அத்தியாயம் 47
அதுவரை காலமும் தன் சொந்த வாழ்க்கையிலும் சரி, அரசியலிலும் சரி தான் என்று வாழ்ந்து பழகியவர் சிவநாதர். அதற்கு அவரின் செல்வம், செல்வாக்கு, அரசியல் பலம், அதிகார பலம், ஒன்றுக்கு மூன்று ஆண்பிள்ளைகளை வைத்திருக்கிறேன் என்கிற அகங்காரம் என்று பல காரணங்கள் இருந்தன.
காலவோட்டத்தில் அந்த ஆண்பிள்ளைகளை ஒவ்வொன்றாக இழந்த பொழுதுகளில் எல்லாம் அவர் இடிந்துபோனதும் உண்மை. ஆனால் நிலைகுலைந்ததில்லை. அடுத்து என்ன என்று தெளிவாகச் சிந்திக்க முடியாமல் சிதைந்து நின்றதில்லை. அவரின் அரசியல் எதிர்காலம் இருண்டு தெரிந்ததில்லை. அவர் உருவாக்கி வைத்த அந்த உலகம் அவர் கண்முன்னே அழிந்துகொண்டு போவதைப் பார்த்ததில்லை.
ஆனால் இந்த முறை அதையெல்லாம் எந்தக் குறையும் இல்லாமல் காண்டீபனும் எல்லாளனும் அவருக்குச் செய்தனர். அடிக்கு மேல் அடி கொடுத்தனர். அவர் போட்ட திட்டங்கள் அத்தனையையும் தவிடுபொடியாக்கினர். அவர் தன் எதிர்காலம் என்று நம்பிக்கொண்டிருந்த பேரனைச் சிறை அனுப்பினர். நடு மகனின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக்கி, எப்படியாவது தன் செல்வாக்கில் அவனைப் பிணையில் எடுத்து, அப்படியே நாடு கடத்திவிடலாம் என்று அவர் போட்டு வைத்திருந்த திட்டத்தில் மண்ணை அள்ளிப் போட்டனர்.
இப்படித் திரும்பிய பக்கமெல்லாம் படு தோல்வி. அந்தத் தோல்வி அவரின் அகங்காரத்தைச் சீண்டிவிட்டது. அந்த அகங்காரம் அவரை நிதானமிழக்க வைத்தது. அதுதான் யோசிக்காமல் செயற்பட வைத்தது.
அவசரமாக ஒரு கூலிப்படையை ஏவினார். அவர்களும் கிடைத்த பெரும் பணம் தந்த துள்ளலோடு, ஒருவனை இத்தனை பேரால் சமாளிக்க முடியாதா என்கிற மமதையில் புறப்பட்டு வந்திருந்தனர். ஆனால் அந்த ஒருவன் எப்படியானவன் என்பதோ, அவனோடு கைகோர்த்து நிற்பவன் எப்படியானவன் என்பதோ அவர்களுக்குத் தெரியாமல் போயிற்று.
வந்தவர்கள் வசமாக மாட்டிக்கொண்டனர். அப்படியே சிவநாதரையும் மாட்டிவிட்டனர். அவரும் சிக்கினார். இப்போது ஆள் தலைமறைவு.
*****
எக்காரணம் கொண்டும் காண்டீபனை இன்னொரு முறை சிறைக்கு அனுப்பக் கூடாது என்பதில் எல்லாளனும் ஆதினியும் மிகவும் தெளிவாக இருந்தனர். ஆனால் காவல்துறையிடம் சிக்கியிருக்கும் வீடியோ அவனை சிறையெடுத்தே தீரும்.
அதைத் தடுப்பதற்குச் சம்மந்தரைப் பற்றிய தகவல்களை சிவநாதர் அவனுக்கு அனுப்பியது, பிறகு தான் வேறு ஒருவனை ஏற்பாடு செய்துகொள்கிறேன் என்று சொன்னது, கூலிக்கு அமர்த்தியவர்களை நம்ப முடியாது, நீயே நேரில் சென்று உறுதிப்படுத்திக்கொண்டு வா என்று அவனிடம் சொன்னது அத்தனையையும் காண்டீபன் வைத்திருந்தது அவர்களுக்கு உதவிற்று.
அந்த நாள்களில் அவன் சிவநாதரை முழுமையாக நம்பினாலும் ‘யாரையும் நம்பாதே’ என்று கிருபானந்தர் வலியுறுத்திச் சொன்னது, துரோகம் என்பது நீ நம்புகிற ஒருவரால் உனக்கு நிகழ்த்தப்படுவதே என்று சுட்டிக்காட்டியது, கவனமா இரு என்று அடிக்கடி சொன்னது, அவன் ஆழ்மனம் எதற்கோ ஏங்கித் தவித்துத் தேடி அலைந்தது போன்ற விடயங்கள் எதற்கும் இருக்கட்டும் என்று அவனை இதையெல்லாம் பக்குவமாக எடுத்து வைத்திருக்கச் செய்தது. இன்று அவற்றை ஆதாரங்களாக நீதிமன்றில் சமர்பித்து, தான் செய்த கொலையை அவன் பெயரில் போட்டுவிட்டுத் தப்பிக்க முயன்றிருக்கிறார் என்கிற குற்றச்சாட்டோடு, அவன் சகோதரன் காண்டீபனைத் திட்டமிட்டுக் கொலை செய்ததைச் சுட்டிக்காட்டி, சிறைச்சாலையில் அவன் உயிருக்கும் ஆபத்துண்டு என்பதைத் தெரிவித்து, நீதிமன்று குறிப்பிடுகிற நாளில் அவன் நீதிமன்றுக்குச் சமூகமளிப்பான் என்கிற உறுதிமொழியை வழங்கி, முன்ஜாமீனுக்கு முறையீடு செய்தாள் ஆதினி.
ஒருவர் கைதுசெய்யப்படுவதற்கு முன்பே நீதிமன்றத்திடம் இருந்து பெறப்படும் பாதுகாப்பே முன்ஜாமீன். அவள் மனுவை ஆராய்ந்த நீதிபதியும் முன்ஜாமீன் வழங்கினார்.
அது கையில் கிடைத்த அடுத்த கணம் காண்டீபன் வெளியே வந்தான்.
அவனை மீண்டும் கண்ட எல்லோருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. அதிரன் ஓடிப்போய்த் தந்தையின் மேல் தாவி ஏறிக்கொண்டான் என்றால் மிதிலா எல்லோர் முன்னும் எதுவும் செய்ய இயலாமல் அரும்பிவிட்ட கண்ணீரும் புன்னகையுமாகக் கணவனையே பார்த்து நின்றாள்.
அவள் உணர்வுகள் எல்லாம் பொங்கித் ததும்பின. அதிரனைப் போலவே ஓடிப்போய் அவன் கைகளுக்குள் அடைக்கலமாகிவிடத் துடித்தாள். அவன் அணைப்பை, அது தரும் கதகதப்பை, அதன் மூலம் அவள் உயிர் உணரும் பாதுகாப்பை, அது தரும் ஆறுதலை எல்லாம் அனுபவித்துவிட ஏங்கினாள். என்னவோ கண்ணைச் சிமிட்டினாலே அவன் மறைந்துவிடுவானோ என்று ஒரு பயம்.
அவளின் அந்த விடாத பார்வையும், உதட்டில் புன்னகையும் கண்ணில் கண்ணீருமாக நின்ற காட்சி அவனையும் அசைத்துப் பார்த்தது. ஒற்றைக் கையால் பட்டும் படாமல் அவளை அணைத்துவிட்டு விலகினான் அவன்.
அவளுக்கு அது போதவில்லை. ஏதோ ஒன்று தன் தீபனிடம் குறைவதைக் கண்டாள். முன்னராவது அவனுக்கு எதுவும் நினைவில் இல்லை என்று தன்னைத் தானே சமாதானம் செய்துகொண்டவளால் இப்போது முடியவில்லை. கணவனையே பார்த்திருந்தாள். அவன் காட்டும் கண்ணுக்குத் தெரியாத அந்த விலகல் அவளைக் காயப்படுத்தியது.
இன்னும் என்ன அவனைப் போட்டு அரிக்கிறது? இன்னும் எதுவரை அவள் இப்படித் தனியாக நிற்கவேண்டும்? அவளுக்குள் இருக்கும் காயங்களை, ஏக்கங்களை, கண்ணீரை எல்லாம் அவனிடம் கொட்டி ஆசுவாசமாவது எப்போது? அவளின் சுவாசக்காற்றே அவன்தான் என்று அவனுக்குத் தெரியாதா என்ன? ஓடும் சிந்தனைகள் அவளை இன்னுமே உடைக்க முயல, சட்டென்று திரண்டுவிட்ட கண்ணீரை மற்றவர்கள் அறியாமல் துடைத்துக்கொண்டு சாதாரணமாக நிற்க முயன்றாள்.
இதைக் காண்டீபன் மட்டுமல்ல எல்லாளனுமே கவனித்தான். காண்டீபன் மனத்தில் தவிப்பு என்றால் எல்லாளன் உள்ளத்தில் பாரமேறிற்று. நண்பர்கள் இருவர் பார்வையும் சந்தித்து அதைப் பரிமாறிக்கொண்டன. ஆனாலும் காட்டிக்கொள்ளவில்லை.
உள்ளே விளையாடிக்கொண்டிருந்த தீபனா, அதிரனின் அப்பா என்கிற குரல் கேட்டு குடுகுடு என்று ஓடி வந்தாள். அங்கே அதிரனோடு அமர்ந்திருந்த காண்டீபன் மடியில் ஏறி அமர்ந்துகொண்டு அதிரனை முறைத்துப் பார்த்தாள்.
இடைப்பட்ட நாட்கள் தந்தையைக் காணாமல் இருந்ததாலோ என்னவோ இன்றைக்கு அதிரன் தகப்பனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு தன் உரிமையை நிலைநாட்ட முயன்றான். சின்னவளுக்கு அது பொறுக்கவில்லை. அவனுக்கு அடியைப் போட்டு, அவனை விலக்கிவிட்டு, “என்ர காந்தி மாமா!” என்று அவன் கழுத்தை அவள் கட்டிக்கொள்ள முயன்றான்.
பார்த்திருந்த காண்டீபனுக்கு உள்ளம் கசிந்துபோயிற்று. இருவர் நெற்றிகளிலும் தன் ஆதூர முத்தங்களைப் பதித்து இருவருக்கும் சமமாகத் தன் மடியைக் கொடுக்க முயன்றான். ஆனால், அந்த வீட்டின் குட்டி இளவரசி அத்தனையும் தனக்கு முழுமையாக வேண்டும் என்று நிற்பவளாயிற்றே. அதிரனைத் தள்ளி விட்டுவிட்டு முழுமையாகக் காண்டீபனை ஆக்கிரமிக்க முயன்றாள். அதிரன் முகம் சுருங்கிப்போயிற்று.

