ஒலிவியா மீதான விருப்புக்கும் இந்தப் போட்டிக்கும் தொடர்பேயில்லை, அது தனி. அதோடு, எனக்கு மட்டுமா அவள் விருப்புக்குரியவள்? ஆரோன் டேல், கிறிஸ்டினாவுக்கும் தானே! தன் இளம்பிராயத்தை அவளில் காண்பதாக ஆரோன் டேல் அடிக்கடி சொல்கிறாரே! மொத்த நிகழ்ச்சிக்குழுவும் இந்த சீசனில் ‘ஜட்ஜர்ஸ் பெட்’ ஒலிவியா என்பார்களே! ஏன், சக போட்டியாளர்களுக்கே அவள் பெட்! தன் மனம் அவள் புறம் வழுவுவதை நியாயப்படுத்தப் பார்த்தான், அவன்.
‘எல்லோர் விருப்பும் உன்னதும் ஒன்றா?’ மனதோரம் சீண்டல் குரல் ஒலித்த வண்ணம் இருந்தது.
தான் தயாரித்தவற்றை முதல் ஆளாகச் சுவைத்து, தன்னைத்தானே பாராட்டிக்கொள்ளும் அவள் வழக்கப்படி, இப்போதும் அபிநயங்கள் பிடித்தபடி சமைப்பவளையே பார்த்திருந்தவன்… சின்னச் சிரிப்போடு விழிகளை நகர்த்தினான்.
“இன்றைக்கு எங்களுக்குத் தான் மிகவும் கடினமான வேலை!” என்று குரல் கொடுத்த கிறிஸ்டினா, “மூவரும் மிகவும் அருமையாகச் செய்கிறீர்கள். மூன்று டெசர்ட்டுகளும் பிரபல ரெஸ்டாரண்ட் மெனுவின் தரத்திலும் சுவையிலும் உள்ளது. உங்களைப் பார்த்துப் பெருமைப்படுகிறோம்!” என்றவர், “லாஸ்ட் டென் மினிட்ஸ்!” நினைவூட்டினார்.
ஒருவழியாக, எழுபத்தியைந்து நிமிடங்கள் முடிய,“ஸ்டெப் அவுட்!’ என்று கத்தினார், ஆரோன் டேல்.
கையை உயர்த்திக்கொண்டு சமையல் மேடையை விட்டு விலகிய மூவரும் கட்டிப்பிடித்துத் தம் மகிழ்வைப் பரிமாறிக்கொண்டாலும் மனதுள் பெருந்தவிப்பு. அதையும் மேவி நிமிர்வோடு கேன்ட்ரியைப் பார்த்தாள், ஒலிவியா. உனக்குப் பிடிச்சிருக்கா? ருசி எப்படி இருக்கு? பார்க்க அருமையா இருக்கு ஒலிவியா! என, அங்கிருந்து குரல்கள் தவழ்ந்து வந்தன.
தன் அணியைப் பார்த்துக் கண்சிமிட்டி விட்டு, இரு கட்டை விரல்களையும் உயர்த்திக் காட்டினாள், அவள்.
அதேவேகத்தில் நகர்ந்த பார்வை வெட்டிய மரக்குற்றி போலிருந்த தட்டில் கம்பீரமாக இருந்த ‘Toffee apple’ மீது!
உண்மையில் அவளுக்குத் தன்னை நினைத்துப் பெருமையாக இருந்தது. பதின்நான்கு ப்ரோசஸ் இருபத்தியெட்டு ஸ்டெப்ஸ்… எழுபத்தியைந்து நிமிடங்களை அவள் மிகவும் திறமையாக இலாவகமாகக் கையாண்டுள்ளாள் என்பதன் சாட்சியாக அந்தளவுக்கு நேர்த்தியாக இருந்தது தட்டு! பூரண திருப்தி!
இறுதியாகவே அவள் அழைக்கப்பட்டாள். என்னதான் தன்னுள் திருப்தி பூரணமாக இருந்தாலும் மற்றைய இருவருமே ஈ என்றபடி மகிழ்வோடு திரும்பி வந்திருக்க, தடதடத்த மனத்தோடுதான் சென்று தட்டை அவர்கள் முன்னால் வைத்தாள்.
“என்ன டெசர்ட்?” நெற்றி சுருங்க புதிதாகக் கேட்பது போல் வினவினார், ஆரோன்.
“சொக்லட் மூஸ் கோட்டட் வித் கோகோ பட்டர் அண்ட் கனாஷ் டார்க் சொக்லட் சொயில் அண்ட் ராஸ்பெரி சோர்பட்.”
மெல்லிய சொக்லட் தண்டோடு, சிவந்த ஆப்பிள் ஒன்று, டார்க் சொக்லட் கொண்டு தயாராகிய உதிர்ந்த மண்ணில் அழகாக அமர்ந்திருந்தது. அருகே, சுவைத்துப் பாரேன் என்று உருக ஆரம்பித்திருந்த சிவந்த ராஸ்பெரி சோர்பேட் மற்றும் சிறுசிறு துண்டுகளாக தூவப்பட்டிருந்த ஃபிரெஷ் ராஸ்பெர்ரி பழங்கள்.
நடுவர்கள், விழியெடுக்காது பார்த்து நின்றனர். முதலில் சுதாகரித்து, தட்டைத் தன்புறமிழுத்து ஆப்பிளை சரி பாதிகளாக வெட்டினார், கிறிஸ்டினா.
நடுவில் இருந்து ராஸ்பெரி சோஸ் கசிந்து வழிந்தது. மூவர் பார்வையும் அவளில்! பதற்றமேறிய உடல் மொழியோடு நின்றிருந்தாள், ஒலிவியா. மூன்று தட்டுகளில் பாரிமாறிச் சுவை பார்த்தார்கள்.
ராஸ்பெரி சோர்பேட் இன்டென்சிட்டி
ஸ்மூத்ன்ஸ் ஸ்லைட்னஸ் ஒஃப் த மூஸ்
சொக்லட் ரிச்னஸ் இன் த சொயில் அண்ட் கொக்கோ கோட்டிங்
அண்ட் தி லுங்கிங்… ஓ கோட்! அன்பிலிவபிள்!
மாறி மாறி மூவரும் சொன்னபடிதான் சுவைத்தார்கள்.
மிகுதியாக இருந்ததை அப்படியே தன்புறம் இழுத்துக்கொண்டான், வேர்த். அதை அவன் சுவைத்து இரசித்து உண்ண அந்த மண்டபமே சிரிப்பில் அதிர்ந்தது.
கைகள் இரண்டையும் பின்னால் சேர்த்துப் பொத்தியபடி மூவரையும் பார்த்த படி நின்ற ஒலியாவினுள் சந்தோசம் அலையலையாகப் பொங்கியது.
அதுவே, அவள் டெசர்ட் தான் வெற்றி என்றதும் துள்ளி நெளிந்து வளைந்து ஒரு டான்ஸ் போட்டு விட்டாள். ஓடி வந்து சேர்ந்து இரண்டு ஸ்டெப்ஸ் போட்டுவிட்டு மெல்ல அணைத்து வாழ்த்திவிட்டுச் சென்றான், வேர்த். அவன் கலகலப்பு அங்குள்ள எல்லோருக்கும் தெரியும் என்றாலும் டேல், அவன் முதுகில் செல்லமாக ஒரு அடி போட்டார்.
பின் ஒலிவியாவை அருகே அழைத்தார். அன்போடு வாழ்த்தியவர் அவள் முகத்தையே சில கணங்கள் இமைக்க மறந்து பார்த்திருந்தார். அவருக்கு நான்கு பிள்ளைகள். எவருக்குமே சமையல் கலையில் சிறிதும் நாட்டமில்லை. அதுவே, தன்னைப் பிரதிபலித்த ஒலிவியாவைப் பாசத்தோடு பார்க்க வைத்ததோ என்னவோ!
இதுபோலவே, என்னதான் பதற்றம் இருந்தாலும் அதை மேவிய உற்சாகமும் மகிழ்வுமாகவே போட்டிகளில் பங்கெடுத்து, டொப் 7 தெரிவிற்குத் தயாரானார்கள்.
இடையில் ஒருநாள் விடுமுறை விட்டிருந்தார்கள். அப்படிச் சொல்லிவிட்டாலும் போட்டியின் தரம் பயம் கொள்ள வைத்தது. அந்த நாள் முழுவதும் சமையல் செய்முறைகள் பற்றிய புத்தகங்களைப் படிப்பதும் சமையல் செய்து பார்ப்பதுமாகவே கடந்திருந்தது.
இப்படியிருக்கையில், தொலைக்காட்சியில் இவர்களது டொப் 12 இம்மியூன் சேலஞ் எபிசோட் ஒளிபரப்பாகியது.
அதுவும் ஒலிவியாவின் சந்தோச நடனம் ரசிகர்களை அள்ளியது. செஃப் வேர்த் வேறு சேர்ந்து ஆடியிருந்தானே! சமூக வலைத்தளங்களில் அந்த கிளிப் மின்னல் வேகத்தில் பரவியது.
ஒலிவியா குடும்பமும் நிகழ்ச்சியைப் பார்த்தார்கள். சகோதரங்களும் தகப்பனும் அவள் வெற்றியில் ஆடிக் கழித்தார்கள். தாயாரோ, கண்கள் கலங்க அமர்ந்திருந்தார்.
துர்க்காவோ, “அடியேய் அடியேய் வெறுப்பு ஏத்திறயே!” என்று வாய்விட்டுக் கத்திவிட்டுச் சும்மா இருக்கவில்லை, ஒரு குறும்பான செயலைச் செய்து விட்டாள்.
அதுவே, அன்றொருநாள் செஃப் தோமஸ் வேர்த் புகைப்படத்தருகில் உதடு குவித்து நின்ற ஒலிவியாவின் புகைப்படம், ‘ட்ரீம் கம் ட்ரு மூமென்ட்!’ என்று, இன்ஸ்டாவில் சென்றமர ஏதுவாகியிருந்தது.
அதன்கீழ், ‘அது மட்டுமா? காதலை முறித்த பெருமை தேடிய புகைப்படமாச்சே!’ இன்னொரு சிநேகிதி போட்டுவிட்டாளா! கமெண்ட்ஸ் பகுதி அனுமார் வால் போலானது. அதுவரை, மூவாயிரத்துச் சொச்சத்தில் இருந்த ஃப்ளோவர் தொகை, அந்த ஓர் இரவிலேயே லட்சம் கடந்து போயிற்று.
“செலிப்ரட்டி ஆகிட்டாள் என்ர ஃபிரெண்ட்!” குதூகலித்தாள், துர்க்கா.
அவளுக்குத் தெரியவில்லை, அந்தளவோடு அது நிற்கவில்லை. முதல் மாதிரியே யாரோ ஒரு நல்ல உள்ளம் வேர்த்தின் இன்ஸ்டாவை டேக் செய்து விட, அவன் மட்டுமா? மொத்த ஹோம் குக்கிங் குழுவே இதைப் பார்த்து விட்டிருந்தது.

