அழகிய சவால் நீ – 2

அத்தியாயம் 2

 

‘I liked the energy of cooking, the action, the camaraderie. I often compare the kitchen to sports and compare the chef to a coach. There are a lot of similarities to it. Absolutely, th

 

“அவுஸ்ரேலியாவில், த பெஸ்ட் அமெஞ்சூர் ஹோம் குக்கை தேர்தெடுக்கும் இந்த நிகழ்ச்சியின் இந்த சீசனில், உங்களோடு பயணம் செய்யப் போவதில் மிக்க மிக்க மகிழ்ச்சியாக உணர்கிறேன் நான்!” செஃப் ஆரோன் டேல் சொல்லி முடிக்க, ஆச்சரியம், மகிழ்வு, துள்ளல் எல்லாம் கலந்து கட்டிய ஆரவாரம் எழுந்தது.

 

“ஒன்பது சீசனாக நிறையவே புது புதுச் செய்முறைகள் பார்த்திருக்கிறேன். விதம்விதமான, என்னையே வியக்க வைத்த திறமையான, கண் கவரும் நுணுக்கமான கிரியேட்டிவிட்டிஸ் கண்டு வியந்திருக்கிறேன். ஆயிரக்கணக்கானோர், பல சுற்றுகள், இறுதி ஐம்பது, பிறகு முப்பது பேர்களில் தேர்வாகி இந்த ஏப்பரனை அணிந்துள்ள இருபது பேரும் எனக்குப் பல ஆச்சரியங்கள் தருவீர்கள் என்று நம்புகிறேன்!” முறுவல் மாறாது வரவேற்றார், ஆரோன் டேல் .

 

கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் இவரோடு பயணம் செய்யப் போகிறோமோ! எல்லோர் முகங்களிலும் பிரகாசம்.

 

“ஓஓஓஓஓஓ!” அது, ஒற்றைச் சொல் ஆரவாரத்தில் வெளியாகிற்று.

 

“இதே மாதிரியான சந்தோசம்தான் எனக்கும். உங்களிடம் இருந்து நிறைய விசயங்களைக் கற்றுக்கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளேன்!” அந்த மண்டபத்தைத் தன் குரலால், பாவனையால் ஆட்சி செய்து கொண்டிருந்தார், மனிதர்.

 

“ஒன்பது சீசனாக ஆஸ்திரேலியாவின் மூன்று திறமையான நடுவர்கள் துணையோடு நடந்த இந்த நிகழ்ச்சியில், இம்முறை, ஒரு மாற்றத்துக்காக நான் வந்துள்ளேன். காரணம், இது ஸ்பெஷல் சீசன்… சீசன் டென்!” அவருக்கே உரிய சிரிப்பில் விழிகள் சுருங்க கணீர் என்று தொடர்ந்தார், ஆரோன்.

 

“என்னோடு கூடவே பயணம் செய்யவிருக்கும் அடுத்தவர், food critic கிறிஸ்டினா ரிவர்! இவரைத் தெரியாமல் இருக்க நியாயமே இல்லை. ஹோம் குக்கிங் நிகழ்ச்சி ஆரம்பித்த அன்றில் இருந்து இங்கு ஓர் அங்கமாக இருப்பவர். தெரியாத விசயம் என்ன என்றால், அவர் என்னுடைய அருமைத் தோழி!” விழிகள் நகைப்பில் சுருங்கச் சிரித்தார்.

 

“அவரை, இங்கு வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன்!” சொல்லி முடிய, போட்டியாளர்களுக்குப் பின்புறமாக இருந்த பிரதான வாயில் அகலத் திறந்துகொண்டது. அவ்விடத்தை வெண்புகை ஆக்கிரமித்தும் இருந்தது. வான் நீலமும் வெண்மையும் கொண்ட லேஸ் ஆடையில் வண்ண நிலவுப்பெண்ணாக மென்நடையில் உள்ளிட்டார், Food Critic கிறிஸ்டினா ரிவர்.

 

முகம் முழுவதும் சிரிப்போடு, போட்டியாளர்களுக்குக் கை காட்டிக்கொண்டே சுறுசுறுப்போடு கடந்தவர் ஆரோன் டேலை கட்டியணைத்துக்கொண்டார். தம்முள் எதுவோ கதைத்துக் கொண்டார்கள். பெரிதாகச் சிரித்தார், ஆரோன். அவர் முதுகில் தட்டிச் சிரித்தார், கிறிஸ்டினா. அவர்கள், சில நிமிடங்களைத் தமக்காக எடுத்துக்கொள்ள, போட்டியாளர்கள் பார்த்தபடி நின்றார்கள்.

 

“இதெல்லாம் அழகாக எடிட் செய்துவிட்டு டெலிகாஸ்ட் செய்வார்கள்.” அருகில் யாரோ குசுகுசுத்தார்கள்.

 

“ஓகே டியர்ஸ், நிறைய நாட்களுக்குப் பிறகு நேரில் காண்கிறோம் அதுதான் இப்படி!” கிறிஸ்டினாவைத் தோளோடு வளைத்துவிட்டு விடுவித்தார், ஆரோன் டேல்.

 

“அடுத்து, என்னைப் போலவே இந்த நிகழ்ச்சிக்குப் புதியதொரு நடுவர். இந்த சீசனுக்கு மட்டும் இல்லை, இனிமேல், ஹோம் குக்கிங்கில் இவர் ஒரு அங்கமாக இருப்பார். எனக்கு மிகவும் வேண்டியவர். விருப்பத்துக்குரியவர். என் சிஷ்யன். மிக்க திறமையான சிஷ்யன். அவரோடு நானும் நடுவராக இருப்பதே எனக்குப் பெருமை!” என்ற நீண்ட வரவேற்பில், போட்டியாளர்களுள் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமானது.

 

“இவரும் உங்களுக்கு மிக நன்றாகத் தெரிந்தவர் தான்.” ஆவலை தளம்பி வழியவிட்டார். போட்டியாளர்கள் தலைகள் பின் வாசலுக்குச் சென்று சென்று ஆரோன் டேலிடம் வந்தன.

 

“இந்த வருடம் சிறந்த ரெஸ்டாரண்ட் என்று தெரிவாகிய ‘Thomas worth’ இன் உரிமையாளர், ஹோம் குக்கிங் சீசன் நான்கின் வெற்றியாளர், தோமஸ் வேர்த்…செஃப் வேர்த்… வெல்கம் மை டியர் யங் மேன்!”

 

மீண்டும் போட்டியாளர்கள் மத்தியில் ஆஆஆ!

 

ஆறடியில், மிடுக்காக, அவனுக்கேயுரிய கவர்ந்திழுக்கும் பார்வையும் முறுவலுமாக உள்ளே நுழைந்தான், செஃப் தோமஸ் வேர்த்.

 

அந்த நிமிடம் எதற்காக இங்கு வந்தாள் என்பதையே மறந்தாள், ஒலிவியா.

 

“மை கோஷ்!” அவள் கரங்கள் முகத்தைப் பொத்திக்கொண்டன. அப்போதும் விழிகள் இரண்டும் விரல்களின் மறைப்பில் இருந்து இலாவகமாகத் தப்பித்துக்கொண்டன. அவளின், இரண்டு வருடக் காதல் முறிவுக்குக் காரணமானவன், அவள் அருகண்மையால் நடந்து போய்க்கொண்டிருக்கிறானா?

 

குறுகிய காலம், கிட்டத்தட்ட ஆறு வருடங்களில், நிறைய நிறைய வெற்றிக்கனிகள் சுவைத்த பளபளப்போடு சென்றவனுக்கு, அவள் இருபதில் ஒரு போட்டியாளர். ஆனால், அவளுக்கு ?

 

இதைச் சொல்ல வெட்கம் எல்லாம் பட மாட்டாள், ஒலிவியா. அவளின் மிகப் பெரிய கிரஷ் இவன். அவன் ஒவ்வொரு அசைவும் அவ்வளவு பிடிக்கும். சென்ற வருடம், சிட்னியில் ஒரு உணவுக் கண்காட்சியில் இருந்த இவன் புகைப்படத்தோடு கன்னம் வைத்து, உதடு குவித்து ஒரு செல்ஃபி எடுத்து, சுட சுட அவள் காதலனுக்கு அனுப்பி வைத்தாள். மறுநிமிடம் ‘ப்ரேக் அப்!’ நம்ப முடிகிறதா? அந்தளவுக்கு, இவன் மீதான அவள் கிரஷ், அவனை வெறுப்படையச் செய்திருந்தது.

 

ஒலிவியாவுக்கு வாய் விட்டுச் சிரிக்க வேண்டும் போலிருந்தது.

 

‘நீ ஒரு மிகப்பெரிய போட்டியில் இருக்கிறாய்!’ அவள் மனம் எச்சரித்திட்டு. அவள் சிரிக்காவிட்டால் என்ன? அவள் விருப்பத்துக்குரியவன் வாய்விட்டுச் சிரிக்கிறானே! அதை இப்படி அருகண்மையில் நின்று பார்ப்பதற்கு ஈடேது!

 

செஃப் தோமஸ் வேர்த் மற்ற இருவரோடும் கதைத்துச் சிரித்தான். கட்டியணைத்தான். இறுகக் கரம் பற்றியபடி கதைத்தார்கள். சிலபல நிமிடங்களைத் தமக்கென எடுத்துவிட்டுச் சட்டென்று போட்டியாளர்கள் நினைவு வந்தாற்போல் திரும்பினார்கள். அவர்களின் காதுக்குள், சற்றுத் தள்ளி கண்ணாடித்தடுப்பின் அப்பால் அமர்ந்திருந்த நிகழ்ச்சி இயக்குனர், வந்த வேலையைப் பாருங்கடா என்றிருப்பாரோ என்னவோ!

 

“கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு முன், இதோ, இப்போது நீங்கள் நிற்கும் இடத்தில் நின்றவன்தான் நான். இந்தக் கணம், நீங்கள் என்ன மனநிலையில் நிற்பீர்கள் என்று, என்னால், மிகத் துல்லியமாகவே அனுமானிக்க முடியும்!” செஃப் தோமஸ் வேர்த் ஒவ்வொருவரையும் பார்த்தபடி நிதானமாகச் சொல்லிக்கொண்டு போனான்.

 

‘பார்ரா! துல்லியமாக அனுமானிக்க முடியுமாமே! இந்தப் போட்டி முடியும் வரை சரி, அடங்கி இரு என்று நான் அடக்கி வைத்த குறும்பி ஒலிவியாவைத் தட்டி எழுப்பி விடுவான்போல் இருக்கிறதே!’ நகைப்பை எப்படிக் கட்டுப்படுத்துவாள் ஒலிவியா! ‘அதுதானே’ என்றபடி, அது, பிடிவாதமாக விழிகளால் கசிந்திட்டு.

 

உன் பரம இரசிகை, போட்டியில் நிற்பதையும் மறந்து உன்னையே இரசித்துக்கொண்டு நிற்கிறாள் என்றதையுமா உன்னால் அனுமானிக்க முடிகிறது? ஹ்ம்ம்…

 

அவன் பார்வை தன் புறம் நகர்வதைக் கண்டு, சாதாரணமாக நிற்கப் பெரும் பிரயத்தனப்பட்டாள்.

 

“நீங்கள் இருபது பேரும், இந்த இடத்துக்கு, இப்படியான ஒரு போட்டிக்குப் புதியவர்களே ஒழிய, சமையலோ, அது சார்ந்த அறிவோ உங்களுக்குப் புதில்லை. அதனால், ஒருவருக்கும் பதற்றம் தேவையேயில்லை. மிக இயல்பாக, இந்தச் சமையலறையை உங்கள் வீடாக எண்ணி உங்களுக்கான சவால்களை எதிர்கொள்ளுங்கள்!

 

அருமையான நடுவர்கள், தேவையான எல்லாப்பொருட்களும் அடங்கிய ஹோம் குக்கிங் பான்ரி, நவீன சமையல் உபகரணங்கள், வெளியே அற்புதமான ஹெர்ப்ஸ், வெஜிடபிள் தோட்டம் என்று எல்லா வசதிகளும் உங்கள் திறனைக் காட்ட உதவக் காத்திருக்கின்றன.”

 

அவன் வாய் வார்த்தைகளை உதிர்க்கிறது என்றால் கண்கள் சேர்ந்து கதை பேசுகிறதே!

 

தன்னைச்சுற்றி நின்ற, அருமையான பத்தொன்பது போட்டியாளர்களுக்கு ஈடாக எப்படிச் சமையல் செய்யப் போகிறாள்? அவள் கண்களுக்கு அவன் மட்டுமே தெரிந்தான். வாய் பிளந்தபடி பார்த்திருந்தாள், ஒலிவியா. எல்லோரையும் பார்த்துக் கதைத்துக்கொண்டு வந்தவன் பார்வை அவளில் பட்டுத் தங்கி நின்றிட்டு.

 

‘அடியேய் ஒலிவியா…நோர்மலுக்கு வாடி!’ மனம் அலற, சமாளித்து நிற்க முயன்றாள், அவள். சிலபல அதிக கணங்கள் அவள் முகத்தில் ஒட்டி நின்ற அவன் பார்வை, மிக மெதுவாக அடுத்தவருக்குத் தாவிற்று.

 

‘என்னை இவனுக்கு நினைவு இருக்குமோ!’ அதிகப்படியான ஆசைதான். அது பாட்டில் வருகிறதே!

 

‘ச்சே ச்சே!’ மறுத்து முகம் சுருங்க வைத்திட்டு, மனம்.

 

நான்கு வருடங்களுக்கு முன்னர், இவனது சிக்னேச்சர் டிஷ் செய்து இன்ஸ்டாவில் போட்டிருந்தாள், ஒலிவியா. அவள் ஃப்ளோவர் புண்ணியவான் ஒருத்தன் இவனை டாக் பண்ண, ‘மிகவும் நன்றாக இருக்கிறது’ என்று கமெண்ட்ஸ் போட்டிருந்தான். ‘ருசியும் அருமையாக இருக்கும் என்று நம்புகிறேன்’ என்று வேறு போட்டிருந்தானே!

 

நினைவில் இருக்குமா?

 

‘அதெல்லாம் மில்லியனில் ஒன்று. நினைவிராது. உன் நினைப்பே வீண்’! மனம் இடித்துரைத்திட்டு.

 

“இன்று, தொண்ணுறு நிமிடங்கள் சமைத்து அதில் தெரிவாகும் ஒருவருக்கு ‘இம்யூனிட்டி பின்’ தரப்படும். போட்டியின் ஏதாவது ஒரு கட்டத்தில், உங்களை எலிமினேஷனில் இருந்து காப்பாற்றிக்கொள்ள அதைப் பயன்படுத்தலாம்.” இழுத்து நிறுத்தினான், வேர்த். காற்சட்டைப் பையில் இருந்து தங்க ‘H’ வடிவிலான பின்னை எடுத்து உயர்த்திக் காட்டினான்.

 

அதை, எங்களுக்கே எங்களுக்கு என்று வாங்கிட இருபது பேருள்ளும் அவா எழும் தானே?

 

“வேர்த் சொல்வது போல் ஒருவருக்கு மட்டுமில்லை!” கிறிஸ்டினாவின் பெருவிரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் இடையில் ஒரு ‘பின்’ பிடிபட்டு நின்றது.

 

“ஆமாம்! இந்தச் சமையலறையில் இன்று நீங்கள் செய்யப்போகும் முதல் டிஷ், இறுதிப்போட்டியில் வெற்றியடையத் தகுதியான அளவில் இருக்க வேண்டும். இந்த இரு பின்களையும் தமதாக்க எண்ணுபவர்கள், இன்று, உங்களுக்குப் பிடித்த டிஷ் ஒன்றில் உங்கள் சமையல் சார்ந்த கெட்டித்தனத்தைக் காட்டுங்களேன். ம்ம்ம்” சவாலாகச் சொன்னார், செஃப் ஆரோன் டேல்.

 

ஒலிவியாவின் விழிகள் மூடித் திறந்தன. கண் முன்னால் நிற்பவன் மீதான நான்கைந்து வருட கிரஷ்; அதனால் ஏற்பட்ட காதல் முறிவு; இடைநிறுத்திய படிப்பு, வேலை… என எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையில் வந்து, மனத்தைக் குட்டு வைத்து அடக்க வேண்டிய கட்டாயம் உணர்த்திற்று! அதுவே, எல்லாவற்றையும் தள்ளிவிட்டு, வந்த வேலையைப் பார்க்க முடிவு செய்ய வைத்திருந்தது.

 

“டைம் ஸ்டார்ட் நவ்!” கிறிஸ்டினா குரல் ஒழித்து முடிந்த மறுநொடி, “கட்” நிகழ்ச்சி இயக்குனர் குரல் கணீரென்று ஒலித்தது. தேநீர் இடைவேளை முடிய சமையல் செய்யலாம் என்றார்கள்.

 

நூறு மீட்டர் ஓட்டப்பந்தய வீரர்கள் கணக்கில், பான்ரி நோக்கி ஓட எத்தனித்தவர்கள் ஒருவர் ஒருவரைப் பார்த்துக்கொண்டார்கள். தொலைக்காட்சியில், ‘நவ்’ என்ற சொல் முடிய ஓடத் தொடங்கி இருப்பார்களே!

 

“அதெல்லாம் எடிட்டிங்…அநேகம் ஒவ்வொருமுறையும் சேலஞ் இது என்று சொன்ன பிறகு, தேநீர் இடைவேளையோ மதிய உணவு இடைவேளையோ வரும். ஒன்று ஒன்றரை மணி நேரம், சில சமயம் இரண்டு மணி நேரம் சரி உங்களுக்குக் கிடைக்கும். என்ன சமையல் செய்யப்போகிறீர்கள் என்பது பற்றி முடிவெடுக்க இந்த நேரம் உபயோகமாக இருக்கும்.” விளக்கம் தந்தார், அருகில் நின்ற உதவி இயக்குனர் ஒருவர்.

 

சிறு துண்டு ஓரியோ சீஸ் கேக், ஒரு கப் கப்பச்சினோவோடு அமர்ந்துகொண்டாள், ஒலிவியா.

 

‘போட்டிக்கான முதல் சமையல் எந்த விதமான பரீட்சாத்தமான விசயமும் வேண்டாம். நன்றாகத் தெரிந்ததைச் செய்!’ தாயின் குரல் செவிகளுள் ஒலிக்க, எதைத் தயாரிப்பது, தேவையான பொருட்கள், செய்முறை என்று ஒரு கடதாசியில் குறித்துக்கொண்டாள்.

 

 

error: Alert: Content selection is disabled!!