 

இலண்டன் சென்று வந்து முழுதாக மூன்று நாட்கள் இடைவெளியில் இறுதிப்போட்டி நடைபெறும் என்று அறிவித்திருந்தார்கள். ஒருநாள் உறக்கமும் சோம்பலுமாகக் கழிந்திருந்தது. இருந்தாலும் ஒருத்தன் மட்டும் சோம்பலுக்கும் உறக்கத்திற்கும் இடம் கொடாது யோசனையோடு இருந்தான். இருந்தானா என்ன? மனத்தில் அமைதியில்லாது தவித்தான். காரணம், ஒலிவியா தான்! எவ்வளவு கலகலவென்று இருப்பவள் திடீரென்று தன்னுள் ஒடுங்கிவிட்ட உணர்வு!

 

அன்று, இலண்டனைச் சுற்றிப்பார்க்கச் சென்றபோது எவ்வளவு கலகலப்பாக இருந்தாள்! இருவரும் கைகோர்த்துச் சுற்றித்திரியவில்லையே ஒழிய, அந்த உணர்வை ஒருவர் மற்றவருக்குக் கொடுத்தபடி தான் அந்த அரைநாள்ப் பொழுதைக் கழித்திருந்தார்கள்.

 

“நீங்கள் இருவரும் பார்வையாலேயே காதலிப்பது பார்க்க பார்க்கப் புதுமையாக இருக்கு மேன்!” இரசனையோடு இவனிடம் பகிர்ந்திருந்தார், கிறிஸ்டினா.

 

அதன் பிறகு, ஆரோன் வீடு சென்ற போதும் தான், லில்லி காதுக்குள் எதுவோ கேட்ட போது பார்த்தாளே ஒரு பார்வை! இதோ, இப்போதும் முன்னால் நின்று அதே பார்வை பார்ப்பது போலிருந்தது. அப்படியிருந்தவளுக்கு, திடீரென்று என்னதான் நடந்திருக்கும்?

 

ஆரோன் டேல் வழங்கிய பரிசு, அதுவும் அவளுக்காகப் பிரத்தியேகமாகக் கொடுத்தபோது, கொடுக்கப்பட்ட பரிசில் ஆரோன் வீட்டினருக்குச் சுத்தமாக உடன்பாடு இலையென்றது தாக்கியிக்குமோ!

 

அதையும் இதையும் எண்ணிக் குழம்பி நின்றவனுக்கு, நன்றாக யோசித்துப் பார்த்தால், அதற்கு முதலிருந்தே அவள் சோர்ந்திருந்தாள் என்பது நினைவில் வந்தது.

 

இவன் கூட நாலைந்து தடவைகள் கேட்டானே! சற்றே தடுமாறினாலும் சமாளித்துக்கொண்டு அவள் சொன்ன, “அப்பிடியெல்லாம் ஒன்றும் இல்லையே!” என்றது, இதயத்திலிருந்து வந்ததாகத் தெரியவில்லை.

 

இலண்டனில் இருந்து புறப்பட முன்னர், அன்று காலை, ஷொப்பிங் செல்வதென்பது ஏற்கனவே முடிவு செய்திருந்ததுதான். ஆர்வமாக இருந்தவளும் ஒலிவியாதான். இறுதியில், தலையிடி என்ற சாட்டோடு வரவில்லையென்று விட்டாள்.

 

நெடிய பயணமாச்சே! களைப்பு, அலைச்சல் இருக்கும். போட்டி கொடுத்த அழுத்தங்கள் வேறு. முதல் நாள் ஆரோன் வீட்டிலிருந்து வரவே நடுச்சாமம் கடந்திருந்தது. பாவம் என்று விட்டு விட்டுப் போயிருந்தார்கள். திரும்பி வந்து பார்த்தால், செவ்வரியோடிய விழிகளோடு இருந்தாள்.

 

கிறிஸ்டினா தான், “ஆர் யூ ஓகே ஒலிவியா?” முதல் ஆளாகச் சென்று கேட்டிருந்தாள்.

 

“அழுதியா நீ? என்ன பிரச்சினை உனக்கு?” கூரான பார்வையோடு கேட்டுக்கொண்டே வந்தான், வேர்த்.

 

இருவர் பார்வையையும் தவிர்த்தாள், ஒலிவியா. அமைதியாக இருந்தால் விட்டு விலகுவார்கள் போலவும் தெரியவில்லை.

 

“பிரச்சினை எல்லாம் ஒன்றும் இல்லை. எனக்கு அம்மா அப்பாவைப் பார்க்க வேண்டும் போல் இருக்கு!” வழமையான திடம் தொலைத்த குரலில் சொன்னவள், சிறுபிள்ளைபோல் கண்ணீர் விட்டாள். எல்லோரும் வந்து சமாதானம் சொல்லும்படியும் இருந்தது.

 

அன்றிரவு, ஹீத்ரூவிலிருந்து விமானமேறியிருந்தார்கள். தன்னருகில் அவளை அமர்த்திக்கொண்டான், வேர்த். யார் பற்றியும் கவலைப்படவில்லை. அவளோ, வாய்க்குப் பூட்டுப் போட்டிருந்தாள். இரவுணவும் வேண்டாம் என்று விட்டாள். தன், மேல் கையை இறுகப் பற்றியபடி தவிப்போடு அவள் இருந்த நிலை, அவனை ஒரே ஒரு முடிவுக்குத்தான் வர வைத்திருந்தது.

 

மனதுள் குழம்புகிறாள். எதற்காக என்பதே தேவையில்லை என்று நினைத்தான், வேர்த். போட்டி என்றால் பதற்றம், அழுத்தம் இல்லாமலா? அதிலும் அவள் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருப்பது தெரியும். சக போட்டியாளர் இருவரும் இலேசுப்பட்டவர்கள் இல்லை.

 

“ஒலிவியா இது போட்டி, ஒருவருக்குத்தான் வெற்றி. ஆனால், இதுதான் வாழ்க்கை என்றில்லை. வெளியே இதைவிடவும் நிறைய நிறைய வாய்ப்புகள், வெற்றிகள் இருக்கு. நீ எப்போதும் உன் பெஸ்ட் குடு! முடிவு, வெற்றி தோல்வி அந்த நேரத்தைப் பொறுத்தது!” சிறுபிள்ளைக்கு எடுத்துச் சொல்வது போல் கதைத்தவனை, விசுக்கென்று நிமிர்ந்து நெற்றி சுருங்கப் பார்த்தாள், ஒலிவியா. கணம் தான் சுதாகரித்துக்கொண்டாள்.

 

“சொறி” விழிகளைத் துடைத்துக்கொண்டு சொன்னவளுக்கு, கிறிஸ்டினா ஆரோன் கூட இதையேதான் எடுத்துச் சொன்னார்கள்.

 

“இவனுக்குப் பக்கத்தில் தான் இருக்க வேண்டும் என்று அழுத்திச் சொன்னால், சத்தம் போடாது விலகிப் போகப் போறம். அதற்காக முகத்தை நீட்டிக்கொண்டு இராதே பெண்ணே! பார்க்கச் சகிக்கவே இல்லை.” பொய் மிரட்டல் விட்டார், ஆரோன் டேல்.

 

சற்றே நெளிந்தபடி முறுவலித்தவள், “அப்படியெல்லாம் இல்லை.” என்று சொன்னாலும் அதன் பின்னர், அவர்கள் மூவரையும் தவிர்த்தாளோ!

 

இப்போதும் தாய்லாந்தில் தான் டிரான்சிட். இறங்கியவள், டொறதியின் கரத்தைப் பிடித்துக்கொண்டே திரிந்தாள். இங்கு வந்து சேர்ந்து இதோ இப்போ வரை எட்டியேதான் நிற்கிறாள்.

 

தோமஸ் வேர்த்துக்கு மண்டை வெடிக்கும் போலிருந்தது. சந்திக்க முயன்றான் கிடைக்கவில்லை. பெரும் விசனம் கொண்டிருந்தவனிடம் வந்தார், கிறிஸ்டினா.

 

“மூவருமே யுத்தத்துக்குத் தயாராகும் மனநிலையில் ஆயத்தங்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். நீ சென்று கதைத்துக் குழப்பி விட்டிராதே! இன்னும் இரண்டே இரண்டு நாட்கள் பொறுத்திருந்துவிட்டு உன் காதலைக் கொட்டு!” பகிடி பண்ணிக்கொண்டே நகர்ந்தார்.

 

அவர் சொல்லிவிட்டால் சரியா? அவள் சமையல் பயிற்சி செய்து கொண்டிருந்த போது முறைத்தபடி சென்று இடித்துக்கொண்டு நின்றான் வேர்த். இவனை எதிர்பார்க்கவே இல்லையே! திடுக்கிட்டு விட்டாள், ஒலிவியா.

 

“இங்க என்ன செய்யிறீங்க?” சட்டென்று சுதாகரித்துக் கேட்டபடி விழிகளைச் சுழற்றினாள்.

 

“நல்ல காலம் ஒருவரும் இல்லை.” என்ற போது சுதாகரித்து விட்டாள் என்று விளங்கியது. என்றாலும் சட்டென்று கலங்கிவிட்ட விழிகளை மறைக்க முயன்றதையும் குறித்துக்கொண்டவன், அவளையே பார்த்துக்கொண்டு நின்றான்.

 

சோர்ந்திருந்தாள். பட்டாம் பூச்சி போல் சுற்றித் திரிபவளை இப்படிப் பார்க்கவே முடியவில்லை. அதுவும் அவனால் சகிக்கவே முடியவில்லை.

 

அங்காலும் இங்காலும் பார்த்தான். ஒருவரும் இல்லை என்று நிச்சயம் செய்த வேகத்தில் இறுகக் கட்டிப்பிடித்து கன்னமிரண்டிலும் அழுத்தமாகக் கொஞ்சினான். கையில் வைத்திருந்த மர அகப்பையால் அவன் முதுகில் ஒரு அடி போட்டபடி விலக முயன்றாள். அவன் எங்கே அனுமதித்தான்.

 

“உன் மனத்திலுள்ளதை, அது எந்த விசயம் என்றாலும் என்னிடம் நீ சொல்லலாம். நாம் அறிமுகமாகி அதிக நாட்கள் இல்லை என்றாலும் அந்த நம்பிக்கை உனக்கு வரும்படி நடந்திருக்கிறேன். அப்படி இருக்க என்ன தயக்கம்? இப்படி ஒதுங்கிச் செல்கிற வேலை இனி ஒரு காலத்திலும் இருக்கக் கூடாது!” படபடவென்று சொன்னவன், யாரோ கதைத்துக்கொண்டு வரும் அரவம் கேட்கவே, அவள் இதழ்களில் அழுத்தமாக முத்தமிட்டு விட்டு ஒதுங்கி ஓடி வந்திருந்தான். முதுகில் வந்து மோதிய மாதுளம்பழத்தை எடுத்துக்கொண்டு சத்தமாகச் சிரித்தபடி வந்தவனை, கைகளை இடுப்பில் கட்டிக்கொண்டு நின்று முறைத்தார், ஆரோன்.

 

கைகளை உயர்த்திக்கொண்டு உள்ளே சென்று விட்டான், வேர்த்.

 

“இவனிடம் கதைத்துப் பிரயோசனம் இல்லை!” அலுப்போடு முணுமுணுத்த ஆரோனுக்குமே ஒலிவியாவோடு கதைக்க வேண்டும் போலிருந்தது. அவள் சோர்ந்த தோற்றம் அவரை வெகுவாகவே பாதித்தது. இருந்தாலும் அவள் வெளிப்படையாகவே காட்டிய தவிர்ப்பு தயக்கத்தைக் கொடுத்தது. பரிசு கொடுத்த போது தன் வீட்டினர் மறுப்பாகக் கதைத்தது அவளை வருத்தி விட்டுட்டுதோ என்றுதான் நினைத்தார். அவர் அனுபவம், எதுவென்றாலும் போட்டி முடியவிட்டுக் கதைப்போம் என்ற முடிவிற்கே வர வைத்திட்டு.

 

வேர்த் என்ன செய்து விட்டுச் சென்றான்? ஒலிவியா பார்த்து பார்த்துச் செய்து கொண்டிருந்த ரெசிபி சகிக்க முடியாததாகி விட்டிருந்தது.

 

“இவன” என்று கோபப்பட்டாலும் மனமோ வலு இதமாக இருந்தது. வேர்த்துடன் மனம் விட்டுக் கதைக்க வேண்டும் போலிருந்தது. மனத்திலுள்ளதை அப்படியே அவனிடம் கொட்டிக் கவிழ்த்துவிட்டு நிம்மதியாக இருந்துவிடு என்ற மனமோ, மறுகணம் தடை போட்டது.

 

‘இப்போதைக்குப் போட்டியை மட்டுமே பார்!’ என்றது. அதையேற்று, செய்து பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்த இன்னுமொரு ரெசிபியை வெகு திருப்தியாகவே செய்து முடித்துவிட்டுச் சென்றவள், அறைக்குள் விரித்துக் கிடந்த சமையல் புத்தகங்களை எடுத்து அடுக்கி வைத்தாள்.

 

தாய் தந்த ரெசிபி புத்தகத்தோடு ஆரோன் தந்த புத்தகத்தையும் வைத்துக்கொண்டு, நீண்ட நேரமாக அமர்ந்திருந்தாள். பின், பெருமூச்சோடு எழுந்து இரண்டையும் ஒரு பையிலிட்டுப் பத்திரப்படுத்தினாள். அதே கையோடு, கண்களை மூடிக்கொண்டு படுத்துவிட்டாள்.

 

 

error: Alert: Content selection is disabled!!