அத்தியாயம் 43
ஆதினியும் காண்டீபனும் பேசிக்கொண்டிருக்கையில்தான் எல்லாளனுக்கு டிஐஜியிடமிருந்து அழைப்பு வந்திருந்தது. அதுவே எல்லாளன் சொன்னதுபோன்று என்னவோ நடக்கப்போகிறது என்று சொல்லிவிட அவன் வரும்வரைக்கும் அங்கேயே காத்திருந்தான் காண்டீபன்.
வந்தவன் முகம் சினத்திலும் சீற்றத்திலும் சிவந்துபோயிருந்தது. கதிரவனின் முகம் நன்றாக இல்லை என்றதும் எல்லாளனைக் கேள்வியாக நோக்கினான் காண்டீபன். முன்னே கையில் இருந்த கடிதத்தைத் தூக்கிப் போட்டான் எல்லாளன்.
அதை எடுத்துப் பார்த்துவிட்டு, “ஏன்?” என்றான் சுருக்கமாக.
டிஐஜி காட்டிய வீடியோ கிளிப்பை பற்றிச் சொல்லி, “ஜெயில் வரைக்கும் உன்னைத் தேடிப் போன நான் இன்னும் உன்னை அரெஸ்ட் பண்ணேல்லயாம். நீ காண்டீபன் மாதிரி இருக்கிறியாம். அதால நான் நேர்மையா இந்த கேஸ டீல் பண்ணேல்லையாம்.” என்றான் இறுக்கமான குரலில்.
அவனையே சில கணங்களுக்குப் பார்த்துவிட்டு எழுந்து வந்து அவன் தோளில் தட்டிக்கொடுத்தான்.
“அது மட்டும் இல்ல. வேந்தன்ர கேஸ் சிஐடிக்கு மாறியிருக்கு.” என்றதும் துள்ளி எழுந்திருந்தான் காண்டீபன்.
“இப்ப என்ன சொன்னனீ?” என்று அவன் முன்னே வந்து நின்றான்.
“டேய் என்னடா?” என்றான் எல்லாளன் புரியாமல்.
“இப்ப என்ன சொன்னனீ எண்டு சொல்லு!”
“வேந்தன்ர கேஸ் சிஐடிக்கு மாத்தி இருக்கு எண்டானான்.”
ஒரு கணம் அவனையே பார்த்த காண்டீபன் தலையைப் பின்னுக்குச் சாய்த்துக் கடகடவென்று சிரித்தான்.
அந்தச் சத்தத்துக்கு ஓடி வந்த ஆதினி, கைகள் இரண்டும் இடுப்பில் இருக்க, கால்கள் இரண்டையும் அகல வைத்து நின்று அவன் சிரிக்கும் விதத்தைக் கண்டு திகிலுற்றுப்போய் அவனையே பார்த்தாள்.
அவளைக் கண்டு சிரிப்பு நின்றாலும் முற்றிலுமாக அவன் முகத்தை விட்டுப் போகவில்லை. அவளிடம் வந்து அவள் தோள்களை சுற்றி ஒரு கையைப் போட்டு கடவுள் இருக்கிறான்தான் போல ஆதிம்மா என்றான் அவள் முகம் பார்த்து
என்ன அண்ணா அவன் எதற்காக அப்படிச் சொன்னான் என்று புரியாமல் கேட்டால் அவள்.
ஒன்றுமில்லை என்பதுபோல் அவளிடம் தலையசைத்துவிட்டு மாத்தட்டும் மச்சான் விடு என்றான் எல்லாளனிடம்.
இருக்கிற பிரச்சினை போதாது எண்டு நீயும் புதுசா எதையும் ஆரம்பிக்காத மச்சான்.
அப்பிடி ஒண்டும் நடக்காது. பழைய காந்திக்கு மனச்சாட்ச்சி நிறைய இருந்தது மச்சான். அதான் அவனுக்கு அந்த நிலை. என்றவன் “இப்ப என்ன, என்னை அரஸ்ட் பண்ணப்போறாங்களாமா?” என்றான் அதை பற்றிய கவலை கிஞ்சித்தும் இல்லாத குரலில்.
அதுதான் அவர்களின் திட்டம். அதை சொல்லக்கூட எல்லாளனால் முடியவில்லை. காண்டீபனின் கையணைப்பில் நின்றிருந்த ஆதினியும் அதைக் கேட்டு ஒரு நொடி நிலைகுலைந்துபோனாள்.
அன்று அவன் சிறை சென்றதும், சிஐடி புறம் மாற்றப்பட்டதும், கடைசியாக கையில் விலங்குடன் புறப்பட்டுப் போனதும் கண்ணில் மின்னி மறைந்தன.
ஆனால் அது நொடி நேரம்தான். அவளுக்குள் இருந்த சட்டத்தரணி சட்டென்று விழித்துக்கொள்ள, “அப்பிடி எல்லாம் விடேலாது அண்ணா.” என்றாள் வேகமாக.
கணவன் புறம் திரும்பி, “கேதாகியத் திரும்பி வரச் சொல்லுங்கோ. அவாவை கொண்டு கேஸ் போட வைப்பம். உங்களிட்ட நீங்க திறத்தினை ஆதாரம் எல்லாம் இருக்குத்தானே? அதையெல்லாம் எனக்கு அனுப்பி விடுங்க. இந்தக் கேஸ நான் நடத்திறன்.” என்றாள் வேகமாய்.
“செல்போன் டவர் செக் பண்ணினனீங்களா கதிரவன்?”
“ஓம் மேம். அந்தப் பதினோரு பேரின்ர சிக்னலும் அங்கதான் இருந்தது.”
“பிறகு என்ன? இதே போதுமே எங்களுக்கு. கேதகின்ர செல்போன் டவரையும் செக் பண்ணுங்க. அவான்ர சிக்னலும் அங்கதான் காட்டும். அத வச்சுக் கேதகி அந்த நேரம் அங்க இருந்தவா எண்டு நிரூபிக்கலாம். கேதகின்ர சாட்சி இருக்கு. மிக்கி, மினி உடுப்புகள் வாங்கின கடைல எடுத்த புட்டேஜுகள் இருக்கு. கோர்ட்டும் ஒரு குடும்பத்தையே எரிச்சுக் கொன்றவனை சும்மா விடாது. வேந்தன் எப்பிடி வெளில வாறான் எண்டு நான் பாக்கிறனே.” என்றாள் கோபமாய்.
தன் கைக்குள் நின்று சட்டத்தரணியாகப் பேசியவளையே சிறு சிரிப்புடன் ரசித்திருந்தான் காண்டீபன். அவனைக் கவனிக்காமல், “சம்மந்தன் அங்கிளின்ர கொலை கேஸ்…” என்று சொல்லிக்கொண்டு வந்தவள் நிறுத்திவிட்டுத் திரும்பிக் காண்டீபனைப் பார்த்தாள்.
அவன் கண்ணில் தெரிந்த சிரிப்பில் சட்டென்று இலகுவாகி, “அண்ணா!” என்றாள் சிரிப்புடன்.
சட்டென்று வாய்விட்டுச் சிரித்தான் காண்டீபன். “எப்பிடி?” என்றான் எல்லாளனிடம் விழியசைவால் அவளைக் காட்டி.
“டேய்!” சூழ்நிலையின் தீவிரம் புரியாமல் சிரிக்கிறவனைக் கண்டு பல்லைக் கடித்தான் எல்லாளன்.
“அந்த லொறிகாரனைப் பிடிக்கேலுமா அண்ணா?”
தன் தகப்பனை லொறியால் அடித்தவனைக் கேட்கிறாள் என்று புரிந்து, “நான் நினைக்கேல்லமா. பிளான் மட்டும்தான் என்ர. ஆனா அவன் சிங்களவன். கூலிக்கு வேலை செய்றவன். லொறி நம்பர் பிளேட் மறச்சிருந்தது. இல்லாட்டியும் அது உண்மையான நம்பர் பிளேட்டா இருக்காது. அதைவிட இதுக்காகவே சிவநாதர் அவனை வரவச்சிருக்கோணும். அந்த நேரம் எவன் வந்தா என்ன எண்டு நான் அவனை அறிய நினைக்கேல்ல. ஆனா இந்த கேஸ் நிறைய நாலைக்குப் போகாது.” என்றான் அவன்.
“தேவை இல்லாத வேலை எதையும் பாத்திடாத காண்டீ!” என்றான் எல்லாளன் உடனேயே.
“உனக்கு அண்டைக்கே சொன்னதுதான். இண்டைக்கு எனக்கு நினைவு திரும்பி இருந்தாலும் நான் பழைய காண்டீபன் மட்டுமே இல்லை.” என்றான் உறுதியான குரலில்.
ஆதினிக்கே இந்தக் காண்டீபனைக் கண்டு சிறிதாய் அச்சம் பிறந்தது.
அதைக் கண்டவன் முகத்தில் மெல்லிய வருத்தம் தோய்ந்த முறுவல். சிறு அணைப்பில் அவளுக்குத் தைரியம் கொடுத்துவிட்டு, “இப்ப என்னடா, என்னை அரெஸ்ட் பண்ணுவாங்களா?” என்றான் திரும்பவும்.
“அதுக்கு நீ கிடைக்கோணுமே.” என்றான் எல்லாளனும் இலகுவாய்.
“என்ன சொல்லுறாய்?”
“நீ அவங்களுக்கு கிடைக்க மாட்டாய்.”
ஓடி ஒளிய சொல்லுறியா?”
“பாய முதல் பதுங்குறது பிழை இல்லை எண்டு சொல்லுறன்.”
சில கணங்களுக்கு நண்பன் முகத்திலேயே பார்வையை நிலைக்க விட்டவன் முகத்தில் சின்னதாய்க் குரூர முறுவல் ஒன்று பரவிற்று. அதனோடே சரி என்பதுபோல் தலையசைத்தான்.
“நான் இஞ்ச வந்துபோனது, அங்க எங்கட வீட்டை வந்து போனது எல்லாத்தையும் விசாரிப்பங்களே.”
“விசாரிக்கட்டும். நாங்க ஆரும் பொய் சொல்லப்போறேல்ல. வந்தது வாசு. அவன் அவன்ர சகோதரனைத் தேடி வந்தவன். அவன் இல்லை எண்டதும் அவன்ர பிள்ளையோட ரெண்டு நாள் இருந்திட்டு போய்ட்டான். அவ்வளவுதான்.”
“மிதி… ம்கூம் மிதுக்கு என்ன சொல்லுறது?” அந்தப் பெயரைச் சொல்கையிலேயே அவன் குரல் கரகரத்துப்போனது.
அவனை நெருங்கி அவன் தோளில் தட்டிக்கொடுத்த எல்லாளன், “கடைசிக் கட்டத்தில நிக்கிறம் மச்சானை. எல்லாம் நல்லபடியா நடக்கும். நீ யோசிக்காத. மிதிலாவோட கதைக்க வேண்டியது என்ர பொறுப்பு.” என்று சொல்லிவிட்டு வரும்போது வாங்கிவந்த புது கைப்பேசி, சிம் எல்லாவற்றையும் அவனிடம் கொடுத்து, அனுப்பிவைத்தான்.
“மச்சான் கவனம்!” என்றான் சட்டென்று.
புறப்பட்டவன் சட்டென்று நின்று திரும்பி, “பயப்பிடாத. இந்தக் காண்டீபனை அவ்வளவு ஈஸியா எவனாலயும் தொடேலாது!” எண்றுவிட்டுப் போனான் அவன்.
*****
தன் வீட்டுக்கு மறுபடியும் எப்போது போவோம், தனிமையான வாழ்க்கை என்றாலும் நிம்மதியான அந்த வாழ்க்கை எப்போது கிடைக்கும் என்று ஏங்கியவள் கேதகி. அதுவே அத்தனை தளைகளில் இருந்தும் அவளை நீக்கி, போ என்று விட்டபோது வெறுமைதான் உண்டாயிற்று.
அதுவும் கொழும்பு வந்து, அப்பார்ட்மெண்டில் அவள் வீட்டு கதவை திறந்ததும் எதிரில் தெரிந்த அன்னையைக் கண்டதும் காரணமே இல்லாமல் கண்ணீர் உகுத்தாள். அதுதான் அவள் கடைசியாக அழுதது.
அதன் பிறகு அழவேயில்லை. எதையும் யாரையும் நினைக்கவும் இல்லை. ஒரு பிடிவாதம். எவ்வளவையோ தாண்டி வந்துவிட்டேன் இதைத் தாண்டுவதெல்லாம் பெரிய விடயமே இல்லை என்று தன்னைத் தானே தேற்றிக்கொண்டு இருக்கையில்தான் ஆதினி அழைத்து விடயத்தை சொன்னாள்.
காண்டீபனுக்காக என்கையில் அவளால் மறுக்க முடியவில்லை. உடனேயே புறப்பட்டுவிட்டாள். எல்லாளன் அவளைத் தனியே வர விடவில்லை. தனியார் செக்கியூரிட்டி நிறுவனம் ஒன்றின் மூலம் இங்கே அவனிடம் அவளைக் கொண்டுவந்து ஒப்படைக்கிற வரை பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்திருந்தான்.
“ஏன் அண்ணா?” என்றாள் யாழ்ப்பாணம் வந்திறங்கி.
“இனி நீங்களும் என்ற பொறுப்பு எண்டு சொன்னேனம்மா.”
அவள் உள்ளம் நெகிழ்ந்துபோயிற்று. அடுத்தநாள் காலையே அவளைக் கொண்டு வழக்குத் தாக்கல் செய்தாள் ஆதினி. எல்லாவற்றையும் விட இனி சிஐடியே நினைத்தால் கூட எந்த ஆதாரத்தையும் அழிக்க முடியா வண்ணம் அந்த செல்போன் டவர் ரிப்போர்ட் முதற்கொண்டு எல்லாளன் சேர்த்த அத்தனை ஆதாரங்களையும் நேரடியாக அவளே நீதிமன்றில் சமர்ப்பித்திருந்தாள்.
*****
வெறி பிடித்த மிருகம் போன்ற நிலையில் இருந்தார் சிவநாதர். ஒவ்வொரு முறையும் அவர் ஒரு திட்டம் போட அது அத்தனையும் படு தோல்வியிலேயே முடிந்தது. கடைசியில் மிஞ்சி இருந்த வேந்தனும் சிறை சென்று, யார் கண்ணிலும் படாமல் வளர்த்த பேரனும் அவர்கள் கண்ணில் பட்டு என்று அடுத்து என்ன செய்வது என்று தெரியா நிலையில் இருந்தார்.
இனியும் காத்திருக்கவே கூடாது என்றுதான் காண்டீபனை மாட்டிவிட்டார். அவனை உள்ளே கொண்டுவந்துவிட்டால் போதும். அத்தனையும் அவர் கட்டுப்பாட்டுக்கு மறுபடியும் வந்துவிடும் என்கிற நம்பிக்கையோடு காத்திருந்தவரின் கைப்பேசிக்கு வந்து விழுந்தது ஒரு வீடியோ
அதை பார்த்தவர் நெருப்பு சுட்டாற்போல் சட்டென்று கையை உதறிக் கைப்பேசியைத் தவறவிட்டிருந்தார். அவர் இதயம் வந்து தொண்டைக்குழியில் துடித்தது. தன் கண்கள் கண்ட காட்சி உண்மைதானா என்றுகூட நம்ப முடியாமல் மனிதர் அலமலைந்துபோனார்.
ஆனாலும் பார்க்காமல் இருக்க முடியாதே. நெஞ்சு அடித்துக்கொள்ள, கைகால்கள் நடுங்க அதை எடுத்துக் பார்த்தார். அனுப்பியிருந்தது வாசு என்று பெயர் பதிந்து வைத்திருந்த காண்டீபன். அதில் சிறை அறையின் இருட்டில் வேந்தன் அரைமயக்க நிலையில் இருக்க, அதற்குள் நுழைந்த இருவர் அவனை ஓரினச் சேர்க்கைக்கு பயன்படுத்திக்கொண்டிருந்தார்கள்.
தொடரும்…

