“அம்மா வராவிட்டால் என்ன? இந்தக் கணம் இந்த இடத்தில் உன் அம்மாவாக அப்பாவே இருக்கிறேன் பேபி! டோன்ட் க்ரை!”
அவர் சொன்னதை நீண்டிருந்த மைக் மூலம் கேட்ட ஆரோன், முகம் இறுக நின்றிருந்தார். ஒலிவியா தன்னை உதாசீனம் செய்துவிட்ட உணர்வு அவருள் பெரும் தீயாக இறங்கிவிட்டிருந்தது.
அளவுக்கு அதிகமாகப் பாசம் வைத்ததன் விளைவா! தன்னையே தான் கடிந்துகொண்டார், அவர்.
ஒலிவியாவின் சமையல் மேடையில் பார்வையை அலையவிட்டான், வேர்த்.
“ஷிட்” அடுப்பை நன்றாகக் குறைத்த வேகத்தில், “ஒலிவியா…” அதட்டலாக அழைத்ததில், கண்களைத் துடைத்தபடி ஓடி வந்தாள், அவள்.
“போட்டி முடிய இன்னமும் சிறிது நேரம் தான் இருக்கு. எந்தவிதமான பிரத்தியேக உணர்வுக்கும் முன்னுரிமை கொடாதே! இந்த இடத்தில் தாம் இல்லையே என்று ஏங்கியபடி உங்களைப் போலவே திறமைமிக்கவர்கள் அங்கே நின்று கொண்டிருக்கிறார்கள்.” கேன்ட்ரியில் நின்றுகொண்டிருந்த மற்றைய போட்டியாளர்களைச் சுட்டிக் காட்டியவன், மிகவுமே கண்டனப் பார்வையோடு தொடர்ந்தான்.
“உனக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு இது! உரிய மதிப்புக் கொடுத்து நட! இன்னும் கொஞ்சம் விட்டிருந்தால்… கேரமல் சோஸ் கருகியிருக்கும்.” அதட்டிவிட்டு அவன் அகல, இரண்டு அறை வாங்கிய உணர்வு, அவளுக்கு!
முதன் முதலான அவன் கோபம் மிகவும் பாதித்தது. அதன் பயன், மிகுதிச் செய்முறைகளை வெறியாகச் செய்யத் தூண்டிட்டு.
“ஷி இஸ் பாக்!” நிம்மதியாகச் சொன்னார், கிறிஸ்டினா.
கடகடவென்று உருண்டோடிய ஐந்து மணி நேரம் முடிந்ததும் ஒரு மணி நேரம் இடைவேளை வழங்கினார்கள்.
இறுதிப் போட்டியாளர்கள் மூவரும் தனியாக இருக்கும் படியும் பார்த்துக்கொண்டார்கள்.
அடுத்து, 25 நிமிடங்களில் பிளேட்டிங், அதுவும் நடுவர்கள் முன்னால் வைத்தே செய்ய வேண்டும்.
தேவையான அனைத்தும் செய்து வைத்திருக்கிறார்களே! மூவரும் நிதானமாகவே செயல்பட்டார்கள். அதுவே, மூவரது தயாரிப்புகளும் செஃப் ஒலிவர் கொண்டு வந்திருந்ததை ஒத்ததாகவே இருந்தன.
சுவையில் தான் தீர்மானிக்க வேண்டும் என்று கதைத்துக்கொண்டார்கள், நடுவர்கள். சுவைத்துவிட்டு, தம்முள் கலந்தாலோசித்து புள்ளிகள் இட்டு விட்டு, அவர்கள் எழுந்து வந்த போது வெற்றியாளரை அறிய அந்த மண்டபமே காத்திருந்தது.
முதலில், ஒவ்வொருவரின் தயாரிப்புப் பற்றியும் நிறை குறைகளைச் சொன்னார்கள், பாராட்டினார்கள். பின், ஒலிவர், கிறிஸ்டினா, வேர்த் என்ற வரிசையில் புள்ளிகளைச் சொல்ல சொல்ல திரையில் மாறுதல்கள் வந்தவண்ணம் இருந்தன. மண்டபமே பதற்றத்தில் மூழ்கிப் போயிருந்தது. அனைவர் பார்வையும் இடக்கையால் வாய் பொத்தி வலக்கையைக் கட்டிக்கொண்டு நின்றிருந்த ஆரோன் டேலிடம்.
மூன்று போட்டியாளர்களையும் ஆழப் பார்த்தார், அவர்.
“என் மட்டில் நீங்கள் மூவருமே வெற்றியாளர்கள் தான். அவுஸ்திரேலியா, பிரான்ஸ், இலண்டன் மற்றும் அமெரிக்கா என்று எந்த நாடாகிலும் என் ரெஸ்டாரண்டுகள் உங்களுக்காகக் காத்திருக்கும்.” என்றுவிட்டு, நெஞ்சுப் பகுதியிலிருந்து ஒரு காகித உறையை இழுத்தெடுத்தார்.
முதலில் ஃபிராங் புள்ளிகள் சொல்லப்பட்டது. அடுத்து மற்றவன்.
“இப்போ, ஃபிராங் முதலிடம். ஒலிவியா இப்போ நீ, இரு டிஷ்ஷுக்களுக்குமான 20 புள்ளிகளில் 18 அல்லது அதற்கு அதிகமாக எடுத்தால் வெற்றி. இல்லையோ, ஃபிராங் வெற்றி பெறுவார்.” என்றார், கிறிஸ்டினா.
மெல்ல, அவளுக்கான அட்டையை எடுத்து உயர்த்திப் பிடித்துத் திருப்பினார், ஆரோன்.
ஒலிவியாவையே பார்த்தபடி, “20 க்கு…. 20!” பெரிய சத்தமாகச் சொல்லவும் செய்தார்.
சில கணங்கள் அந்த மண்டபமே அமைதியாகவிருந்தது. பின்னரே ஆரவாரம் எழுந்தது.
“ஹோம் குக்கிங் அவுஸ்திரேலியா 2023… வின்னர் இஸ்…” என்றவரோடு இணைந்து, “ஒலிவியா டெனிஸ்!” என்று, நடுவர்கள் ஒருசேர குரல் எழுப்பினார்கள். பொன் துகள்கள் பட்பட்டென்று வெடித்து மழையெனக் கொட்டத் தொடங்கியிருந்தன.
ஒலிவியா அதிர்வில் அப்படியே நின்றாள். கண்ணீர் வழிந்தோடியது.
“யூ டீசெர்வ் இட் ஒலிவியா!” சக போட்டியாளர்கள் கட்டியணைத்துக் கொண்டார்கள்.
துர்க்கா பாய்ந்து வந்து கட்டியணைத்து அழுது விட்டாள். ஒலிவியாவின் தம்பி, தங்கையும் வந்து கட்டிப்பிடித்து வாழ்த்த, கண்ணீரோடு ஓடி வந்த தகப்பன் அவளை அப்படியே தூக்கிச் சுற்றினார்.
அசையாது நின்ற நடுவர்களில் முதலில் நகர்ந்தார், ஆரோன் டேல்.
“ப்ரௌட் ஒஃப் யூ மை லிட்டில் கேர்ள்!” தன்னையும் அறியாது தழுதழுப்போடு சொல்லிக் கட்டியணைத்து வாழ்த்தினார். தொடர்ந்து கிறிஸ்டினா, ஒலிவர் வாழ்த்த, தோமஸ் வேர்த் கண்கள் கலங்க அசையாது அதே இடத்தில் நின்றிருந்தான்.
அந்த ஐந்து மணிநேரம் மட்டுமல்ல, கடைசி 25 நிமிடத்திலும் ஒலிவியா உடைந்து விடுவாளோ என்ற ஐயம் அவனுள் இருந்தது. அவள் கலக்கத்திற்குக் காரணம், தாய் வரவில்லை என்றது மட்டுமா என்ற குழப்பமும் கூடவே வந்தது. அவள் செய்த இரு டிஷ்களையும் சுவைத்த போதுதான், அவள் சமையல் கலைக்கென்றே பிறந்தவள் என்பது தெரிந்தது.
அவர்கள் முறையான பயிற்சி எடுத்தவர்கள் அல்லவே! அப்படியிருக்கவே, குழப்பத்தில் இருந்தாலும் இந்தளவுக்கு நுட்பமாக ஒன்று ஒன்றையும் செய்ய முடியும் என்றால், அவள் இரத்தத்தில் இந்தக் கலை கலந்திருக்கு என்றுதானே அர்த்தம்!
செஃப் ஒலிவரே, ‘கோல்டன் கிராக்கில்’ ஒவ்வொரு லேயரும் தன்னுடையதையும் விடவே வெகு சுவையாக உள்ளதாகப் பாராட்டினார் என்றால்!
அவளுக்கு மாஸ்டர் செஃப் பட்டம் அடங்கிய கேடயமும் இரண்டரை இலட்சம் டொலர்களும்… அவனுக்கு? பெரும் பொக்கிசமே பரிசாகக் கிடைத்துள்ளதே! மிகுந்த மகிழ்வோடு பெருமையாக அவளைப் பார்த்து நின்றான், அவன்.
ஒலிவியா பார்வை அவனில் படிந்தது. சுற்றம் மறந்தான், வேர்த். தன்னையறியாதே கரங்களை அகல விரித்திருந்தான்.
சிட்டாக ஓடி வந்து அதற்குள் புகுந்தவளை, தூக்கிச் சுற்றி அவள் விழிகளையே பார்த்தவண்ணம் இதழ்களில் அழுந்தவே முத்தம் கொடுத்திருந்தான், செஃப் தோமஸ் வேர்த்.
கணத்தில் நிகழ்ந்த நிகழ்வில், “ஆஆஆஆஆ” என்ற ஒலியோடு மொத்த மண்டபமே அசைவற்றுப் போனது.
பிலிப் தான் பெரும் பாவம். எதற்கெடுத்தாலும் கத்தரிக்கோல் போட்டுவிடலாம் என்று கட்டைவிரல் காட்டுபவன், இப்போதோ, செய்வதறியாது நிகழ்ச்சிப் பொறுப்பாளரைப் பார்த்தான். கைவிரித்து என்ன செய்வதென்று கேட்டு நின்றான்.
அவரோ, சிரித்துக்கொண்டு நின்றார். தோமஸ் வேர்த் இந்த நிகழ்ச்சிக்கு உற்சாகம் கொடுக்கும் புது இரத்தம் என்றால், ஒலிவியா, இந்த சீசன் பத்தின் சுவாரசியத்துக்கு முதற் காரணி! இது அவர்கள் பிரத்தியேக விடயம். எதிர்பார்த்ததும் தானே! நிகழ்ச்சி முடிவில் அவர்கள் நேசம் வெளியாவது, அவருக்கும் மகிழ்வே! அவர் கண்ணசைவில் படப்பிடிப்புத் தொடர்ந்து கொண்டிருந்தது.
துர்க்கா மயக்கம் போடாத குறையாக டெனிஸ் கரத்தை இறுகப் பற்றிக்கொண்டாள்.
“அப்போ… டிவியில் காட்டியது, நெட்டில் பறந்த லவ் சிம்பல் எல்லாமே உண்மையா அங்கிள்? அடியேய் ஒலிவியா! என் ஹார்ட்டை உடைத்துவிட்டாள் உங்கள் மகள். நான் வேர்த்தை எந்தளவிற்குக் காதலிக்கிறேன் என்று அவளுக்குத் தெரியாதா என்ன?” நாடக பாணியில் கதைத்து, அவரைக் கண்ணீரோடு முறுவலிக்க வைத்தாள்.
அவன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஒலிவியா சட்டென்று சுதாகரித்து விட்டாள்.
“டாட்…” வேர்த்தை இழுத்துக்கொண்டு டெனிஸ் நோக்கி ஓடினாள்.
அவள் எதுவுமே சொல்லத் தேவையிருக்கவில்லை! அவனை அன்போடு கட்டியணைத்துக்கொண்டார், அவர்.
“ஒலிவியா எங்கள் குடும்பத்தின் தேவதை!” அவர் முடிக்க முன்னர், “என் வாழ்நாள் முழுவதும் அந்தத் தேவதைக்குச் சேவை செய்யவென்றே ஒதுக்கி விடுவேன் அங்கிள்!” என்றிருந்தான், வேர்த்.
ஓவென்ற கரகோசமும் மகிழ்வு ஆரவாரமும் எழுந்தது. பரிசுக் காசோலை வர, நடுவர்கள் கையால் வாங்கிக்கொண்ட ஒலிவியா, அதைப் பிடித்துக்கொண்டே தந்தை காதில் எதுவோ சொல்ல, “உனக்கு அதுதான் விருப்பம் என்றால் எனக்கு ஆட்சேபனை இல்லை.” என்றவர், “உன்னை மகளாகப் பெற்றதற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன் மகளே!” என்று அழுதுவிட்டார்.
என்ன விசயம் என்று நடுவர்கள் ஒருவர் ஒருவரைப் பார்க்க, “நான்… என் மகிழ்வை, இப்போதைய மனநிலையை வார்த்தைகளால் சொல்ல முடியாது. எனக்குள் இந்தளவுக்குச் சமையல் மீதான விருப்பு உண்டு என்பதைக் கண்டறிந்ததே இங்குதான். ஹோம் குக்கிங் குழுவிற்கும், இந்தச் சில மாதங்களாக எங்களுக்கு ஆசான்களாக இருந்து வழிநடத்திய நடுவர்களுக்கும், சமையல் கலை வல்லுநர்களுக்கும் இதயபூர்வமாக நன்றி கூறிக்கொண்டு, ஒரு விடயத்தை இதில் வைத்தே சொல்லிவிட ஆசைப்படுகிறேன். எனக்குக் கிடைத்த இந்த இரண்டரை லட்சம் டொலர் பரிசுத் தொகையை, என்னோடு சேர்ந்து போட்டியிட்ட ஒவ்வொரு போட்டியாளர்கள் சார்பிலும் என் குடும்பத்தின் சார்பிலும்…” சொல்லிக்கொண்டு வந்தவள், இரண்டெட்டில் வேர்த்தை நெருங்கி, காதருகில் எதையோ கேட்டாள்.
அவனோ, விழிகளை விரித்து வியப்பில் அதிர்ந்து நின்றான். தான், இந்தப் பரிசு வாங்கிய தினம் அவன் மனக்கண்ணில் வந்து போனது.
“லவ் யு சோ மச் பேபி! ப்ரௌட் ஒஃப் யூ!” உரத்துக் கத்தினான், கண்ணீரோடு.
“என்னுடைய வேர்த் சார்பிலும் நம் நாட்டின் பெருமைக்குரிய பூர்வ குடிகளின் கல்வி மற்றும் மருத்துவ உதவிக்காகப் பரிசளிக்கிறேன்!” சொல்லிவிட்டுத் துள்ளியவளை, கத்திக்கொண்டே ஓடி வந்த போட்டியாளர்கள் எல்லோருமாகச் சேர்ந்து தூக்கி ஆரவாரித்தார்கள்.
அவள் தேவதையேதான்! அனைவர் வாய்களும் அதையேதான் முணுமுணுத்தன.
அதே ஆரவாரத்தோடு சாம்பெயின் போத்தல்கள் ஆரோன், வேர்த் கைகளுக்கு வந்திருக்க, உடைத்து, ஒலிவியாவை அதில் நனைய வைக்கிறேன் என்று சுற்றி நின்றவர்களையும் நனைத்துக் களித்தார்கள். அடுத்து, ஆரோன் கரம் அங்கிருந்த மேடையில் வைக்கப்பட்டிருந்த கேடயத்தைச் சுட்டிக் காட்டியது.
அவர் மனதுள் நிறைந்திருந்த மகிழ்வு, வார்த்தைகளை உதிர்க்க விடவில்லை. விழிகள் கலங்கி தளர்ந்து நின்றார், அவர். தலையாலேயே ‘சென்று எடு’ என்று சொன்னார்.
ஓடிச்சென்று எடுத்தவள், தலைக்கு மேலாகத் தூக்கிப்பிடித்தாள். கமராக்கள் ஒளிவெள்ளத்தில் அவள் தேவைதையாக மினுங்கிக்கொண்டிருந்த அந்த வேளை, கணவனுக்கு அழைத்தார், லிசி.
“உன் மகள் வென்றுவிட்டாள்!” என்ற டெனிஸ், விடியோவைத் திருப்பி மகளைக் காட்டினார். அவள் இறங்கி வர, மகளை நெருங்கி, “அம்மா” என்று கைப்பேசியைக் கொடுத்தார்.
பெரிய சத்தமாகக் கதைத்துத் துள்ளி அவள் மகிழ்ந்து கொண்டிருக்கையில், நெருங்கிய ஆரோன், “இந்தவொரு மகிழ்வைக் காணக் கிடைக்கவில்லையே உன் அம்மாவுக்கு. அவரோடு நான் கதைக்கலாமா?” என்று கேட்டிருந்தார்.
ஏன் கேட்டார்? தனக்கு மிகவும் பிடித்த பெண்ணின் அன்னையை, அதுவும் அந்த அன்னை வரவில்லையே என்று அவள் பட்ட பாட்டைப் பார்த்தவராச்சே! அதுவே அவரோடு கதைக்கத் தூண்டியிருக்கலாம்.
சற்றும் தாமதியாது கைப்பேசியை அவரிடம் கொடுத்த ஒலிவியாவின் கூர்மையான பார்வை அவரில்!
அவரோ, “ஹலோ நான்…” என்றபடி திரையில் பார்வை பதித்தார்.
உச்சபட்ச அதிர்வு என்றால் இதுதான் என்று அன்று உணர்ந்தார், ஆரோன் டேல். அந்த அதிர்வலைகளினூடு மகிழ்வுக் குமிழிகள் முகிழ்ந்தன!
இவரைச் சற்றுமே எதிர்பாராத லிசி, கணமும் தாமதிக்காது அழைப்பைத் துண்டித்திருந்தார்.

