அத்தியாயம் 50
அன்று மாலை வரையும் காண்டீபனின் வீட்டிலேயே இருந்துவிட்டு எல்லோரும் புறப்பட்டார்கள். காண்டீபனைத் தனியாக அழைத்துச் சென்று, “இன்னொரு கலியாணத்துக்கு எத்தினையோ முறை வற்புறுத்தினனாங்க மச்சான். மாமாக்குக் கூட அந்த விசயத்தில மிதிலாவில கொஞ்சம் குறை இருந்தது. ஆனா அவளின்ர பிடிவாதம்தான் நீ திரும்பி வந்த நேரம் அவளை உன்ர மனுசியாவே வச்சிருந்தது. யோசிச்சுப் பார், நீ வரேக்க அவள் இன்னொரு வாழ்க்கைக்க போயிருந்தா?” என்றான் எல்லாளன் அதை யோசிக்கக் கூட முடியாதவனாக.
காண்டீபனும் அவன் அணிவித்துவிட்ட தாலி, வைத்துவிட்ட குங்குமம், நெற்றியில் தீட்டிக்கொண்டிருந்த திருநீறு சந்தனம் என்று மங்களமாக ஜொலித்துக்கொண்டிருந்த மனைவியைத் திரும்பிப் பார்த்தான்.
அங்கே ஆதினியிடம் மலர்ந்த முகத்தோடு என்னவோ சொல்லிக்கொண்டிருந்தாள் அவள். அப்படி ஒன்று நடந்திருந்தால் நிச்சயமாய் நொறுங்கிப்போயிருப்பான். அதுவும் நினைவு திரும்பிவிட்ட இந்த நாள்களில் தான் ஏன் உயிரோடு வந்தோம் என்று வருந்தியிருப்பான். அவளும் அந்த வாழ்க்கையைத் தொடரவும் முடியாமல் அவனிடம் வரவும் முடியாமல் நரகத்தை அனுபவித்திருப்பாள்.
அவன் பார்வை அவளைச் சென்று சேர்ந்தது போலும். புன்னகையுடன் அவனை நோக்கி, சின்ன தலையசைப்பால் என்னவென்று வினவினாள். தானாய் முறுவல் அரும்ப ஒன்றுமில்லை என்று தானும் தலையசைப்பாலே பதில் சொன்னான் காண்டீபன்.
அப்படியா என்று கேட்பதுபோல் அவள் பார்வை அவனில் நிலைக்க, அவன் உதட்டோரத்தில் குட்டியாய்க் குறும்பு முறுவல். சட்டென்று பழைய தீபன் கண்களுக்குள் வந்து நின்றுவிட தடுமாறிப்போனாள் மிதிலா. வேகமாகப் பார்வையை அகற்றிக்கொண்டவளின் முகத்தில் படர்ந்துவிட்ட செம்மையில் சின்னதாய் நகைத்தான் காண்டீபன்.
நண்பனின் இந்த மாற்றம் பெரும் மகிழ்வைத் தர, “அவளிட்ட மனம் திறந்து கதை மச்சான். நீ வந்ததே போதும் எண்டு இருந்தாலும் உள்ளுக்க கலங்கிப்போய் இருக்கிறாள். பாவமடா!” என்று அவன் முதுகில் தட்டிச் சொல்லிவிட்டுப் புறப்பட்டான் எல்லாளன்.
கேதகிக்குச் சின்ன குழந்தையை விட்டுவிட்டுப் போகவே விருப்பமில்லை. அதற்கென்று அங்கேயே இருக்க முடியுமா என்ன? “அம்முக்குட்டி கவனம்!” என்று அடைத்த குரலில் மாதவனிடம் சொன்னாள்.
மாதவனுக்கு மகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்கிற கலக்கம் அப்போதே உண்டாயிற்று. இத்தனை நாள்களும் இங்கிருக்கையில் மிதிலா உதவினாள். அங்கே வீடு முழுக்க ஆட்கள் என்கையில் அவன் கைக்கு மகள் வருவதே அரிதிலும் அரிது. இனி?
வேலைக்குச் செல்லாமல் இருக்க முடியாது. நாளாந்த வாழ்க்கைச் செலவைத் தாண்டி அன்னையின் மருத்துவத்துக்கு, குழந்தை வளர்ப்புக்கு என்று செலவுகள் வரிசை கட்டி நின்றன. அன்னையால் தன்னந்தனியாக மகளைப் பார்க்க முடியாது. மிதிலா நிச்சயம் உதவி செய்வாள்தான் என்றாலும் எத்தனை நாள்களுக்கு? முன்னராவது அவளை அவள் துன்பங்களில் இருந்து திசை திருப்பக் குழந்தை காரணமாயிருப்பாள் என்று நினைத்திருக்கிறான்.
இனி அப்படி இல்லையே. காண்டீபன் நிச்சயம் கைகொடுப்பான். என்றாலும் அவன் எப்படி எந்தச் சங்கடமும் இல்லாமல் அவர்களிடம் உதவி பெற்றுக்கொண்டே இருப்பான்?
சமாளிக்கத்தான் வேண்டும் என்று எண்ணிக்கொண்டு குளிக்க நடந்தான். என்னதான் வசதிகள் செய்து தந்தாலும் நம் வீட்டில் போன்று இன்னொரு இடத்தில் இயல்பாக இருக்க முடியாதே.
நண்பன் குடும்பத்தை வாசல் வரை சென்று வழியனுப்பிவிட்டு, படமாகத் தொங்கிக்கொண்டிருந்த தந்தை முன்னே வந்து நின்றான் காண்டீபன்.
யாருக்கும் சிறு தீங்கு செய்ய விரும்பாத மனிதர். துன்ப துயரங்களை மாத்திரமே அனுபவித்துவிட்டுப் போயிருக்கிறார். அதுவும் கடைசிவரை காக்க வேண்டிய மகனே அவர் உயிரைப் பறிப்பதற்குச் சாட்சியாக நின்றிருக்கிறான். இதில் உயிர் போய்விட்டதா என்று நேரில் பார்த்து உறுதியும் செய்திருக்கிறான்.
கசந்து வழிந்த துக்கத்தை விழுங்கிக்கொண்டு அவர் படத்தை வருடிக்கொடுத்தான். அவன் இந்தப் பிறவியிலேயே பல ஜென்மங்களை எடுத்துவிட்டான். இருந்தாலும் அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் மீண்டும் அவருக்கே மகனாகப் பிறந்து, இந்தப் பிறப்பில் செய்த பாவங்களை எல்லாம் கழுவ வேண்டும்.
“அப்பா!” என்று ஓடி வந்த மகன் சத்தத்தில் சிந்தனை கலைந்து திரும்பினான். அதன் பிறகான நேரம் சின்னவனோடே போயிற்று. மிதிலா அவர்களைத் தொந்தரவு செய்யப் போகவில்லை. அவன் குரலைக் கேட்டபடி, அவன் இருக்கிறான் என்கிற அந்த நினைப்பை மனத்தில் சுகமாகச் சுமந்தபடி வீட்டை ஒதுக்கி வைத்துக்கொண்டிருந்தாள்.
பொழுது இருட்டியது. இனி மகன் பள்ளிக்கூடம் போக வேண்டும் என்பதில் அவனுக்கான வேலைகளையும் முடித்தாள். இரவுச் சமையலை முடித்து, கணவன் மகன் இருவருக்கும் பரிமாறியவளின் நெஞ்சம் விம்மிப் போயிற்று.
அவர்கள் இருவரும் சாப்பிடுவதையே பார்த்திருந்தாள். “நீயும் வா!” என்ற கணவனிடம், “இல்ல, நீங்க சாப்பிடுங்கோ.” என்றவள் குரலும் முகமும் அவள் மிகவும் நெகிழ்ந்திருக்கிறாள் என்று சொல்லின.
மகன் அறியாமல் அவள் கரம் பற்றி அழுத்திக் கொடுத்தான் காண்டீபன். அதற்கே அவள் உணர்வுகளின் பிழம்பாகிப்போனாள். வேகமாய் எழுந்து சமையற்கட்டுக்குள் சென்று, கண்களைத் துடைத்துக்கொண்டு தண்ணீர் எடுத்துப் பருகினாள்.
பின்னாலேயே வந்து, “என்ன?” என்றான் காண்டீபன்.
“இல்ல. அது சந்தோசத்தில அழுகை வருது.” என்று கண்ணீருடன் முறுவலித்தாள்.
அவளையே பார்த்தான். இப்போதும் கண்களில் கண்ணீர் திரண்டிருந்தாலும் அவள் முகத்தில் சோகமில்லை. வார்த்தைகளில் வடித்துவிட முடியாச் சந்தோசத்தில் திண்டாடிக்கொண்டிருந்தாள். முகம் கனிய, “நிறைய கஷடப்பட்டியா?” என்றான் மென் குரலில்.
மளுக்கென்று கண்ணீரைத் தள்ளின அவள் விழிகள். அதை வேகமாகத் துடைத்தபடி, “நீங்க திரும்பக் கிடைச்சிட்டீங்களே. அதெல்லாம் ஒண்டுமே இல்லை மாதிரி இருக்கு.” என்று சொன்னாள். இடக்கையால் அவளைத் தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டு, வாயைக் குவித்துக் காற்றை வெளியேற்றித் தன்னை நிலை நிறுத்த முயன்றான் காண்டீபன்.
உறக்கத்துக்கு எங்கே போவான் என்று அவனைக் கவனித்தபடியே வீடு முழுக்கச் சுற்றிக்கொண்டிருந்தாள் மிதிலா. அவனிடம் மாற்றங்கள் தெரிய ஆரம்பித்துவிட்டதைக் கண்கூடாகப் பார்த்துக்கொண்டிருந்தாலும் இத்தனை நாள்களும் அவன் காட்டிய விலகலினால் ஒரு தயக்கம் அவளிடம் இன்னும் இருந்தது.
அவள் மகனுக்கு அப்படி எதுவும் இல்லை. “என்னோடயே வந்து படுங்கப்பா.” என்று அழைத்துக்கொண்டு அவர்களின் அறைக்கே போனான். இவனும் மறுக்கவில்லை. கட்டிலில் சாய்ந்து அமர்ந்து, அவனை மார்பில் போட்டுத் தட்டிக்கொடுக்க ஆரம்பித்தான்.
அவ்வப்போது நிமிர்ந்து இவன் முகம் பார்த்துக் கதை சொன்னபடி உறங்கினான் அவன். சின்னவனின் பிஞ்சுத் தேகமும், அவனின் அணைப்பும், அது தருகிற இதமும், வார்த்தைக்கு வார்த்தை அவன் சொல்கிற அப்பாவும் அந்தத் தகப்பனை உருகிக் கரைய வைத்தன.

