ஆட்டநாயகன் 44.2

இதற்குள் எல்லாளன் மாதவனோடும் பேசியிருந்தான். கூடவே பழையபடி அந்த வீட்டைச் சுற்றிப் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்தான். கதிரவனோடும் அவனுக்கு நம்பிக்கையான காவல்துறை ஆள்களோடும் அடிக்கடி பேசி, அங்கே என்ன நடக்கிறது என்கிற விடயங்களை அறிந்துகொண்டுமிருந்தான்.

நடப்பவற்றை எல்லாம் பார்த்த மிதிலா மனத்தில் கலவரம் மூண்டது. வரலாறு திரும்புகிறதா என்ன? இதேபோல் எல்லாளன் வந்து நின்று அத்தனையையும் பார்த்ததும், அன்று காலையில் வேலைக்கு என்று அவள் கன்னம் தட்டிச் சொல்லிவிட்டுப் போன கணவன் சடலமாகக் கொண்டுவரப்பட்டதும் கண் முன்னே வந்து போக இடிந்துபோய் அமர்ந்துவிட்டாள்.

“பயமா இருக்கு ஆதினி.” சிறு குழந்தையாய் அவள் முகம் பார்த்துச் சொன்னவளைக் கண்டு அவளுக்கும் நெஞ்சடைத்துப்போயிற்று.

“இன்னொருக்கா அவர் இல்லை எண்டு ஆயிற்றா அதிரனுக்கு அம்மாவும் இருக்க மாட்டா எண்டு உன்ர மனுசனிட்டச் சொல்லு.”

“அக்கா, என்ன இது? அப்பிடி எல்லாம் நடக்காது!” என்று அதட்டிய ஆதினிக்கும் கண்கள் கலங்கிப் போயிற்று.

அதையெல்லாம் கேட்டுக்கொண்டே வந்த எல்லாளன் மிதிலாவை முறைத்துக்கொண்டு கைப்பேசியை நீட்டினான். கைகள் தானாக வாங்கினாலும் யார் என்று கேள்வியாக அவனை நோக்கியபடி காதுக்குக் கொடுத்தாள்.

“மிது.” ஒற்றை அழைப்புத்தான். அவள் உடலில் உயிர் பாய்ந்தது. உள்ளத்தின் உணர்வுகள் எல்லாம் பொங்கி எழுந்தன. அவனுக்கு நினைவு திரும்பிவிட்டதா என்ன?

“தீபன்…” என்றாள் கதறலாய்.

“மிதும்மா!” அவன் குரலும் உடைந்து கரகரத்தது.

“உங்களுக்கு நினைவு திரும்பிட்டுதா?” ஆவலும் கேவலுமாக வினவினாள்.

“ம்.”

“எப்ப?”

“அங்க எங்கட வீட்டை வச்சே.” சற்றே குரல் உள்ளிறங்கச் சொன்னான்.

“இஞ்ச வச்சேவா?” அதன் பின்னால் இருந்த கேள்வியில் அவன் அமைதியாகிப்போனான்.

“மிதும்மா.”

“ம்?”

“அழுறேல்ல. நான் வந்திடுவன்.”

அந்த வார்த்தையே அவளின் பழைய காயங்களைக் கிளறி விடப் போதுமாக இருந்தன. “இப்பிடித்தான் அண்டைக்கும் சொல்லிப்போட்டுப் போனனீங்க. ஆனா வரவே இல்ல.”

அதைக் கேட்டுக் காண்டீபனும் நிலைகுலைந்துபோனான். அவன் வாழ்க்கை இப்படிப் பேரலையில் அகப்பட்ட துரும்பாகச் சிக்கிச் சின்னாபின்னமாகிப்போகும் என்று அன்று அவனும் எண்ணிக்கூடப் பார்க்கவில்லையே.

“எனக்கு உங்களைப் பாக்கோணும் தீபன்.” என்றவள் ஏக்கக் குரலில் தன்னைத் தேற்றிக்கொண்டு, “இந்த முறை கட்டாயம் வருவன். இப்ப ஆரும் என்னை எங்கயும் கூட்டிக்கொண்டு போகேல்ல. நானாத்தான் மறைஞ்சு இருக்கிறன். பாதுகாப்பாத்தான் இருக்கிறன். கவலைப்படக் கூடாது. தைரியமா இருக்கோணும். தம்பி கவனம்.” என்று அவளைத் தேற்றிவிட்டு வைத்தவனுக்கு அவளுக்காகவாவது தான் மீள வேண்டும் என்கிற எண்ணம் உண்டாயிற்று.

எல்லாளன் எதிர்பார்த்தது போலவே அன்று இரவு தேவனின் தலைமையில் நால்வர் அடங்கிய காவல்துறை வாகனம் அங்கே வந்து நின்றது.

அங்கே எல்லாளனைக் கண்டதும் தேவனிடத்தில் மெல்லிய அதிர்ச்சி. அவன் பணியில் இடைநீக்கத்தில் இருப்பது தெரியும். இருந்தாலும் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுக்காமல் இருக்க முடியவில்லை. கம்பீரமான அவன் தோற்றமா, இல்லை எதையும் தைரியமாகக் கையாளும் அவன் குணம் இவனுள் ஆழமாகப் பதிந்துபோயிருப்பதா தெரியவில்லை. “ஹலோ சேர்!” என்று தன்னை மீறிக் கைகொடுத்தான்

“என்ன விசயம் தேவன்?”

“வாசுவத் தேடி வந்திருக்கிறன் சேர்.”

“அவன் இஞ்ச இல்ல.”

“எனக்கு மிஸஸ் காண்டீபனை விசாரிக்கோணும்.”

“விசாரிங்க!” என்றான் மிதிலாவைக் காட்டி.

“தனியா.”

எல்லாளன் மிதிலாவைப் பார்த்தான். அவளுக்குள் நடுங்காமல் இல்லை. ஆனாலும் சரி என்று தலையசைத்தாள்.

மற்றவர்கள் எல்லோரும் தள்ளி நின்றுகொண்டனர்.

“காண்டீபன் இஞ்ச வந்தவரா?”

அங்கே விறாந்தைச் சுவரில் மறுபடியும் மாட்டப்பட்டிருந்த காண்டீபனின் புகைப்படத்தைக் காட்டி, “என்ர கணவர் இறந்து எட்டு வருசத்துக்கு மேலயாகுது.” என்றாள் நெஞ்சைக் கல்லாக்கிக்கொண்டு.

“இல்லையே அவர் உயிரோட இருக்கிறாராமே.”

“அப்பிடி இருந்தா இந்த உலகத்திலேயே அதிகமா சந்தோசப்படுற ஒருத்தி நானாத்தான் இருப்பன்.”

“இருந்தபடியாத்தான் அவர் உங்களத் தேடி வந்திருக்கிறார். இஞ்ச உங்களோடதான் தங்கியும் இருக்கிறாராமே.”

“இஞ்ச வந்தவர் வாசு. என்ர கணவரின்ர சகோதரம்.” உள்ளே அவள் உள்ளம் நடுங்காமல் இல்லை. ஆனால் அவள் பேச்சுச் சின்னதாய் மாறினால் கூட கணவன் உயிருக்கே ஆபத்து என்கையில் அசைவாளா மிதிலா?

“அவர்தான் உங்கட ஹஸ்பண்ட் காண்டீபனாமே.” என்றவனை இப்போது கண்டிப்புடன் பார்த்தாள் மிதிலா.

“உறுதியா தெரியாம ஒரு ஆணைக் காட்டி இப்பிடிக் கதைக்கிறது நாகரீகமா இருக்கா உங்களுக்கு? உங்கட வீட்டுப் பொம்பிளைகளிட்டயும் உருவ ஒற்றுமை இருக்கிறத மட்டுமே வச்சு இப்பிடிக் கேப்பீங்களா?” என்று அவனையே திருப்பி கேட்டாள்.

அவன் முகத்தில் மெல்லிய கருமை படர்ந்தது.

“அவே ரெண்டுபேரும் இரணைப் பிள்ளைகள். அவர் தேடி வந்தது அவரின்ர சகோதரத்தின்ர குடும்பத்தை.” என்றாள் அதே இறுக்கமான குரலில்.

அவனும் விடுவதாக இல்லை. “செத்தது வாசு எண்டும் உயிரோட இருக்கிறது காண்டீபன் எண்டும் சொல்லினமே.” என்றான்.

“அதுக்கு ஆதாரம் இருக்கா உங்களிட்ட?” என்று கேட்டுவிட்டு, “என்ர கணவரின்ர உயிரில்லாத உடம்ப இதே வீட்டில வச்சிருந்துதான் கொண்டுபோய் எரிச்சவே. அது நடந்து எட்டு வருசத்துக்கு மேல ஆச்சு. உங்கட டிப்பார்ட்மெண்ட், கோர்ட் எல்லாம் சேர்ந்து விசாரிச்சு, செத்தது காண்டீபன் எண்டு சொல்லி, அவரைக் கொலை செய்தவேக்குத் தூக்குத் தண்டனையும் வாங்கிக் குடுத்தாச்சு. அதெல்லாம் பொய் எண்டு சொல்லுறீங்களா? இதை நீங்க ஒரு கடிதமா எழுதித் தாங்க. நான் கோர்ட்க்குப் போறன்.” என்று தைரியமாகவே அவனை எதிர்த்து நின்றாள் மிதிலா.

தேவன் கொஞ்சம் தடுமாறிப்போனான். இந்த விடயங்களில் அவனுக்குப் பெரிய தெளிவில்லை. எல்லாளன் விசாரித்த ஒரு வழக்குத் தவறாக இருக்கப்போவதில்லை. இதில் இருப்பவன் காண்டீபன் என்றால் என்ன இது? ஆனால் என்ன மேலிடத்து உத்தரவில் வந்திருப்பவன் அவன்.

“பிறகு ஏன் அவர் இஞ்ச வந்தவர்?”

“என்ன கேள்வி இது? அவர் என்ர கணவர் இல்லைதான். அதுக்காக கணவரின்ர சகோதரம் இல்லை எண்டு ஆகுமா? சகோதரத்தின்ர மகனைப் பாக்க வந்தவர். அவரின்ர அம்மா அப்பா எங்க எண்டு கேக்க வந்தவர்.”

அவள் நினைத்ததை விடவும் தைரியமாகவே அவனை எதிர்கொண்டாள் மிதிலா. அதற்கு என் கணவன் வந்துவிட்டான் என்கிற எண்ணம் கொடுத்த தைரியமா, இல்லை இத்தனை காலத்து வாழ்க்கை கற்பித்த பாடமா, இல்லை சட்டத்துறையும் காவல்துறையும் அவளுக்காக பக்கத்திலேயே நிற்கிறார்கள் என்கிற நினைப்பா அவளுக்குத் தெரியாது. அவனைக் கண்டதும் இருந்த பயம் அவனைக் கையாள்கையில் இல்லை.

நாம் நம்மைப் பற்றி நினைத்து வைத்திருப்பதை விடவும் நாம் தைரியமானவர்கள், துணிவானவர்கள். என்ன, அதை நாமே அறிந்துகொள்வதற்குச் சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் அவசியமாகின்றன. இன்று மிதிலாவுக்கு அமைந்தது. அவளும் அவளைப் பற்றி உள்ளூர ஆச்சரியமாக உணர்ந்தபடியே அவன் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக்கொண்டிருந்தாள்.

“ஆனா உங்கட மாமா செத்த இடத்தில அவரும் இருந்திருக்கிறார்.”

“எனக்கு அதைப் பற்றித் தெரியாது. அது என்ன ஏது எண்டு நீங்கதான் கண்டு பிடிக்கோணும்.”

சின்னவனை விசாரிக்க வேண்டும் என்றவனை எல்லாளன் அனுமதிக்கவில்லை. “பிறந்ததில இருந்து தகப்பன் எண்டுற ஒருத்தனை அவர் பாத்ததே இல்ல. அப்பிடி இருக்க தகப்பன்ர உருவத்திலயே வந்தவனைத் தகப்பன் எண்டு நம்பிக்கொண்டு இருக்கிறார் அந்தப் பிள்ளை. ஏற்கனவே அவரின்ர அப்பாவை அநியாயமா கொன்றாச்சு. இப்ப விசாரணை எண்டுற பெயர்ல அவரை விசாரிக்க நான் விடமாட்டன். இதுக்கு என்ர பெயர்ல ஏதும் கேஸ் போடுறது எண்டா தாராளமா போடுங்க. அதை நான் டீல் பண்ணுறன்.” என்று அதிரன் பக்கம் அவர்களை வரவிடாமல் தடுத்து அனுப்பியிருந்தான் எல்லாளன்.

மாதவனையும் தேவன் விசாரித்தான். காண்டீபனின் உருவத்தில் இருந்தானே தவிர அவன் காண்டீபன்தானா என்று தனக்குத் தெரியாது என்று மாதவனும் சொன்னான். அவன் மறுபடியும் அங்கு வந்தால் அவர்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான் தேவன்.

error: Alert: Content selection is disabled!!