அழகிய சவால் நீ 5 – 1

அத்தியாயம் 5

 

‘Cooking is like love. It should be entered into with abandon or not at all.’

Harriet Van Horne

 

மறுநாள் அதிகாலை…

 

கிர்ர்ர்ர்… கிர்ர்ர்ர்… கிர்ர்ர்ர்…

 

எங்கோ ஆழத்தில், மெத்து மெத்தென்ற மெத்தையில் ஆனந்தசயனத்தில் இருந்தவளை வலுக்கட்டாயமாகப் பிடித்திழுத்து வந்தது, எலாரம் சத்தம்.

 

ஒட்டி விட்டது போல் பிரிக்க முடியாது கிடந்த இமைகளை, மெல்ல மெல்லச் சற்றே விரித்து நேரம் பார்த்தாள், ஒலிவியா.

 

“அடோய்… Levi Hutchins இது நீ தயாரித்த எலாரமா? மம்ம்ம்ம்ம்…மீ!” முனகலோடு குப்புறப்படுத்து விட்டாள்.

 

இதுதான் சாட்டென்று, பிரியமனமின்றித் தவித்து நின்ற உறக்கம் லபக்கென்று தன்னுள் இழுத்துக்கொண்டது.

 

ஐந்து மணிக்கு வைக்க வேண்டிய எலாரம் தவறுதலாக நான்கில் வைத்தது என்னவோ அவள் தான். பிறகு, அமெரிக்கரான Levi Hutchins முதன் முதலாக 1787 ஆம் ஆண்டில், தன் தேவைக்கு என்று மட்டுமே உருவாக்கிய அதிகாலை நான்கு மணிக்கு மாத்திரம் அடிக்கும் எலாரமோ என்று எரிச்சல் அடைந்தாள். இது என்னவோ, பிரான்ஸ் கண்டுபிடிப்பாளரான Antoine Redier 1847 கண்டுபிடித்த எலாரமின் வழித்தோன்றல் தான்.

 

அடுத்து, கதவில் விழுந்த டொக் டொக் சத்தமே அவளை விழிக்கச் செய்தது.

 

“யாரது?”

 

“நான் மியா, எழும்ப இல்லையா நீ?”

 

“இல்ல. இன்னும் கொஞ்ச நேரம்…” என்றபடி நேரத்தைப் பார்த்தவள் துள்ளி எழுந்து நின்றாள்.

 

“ஓ கோஷ்! ஓல்மோஸ்ட் சிக்ஸ்!” கத்திவிட்டாள்.

 

“அதேதான். நேரத்துக்கே போக வேண்டுமாம். கெதியா வெளிக்கிடு!” அவள் சென்றுவிட்டாள்.

 

அதன் பின்னர், நிகழ்ச்சிக் குழுவினர் தம் பங்கிற்கு வந்து அருட்டிக்கொண்டேயிருந்தார்கள். ஆற அமர இருக்க விடவில்லை. இப்படி, அடிக்கொரு தடவை நினைவூட்டப்பட்டுப்பட்டு ஒருவாறு எட்டு மணியளவில் சொகுசுப் பேருந்தை நிறைத்திருந்தார்கள்.

 

அடுத்த நாளுக்கான இம்யூன் சேலஞ் ஷூட்டிங் இங்கிருந்து ஏறக்குறைய மூன்று மணித்தியால தூரத்தில் உள்ள பெரிய பண்ணையில் நடக்கவிருந்தது.

 

அது ஒரு குக்கிராமம். முந்நூறு குடும்பங்கள், மொத்தமாகவே ஆயிரத்துச் சொச்சம் பேர்கள் தான். அத்தியாவசிய தேவைகளோடு, ஆரம்ப இடைநிலைப் பாடசாலை என்று உள்ள நவீன கிராமம் தான். இறைச்சி தான் அங்கு பிரதான உற்பத்தி.

 

“என்ன என்றாலும் அந்த ஊர் மக்கள் தொகையாக வருவார்கள் என்று நினைக்கிறேன். அவர்களுக்குத்தான் சமைக்க வேண்டி வரும்.” முதல் சீசன் போட்டிகளை எடுத்துக் காட்டிச் சொன்னான், ஒருவன்.

 

“அநேகம் குழுவாகவே போட்டி நடக்கும். இறைச்சிதான் பிரதானமாக இருக்கும்.” என்றாள், மற்றொருத்தி. அப்போதே, ஒவ்வொருவர் தலைக்குள்ளும் சமையல் செய்முறைகள் ஊர்வலம் செல்லத் தொடங்கியிருந்தன.

 

“எது எப்பிடியோ, நாளைக்கு நிற்க இருக்க நேரம் வராது!” இப்போதே களைப்பாக உணர்ந்தாள், ஒருத்தி.

 

“என்ன போட்டி, எந்தக் குழுவாக இருந்தாலும் டெஸர்ட் என் பொறுப்பு!” அறிவித்தாள், ஒலிவியா.

 

“எந்தக் குழுவாக இருந்தாலும் டீம் லீடர் நான்!” என்றாள், மியா.

 

இப்படி, மறுநாளைய போட்டி பற்றி, தரப்படக் கூடிய சவால்கள் பற்றிய யூகங்களைக் கதைத்தபடியே தான் பயணம் செய்தார்கள்.

 

இடையில் ஒரு தடவை ஏறியிறங்கி, ஒருவழியாக அந்தப் பண்ணைக்கு வந்து சேர்ந்தார்கள். பண்ணைக்கருகில் இருக்கும் பெரிய வீடுகள் இரண்டு இவர்கள் தங்கவென ஒதுக்கப்பட்டிருந்தன. அருகிலேயே நடுவர்கள் தங்கவென ஒரு வீடு, நிகழ்ச்சிக் குழுவினருக்கு ஒரு வீடு என்று எடுத்திருந்தார்கள். பின்புறம், பரந்திருந்த பச்சைப் புல்வெளித் தோட்டத்தில் கொட்டகைகள் போட ஆயத்தங்கள் செய்திருந்தார்கள்.

 

பைகளை வைத்துவிட்டு நிமிர்ந்தவர்களை ஓய்ந்திருக்க விடவில்லை. முன்னரே வந்திருந்த படப்பிடிப்புக் குழுவினரும் நடுவர்களும் ஆயத்தமாகி விட்டதாகச் சொல்லி அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

 

எறித்த வெயிலுக்குப் போட்டியாக, சிலுசிலு காற்று வந்து தழுவியது! முதல் நாள் பள்ளிக்கூடம் செல்லும் சிறுபிள்ளைகள் போல், அனைவரும் இரு வரிசைகளில் நின்றார்கள். ஒவ்வொருவர் எண்ணத்திலும் தம்மோடு இந்தப் போட்டியில் கலந்து கொள்ளப்போகும் குழு அங்கத்தவர்கள் பற்றிய யோசனைதான்.

 

வழமை போலவே, கிறிஸ்டினா, வணக்கத்தோடு வெகு துள்ளலாக நிகழ்வை ஆரம்பிக்க அதே உற்சாகத்தோடு தொடர்ந்தார்,ஆரோன்.

 

“பதினாறு பேர்! ம்ம்ம்… இந்த எட்டும் இப்படித் தள்ளுங்க. நீங்க அந்தப் பக்கம். உங்களுக்குச் சிவப்பு, உங்களுக்கு நீலம்.”

 

கணத்தில் குழுவைப் பிரித்துவிட்டார், அவர். ஒருவரும் இப்படி என்று எதிர்பார்க்கவில்லை. ஒலிவியா, மியா இருவரும் ஒரே குழு. சிவப்பு நிற ஏப்பிரன். குழுவில் உள்ள மற்றைய ஆறு பேருமே சிறந்த நேர்த்தியான சமையல்காரர்கள். அவர்கள் சந்தோசக் கூச்சலோடு ஏப்ரன் அணிய, நீல ஏப்ரன் குழு தொங்கிவிட்ட முகத்தோடு ஒருவர் ஒருவரைப் பார்த்து நின்றார்கள்.

 

நடுவர்கள், இருபக்கமும் உன்னிப்பாகப் பார்த்து நின்றார்கள்.

 

“so இன்றைய போட்டியில் வெல்லும் குழு மொத்தமாகத் தப்பிவிடுவார்கள். ஞாயிறு நடக்க இருக்கும் ‘பிரஷர் டெஸ்ட் நேரம்’, ரிலாக்ஸ் ஆக கேன்ட்ரியில் நிற்பார்கள். தோற்பவர்கள் பிரஷர் டெஸ்ட் மற்றும் எலிமினேஷன் ரவுண்ட் என்று சந்திக்க வேண்டும். முடிவில், ஒருவர் நம்மிடம் இருந்து விடை பெறுவார்.” ஒவ்வொருவராகப் பார்த்தபடி நிதானமாகச் சொன்னான், வேர்த்.

 

எல்லோர் மனதிலும் வெல்ல வேண்டும் என்றது மலையளவுக்கு உயர்ந்து நின்றது. சிவப்பு அணியோ, தமக்குத்தான் வெற்றி என்று நிர்ணயமே செய்து கொண்டது.

 

அடுத்து, சரியாகப் பன்னிரண்டு மணிக்கு உணவு தயாராக இருக்க வேண்டும் என்றார், செஃப் ஆரோன் டேல்.

 

“300 பேர் வருவார்கள்.” என்றதும் போட்டியாளர்கள் வாயைப் பிளந்தார்கள். ஊகம் இருந்தாலுமே, கேட்ட மறுகணமே பதற்றம் துள்ளி வந்து அமர்ந்து கொண்டது.

 

“உங்களுக்கு மூன்று மணித்தியாலங்கள் தரப்படும். ஒவ்வொரு குழுவும் ஸ்டார்ட்டர், மெயின், டெசர்ட் என்று தயாரிக்க வேண்டும்.” என்று கிறிஸ்டினா சொல்லி முடிய, கட் சொல்லிவிட்டார்கள்.

 

என்ன என்ன தயாரிக்க இருக்கிறார்கள் என்று விபரம் கேட்டு, பொருட்களை இன்று நிரப்பி வைப்போம் என்றார்கள். போட்டியாளர்கள் எல்லோருக்குமே வலு சந்தோசம். முதல் முதலாக, மறுநாளைய போட்டிக்கு, என்ன செய்முறை என்று முன்னரே தீர்மானித்துவிட்டார்கள்! நன்றாக யோசித்துச் செய்யலாம்.

 

ஆனால், “சமையல் செய்முறைகள் கூகிள் செய்யவே கூடாது! உங்களுள் கலந்து பேசிக் கொள்ளலாம்.” என்ற வேர்த், எங்கள் பார்வை உங்களில் எப்போதும் இருக்கும் என்றான், ஆட்காட்டி மற்றும் நடுவிரல் இரண்டையும் தன் கண்கள் இரண்டிலும் வைத்து, அவர்களை நோக்கி.

 

இவ்வளவும் வெகு விரைவாக முடிந்திருந்தது.

 

“இண்டைக்கு இவ்வளவும் தானா?” ஒரு குரல் கேட்க, பட்டென்று போட்டியாளர்களிடையே உற்சாகம் பரவியது.

 

அடுத்தடுத்து, சமையல் செய்முறைகளைச் செய்து பார்ப்பது, சுவையும் தரமும் அதிகரிக்க வேண்டிய நுணுக்கங்களோடு தனித்தன்மையோடு எப்படியெல்லாம் சமைப்பது, காட்சிப்படுத்துவது என்று சிந்திப்பதும் புத்தகங்களை வாசித்துத் தேடுவதும் மாஸ்டர் கிளாசஸ் என்றும் பரபரப்பாக, ஓய்வில்லாது திரிந்தவர்கள் ஆயிற்றே! கிடைத்த அன்றையநாள்ப் பொழுதில் சிறிதை அந்தக் கிராமத்தை, அதன் சிறு கடை வீதியைச் சுற்றிவிட்டு அப்படியே பகல் உணவையும் முடித்துவிட்டு வரலாம் என்று மின்னலாகத் திட்டம் போட்டார்கள்.

 

அவர்கள் பரபரப்பை, கொடுப்புக்குள் நெரித்த முறுவலோடு பார்த்துவிட்டுக் கடந்து சென்றான், வேர்த்.

 

அவன் போலவே கொடுப்புக்குள் நெரித்த முறுவலோடு கண்வெட்டாது பார்த்தாள், ஒலிவியா. அவன் கண்டுவிட்டான்.

 

“ஐயோ!” நாக்கைக் கடித்தபடி அசட்டுச் சிரிப்போடு மெல்ல மியாவின் பின்னால் சென்றாள். நின்று பார்த்துக்கொண்டிருந்தவன் சிரிப்போடு அப்பால் நடந்தான்.

 

எல்லோருக்கும் தேநீர், கோப்பி விநியோகித்தார்கள். கடிக்கவும் கொறிக்கவும் கேக், பிஸ்கட் வகைகள் தாராளமாக இருந்தன.

 

அடுத்த அரை மணித்தியாலத்தில் அது நிறைவுற…

 

‘தேனீர் பருக மட்டும்தான் பிரேக் விட்டார்களோ?’ இவர்களை மனதுள் அலற வைத்துவிட்டு, மீண்டும் படிப்பிடிப்பை ஆரம்பித்தார்கள்.

 

போட்டியாளர்கள் மனதுள் எரிச்சல். அது முகங்களில் அப்படியே தெரிந்தது. சிறிதாகக் கூட மலர்வோ சிரிப்போ இன்றி நின்றிருந்தார்கள்.

 

அப்படி நின்றவர்களை, முறுவலோடு ஆராய்ந்தார், ஆரோன் டேல்.

 

“வெல்… இப்ப உங்களுக்கு மாஸ்டர் கிளாஸ் நடக்க இருக்கிறது.” அவர் சொல்லி முடிக்க, போட்டியாளர்களில் சந்தோசமான சலனம். ஏனென்றால், அதில் தான், சமையல் நுணுக்கங்களை அவர்கள் அறிந்து கொள்வது.

 

“இன்று, முதலில் நான்தான் கிளாஸ் எடுக்கப் போறேன்.” என்று அவர் சொன்னதும் அவர்களுள் அப்படி ஒரு குதூகலம். செஃப் ஆரோன் டேல் இவர்களுக்கு எடுக்கும் முதல் வகுப்பு இதுதான். சற்று முன்னர், ஊர் சுற்ற வாய்ப்புக் கிடைக்கவில்லையே என்றதில் இருந்த மனச்சுணக்கமெல்லாம் இருந்த இடம் தெரியாது ஓடி விட்டிருந்தது.

 

அவர்கள் ஆரவாரத்தை வாங்கிக்கொண்டே, சற்றே தள்ளி, அதற்காகத் தயார் செய்யப்பட்டிருந்த இடத்துக்கு நடந்தார், செஃப் ஆரோன். போட்டியாளர்களும் துள்ளளோடு பின்தொடர்ந்தார்கள்.

error: Alert: Content selection is disabled!!