அத்தியாயம் 17
‘Eating is so intimate. It’s very sensual. When you invite someone to sit at your table and you want to cook for them, you’re inviting a person into your life.’
– Maya Angelou
எப்போது உறங்கினாளோ, மறுநாள் நேரத்துக்கே விழித்தெழுந்து விட்டாள், ஒலிவியா.
அன்று, காலையில் இறுதிப்போட்டிக்கான படப்பிடிப்பு ஆரம்பிக்கும் என்று அறிவுறுத்தி இருந்தார்கள். கடந்த மூன்று நாட்களாக மனதளவில் மிகவுமே குழம்பித் தளர்ந்திருந்தவள் ஆயிற்றே! எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டுப் போட்டியில் கவனத்தைக் குவிக்க வேண்டிய அவசியம் புரியாதவளா என்ன?
இருந்தாலும் அவள் மனம், ஒத்துழைப்பேனா என்று அழிச்சாட்டியம் பண்ணியது. குடுகுடுவென்று போட்டி ஆரம்ப நாளுக்குச் சென்றது. அதுவும், ஏப்ரன் வாங்கிய தினத்துக்கு. அன்று, அவள் அன்னையும் வந்திருந்தார். அதன் பின்னர் குடும்ப அங்கத்தினராகத் தகப்பன் வந்த போது அவர் வரவில்லையே!
தலைக்குள் வண்டின் குடைச்சல் உணர்ந்தாள், ஒலிவியா.
“பச்!” தலையை உலுக்கிக்கொண்டாள்.
பெரிதான எதிர்பார்ப்புகள் இன்றியே இப்போட்டியில் கலந்து கொண்டிருந்தாள். அந்நிலை மாறி, உணர்ந்து உழைத்து ஒவ்வொரு கட்டத்திலும் தடம் பதித்தே இன்றைய நிலைக்கு வந்திருக்கிறாள். அதுமட்டுமா?
‘என்னுடைய மிகப்பெரிய கிரஷ் என்றிருந்தவன் காதலனாகியும் இருக்கிறான்.’ விழிகளை மூடிக்கொண்டு அமர்ந்து விட்டாள்.
இதழ்களில் அழகிய முறுவல் படர்ந்தது. தன் தவிப்பை, குழப்பத்தைப் பார்த்துவிட்டு அவனும் தவித்ததை, போட்டியை நினைத்துப் பயப்படுவதாக எண்ணிச் சொன்ன தேறுதல்களை எல்லாம் எண்ணிப் பார்த்தவளுள், இன்று, எவ்விதத் தடங்களும் இன்றித் தன் மொத்தக் கெட்டித்தனத்தையும் போட்டு சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வலுவானது.
இந்தப் போட்டியில் தான் பெற்றுக்கொண்ட உயிர் நேசத்துக்குப் மிகப்பெரிய பரிசாக, இந்த வெற்றியைப் பெற முடிந்தால் யாருக்குக் கசக்கும்? இந்தப் போட்டி, அவளுக்கு, அழகியதொரு வாழ்க்கை தந்திருக்கிறது. அந்த வாழ்வுக்குப் பரிசாக இந்தப் போட்டியை அவள் வென்றேயாக வேண்டும்.
இறுதிப் போட்டியாளர்களுக்கென்று தனித்தனியாக வந்து நின்ற மூன்று கார்களில் ஒன்றில் மலர்வோடுதான் ஏறியமர்ந்து கொண்டாள்.
ஹோம் குக்கிங் மண்டபத்தினுள் நுழைகையில் வேர்த் குரல் உரத்தொலித்து மூவரைம் வரவேற்றது.
இனிய அதிர்ச்சியாக கேன்ட்ரி நிறைந்திருந்தது. சக போட்டியாளர்கள் அனைவரும் வந்திருந்தார்கள். கத்திக் கூச்சல் போட்டு வரவேற்றார்கள்.
“ஹேய்ய்ய்ய் மியா!” இங்கிருந்து இவள் கூவ, அங்கிருந்து அவள் இதயத்தைக் கைவிரல்களுள் அடைத்துப் பிடித்துக் காட்ட, அவ்விடமே கலகலத்தது. சில நிமிடங்களில் ‘கட்’ சொல்லிவிட்டார்கள், நல விசாரிப்புக்காக.
அரை மணித்தியாலத்தில் படப்பிடிப்பு ஆரம்பித்த போது இறுதிப் போட்டியாளர்கள் மூவரும் விறைப்போடு நிமிர்ந்து நின்றிருந்தார்கள்.
“சீசன் டென், ஆரம்பத்தில் இருந்து நிறைய நிறையத் திருப்பங்கள், சுவாரசியங்களோடு சென்று, மிகவுமே வெற்றிகரமாக நடைபயின்று இதோ இறுதிக்கட்டத்தில் நிற்கிறது.
“இறுதிப் போட்டியும் நீங்கள் எதிர்பாராத வண்ணம் திருப்பங்கள், சுவாரசியங்கள் நிறைந்ததாகவே இருக்கும். அதன்படி, நீங்கள் மூவரும் மூன்று சுற்றுகளை எதிர்கொண்டாக வேண்டும். அவற்றில் இரண்டு போட்டிகள் இன்று அடுத்தடுத்து நடக்கும். இறுதிப்போட்டி, நாளைக்கு.” என்றார், கிறிஸ்டினா.
“ஒவ்வொரு சேலஞ்ச் முடிந்ததும் நடுவர்கள் இடும் புள்ளிகள், அதோ அந்தத் திரையில் ஒளிரும். மூன்று போட்டிகளிலுமாகச் சேர்த்து அதிகப் புள்ளிகள் பெறுபவர் இந்த சீசன் வெற்றியாளர் ஆவார்!” என்று தொடர்ந்த ஆரோன் டேல், “கைஸ்! ஆர் யு ரெடி போர் தி பட்டில்?(battel)” கை தட்டியபடி கூவினார்.
”யெஸ் செஃப்!” ஆண்கள் இருவரும் கூவினார்கள். ஒலிவியாவின் வாய் வார்த்தைகளை உதிர்க்கவில்லை. ஆரோன் டேலையே பார்த்தபடி நின்றிருந்தாள். அவள் அமைதியாக நிற்கவும் தன்னிரு பக்கங்களும் நின்ற வேர்த், கிறிஸ்டினாவைப் பார்த்தவர், “இவளுக்கு என்னதான் பிரச்சினை?” குரலில் கடுமையோடு முணுமுணுத்தவர், விறுவிறுவென்று அவளை நோக்கி நடந்தார்.
சமையலோடு சுவாரசியத்தையும் தேடியலையும் கேமராவும் கூடவே உருண்டது. டிரோன் கூட ஆரோன் தலைக்கு மேலாகப் பறந்தது.
“நீ ஓகே தானே ஒலிவியா?” கடுமையாகவே ஆரம்பித்தவருக்கு, அவள் முகத்தைப் பார்த்து அதே தொனியில் தொடரவே முடியவில்லை. ஓர் கணம் ஆழ் பார்வை பார்த்தார்.
“விரலில் வலி இல்லையே? காட்டு பாப்பம்.” பாசத்தோடு ஆராய்ந்தவர், மெல்லிய நீர்ப்படலம் தோய்ந்த விழிகளோடு அமைதியாக நின்றவளைப் பார்த்துவிட்டு, “ஒலிவியா! உன்னால் முடியும். என்னை ஏமாற்றி விடாதே பெண்ணே!” ஆழ்ந்து சொன்னவருக்கு, கேமராவுக்கு முன்னால் வைத்து ஒரு வார்த்தை கூடப் பிரத்தியேகமாகக் கதைக்க விருப்பம் இல்லை. அவள் தோளில் தட்டி, “உன்னை நம்புகிறேன்!” கண்சிமிட்டிவிட்டுச் சென்றார்.
முதல் சேலஞ் ‘ஸ்டார்ட்டர்’ தயாரிக்க வேண்டும் என்றார்கள். எந்த வகை என்பது முற்று முழுதாகவே போட்டியாளர் விருப்பம் என்றும் சொல்லிவிட்டார்கள்.
“உங்களுக்கான 5 நிமிட ஷொப்பிங் இப்போ ஆரம்பிக்கிறது. பெஸ்ட் ஒஃப் லக் மை டியர்ஸ்!” வேர்த் சொல்ல, மூவரும் தமக்குத் தேவையானவற்றை எடுத்து வர ஓடினார்கள்.
அது முடிய, “உங்களுக்கான அறுபது நிமிடங்கள் இதோ!” ஆரோன் டேல் குரலில் முதல் சுற்று ஆரம்பமானது.
நடுவர்கள் உன்னிப்பாகக் கவனித்தபடி சுற்றி வந்தார்கள். தமக்குள் கதைத்துக்கொண்டார்கள். ருசி பார்த்தார்கள். மூவரது சமையல் திறனும் அவர்களுக்குப் புதிதல்லவே! இருந்தாலும், இந்த அறுபது நிமிடங்களை, அது வழங்கும் அழுத்தங்களை எப்படி எதிர்கொண்டு சிறப்பான டிஷ் பெறப்படுகிறது என்பதுதானே சவால்!
போட்டி நடக்கையிலேயே, நடுவர்கள் மனங்களில் அவர்களுக்கான புள்ளிகள் தீர்மானமானது. கேன்ட்ரியில் நின்ற சக போட்டியாளர்கள் தமக்குப் பிடித்தவர்களை ஊக்கப்படுத்தினார்கள். இடையிடை கேள்விகள் கேட்டு அவர்களை விழிக்க வைத்தார்கள்.
ஒலிவியா, எதையும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. யாரையும் பார்க்கவும் இல்லை. ஹோம் குக்கிங் குழு வந்து கேட்ட கேள்விகளுக்கு இருந்தும் நின்றும் நடந்தும் என்று வேலை செய்துகொண்டே அவள் பதில் சொல்ல, அவர்கள் வாழ்த்திவிட்டு அடுத்தவரிடம் கடந்திருந்தனர்.
இப்படி, என்னதான் முயன்றாலும் வழமையான ஒலிவியா தொலைந்து போனாளோ என்று அவளுக்கே சந்தேகம் வந்தது. அது சரியென்றது அறுபது நிடங்கள் முடிந்த பின் கிடைத்த புள்ளிகள்.
“மூவருமே மிகவும் நன்றாகவே சமைத்துள்ளீர்கள். எங்களை ஏமாற்றவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். உண்மையில் எங்களுக்குத்தான் மிகவுமே சிரமமாக இருந்தது.” என்ற ஆரோன் டேல், மூவரினதும் புள்ளிகளைச் சொல்ல சொல்ல, அங்கு, உயரத்தில் தொங்கிய திரையில் தெரிந்த இவர்கள் பெயரின் கீழ் அது ஒளிர்ந்தது.
“அடுத்த சேலஞ்சில் இந்தப் புள்ளிகளில் எப்படியும் மாற்றங்கள் நிகழலாம். மனத்தைத் தளரவிடாது அதை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்.” என்றதோடு, கட் சொல்லியிருந்தார்கள். தேநீர் இடைவேளையாம்.
கடகடவென்று இறங்கி ஓடி வந்தாள் மியா. முகத்தில் கோபம்.
“முடிந்ததை விட்டுவிடு. இன்னமும் இரு சுற்றுகள் உண்டே! ஏமாற்றி விடாதே ஒலிவியா!” வெளியில் நடப்பவை எதுவும் போட்டியாளர்கள் காதுகளுக்குச் செல்லக் கூடாது என்பது அவர்களுக்கான கட்டளை. அதையும் மீறி, “என் விருப்பு, உன் குடும்ப விருப்பம், ஏன் இங்குள்ள நடுவர்கள் அதிலும் தோமஸ் வேர்த் விருப்பமும் அதுதான்.” என்றவளை, நிமிர்ந்து பார்த்தாள், ஒலிவியா.
“என்ன அப்படிப் பார்க்கிறாய். இல்லையா என்ன?” கண்ணடித்து அவளை இலகுவாக்க முயன்றாள்.
“அதெல்லாம் கடந்து இலட்சக்கணக்கான மக்கள் விருப்பும் எதிர்பார்ப்பும் அதுதான் ஒலிவியா!” கிசுகிசுப்பாகச் சொல்லி, கட்டிப் பிடித்து முதுகில் தட்டிக் கொடுத்தாள்.
அடுத்து உருண்ட அரை மணி நேரம் சிரிக்க சிரிக்கக் கதைகள் சொல்லி ஒலிவியா முகத்தில் மலர்வைக் கொண்டு வந்தாள், மியா.
ஒலிவியாவோடு இரு வார்த்தைகள் சரி கதைத்துவிட வேண்டும் என்று முயன்றும் தோல்வி தான். சிடுசிடு முகத்தோடு இரண்டாவது சுற்றை ஆரம்பித்து வைத்தான், தோமஸ் வேர்த்.
“இது இறுதிச்சுற்றுப் போட்டி! அதனால் சாதாரணமாக ஆரம்பித்து வைக்கலாமா என்ன? இந்தச் சுற்றின் ஆரம்பமே உங்களுக்கு ஓர் இனிய அதிர்ச்சி தரப்போகிறது!” என்ற, தோமஸ் வேர்த்தின் இடக்கரம் தன் இடப்புறத்தைக் காட்டியது.
அதுவரை, அப்பகுதி இருளாக இருந்ததை இவர்கள் அவதானிக்கவில்லை. நீளமாகத் திரை போட்டிருந்தார்கள். அது, மெல்ல மெல்ல இருபுறமும் இழுபட பட…
இறுதிப் போட்டியாளர்கள் வாயடைத்து நின்றார்கள். கேண்ரியில் ஆரவாரக் கூச்சல் எழுந்தது. எல்லாம் சில கணங்கள் தான்.
“டாட்!” கூவலோடு பாய்ந்தோடினாள், ஒலிவியா. அங்கிருந்து துர்க்காவும் ஒலிவியாவின் சகோதர சகோதரியும் ஓடிவந்து அவளை இறுகக் கட்டிப்பிடித்துக்கொண்டார்கள். துர்க்கா, நண்பியைத் தூக்கிச் சுற்றினாள். விம்மியழுத மகளை வந்து அணைத்துக்கொண்ட தகப்பன் கண்களிலும் கண்ணீர்! மற்றைய இரு போட்டியாளர்கள் நிலையும் இதுதான்.

