அத்தியாயம் 23
‘The best kind of love is the kind that awakens the soul and makes us reach for more, that plants a fire in our hearts and brings peace to our minds.’
– Nicholas Sparks
கனத்த நெஞ்சு மூச்சு முட்ட வைக்க, அவ்விடம் விட்டு விரைந்து வெளியேறிவிட வேண்டும் என்ற உந்துதலில் விறுவிறுவென்று நடந்த ஆரோனுக்கு, திடுமென்று ஒன்று நினைவுக்கு வந்தது.
மருத்துவர் ஓய்வு எடுக்கும்படி சொன்ன அறையில் தன் முதுகுப்பையை வைத்திருந்தார். அதோடு, அவர் காற்சட்டைப் பைக்குள் ஒலிவியா வீட்டுத் திறப்புக்கோர்வையும் துர்க்காவின் அன்னையின் கார்த்திறப்பும்.
வேர்த்திடம் கொடுத்தால் சேர்ப்பித்து விடுவான் என்ற முடிவில், வேகமாகத் திரும்பி நடந்தார். லிசி தங்கியிருந்த அறையைத் தாண்டுகையில் கால்கள் தயங்கின. மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு சென்று பையை எடுத்துக்கொண்டு திரும்பினார்.
மீண்டும் லிசி இருந்த அறையைக் கடக்க எத்தனிக்கையில், கால்களோ நகர மாட்டோம் என்று விட்டன.
‘ஒரே ஒரு தடவை’ மனத்தின் இறைஞ்சல் மெல்ல, மிக மெதுவாக கதவைத் திறந்து எட்டிப்பார்க்க வைத்திட்டு. அடுத்த சிலநொடிகளில், லிசி நல்ல உறக்கம் என்று நிருபணம் செய்து கொண்டு உள்ளிடவும் வைத்திருந்தது.
அவரருகில் சென்று நின்று லிசியின் முகத்தையே பார்த்தவர் விழிகள் கசிந்தன. மெல்ல நகர்ந்த வலக்கரம் பட்டும் படாமலும் அவர் தலையை வருடிவிட்டுத் திரும்பியது.
“தேங்க் யூ மை டியர் ஸ்வீட் கேர்ள்!” முணுமுணுத்தவர், திறப்புகளை அங்கிருந்த சிறு மேசையில் வைத்துவிட்டு மறுநொடி வெளியேறியிருந்தார்.
இங்கோ, அவரைத் தேடிக்கொண்டு ஓடிய வேர்த், வைத்தியசாலைக்கு வெளியே வந்திருந்தான்.
பொழுது புலர்ந்து கொண்டிருந்தது. பறவைகளின் ஆரவார ஒலியில் முதன்மையாக கிளிகள் கீச்சிடுவது காதோரம் வந்து மோதியது. இரசிக்கும் மனநிலைதான் இருக்கவில்லை.
முன்னாலிருந்த கார் நிறுத்துமிடத்தில் சிட்னியில் இருந்து இவர்களை அழைத்து வந்த கார் நின்றது. துர்க்கா ஆட்களை வீட்டில் விட்டுவிட்டு வந்து நிற்கச் சொல்லியிருந்தான்.
பாதையின் இருபுறமும் விழிகளை ஓட்டிவிட்டு, சுழன்று எல்லாப் புறமும் பார்த்தவன் முகத்தில் பெருங்குழப்பம்.
“எங்க போய்ட்டார் இந்த மனிதர். ஓ கோட்!” என்றபடி காரடிக்குச் சென்று பார்த்தான். சாரதி, தன் ஆசனத்தில் நித்திரையாகி இருந்தான். இரவிரவாகக் காரோட்டியவன் ஆச்சே! அவனை அருட்டாது, பாதையின் எந்தப்பக்கம் சென்று தேடுவது எனப் புரியாது, ஆரோனுக்கு அழைப்பை விடுத்துக்கொண்டே நிமிர்ந்தால்… வைத்தியசாலைக்குள் இருந்து வந்துகொண்டிருந்தார், ஆரோன்.
“செஃப்!” உரத்து அழைத்துக்கொண்டு ஒரே ஓட்டமாகச் சென்ற வேகத்தில் இறுக்கமாகக் கட்டிப்பிடித்துக்கொண்டான், வேர்த்.
அவன் கரமிரண்டும் அவர் முதுகில் ஆறுதலாகத் தட்டிக் கொடுக்க கொடுக்க உடைந்து போனார், ஆரோன்.
வேர்த் போன்ற இலட்சக்கணக்கானோரின் ஆதர்சனமானவர். இன்று, அவன் முன்னிலையில் மிகவுமே தாழ்ந்து போனவராக உணர்ந்தார். அதிலும் சுய மனிதப் பொறுப்பு, குடும்பம் என்று கதைக்கவிட்டால் சமையலை விடவும் நீளமாக, ஆழமாகக் கதைத்துத் தள்ளுவாரே!
விம்மலை அடக்க முடியவில்லை. வெடித்து விட்டார், ஆரோன். தன்னைத் தானே மிகவும் இழிவாகச் சொன்னபடி அவர் அழ, தேற்றும் விதம் தெரியாது நின்றான், வேர்த். அவன் விழிகளிலும் கண்ணீர் தான்.
“செஃப், உங்களுக்கு நான் சொல்லவா வேண்டும்? நடந்தது நடந்திட்டு. மாற்றவே முடியாதது என்றும் தெரியும். இனி நடக்கப் போவது பற்றி மட்டும் தான் யோசிக்க வேண்டும். காம் டவுன் செஃப்!” தழுதழுத்தபடி அவன் சொல்ல, விலகியவர், “சொறி மேன்!” கண்களைத் துடைத்துக்கொண்டார்.
அதேவேகத்தில், “ஒலிவியா இன்னார் என்று உனக்குத் தெரிந்ததை வெளியில் ஒருவரிடமும் சொல்ல மாட்டாய் அல்லவா?” கேட்டுக்கொண்டே, வலு இறுக்கமாக அவன் கரமிரண்டையும் பற்றிக் கொண்டார்.
“நோ நோ!” என்றவனிடம், “அது வெளியுலகுக்குத் தெரிவதால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை வேர்த். ஷி இஸ் மை பிரைட்! மகிழ்வுதான் கொள்வேன். ஆனால், ஒலிவியா அதை விரும்ப மாட்டாள். முக்கியமாக, அவள் தாய் தந்தை.” என்றவரைப் பார்க்கவே மிகவும் சங்கடமாக இருந்தது, வேர்த்துக்கு.
“நீ என்ன நினைக்கிறாய் என்று விளங்குது வேர்த்.” வருத்தமாகச் சொன்னவர், தன்னைத்தானே வதைத்துக்கொள்கிறார் என்றது அவர் முகபாவனை.
“நான் பயோலொஜிக்கல் பாதர் மட்டும்தான். இவர் என் டாட் என்று அவள் சொல்ல அது போதாதுதானே?” மீண்டும் நிறைந்துவிட்ட விழிகளை மறைக்க விசுக்கென்று மறுபுறமாகத் திரும்பிவிட்டார்.
“நாங்க சிட்னியில் இருந்து வந்த கார் நிக்குது, போகலாம் செஃப்” அவர் கரம்பற்றி நடந்தான், வேர்த். அமைதியாக வந்து பின் இருக்கையில் அமர்ந்தவர், அவனும் ஏறப்போக, “நீ இப்போ எங்கு வருகிறாய்?” என்றதும், “நானும் உங்களோடு வருகிறேன்.” அருகில் ஏறியமர்ந்தான், அவன்.
“உன் உதவி ஒலிவியாவுக்கும் அவள் குடும்பத்துக்கும் தேவைப்படும் வேர்த். நான் போய்க் கொள்ளுவன். கார் கூட தேவையில்லை, என்னை விமான நிலையத்தில் விட்டால் சரி.” என்றவரை, இப்போது உரிமையோடு முறைத்தான், அவன்.
“ஒலிவியாவிடம் சொல்லி, நீ போய் அவரைப் பார் என்ற பின்னர் தான் வந்தேன்.” என்றவன் , ஒலிவியாவுக்கு அழைத்தான்.
ஒலிவியாவோ, தகப்பன் இருந்த விதம் பார்த்தவள் தன்னையுமறியாதே சுதாகரித்து விட்டிருந்தாள். தாய், வைத்தியசாலைப் படுக்கையில். ஒன்றுமேயில்லை என்றாலும் வீட்டிலிருந்தவர் இங்குவரை வந்துவிட்டார். இப்போ பார்த்தால், தகப்பன் ஒற்றை வார்த்தை கதைக்காது இறுகிப்போய் இருப்பது பெரும் அச்சம் கொடுத்தது. வீட்டின் மூத்த மகளாக நிமிர்ந்து நிற்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியது. அவள் சம்பந்தப்பட்ட விடயத்தில் உள்ள சிக்கலைத் தீர்க்கும் பொறுப்பும் அவளுடையதே!
“டாட், இங்கே பாருங்கள், எப்பவோ நடந்து முடிந்ததற்காக இப்ப நம் நேரத்தையும் காலத்தையும் மட்டுமா, உடல் நிலை மனநிலையையும் ஏன் கெடுத்துக் கொள்வான்?” தகப்பன் முகத்தைத் தன்னை நோக்கித் திருப்பினாள்.
“நீங்க ரெண்டு பேரும் கதைத்ததைக் கேட்டுக்கொண்டு தான் நின்றோம் டாட். எனக்கு உண்மையாகவே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இல்லையென்றால் பொய்தானே? ஆனால், அதில் யோசிக்க என்ன இருக்கு டாட். என்னைப் பொறுத்தமட்டில் என் அம்மாவின் கடந்த காலத்தைப் பற்றி விமர்சிக்க எனக்கு உரிமை இல்லை. அவர் என் அம்மா, நீங்கள் என் அப்பா. எங்கள் மூவர் மட்டிலும் துளியும் பொறுப்பு விலகாத பெற்றோர் நீங்கள்!” கணீரென்று சொல்லியிருந்தாள்.
“டாட் என்னைப் பாருங்கள், லிசி என் அம்மா, இந்த டெனிஸ் என் அப்பா. அந்த ஆரோன் டேல், சில மாதங்களுக்கு முதல் அதுவும் இந்தப்போட்டியில் கலந்துகொள்ளப்போய் நேரில் கண்டு அறிமுகமாகிய மனிதர். நான் தூர இருந்து பார்த்து இரசித்த இரசிக்கிற எங்கள் மதிப்புக்குரிய செஃப். அவ்வளவும் தான். உங்கள் மகள் இந்த ஒலிவியா வலு தெளிவாக இருக்கிறாள். அவள் அப்பாவும் அதற்கு ஈடுகொடுத்து இருக்க வேண்டாமா?” கண்ணடித்தபடி கட்டிப்பிடித்து அவரைத் தேற்றினாள், அவர்களின் செல்ல மகள்.
“எல்லாம் கடந்து, நீங்கள் இப்படியிருந்தால் அம்மா மனநிலை இன்னும் மோசமாகும். உங்கள் காதல் மனைவியைப் பார்க்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உண்டு டாட்!” என்றதும் மகளைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதுவிட்டார், டெனிஸ்.
“நீ என் மகள், மூத்த மகள்!” என்றபடி அழுதவர், அவளையும் விம்மி வெடிக்க வைத்துவிட்டார். வைத்தியசாலையில் ஆட்கள் நடமாட்டம் தெரிந்தது. இவர்களைப் பார்த்தபடி சென்றார்கள். அதுவும் சேர, ஒருவர் ஒருவருக்கு ஆறுதல் சொல்லித் தேறிக்கொண்டவர்கள், லிசியின் அறையை நாடிச் சென்றார்கள்.
அந்நேரம் அழைத்தான், வேர்த்.
“சொல்லு வேர்த்” என்றவள் தொண்டைக்குள், செஃப் உன்னோடு நிற்கிறாரா என்ற வார்த்தைகள் சிக்கி நின்றன.
அவருமே மன உளைச்சலோடுதான் சென்றிருந்தார். பெருமூச்சு அவளையும் மீறி வெளியேறியது. தான் அவர் பற்றிக் கேட்பதால் தந்தை காயப்பட்டுவிட்டால்? தவிர்த்துவிட்டாள்.
அவனே, தாம் இருவரும் சிட்னி புறப்படப் போவதாகச் சொன்னவன், தன்னை இங்கு நிற்கும்படி ஆரோன் சொல்வதையும் சொல்லிவிட்டான். ஒரு கணம் மௌனம் காத்தாள், ஒலிவியா.
“நான் இங்கு பார்த்துக்கொள்வேன் வேர்த். ஏதாவது என்றால் உன்னிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்லப் போகிறேன்! கவனமாகப் போயிட்டு கோல் எடு என்ன. அம்மாவைப் பார்க்கப் போகிறோம் பை!” அழைப்பைத் துண்டித்துவிட்டு தந்தையோடு சேர்ந்து நடந்தாள்.
அவள் கதைத்ததைக் கேட்டுக்கொண்டிருந்த ஆரோன் பின்னால் தலைசாய்த்துக் கண்களை மூடிக்கொண்டு இருந்தார். ஒலிவியா தன்னை எங்கே வைத்துள்ளாள் என்பதை இதைவிடவும் தெளிவாக வேறெப்படிச் சொல்வது? அதைத்தானே அவரும் சொல்லிவிட்டு வந்திருந்தார். இருந்தாலும் திடுமென்று கேட்ட செய்தி அவள் மட்டில் ஒன்றுமே இல்லையா? ஒருவகையில் அதுவும் நல்லதுதான் என்று எண்ணியவர் இதயம் கனத்தது. அவர்களைச் சுமந்தபடி கார் நகர்ந்தது.
சாரதியும் வேர்த்தும் கதைத்தபடி வந்தார்கள். ஆரோன் கண்களைத் திறக்கவே இல்லை. நேரம் செல்ல செல்ல நிதர்சனத்துக்குத் திரும்பிய அவர் மனத்தில் மனைவி எட்டிப் பார்த்தார்.
அன்று, மீண்டும் குடும்பத்தை நாடிச் சென்ற போதே, உன்னை விட்டுப் பிரிந்த இந்த இடைப்பட்ட காலத்தில் சில வருடங்களாக எனக்கு ஒரு பெண்ணோடு தொடர்பிருந்தது என்று சொல்லியிருக்கிறார். விக்கித்துப் போனார், சோஃபியா. தொடர்ந்து சொல்லப் போனவரிடமிருந்து எதையும் கேட்கப் பிரியப்படவில்லை, அவர். இருநாட்கள் கணவன் முகம் பார்க்கவே பிடிக்காது சுழன்றவர், அமைதியாக யோசிக்கையில், கணவன் அப்படிச் செய்யத் தானும் ஒரு காரணம் என்றே தன்னைச் சமாதானம் செய்வித்திருந்தார். அதை, ஆரோனிடமும் சொல்லியிருந்தார். அதன் பிறகு இத்தனை ஆண்டுகளில் அந்தக் கதை வந்ததே இல்லை. இப்போது, ஒலிவியா பற்றித் தெரிந்தால்…
நெடிய மூச்சு விட்டார், ஆரோன்.
‘மன்னித்துக் கொள் சோஃபி! என் மகள் ஒலிவியா பற்றி உன்னிடம் சொல்லப்போவதில்லை. லிசிக்கு நான் எதுவுமே செய்ததில்லை. துன்பமும் சிரமமும் மட்டுமே கொடுத்திருக்கிறேன். என் மட்டில் அவளுக்குக் கொடுத்த உறுதியை, சொன்ன வார்த்தையில் இருந்து நான் மாறப்போவதில்லை. என் வாயால் ஒலிவியா பற்றிய பேச்சை எப்போதுமே எடுக்கப்போவதில்லை!’ மனதுள் உறுதியாக முடிவெடுத்தபடிதான் பயணப்பட்டார்.
ஆமடேலில் வைத்தியசாலையில்…
தகப்பனும் மகளும் உள்ளிடுகையில் எழுந்திருந்தார், லிசி. இவர்களைக் கண்டதும் அதிர்ந்தவர் கைகளை விரித்துக்கொண்டு எழுந்து வர முயல, ஓடிச் சென்று கட்டிப்பிடித்துக்கொண்டாள், ஒலிவியா.
மகள் முகம் வருடி விம்மியவரை, வெருட்டலாகப் பார்த்தாள், அவள்.
“மகள் எவ்வளவு பெரிய வெற்றி பெற்று இருக்கிறாள். நீங்க இங்க வந்து இருக்கிறீங்களே!” கண்ணீரோடு சொன்னவள் முதுகில் தட்டிவிட்டு மனைவியை அணைத்துக்கொண்டார், டெனிஸ்.
விம்மியழுதார் லிசி. ஒலிவியாவுக்கு எல்லாம் தெரிந்துவிட்டது என்பதை ஆறுதலாகச் சொல்லலாம் என்று இருவரும் முடிவு செய்திருந்தார்கள். அதுவே, யார் உங்களுக்குச் சொன்னது என்று கேட்க, “செஃப் தான். வேறு யார்? அவர் உங்கள் ஃபிரெண்ட் என்று கள்ள அம்மா ஏன் சொல்லவில்லை? தெரிந்து இருக்க, இத்தனை நாட்களில் அவரை உண்டு இல்லை என்று பண்ணியிருப்பேனே! இவ்வளவு நேரம் நின்றுவிட்டு, நாங்க வரத்தான் வெளிக்கிட்டார்கள். எங்களோடு வந்த செஃப் வேர்த்தையும் நீங்கள் சந்திக்கவில்லை.” மிகவுமே முயன்று வலு இயல்பாக ஒலிவியா கதைக்க, கணவர் நெஞ்சில் முகத்தை அழுத்திக்கொண்டு அமைதியாக இருந்தார், லிசி.
அவர் வீடு வந்து இரு கிழமைகள் சென்ற பின்னர் ஒரு நாள் கணவர் மூலம், ஒலிவியாவுக்கு எல்லாமே தெரியும் என்று நடந்ததை அறிந்தவர், ஓடி வந்து அணைந்து அமர்ந்த மகளை உச்சபட்ச அதிர்வோடு நோக்கினார்.
“கூல் மாம்!” அவரைக் கட்டிப்பிடித்துக்கொண்டாள், ஒலிவியா.
இந்த இரு கிழமைகள், அவளையும் நிறையவே யோசிக்க வைத்து ஆயத்தப்படுத்தி இருந்ததில், தாயை நேருக்கு நேராக நிமிர்வாக எதிர்கொள்ளவும் வைத்திருந்தது.
“உண்மை என்றோ ஒருநாள் தெரிய வரத்தான் செய்யும் மாம். ஆனால், காலம் கடந்து தெரிகிற உண்மைக்கு வலு இருக்கிறதா என்றதுதான் கேள்வியே! இந்த விசயத்தில் உண்மைக்கு எந்த விதமான சக்தியோ வலுவோ இல்லை. அதனால் நீங்க யோசிக்கவும் தேவையில்லை! என்ன டாட் நான் சொல்லுறது சரிதானே?” என்று அவர்கள் இருவருக்கும் பெரியவளாக நடந்து, அந்த விடயத்தை இலகுவாகக் கடக்க வைத்திருந்தாள், ஒலிவியா.

