ஆட்டநாயகன் 48.2

நாளாந்த வாழ்க்கையின் ஓட்டம் மற்ற எல்லாவற்றையும் மறக்க வைக்க வல்லது. பலர் பல பாரிய இழப்புகளில் இருந்து வெளிவருவதே இந்த நாளாந்த ஓட்டத்தின் உந்துததால்தான்.

மன அழுத்தம், மனச் சோர்வு, கவலை, உறக்கமின்மை போன்றவற்றைத் தீர்ப்பதற்கான மாத்திரைகளும் பரிந்துரை செய்தார்.

இத்தனைக்குப் பிறகும் கூட அவனால் மனம் திறக்க முடியவில்லை. உண்மையில் அவருக்கே அவன் மிகக் கடினமான டாஸ்க்காக இருந்தான். மனம் திறக்க முடியவில்லை என்பதை விடத் தனக்கு நடந்தவற்றை வெளியில் சொல்ல அவனால் இயலவில்லை. அதைப் பல வருடங்களாகத் தனக்குள்ளேயே போட்டு இறுக்கி, அது இறுகிப்போன மண் படிவத்தைப் போன்று அவனுக்குள் மாறிப்போயிருந்தது.

கடைசியில் அவன் சொல்ல நினைப்பதை எல்லாம் எழுதச் சொன்னார். எழுதிவிட்டு யாரிடமும் காட்டாமல் கிழித்து எறியவும் சொன்னார். இல்லையா அவருக்கோ எல்லாளனுக்கோ மனதிலிருப்பதைப் பேசி அனுப்பச் சொன்னார். அதுவும் இல்லையா யாரும் இல்லாத நேரத்தில் தனியாகப் பேசச் சொன்னார். கத்தச் சொன்னார். கோபப்பட்டு, திட்டி, அலுத்து என்று எது அவனுக்கு வருகிறதோ அதைச் செய்யச் சொன்னார்.

அவனைப் போன்று பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு நல்ல நிலையில் இருக்கிற அவருக்குத் தெரிந்த சிலரைப் போய்ப் பார்க்கச் சொன்னார்.

அப்படி அவர் அனுப்பிய ஒருத்திதான் இதயச் சத்திரசிகிச்சை நிபுணி வித்யா. அவளை எல்லாளனுக்கும் தெரியும். அவள் காண்டீபனைப் போன்று பாதிக்கப்பட்டவர்களைக் கையாளும் குழுவிலும் இருக்கிறாள்.

அவர்கள் போய்ப் பார்ப்பதற்கு முதலே காண்டீபனைப் பற்றி அவளுக்கு அழைத்துச் சொல்லியிருந்தான் எல்லாளன். வைத்தியசாலைக்கே அவர்களை வரச் சொன்னாள் வித்யா.

“ஹல்லோ சேர்!” என்று எல்லாளனுக்குக் கைகொடுத்தவள், “வாங்கண்ணா!” என்று காண்டீபனை அன்போடு வரவேற்றாள்.

“நீ அவாவோட கதைச்சுக்கொண்டு இரு. நான் வெளில நிக்கிறன்.” என்று சொல்லி, அவர்களைத் தனியாக விட்டுவிட்டு வெளியேறினான் எல்லாளன்.

அவளைப் பற்றிக் காண்டீபனுக்குத் தெரியாது. அவளும் வைத்தியர் என்பதில் அவளும் அவனோடு ஏதோ பேசப்போகிறாள் என்றுதான் எண்ணியிருந்தான். ஆனால் அவளோ தன்னைப் பற்றிச் சொன்னாள்.

அதுவும் அவள் சிறுமியாக இருக்கையில் தண்ணீர் கேட்டு வந்த இரண்டு மனித மிருகங்கள், அவள் தண்ணீர் எடுக்கச் சென்ற அந்த இடைவெளியில் வீட்டுக்குள் புகுந்து, அவள் கத்திக் கதறிக் கெஞ்சியபோதும் கேட்காமல், அவளுக்குச் செய்த அநியாயத்தை முகத்தில் சின்ன மாற்றம் கூட இல்லாது சொன்னபோது, இருந்த இருக்கையிலேயே உறைந்துபோனான் காண்டீபன்.

அவள் சொன்ன விடயம் புதிதன்று! எத்தனையோ இளம் பிள்ளைகள் ஆண் பெண் பேதமில்லாமல் இப்படியான மிருகங்களிடம் மாட்டிக்கொண்டு வதைபடுவதைக் கேள்விப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறான்.

ஆனால், அதை அவள் மனம் திறந்த அழகுதான் அவனை அசைத்தது. ஒரு கண்ணீர் இல்லை. எனக்கு இப்படியாக்கிற்றே என்கிற கவலை இல்லை. ஒரு அந்நிய ஆணிடம் சொல்கிறோமே என்கிற தடுமாற்றம் இல்லை. அவன் கண்களை நேராகப் பார்த்து, யாருக்கோ நடந்த ஒன்றை விபரிக்கும் பாவனையுடன், முகத்தில் நிரந்தரமாகத் தங்கியிருந்த சிறு முறுவலுடன் அவள் சொன்ன பாங்குதான் அவனை பிரட்டிப்போட்டது.

இந்த விடயத்தை இத்தனை மனத் திடத்தோடு அணுக முடியுமா என்று அவளையே இமைக்காது பார்த்தான். அதைப் பற்றிப் பேசாமல் தனக்குள்ளேயே போட்டு வைத்துக்கொண்டு இருப்பதற்குப் பெயர் மனத்திடமன்று!

தைரியமாக அதைப் பற்றிப் பேசி, கடந்து வந்து, உன் வாழ்க்கையில் முன்னேறுவதுதான் உண்மையான மனத்திடம் என்று புரிந்தது.

அதையேதான் அவளும் சொன்னாள்.

“வெளில வரோணும் எண்டுற வெறி எங்களுக்கு வரோணும் அண்ணா. மண்ணுக்க போட்டு மூடுற விதை கூட முடி மோதி வெளில வந்துதான் மரமாகுது. எனக்கு இது நடந்திட்டுது, நான் அநியாயமா துன்பப்பட்டுட்டன், துயரப்பட்டுட்டன் எண்டு என்னைப் பற்றி நானே நினைச்சு அழுதுகொண்டிருந்தா அப்பிடியே இருக்க வேண்டியதுதான். சின்ன வயதில அது நடந்தது காணாது எண்டு வளந்து வாற வயசில அம்மாவும் போயிற்றா. நான் அழாம இல்ல. துடிக்காம இல்ல. இப்பவும் சில நேரங்களில் அது என்னைப் பாதிக்காம இல்ல.” எண்றுவிட்டுப் புன்னகைத்தவளை தொண்டையை வந்து கவ்விய துக்கத்தோடு பார்த்திருந்தான் காண்டீபன்.

“ஆனாலும் வாழ்க்கையில எங்கயும் நான் தேங்கேல்ல. தேங்கக் கூடாது எண்டு ஒரு வெறி. எவனாலயும் என்ன எதுவும் செய்யேலாது எண்டு இந்த உலகத்துக்கே காட்டோணும் எண்டு ஒரு ஆவேசம். இண்டைக்கு பலர் நல்ல வாழ்க்கை வாழ நான் காரணமா இருக்கிறன். நான் வாழுற வாழ்க்கை எனக்கே மனநிறைவக் குடுக்குது அண்ணா. அத உணந்து வந்தாத்தான் உன்னால இப்பிடிப் பாதிக்கப்பட்ட பிள்ளைகளை உள்ளார்ந்த அன்பொடேயும் புரிதலோடயும் அணுக முடியும் எண்டுதான் கடவுள் எனக்கு அப்பிடி ஒண்ட நடக்க வச்சாரோ எண்டு கூட அப்பப்ப நினைப்பன்.” என்றவளைப் பேச முடியாப் பிரமிப்போடு பார்த்தான் காண்டீபன்.

அவர்களுக்கு இழைக்கப்பட்ட அந்தப் பெரும் கொடுமையை இப்படிக் கூட அணுக முடியுமா என்ன?

அவளே காப்பாற்றி அழைத்து வந்த இன்னொரு சின்ன குழந்தையை அழைத்துப்போய்க் காட்டினாள். மெல்லிய இருள் கவிழ்ந்த அறை ஒன்றினுள் நல்ல உறக்கத்தில் இருந்தாள் அவள். பார்த்தவன் பயந்துபோனான். அந்தளவில் உடல் முழுவதும் காயங்கள். முகத்தைப் பார்க்கவே முடியவில்லை. சட்டென்று தீபனாக்குட்டி நினைவில் வந்துவிடவும் துடித்துப்போனான். வேகமாக அந்த அறையை விட்டு வெளியே வந்துவிட்டான்.

“வேலை முடிச்சு வீட்டை போகேக்க கண்டுட்டு காப்பாத்தி கூட்டிக்கொண்டு வந்தனான் அண்ணா. உங்களுக்காவது சொல்லுறது விளங்கும். இந்தக் குழந்தைக்கு எதை எப்பிடி எண்டு விளங்கப்படுத்திறது? எப்பிடி அவளை வெளில கொண்டு வாறது? அதுக்காக அப்பிடியே விடேலாதுதானே? இவளையும் நான் வெளில கொண்டு வருவன். என்னை மாதிரி ஒருத்தியா மாத்துவன்.” நம்பிக்கையோடும் திடமாகவும் சொன்னவளைப் பார்த்தவனுக்குத் தானும் இப்படி ஒருவனாக மாறிவிடும் எண்ணம் துளிர்த்தது.

நிறையப் பேசினாள். ஒரு வார்த்தை கூட அவனைப் பற்றிக் கேட்கவில்லை. அவளைப் பற்றிச் சொன்னாள், தான் கடந்து வந்த பாதையைச் சொன்னாள், தன் வேலையைப் பற்றிச் சொன்னாள். முக்கியமாகத் தன்னை அந்த நிலைக்கு ஆளாக்கியவனைத் தான் காப்பாற்றியதைச் சொல்லவும் அதிர்ந்து பார்த்தான் காண்டீபன்.

அவன் தேடித்தேடி வேட்டையாடிக்கொண்டிருக்க அவள் காப்பாற்றிவிட்டு வந்திருக்கிறாள். தன் பண்பட்ட குணத்தால் அவன் அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் இருந்தாள் வித்யா.

கிட்டத்தட்ட பாதி நாளை அவளோடு செலவளித்திருந்தான். அவள் கவனிக்கும் நோயாளிகளை, அவர்களின் நோயைப் பற்றி, அவர்களுக்கு அவள் வழங்கும் மருத்துவம் பற்றி என்று நிறைய விளக்கினாள். அவளிடம் சொல்லிக்கொண்டு புறப்படுகையில் இன்னது என்று விவரிக்க முடியாது போனாலும் ஒரு விதமான இதமான மனநிலையில் இருந்தான் காண்டீபன்.

வீட்டுக்குப் போகும் வழியில் அமைதியாகவே வந்தவனை எல்லாளன் குழப்பப் போகவில்லை. இடையில் அவனே மௌனம் கலைந்தான்.

“வாழுற ஆசை திரும்பவும் வந்திடும் போல இருக்கு மச்சான்.” என்றதும் வாகனத்தை சட்டென்று நிறுத்தியிருந்தான் எல்லாளன்.

“திரும்பவும் எண்டா?” அவனைப் போட்டுப் பந்தாடும் வெறியை அடக்கிக்கொண்டு உறுமினான்.

அவனைப் பாராமல் எதிர்ப்புறத்தில் முகத்தைத் திருப்பிக்கொண்டான் காண்டீபன்.

“இதே ஆசை முதலும் ஒருக்கா வந்தது. அதுக்குப் பிறகு நடந்துகள்… அந்த நேரம் கடைசி வரைக்கும் நான் நம்பிக்கையை இழக்கவே இல்ல. தப்பிடுவன், என்னை நீ அந்த நரகத்தில இருந்து வெளில கொண்டு வந்திடுவாய் எண்டு எனக்கு நினைவு தப்பிப் போகிற வரைக்கும் நம்பினானான். நீ வராம இருக்கிறாய் எண்டதும் உனக்கு ஏதுமோ எண்டுதான் பயமா இருந்தது. அப்பிடி கடைசி வரை நம்பினதாலயோ என்னவோ இப்ப எதையுமே நம்பேலாம இருக்கு மச்சான்.” கண்ணில் படர்ந்துவிட்ட நீருடன் சொன்னவனையே இமைக்காது பார்த்த எல்லாளன் சட்டென்று வாகனத்தை விட்டு இறங்கிவிட்டான்.

அவனையே நம்பியிருக்கிறான். அவனை மட்டுமே நம்பியிருக்கிறான். அங்கே அவன் நன்றாக வேதனை அனுபவித்துக்கொண்டிருக்க இங்கே இவன் அவன் வழக்கை வென்றே தீருவேன் என்று அலைந்திருக்கிறான்.

ஆத்திரமும் அழுகையும் அடக்க முடியாமல் அடி வயிற்றிலிருந்து வெடித்துக்கொண்டு கிளம்பிற்று. “ஆஆஆஆ!” என்று தன்னை மீறிக் கத்தியவன் ஜீப்பின் சில்லின் மீதே எட்டி எட்டி உதைத்தான்.

மீண்டுமொருமுறை சத்தியநாதனை உயிரோடு கொண்டு வந்து அவன் உயிரைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்குமளவுக்கு ஆவேசம் உண்டாயிற்று.

“டேய் மச்சான்…” என்று இறங்கி ஓடி வந்தான் காண்டீபன்.

“நீ இருக்கிறாய் எண்டு எனக்குத் தெரியாதேடா. தெரிஞ்சிருந்தா விட்டிருக்க மாட்டானே. அந்த ஜெயிலுக்கு குறைஞ்சது மாதத்தில மூண்டு தரம் வருவனடா. ஒவ்வொரு முறையும் வந்த வேலையை முடிச்சுக்கொண்டு எப்படா அங்க இருந்து வெளில வருவன் எண்டு இருக்கும். என்னால அங்க இருக்கவே முடியிறேல்ல. நீ அந்த மரத்துக்குக் கீழ நிண்டு அழுற மாதிரியே இருக்கும். ஆனா உண்மையா நீ அங்க இருந்திருக்கிறாய். துடிச்சிருக்கிறாய்.” என்று துடித்தான் அவன்.

“விடு மச்சான். அதுதான் இப்ப நான் வந்திட்டனே.” என்று அவன் இவனைத் தேற்றினான்.

“இல்ல. எனக்கு அந்தக் கிழவனை ஏதாவது செய்யோணும்! அப்பதான் கொஞ்சமாவது வெறியடங்கும்!” என்றவன் ஜீப்பை கோவளம் கடற்கரைக்கு விட்டான்.

அங்கிருந்த ஒரு போட்டை எடுத்துக்கொண்டு நண்பர்கள் இருவரும் சீறிக்கொண்டு நடுக்கடலுக்குப் பாய்ந்தனர். அங்கிருந்த ஒரு கப்பலில் உள்ளாடை மட்டும் அணிந்து தொங்கவிடப்பட்டிருந்தார் சிவநாதர்.

போன போக்கில் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை எல்லாளன். அங்கிருந்த கட்டையை எடுத்துக் கைகள் ஓய்கிற வரை அடித்துத் தீர்த்தான். காண்டீபன் அசையவேயில்லை. வாயில் அடைக்கப்பட்ட துணியால் கத்தக்கூட முடியாமல் கிடந்தது துடித்தவரை கண் சிமிட்டவும் மறந்து பார்த்திருந்தான்.

தொடரும்…

error: Alert: Content selection is disabled!!