அழகிய சவால் நீ 20 – 1

அத்தியாயம் 20

 

‘The love of food is the only love that does not deceive.’

– George Bernard Shaw

 

லிசி!

 

‘நீ அன்பு செய்வதற்கு மட்டுமே தெரிந்தவள். ஆச்சரியமானவள்!’

 

அவர் கணவர் டெனிஸ் வாயிலிருந்து அடிக்கடி இந்த வார்த்தைகள் உதிரும். சிறு சிரிப்போடு கடந்து விடுவார், லிசி. குளுகுளு பாராட்டுகளைப் போலவே கடும் தோல்விகளை, ஏமாற்றங்களையும் கடந்து விடவே நினைப்பவர் அவர். அதற்காகத் தன் முழுப்பலத்தையும் பிரயோகிக்க அவர் என்றுமே தயங்கியதில்லை.

 

அவரின் இத்தனை ஆண்டு வாழ்வில் கிடைக்கத்தரிய பொக்கிசம், அவர் உயிர் நண்பனாகிய டெனிஸ் வாழ்க்கைத் துணையாகியது என்றால், நடந்தே இருக்கக் கூடாத விடயம், ஒரு மனிதனின் சந்திப்பு! தன் முழு அன்புக்கும் கவனிப்புக்கும் கரிசனைக்கும் அவன் ஒருவனே என்று சில ஆண்டுகள் வாழ்ந்தவர், லிசி. அதன் பயன், அவனால் மனதளவில் பலமாகத் தாக்கப்பட்டிருந்தார். மிகக் கேவலமாக அவமானப்படுத்தப்பட்டார் என்றுதான் சொல்வார், லிசி.

 

அவன், ஆரோன் டேல்! அவன், அவரைத் தன் தேவைகளுக்கான ஒரு சடப்பொருளாகப் பாவித்திருந்தாலும் லிசி, அவன் மீது வைத்த உண்மையான நேசத்துக்குத் தன்னையுமறியாதே அதி அற்புதப் பரிசொன்றையும் வழங்கியிருந்தான்.

 

லிசியின் பார்வை முன்னாலிருந்த சுவருக்கு உயர்ந்தது. அவர் மூன்று பிள்ளைகளும் அங்கிருந்து சிரித்தார்கள்.

 

அதில், நடுவில் இருந்த மூத்த மகள்… அவள், அவனால் அளிக்கப்பட்ட பரிசு என்றது உண்மையே என்றாலும் அந்த வகையில் சிந்திக்கவே முடியவில்லை, என்றுமே விரும்பியதும் இல்லை.

 

‘என் மகள்’ என்று, அவள் சிறு செய்கையிலும் பெருமைகொள்ளும் டெனிஸ் தான் அவளில் பெரும்பாலும் தெரிகிறார்!

 

தலையை உலுப்பிக்கொண்டார், லிசி. கையில் இருந்த கைப்பேசியை பார்த்தபடி கடந்த காலத்துக்கு இழுபட்ட மனத்தை அதன் போக்கில் விடுவது நல்லதாகப்படவில்லை. பயனில்லா விடயங்களை, அதுவும் நாம் பட்ட காயங்களை, ஏமாற்றங்களை மீண்டும் மீண்டும் புரட்டிப் பார்ப்பதால் பிரயோசனம் என்று எதுவுமே கிடைக்கப்போவதில்லை. ‘நமக்கானது மட்டுமே நம்மோடு இருக்கும்.’ என்று, கடந்து வந்து விட்டவராச்சே!

 

இன்று, இக்கணம், அவர் எவ்வளவு மகிழ்வில் திக்கு முக்காடியிருக்க வேண்டிய தருணம்! அவர் மகளருகில் இருந்திருக்க வேண்டிய தருணமும் கூட! மகள், தன் கனவு இதுவென்று சென்று வென்றுள்ளாள்! மகத்தான, அரிய வெற்றி.

 

அதை முழுதாக அனுபவிக்க விடவில்லை, அவன். எவனை இந்த ஆயுளில் பார்க்கவே கூடாதென்று எண்ணினாரோ அவன் அங்கு நடுவராக வந்ததும் தன் பிரசன்னத்தைத் தவிர்த்தவர், இன்று, அவன் முகத்தைப் பார்த்து விட்டார்.

 

இவர் பார்ப்பதில் என்ன உண்டு? தொலைக்காட்சியில் சஞ்சிகைகளில் எப்போதாவது காண்பதுதான். ஆனால் அவன்? அதுவும் ஒலிவியாவின் அன்னை என்று இவரைக் கண்டுவிட்டானே!

 

அதைத்தான் அவரால் சீரணிக்க முடியவில்லை. தேடியெல்லாம் வரும் நிலையில் அவன் இல்லை. என்றாலும் மனதுள் பதற்றம் ஊற்றெடுத்து அதிகரிப்பதைத் தடுக்கவும் வழி தெரியவிலை.

 

இவர்களோடுதான் டெனிஸ் பெற்றோரும் வசிக்கிறார்கள். இரு தினங்களுக்கு முன்னர் தான் முக்கியமான உறவினர் வீட்டுத் திருமணம் என்று துருக்கி சென்றிருந்தார்கள்.

 

லிசிக்கு, அந்தப் பெரிய வீட்டில் தனிமை கழுத்தை நெரித்தது. தனிமை மட்டுமா? உதறித் தள்ளி விட முடிந்தாலும் விடாது தொல்லை செய்த கடந்தகாலம் மனவழுத்தத்தை உச்சமாக்கியது.

 

மகள் இதையெல்லாம் அறிய நேர்ந்தால்? அவள் மனநிலை எந்தளவுக்குத் தாக்குப்படும்? அதுதான் அவரின் பிரதான பயமாக நின்றது. மீள்கின்ற வழி தெரியாது தடுமாறிப் போனவர், விறுவிறுவென்று தயாராகி தன் பேஸ்ட்ரி ஷொப் சென்றுவிட்டார்.

 

வேலை, அதுவே மனத்திற்குப் பிடித்தமானது என்றால் எந்தவிதமான துன்பமோ அழுத்தமோ சற்றேனும் விடுதலை கிடைக்குமே!

 

ஆறுமணிக்கு மூடிவிட்டு வீடு வந்தவரை மீண்டும் மீண்டும் அதே கடந்தகாலம் சீண்டிப் பார்த்தது.

இந்நிலையில் அவரைக் காப்பது என்றால் ஒருவரால்தான் முடியும். கணவரை நாடியது உள்ளம். இன்றுவரை தன் துன்பம் அனைத்திலும் உற்ற நண்பனாக துணை நிற்கும் கணவருக்கு அழைக்க உண்ணியவர், அழைப்புமணி கிணுகிணுக்க யோசனையோடு எழுந்தார்.

 

கணவர் பிள்ளைகள் நாளை தானே வருவதாகச் சொல்லியிருந்தார்கள். கதவைத் திறந்தவர், “ஆ!” அதிர்வோடு பின்னால் நகர்ந்தார். இடி தாக்கியது போலிருந்தது.

 

மேற்கில் மறைந்துகொண்டிருந்த சூரிய ஒளி எதிரில் நின்ற மனிதனை மஞ்சள் ஒளியால் தழுவி இருந்தது. அவரை, இந்த இடத்தில் இப்போது சற்றுமே எதிர்பார்க்கவில்லை. ‘அப்படியென்றால்?’ லிசியின் நெஞ்சம் அதிர்ந்தது.

 

இத்தனைக்குள்ளும் வாயிலில் நின்றவரை நிமிர்வாக எதிர்கொள்ள முயன்றார்.

 

அதே ஆழ்ந்த பார்வை! ஆரோனின் கலங்கிச் சிவந்த விழிகளும் இறுகிக் கிடந்த முகமும் லிசியின் இதயத்தை டமார் டமாரென்று அடிக்கச் செய்தது. மனதுள் மூண்ட வெறுப்போடு வாய் திறக்க உண்ணியவர், “உள்ளே வா என்று அழைக்க மாட்டியா லிசி?” என்றபடி உள்ளிட்டவரை நெருப்புப் பார்வை பார்த்தார். வலக்கரம் வெளிப்புறத்தை நோக்கி நீண்டிருந்தது.

 

“ஓ! வெளியே போ என்கிறாய்!” என்றபடி, இகழ்ச்சியாகச் சிரித்தார், ஆரோன்.

 

“உன்னோடு இங்கு தங்கியிருக்க நான் வரவில்லை லிசி!” கடினமாகவே சொன்னார்.

 

லிசியின் முகம் ரௌத்திரமானது. என்ன வார்த்தை சொல்லிவிட்டான்! “உன் நிழல் கூட என் வீட்டுக்குள் விழ விட நான் தயாராக இல்லை என்கிறேன், நீ என்ன கதை அளக்கிறாய்? மரியாதையாகச் சொல்கிறேன், உன்னோடு ஒரு வார்த்தையும் கதைக்க நான் தயாராக இல்லை. வெளியே போய்விடு!” குரலுயர்த்திச் சீறினார்.

 

“நீ எப்படியெல்லாம் என்னை அவமரியாதை செய்தாலும் நான் அறிந்துகொள்ள வேண்டிய விசயம் தெரிந்தால் மட்டுமே போவேன் லிசி! உனக்கு என்று அருமையான கணவர், பிள்ளைகள் என்று இருக்க, இன்னுமா என்னை நினைத்துக்கொண்டு இருக்கிறாய்? இல்லையேல் இத்தனை வருடங்கள் கடந்த பின்னும் இந்தக் கோபம், வெறுப்பு ஏன்?” கடினமாக வார்த்தைகளைத் துப்பினார், ஆரோன் டேல்.

 

ஒலிவியா தன் மகள் என்றால், அதை எப்படி இவள் மறைக்கலாம் என்ற கோபம், லிசியை அவமரியாதை செய்யவும் வருத்தவும் முனைந்ததில் கேட்டுவிட்டார்.

 

பளார்!

 

அறைந்திருந்தார், லிசி.

 

“நீ… நீ ஒரு நன்றி கெட்டவன்! சுயநலவாதி! ஏமாற்றுக்காரன்! இங்கு யார் உன்னைப்போன்ற கேடு கெட்டவனை நினைத்துக்கொண்டு இருப்பது? இத்தனை வருடங்களில் என்றாவது ஒரு கணம், உன் முன்னால் என் பிரசன்னம் இருந்ததா என்ன? நீயாக என் வீட்டுக்குள் வந்து நின்று கொண்டு என்ன கதை கதைக்கிறாய்? உன் பக்கமே திரும்பாது இருக்கிற என் நிம்மதியைக் குலைக்கவென்று வந்து நிற்கிறாயா?” வெறுப்பும் கோபமுமாகக் கேட்டவர்,

 

“என் குடும்பத்தைச் சந்தித்தாய் தானே? இன்னொருவனை நினைத்து உருகும் ஒரு பெண்ணால் உருவான குடும்பம் போலவா இருக்கிறது?” இகழ்ச்சி முறுவலோடு கேட்டவர்,

 

“என் மட்டில் நீ பூச்சியம்! வெளியே போ!” அதிர்ந்து கூடக் கதைக்கத் தெரியாத அவரின் இனிய நண்பி லிசியா இதுவென்று அதிர்ந்து நின்றவர் நெஞ்சில் கைவைத்து அழுந்தத் தள்ளினார், லிசி.

 

பின்னால் நகர்ந்தது, ஆரோன் உடல்.

 

“போய் விடுகிறேன். என் மகளை என்னோடு அனுப்பி விடு!” ஆழ்ந்து ஒலித்தது அவர் குரல்.

 

“யூ ஆர் அ பிக் …பிக் சீட்டர்! என் மகள் பிறப்புப் பற்றி என்னிடம் எப்படி நீ மறைக்கலாம்?” ஆக்ரோசமாகக் கத்திவிட்டார்.

 

லிசியின் அழகிய முகம் கணம் பேயறைந்தது போல் மாறியது .

மறுகணமே கலகலவென்று வாய்விட்டு நகைத்தார், அவர்.

 

“உன் மகளா? இது என்ன வேடிக்கை? உன் மகள்மார் ஒன்றுக்கு இரண்டு பேராக இலண்டனில் உள்ளார்கள் என்பதை மறந்து விட்டாயா? ஒரு காலத்தில் காமத்தில் மட்டுமே என்னை அணுகியிருந்தாய் நீ!” ஆட்காட்டி விரல் சுட்டலோடு அவர் உதிர்த்த வார்த்தைகள் நெருப்புக் கோளங்களாகத் தாக்கியதில் சுக்குநூறாக உடைந்தார், ஆரோன் டேல்.

 

“நான் உன்னை காதலில் அணுகியிருந்தேன். இல்லையென்று உன்னாலேயே மறுக்கவே முடியாது. என் உண்மையான காதலுக்குக் கிடைத்த பரிசு என் மகள். உன் காமத்துக்கு நீ துப்பி விட்ட வித்து! அவளிடம் இதைச்சொல்லி, அவள் பிறப்பைக் கேவலப்படுத்தப் போகிறாயா என்ன? அதற்கு நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். வெளியே போய்விடு!” பளாரென்று மீண்டும் அறைந்து விட்டார்.

 

“இதை அன்றே உனக்குத் தந்திருக்க வேண்டும். இப்படி என் வீட்டில் வந்து நிற்கத் துணிந்திருக்கவே மாட்டாய்!” வாசலுக்கு வெளியில் வந்துவிட்ட ஆரோன், கனத்த உடலைத் தாங்கித் தள்ளாடி நிற்க முயல்கையில், கதவை அடித்துச் சாத்த முயன்ற லிசி, அப்படியே மயங்கிச் சரிந்திருந்தார்.

 

ஒரு கணம் நடப்பதை ஆரோனால் கிரகிக்க முடியவில்லை. கடைசி நொடிதான் ஒரே பாய்ச்சலில் நிலத்தில் கரம் பதித்து, லிசியின் தலை நிலத்தில் அடிபடுவதிலிருந்து காப்பாற்றியிருந்தார்.

 

“லிசி..லிசி…இங்க பார்!” இரு கன்னங்களிலும் மாறி மாறித் தட்டி எழுப்பிட முனைந்தார். லிசி அசையவே இல்லை.

 

சற்று முன்வரை வார்த்தைகளால் விளாசினார் என்றால்… இது என்ன? மாபெரும் பழிச்சொல்லுக்கு ஆளாகப் போகிறேனா? ஆரோன் இதயம் எக்குத்தப்பாகத் துடித்தது. நன்றாகவே பயந்து போனார்.

 

அடுத்த சில நிமிடங்களில், அவசர உதவிக்கு அழைத்துச் சொன்னவர், லிசியைத் தூக்கி அங்கிருந்த கவுச்சில் கிடத்தி விட்டு, தண்ணீர் எடுத்து வந்து முகத்தில் தெளித்தார்.

error: Alert: Content selection is disabled!!