விப்ட் கனாஷ் மிக்சை அதனுள் போட்டு அடிக்க முனைந்தால் அது வேலை செய்யவில்லை. நேரத்தைப் பார்த்தபடி, திரும்ப திரும்ப முறுக்கவும் அசையவில்லை.
“வேறு ஒன்றை எடுப்பம்.” வியர்வை முத்துகள் அரும்ப, அருகில் வைத்திருந்த டிசுவால் துடைத்துக் குப்பைக் கூடைக்குள் போட்டபடி முடிவுக்கு வர, “பிளக் பொயின்டில் இப்படிப் போட்டால் மட்டுமே வேலை செய்யும்.” நமுட்டுச் சிரிப்போடு மாட்டிவிட்டுச் சென்றது, வேறு யார்? சாட்சாத் தோமஸ் வேர்த் தான்.
‘ஓ ஒலிவ்யா! என்ன செய்கிறாய்?’ தன்னைத்தானே சாடிக்கொண்டே, அதை, ஃபிளஃபியாக(fluffy) அடித்தெடுத்து, பைப்பிங் பாக்கில் இட்டு குளிரூட்டியில் வைத்துவிட்டு வந்தாள்.
ஒரு மைக்ரோவேவ் சேஃவ் பவுலில் டெம்பெர்ட் வைட் சொக்லேட் டிஸ்க் (Tempered Chocolate Discs) இட்டு, முப்பது செக்கன்கள் அளவில் வைத்தெடுத்து, நன்றாக விஸ்க் செய்து கலந்துவிட்டு, பேக்கிங் பேப்பரில் மெல்லிய லேயராகப் பரவி விட்டாள். அது இறுகிய கையோடு, ஸ்ட்ரோபெரி பவுடர் தூவி விட்டு, இரண்டு சென்ரிமீற்றர் மெட்டல் ரிங் கட்டர் எடுத்து அதன் வாயைச் சூடாக்கி வெட்டி எடுத்து வைத்தாள்.
“அப்பாடா எல்லாம் ரெடி!” சொல்லிக்கொண்டே நேரம் பார்க்கவும் இடையிடை நேரத்தை நினைவுறுத்திக்கொண்டு வந்த கிறிஸ்டினா, “மை டியர் கண்டஸ்டண்ட் பைவ் மினிட்ஸ் மோர்!” சொல்லவும் சரியாக இருந்தது.
ஓடிச் சென்று, கறுப்பு வட்ட வடிவிலான சேர்விஸ் பிளேட் எடுத்து வந்தாள். மினுங்களான கற்பாறை போலிருந்தது, அது. கோல்டன் பிரவுன் நிறத்திலிருந்த பேஸ்ட்ரியை எடுத்து நீளவாக்கில் இரண்டாக்கினாள். அடிப்பகுதியில் நெளிநெளியாக ஸ்ட்ராபெரி ஜெல் வைத்து, மேலே பிஸ்தா கிரீமை தடவி மறுபாதியால் மூடினாள்.
‘அப்படியே சாப்பிடு ஒலிவியா!’ நாக்கில் நீருறியது.
‘பிறகு, முதல் ஆளாக வெளியே போவாய் நீ!’ எச்சரித்தபடி, மேலே அலையலையாக விப்ட் கனாஷ் போட்டு, புளிப்பு ஸ்ட்ராபெரி ஜெல் கட்டிகள், வைல்ட் ஸ்ட்ராபெரிகள், கோல்டு லீஃப் மற்றும் டெம்பெர்ட் வைட் சொக்லேட் டிஸ்க் என்பவற்றால் அலங்கரித்தாள்.
அருகில் கொஞ்சமாக பிஸ்தா கிரீமை ஓவல் வட்டமாக வைத்து, அதன் மீதும் அலங்கரித்துவிட்டுப் பார்க்கையில், அவளுக்கே, அவளை நினைத்துப் பெருமையாக இருந்தது.
“பிறகென்ன? குட் ஜொப் மை டியர்!” சத்தமாகச் சொல்லி, தன் முதுகில் தானே தட்டிக்கொண்டாள். முன்னால், அருகில் நின்றவர்கள் திரும்பிப் பார்த்து முறுவலித்தார்கள். அதுமட்டுமில்லாது, ‘வாவ்! வொண்டர்ஃபுள்!’ காதுகளை உரசின.
“லாஸ்ட் டென் செக்கன்ஸ்!”
பிளேட்டை வடிவாகச் சுத்தப்படுத்தினாள், ஒலிவியா.
“ஸ்டெப் அவுட்!” என்றதும் போட்டியாளர்கள் அனைவரும் கைகளை உயர்த்திக்கொண்டு அப்பால் தள்ளி நின்றார்கள்.
தாமதியாது, வெளியே காத்திருங்கள் என்று அனுப்பிவிட்டார்கள். போட்டியாளர் எண்ணிக்கை அதிகமாக இருக்கையில் இப்படித்தானாம். அந்த இடைவெளியில் சூடாக, ஃபிரெஷாக உணவுகள் இருக்கையிலேயே, நடுவர்கள் எல்லோர் பதார்த்தங்களையும் சுவை பார்த்து முடிவுக்கே வந்து விடுவார்களாம். அந்தக் கையோடு அனைத்தும் குளிரூட்டிக்குச் சென்று விடும். அருகில் நின்ற பெண்ணொருத்தி சொல்லிக்கொண்டு நின்றாள். பிறகு, நாம் கொண்டு போய்க் கொடுக்கையில் குளிர்ந்த உணவைக் கூட இரசித்து உண்பது அநேகம் கமராவுக்காக என்றும் சொன்னார்கள். சுவையான உணவாக இருந்தால் குளிர்ந்து இருந்தால் என்ன? பிளேட்டை வழித்தெடுத்து விடுவார்கள் என்றான், இன்னொருவன்.
வெளியே காத்திருந்த போட்டியாளர்களைச் சும்மா இருக்க விடவில்லை. இன்றைய சமையல் அனுபவங்கள், அதில் இருந்த சிரமங்கள், சவால்கள், தடுமாற்றங்கள் என்று ஒவ்வொருவராகப் பேட்டி எடுத்தார்கள். மீண்டும் அவர்களை உள்ளே அழைக்கையில் சமையல் செய்த அறிகுறியே இல்லை. அவ்விடம் பளிச்சென்று இருந்தது.
மூன்று பேரும், ஒவ்வொருவராக அழைத்து ருசி பார்த்தார்கள். வாய்க்குள் வைக்கையிலேயே ஆரோன் டேல் பார்க்கும் பார்வை, முன்னால் நின்றவர்களுள் குளிர் பரப்பியது.
ஐயோ, நன்றாக இல்லையோ என்று நினைத்தால் வெகுவாகப் பாராட்டினார்கள். சிறு சிறு நகைச்சுவைகளோடு உன்னிப்பாக ஆராய்ந்து திருத்தங்கள் சொன்னார்கள். நிறைகளை மனமுவந்து பாராட்டினார்கள்.
உன்னிடம் இருந்து நாங்கள் தெரிந்து கொள்ள நிறையவே இருக்கிறது என்ற வகையில், மிகவும் பணிவுடன் போட்டியாளர்களை நடத்தியது, அவர்களையும் அறியாது மிகவுமே திடம் கொள்ள வைத்தது.
இதுவரை நான்கைந்து பேருக்கு மிக மிக நல்ல பாராட்டு. இதோ, அவளை அழைப்பார்கள் என்று காத்திருக்க காத்திருக்க அந்தச் சந்தர்ப்பமே வரவில்லை.
அன்று, விடிய வெள்ளன நான்கு மணிக்கெல்லாம் எழுந்து விட்டாள், ஒலிவியா. இன்றைய நாள் பற்றிய பதற்றம், சரியான நித்திரை கூட இல்லை. சாப்பாடும் தான்.
இப்படியே எவ்வளவு நேரம்தான் நிற்பதாம். கால் மாற்றி மாற்றி நின்று பார்த்தவள் பார்வை, கேக் சாப்பிடும் கமராமேனில்.
கை நீட்டி ஒரு துண்டை வாங்கி ஒரு கடி கடித்துவிட்டுப் பார்த்தால் ஆரோன் பார்வை அவள் மீது தான்.
லபக்கென்று வாய்க்குள் அடைந்து விட்டாள்.
“ஒலிவியா… டைம் டு ஷோ ஒன்!” சற்றே எட்டி அவள் முகம் பார்த்துச் சிரிப்போடு அழைத்தான், வேர்த். இந்த இருபது பேரில் ஒரு குரங்குப் பெண் அவள் என்று இப்போது அவர்களுக்கு வெட்ட வெளிச்சமாகி இருக்கும். சந்தோசமாகவே நினைத்துக்கொண்டாள், ஒலிவியா.
கரங்கள் பிளேட்டை எடுத்துக்கொண்டது. நாலைந்து அடிகளும் வைத்துவிட்டாள். வாய்க்குள் அடைந்தது உள்ளே போகாதாம். திரும்ப ஓடி வந்து இரண்டு மிடறு தண்ணீர் அருந்திவிட்டு மீண்டும் நகர நினைக்கையில், மைக் முன்னால் நீண்டது. அவளுக்கு, அந்தச் சில நிமிடத் தாமதம் இப்போது தேவைப்பட்டது. என்றாலும் சட்டென்று எதுவுமே சொல்ல வரவில்லை. தயார் செய்கையில் இல்லாத பதற்றம் பிடித்துக்கொண்டது. எச்சில் விழுங்கி, தன்னைத் தானே தட்டி நிமிர்ந்து நிற்கச் செய்தாள், ஒலிவியா.
“இந்த டிஷ், என்னை ஒரு குக் ஆக அடையாளப்படுத்துகிறது. பார்த்தால் இலகு போல் இருந்தாலும் தயாரிப்பது அவ்வளவு எளிதல்ல. மிகவும் நுணுக்கமான செய்முறைகளைக் கொண்டது.” என்றவள்,”திஸ் இஸ் வாட் ஐ லவ் டு டூ!” வர்ண நிறங்களோடு கண்ணைக் கவர்ந்த எக்லாயரை பெருமையாகப் பார்த்தபடி சொல்லிவிட்டு நிமிர்வாகவே நகர்ந்தாள்.
“வாட் இஸ் தட் ஒலிவியா?” கேள்வியெழுப்பினார், கிறிஷ்டினா.
“தட் இஸ் A Pistachio Strawberry Eclair”
மாறி மாறி அவளையும் எக்லயரையும் பார்த்த ஆரோன் டேல் கண்கள் மெல்ல மெல்ல இரசனையோடு விரிந்தன.
“திஸ் இஸ் பியூடிபியுல் அண்ட் பிரத் டேகேன். அன்பிலிவபல்!” இடக்கையால் வாய் பொத்தி அவர் நின்ற தோரணை வெகு வெகு இரசனைக்குரியது. அவருக்கே உரிய தோரணை. அவளுக்கும் அப்படி நிற்க வேண்டும் போலிருந்தது. பல தடவைகள் தொலைக்காட்சியில் பார்த்த தோரணை, இன்று, அவள் சமையலுக்கு!
அவள் விழிகளில் பளபளப்பேறியது. வீடியோ கமரா அவள் வதனத்தை ஜூம் பண்ணியது. அந்தச் சந்தோசமான விழிகளின் ஈரத்தைத் தன்னுள் பத்திரப்படுத்தத் தவறவில்லை, அது.
‘நான் வெளிப்படையாக அழுது விடுவேனோ!’ கட்டுப்படுத்தப் போராடினாள், ஒலிவியா.
“நீ சமையல் செய்யும் பொழுது இப்படி ஒரு டிஷ் வரும் என்று உண்மையாகவே நான் நினைக்கவில்லை.” கண்ணடித்துச் சிரித்தார், ஆரோன்.
“அதுவும் செல்ஃபீ எடுக்கவே வந்த மாதிரி நின்றவரிடம் இருந்து…” கடித்தான், வேர்த்.
“தட்ஸ் எ பிராண்ட் கவர் ஒஃப் தி குக்கிங் மகசின்!” வியப்போடு சிலாகித்தார், கிறிஸ்டினா.
“மவுத் வோட்டரிங்! ஷால் வீ டேஸ்ட்!” என்றபடி, முதல் ஆளாகச் சுவை பார்த்தார், ஆரோன்.
“யூ நெயில்ட் த எக்லயர்!” அவள் விழிகளைப் பார்த்தபடி சொன்ன கணம், ‘போதும், இதோடு நான் போட்டியில இருந்து போனாலும் போதும்.’ ஆடி ஓடிப் பறந்தது, அவள் மனம்.
அடுத்து கிறிஸ்டினா, கடைசியாக அனைத்தையும் துளி விடாது இரசித்து ருசித்து உள்ளே தள்ளினான், வேர்த்.
“திஸ் இஸ் மாஸ்டர் செஃப் வின்னிங் டெசர்ட், ஐ நெவர் சீன் த எக்லயர் சோ எலிவேட்டட்!” மனதாரப் பாராட்டினான், வேர்த்.
மூவர் பார்வைகளும் பரிமாறப்பட்டன. முகங்களில் முறுவல்.
இனி நீ போகலாம் என்று சைகை செய்தார்கள்.
“தாங்க்யூ! தாங்க்யூ சோ சோ மச்!” துள்ளிக்கொண்டு திரும்பினாள், அவள். சக போட்டியாளர்களின் கரகோசத்தோடு சென்று தன் இடத்தில் நின்றுகொண்டாள்.
அன்றைய நாள் முடிவில், ஒலிவியாவும் பங்களாதேஷ் சமையல் என்று விருந்தே படைத்த ஷகீராவும் ‘இம்யூன் பின்’களை நெஞ்சில் தாங்கிக்கொண்டு வாகனத்தில் ஏறினார்கள். அந்தப் பின்னை அவளுக்கு அணிவித்தது, செஃப் ஆரோன் டேல். கண்கள் கலங்க அவரைக் கட்டிக்கொண்டாள், ஒலிவியா.
“உன்னிடமிருந்து நிறைய நிறைய எதிர்பார்க்கிறேன் பெண்ணே!” முதுகில் தட்டி மனதார வாழ்த்தினார், அவர். அந்தப் பாராட்டு, விளையாட்டு, சேட்டை, பகிடி தவிர்த்து இறுதிவரை ஓட வேண்டும் என்ற உறுதியை அவளுள் விதைத்திருந்தது.
அதோடு, அவளுக்கு இன்னொரு மிகப்பெரிய மகிழ்வு! தோமஸ் வேர்த் மட்டும் இல்லை, மற்றைய இரு நடுவர்களோடும் சுயமிகளை எடுத்திருந்தாள். அவற்றை, மீண்டும் மீண்டும் இரசித்துப் பார்க்க கைப்பேசி தான் அவள் வசமில்லை. போட்டி விதிகள் பிரகாரம், அவை நிகழ்ச்சிக் குழுவிடம்.

