தான் திரும்பி வராமல் இருந்திருந்தால் இந்த ஏக்ககங்களை எல்லாம் தனக்குள் போட்டுப் புதைத்துவிட்டுத்தானே வாழ்ந்திருப்பான். அந்த நினைவு தந்த கனத்தை மகனின் கேசம் ஒதுக்கி, உச்சியில் இதழ் பதித்து இறக்கி வைத்தான்.
அப்போதுதான் அறை வாசலிலேயே நின்று இவனையே பார்த்து நின்ற மனைவியைக் கண்டான். அவள் தயக்கம் ஏன் என்று தெரியுமே. ஒரு கையை அவள் புறமாக நீட்டினான். ஒரு நொடி தயங்கினாலும் அதற்கும் சேர்த்து வேகமெடுத்து ஓடிப்போய் அவன் கைக்குள் அடங்கினாள் மிதிலா.
பெரும் புயல் மழைக்குள் அகப்பட்டாலும் தப்பித்து வீடு வந்து சேர்ந்த உணர்வில் தன்னாலே கண்ணீர் பெருக்கெடுத்தது. அவன் திரும்பி வந்திருந்தாலும் இப்போதுதானே அவளிடம் வர ஆரம்பித்திருக்கிறான்.
மகன் உறக்கம் கெடாமல் அந்தப் பக்கமாய் அவனைக் கிடத்திவிட்டு, அவளை அழைத்துக்கொண்டு வெளியே வந்தான்.
“என்ன மிது?”
“தெரியேல்ல. எனக்கு உங்கட கைக்கையே இருக்கோணும் மாதிரி இருக்கு.” அவன் முகம் பாராமல் முணுமுணுத்துவிட்டு அவனைக் கட்டிக்கொண்டு மார்பில் முகம் புதைத்தாள்.
சின்ன புன்னகை அரும்ப மற்ற அறைக் கட்டிலுக்குச் சென்று அவளோடு அமர்ந்துகொண்டான். இப்போது மகன் இடத்தை அவள் பிடித்துக்கொண்டிருந்தாள். பார்த்தவன் முகம் கனிந்து போயிற்று.
“என்ர வாழ்க்கைல எண்டைக்குமே நினைச்சுப் பாக்க விரும்பாத சில விசயங்களைப் பற்றி உன்னட்டச் சொல்லோணும் மிது.”
திடீரென்று தீவிரம் மிகுந்த குரலில் அவன் சொல்லவும் வேகமாக நிமிர்ந்து, “என்ன?” என்றாள் கலக்கத்துடன்.
“முதல் நீ நல்லா நினைவில் வச்சிருக்க வேண்டியது, எல்லாமே முடிஞ்சுபோச்சு. நான்… நானும் கொஞ்சம் கொஞ்சமா அதுல இருந்து வெளில வந்துகொண்டு இருக்கிறன். இத உன்னட்டச் சொல்லோணுமா எண்டுற கேள்வி கொஞ்ச நாளாவே வந்து வந்து போகுது. ஆனா நான் இல்லாத காலத்தில கூட எனக்காக வாழ்ந்தவளிட்ட மறைக்கிறதும் நியாயமா படேல்ல. அதால மட்டும்தான் சொல்லுறன். அதைக் கேட்டு நீ அழக்கூடாது.”
அதற்கே அவளின் மூக்கு முகமெல்லாம் சிவந்துகொண்டு வந்திருந்தன. ஆனாலும் விழிகளில் உறுதியைக் காட்டி, “கண்ணீரைக் கட்டுப்படுத்தேலுமா தெரியா தீபன். அதுவும் இந்தக் கொஞ்ச நாளா எனக்கு எதுக்கெடுத்தாலும் கண்ணீர்தான் வருது. ஆனா, நீங்க இல்லை எண்டுறதையே தாங்கினவள் நான். அதைவிடப் பெரிய துன்பம் ஒண்டு எனக்கு வரப்போறேல்ல. சோ இதையும் தங்குவன். நீங்க சொல்லுங்க.” என்று தைரியமாகவே சொன்னாள்.
அவள் முகம் தாங்கி நெற்றியில் உதடுகளை ஒற்றி எடுத்தான். அவளை அழாதே என்றவனின் விழிகளும் இலேசாகப் பனித்திருந்தன. அவள் முகத்தைத் தன் மார்பில் சேர்த்துக்கொண்டு, ஒரு வேகத்துடன் தனக்கு நடந்த கொடுமைகள் அத்தனையையும் சொல்லி முடித்தான்.
அவளுக்குச் சுவாசமே அடைபட்டுப் போயிற்று. நெஞ்சு குலுங்கிவிட நிமிர்ந்து அவன் முகம் பார்க்க முயன்றாள். அவன் விடவில்லை. ஒரு பிடிவாதத்துடன் அவள் முகத்தைத் தன் மார்பில் வைத்துக்கொண்டே சொன்னான். அதுவே அவனால் அவள் முகம் பார்த்து இதையெல்லாம் சொல்ல முடியவில்லை என்று சொல்லிவிட, அப்படியே அவன் மார்பிலேயே குமுறி அழுத்திருந்தாள் மிதிலா.
அவளை மணமுடித்த பிற்பாடு கூட அவள் மனம் முற்றிலுமாக அவன் புறம் சாயும் வரை காத்திருந்து வாழ்க்கையை ஆரம்பித்த மென் இதயத்துக்குச் சொந்தக்காரன் அவன். அவனுக்குப் போய்…
“எல்லாம் முடிஞ்சு எண்டு சொன்னேனே மிது.” என்றவனின் குரலும் கரகரத்துக்கொண்டிருந்தது.
சட்டென்று அவள் அழுகை நின்றது. தானும் அழுது அவனையும் இன்னும் அந்த நரகத்தின் நினைப்பிலேயே வைத்திருக்கிறோம் என்று அப்போதுதான் புத்திக்கு உறைத்தது. வேகமாய் நிமிர்ந்து, “ஓம். எல்லாம் முடிஞ்சு. எல்ல்லாமே முடிஞ்சு.” என்று ஒரு பிடிவாதத்துடன் முகத்தைத் துடைத்தாள்.
“ஆனா இதுக்காகவா என்னட்ட இருந்து தள்ளி இருந்தீங்க?”
அதற்கு ஒன்றும் சொல்லாமல் அவளையே பார்த்தான் அவன்.
“தாம்பத்திய உறவு எண்டுறது வேற இது வேற எல்லா தீபன். எனக்கு இது வேணும். இனி நீங்க என்னட்ட இருந்து தள்ளி இருக்கவே கூடாது!” உறுதியாய்ச் சொன்னவளைச் சின்ன முறுவலுடன் பார்த்தான் அவன்.
“என்ன?”
“இல்ல, என்ர மிது சும்மா ஒரு வார்த்தை கதைக்கவே அவ்வளவு வெக்கப்படுவாள். ஆனா இப்ப எவ்வளவு அழுத்தம் திருத்தமா கதைக்கிறாள்.” என்றதும் சிவந்துவிட்ட முகத்தை சாதாரணமாகக் காட்ட முயன்று தோற்று, அவன் மார்பில் புதைத்துக்கொண்டாள் அவள்.
“ஆக அந்தப் பழக்கம் இன்னும் முழுசா போகேல்ல.” என்று சிரித்தான் அவன்.
ஆவலாய் நிமிர்ந்து அவனையே ஆசையாகப் பார்த்தாள் அவள்.
“என்ன?” என்றான் அவன் திரும்பவும் இளம் முறுவலுடன்.
“இந்தச் சிரிப்பை, இந்த முகத்தத் திரும்பப் பாப்பன் எண்டு நினைக்கவே இல்ல. இதே வீட்டுலதான்…” அவனைச் சடலமாகக் கொண்டுவந்து கிடத்தியதும், தான் புழுவைப் போன்று துடித்ததையும் சொல்ல முடியாமல் திணறினாள்.
அவள் முகம் தாங்கி, “நீ சொன்னதுதான். எல்லாமே முடிஞ்சு. பழச நினைச்சு மிச்சமா இருக்கிற வாழ்க்கைய ஏன் கெடுக்கச் சொல்லு?” என்று கேட்டான் அவன்.
ஆம் என்று தலையசைத்தவளின் தளிர் விரல்கள் மட்டும் அவன் கன்னம், தாடை, நெற்றி என்று வருடிக்கொண்டே இருந்தன.
“என்னம்மா?” என்றான் அவள் விரல்கள் செய்யும் மாயத்தில் கரைந்தபடி.
ஒன்றுமில்லை என்று தலையசைத்துவிட்டு, “இந்தக் காயம் அப்பதான் வந்ததா?” எனும்போதே அவள் விழிகள் மீண்டும் தளும்பிப் போயின.
முன் பக்கம் ஆரம்பித்து பின்னுக்கு வரை போன அந்தக் காயத்தின் அடையாளத்தை வருடியவளுக்கு நெஞ்சமெல்லாம் என்னவோ செய்தது. இப்படி மண்டை வெடிக்கிற அளவுக்கு அடி விழுந்தபோது எப்படித் துடித்திருப்பான்? அதன் பிறகு அந்தக் காயம் ஆறும் வரையிலான அந்த வலி? நன்றாகக் கவனித்திருக்கவும் மாட்டார்கள். குப்பையோடு குப்பை போன்றுதானே அவனைப் போட்டிருந்திருப்பார்கள்?
திரும்ப திரும்ப அழுது அவனையும் உடைக்க வேண்டாம் என்று எண்ணினாலும் அவளால் அவளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவன் முகத்தை இழுத்துத் தன் மார்பில் தாங்கி, அந்தக் காயத்தின் மீது தன் உதடுகளை ஒற்றி எடுத்தாள்.
“மிது!”
“நினைக்க நினைக்க மனம் ஆறுதே இல்ல தீபன்.”
“எல்லாமே முடிஞ்சு எண்டு சொன்னேனே மிது.”
“நானும் அப்பிடித்தான் நினைக்கிறன். ஆனா… இண்டைக்கு ஒரு நாள் மட்டும் என்னை விடுங்களன்.” என்றவள் அவன் முகத்தின் மீதே கவிழ்ந்து அழுது தீர்த்தாள்.
கடைசியில், “போதும் மிது!” என்று அதட்டி அவள் முகத்தை அவனே துடைத்துவிட்டான். “போய் முகத்தைக் கழுவிக்கொண்டு வா!” என்று அவளை அனுப்பி வைத்துவிட்டு, எழுந்து போய் மகனைப் பார்த்துக்கொண்டு வந்தான்.
மறுபடியும் வந்து அவன் கைகளுக்குள் சுருண்டுகொண்டு, “முடி வளக்கிறீங்களா ப்ளீஸ்?” என்று கேட்டாள்.

