“கட்டாயம் வளக்கோணுமா?”
“எனக்கு இந்த அடையாளத்தப் பாக்க விருப்பம் இல்ல.”
“சரி வளக்கிறன் விடு!”
“எனக்கு என்ர பழைய தீபனைப் பாக்கோணும்.”
“அப்ப இந்த உடம்ப என்ன செய்றது? அவனுக்கு இப்பிடி இருக்காதே.”
“இல்ல. இது இப்ப இன்னும் நல்லாருக்கு உங்களுக்கு…” எஃகின் உறுதியோடு இருந்த அவன் மார்பை தடவியபடி சொன்னவள் முகத்தில் இலேசாகச் செம்மை படர்ந்தது.
அவன் கண்கள் அவளிடம் சிரித்தன. “தீபன்!” என்று அவனிடமே தன்னை மறைத்துக்கொண்டாள் மிதிலா.
கட்டிலில் சரிந்திருந்த இருவருக்குமே உறக்கம் வரவில்லை. பேச எட்டு வருடக் கதைகள் உண்டே.
மகனை வயிற்றில் வைத்துக்கொண்டு அவனும் இல்லாமல் அவள் பட்ட பாடுகள், குழந்தையை வளர்க்க பட்ட சிரமங்கள், அவள் அன்னை மறைந்தது, அதன் பிறகான வாழ்க்கை, எங்கே போனாலும் அவர்களைக் கைவிட்டுவிடாத எல்லாளன் குடும்பம், ஆதினி, அவள் அன்பு, பிள்ளைகளுக்குக் கூட அவன் நினைவாய் அவள் பெயரிட்டது என்று நிறையப் பேசினார்கள்.
*****
கிட்டத்தட்ட ஒரு மாதம் கடந்திருந்தது. அன்று சம்மந்தர், மாதவன் மனைவி கொலை வழக்கு நீதிமன்றத்துக்கு வந்தது.
முதல் வழக்கிலேயே முழு வெற்றி கண்டவள் ஆதினி. இன்று அனுபவம் மிக்க ஆளுமை கொண்ட சட்டத்தரணி. விடுவாளா? அதுவும் அவளின் அன்னைக்கு ஒப்பானவனின் வழக்காயிற்றே.
ஒரு காலத்தில் இளந்திரையனிடம் ஒரு வழக்குப் போனால் எப்படித் தப்பாது என்று ஒரு பேச்சு இருந்ததோ அப்படித்தான் இன்று ஆதினிக்கும்.
அவள் எடுத்த வழக்குகள் எதுவும் இது வரையில் தோற்றதில்லை. நீதியும் நியாயமும் இல்லாத வழக்குகளை அவள் எடுத்ததும் இல்லை. அவள் வருகிறாள் என்பதிலேயே எதிர்த்தரப்பு வக்கீல் ஆட்டம் கண்டிருந்தார்.
அந்த நீதிமன்ற வளாகத்தில், கறுப்பு அங்கி அணிந்து, தன் அடர் கூந்தலைப் பிடரியில் கொண்டையாக்கி, கம்பீரமாக நடந்து வந்தவளைக் கண்டு காண்டீபன் பிரமித்துப்போனான். தன்னைக் கண்டால் இன்னுமே அண்ணா என்று குழந்தையாக ஓடி வரும் பெண்ணா இவள் என்று இருந்தது அவனுக்கு.
திரும்பி நண்பனைப் பார்த்தான். காக்கிச் சட்டையில் கடமையில் இருந்தவன் முகத்திலும் அவள் குறித்த பெருமையே.
வழக்கு ஆரம்பமாயிற்று. தன்னிடம் இருந்த அத்தனை ஆதாரங்களையும் காட்டி, சிவநாதர் குடும்பத்துக்கும் எல்லாளன் குடும்பத்துக்குமான ஆரம்ப காலத்துப் பகையை விளக்கி, அந்தக் கோபத்தில் சம்மாந்தரைக் கொன்று, அந்தப் பழியைத் தூக்கி அவர் மகனான வாசுசேனன் மீது போட முயன்றார்கள் என்று வாதாடினாள் அவள். லொறியை ஓட்டியவன் கூட சிவநாதர்தான் அவரைக் கொல்லச் சொன்னார் என்று ஒப்புக்கொண்டான்.
கோபம் கொண்ட எதிர்த்தரப்பு வக்கீல், “அத்தனையும் பொய் யுவர் ஓனர்! இந்த வாசுசேனன்ர தகப்பனுக்கும் காண்டீபன்ர மனைவிக்கும் தகாத உறவு இருந்திருக்கு. ஆனா இவனுக்கு காண்டீபன்ர மனுசில ஒரு கண். அது தெரிஞ்ச இவன் திட்டம் போட்டு அவரைக் கொலை செய்திருக்கிறான். இல்லாம பெற்ற தகப்பன் செத்துக் கிடக்கிறத ஒரு மகனால எப்பிடி அப்பிடி அவ்வளவு சாதாரணமா வந்து பாத்திட்டுப் போகேலும்? அதைவிட அவர் செத்து சில மாதங்கள்தான் ஆகுது. அதுக்கிடையில சகோதரத்தின்ர மனுசிய கட்டிட்டான் இவன். இதெல்லாம் உங்களுக்கு என்ன சொல்லுது?” என்றவன் பேச்சில் காண்டீபனுக்கு இரத்தம் கொதித்தது.
அந்த நொடியே பாய்ந்து சென்று அவன் குரல்வளையையே நசிக்குமளவுக்கு வெறி. நல்ல காலம் மிதிலாவை அழைத்து வரவில்லை என்று ஆறுதல் கொண்டான்.
எல்லாளனுமே இப்படி அபாண்டமாகப் பழி சுமத்துவார் என்று எதிர்பார்க்கவில்லை. நீதிமன்றமாயிற்றே. கழுத்து நரம்புகள் எல்லாம் புடைத்தபோதும் அமைதியாக நின்றான்.
ஆனால் நீதிபதிக்கும் அந்தச் சந்தேகம் நியாயமாகவே பட்டது. “அவர் சொல்லுறதும் சரிதானே ஆதினி. அப்பிடி எப்பிடி பெற்ற தகப்பன் செத்ததை இவ்வளவு சாதாரணமா பாத்திட்டுப் போக முடியும்? அவர் செத்த சில மாதங்களில கலியாணமும் நடந்திருக்கு. இந்த வாசுசேனன் இதுவரைக்கும் எங்க இருந்தவர்? அது பற்றின எந்தத் தகவலும் இஞ்ச இல்லையே?” என்று கேள்வி எழுப்பினார்.
இந்தக் கேள்வி வரும் என்று ஆதினி எதிர்பார்த்திருந்ததாள்தான். இது நீதிமன்றம். தெளிவான, துல்லியமான, சந்தேகத்திற்கு இடமில்லாத சரியான ஆதாரங்களை நீதிமன்றம் கட்டாயம் கேட்கும். அதில் அவள் பெரிதாக அதிர்ச்சி அடையவெல்லாம் இல்லை.
இன்னும் சொல்லப்போனால் காண்டீபனைப் பற்றியிருக்கும் கொஞ்ச நஞ்ச இறந்தகாலக் கசடுகளை இனி அவனை விட்டுப் போய்விடும் என்றெண்ணி மனநிம்மதிதான் கொண்டாள்.
அதனோடு அவள் கணவனைத் திரும்பிப் பார்க்க, சொல் என்பதுபோல் சிறிதாகத் தலையசைத்து அடுத்த நடக்கப்போகிறவற்றுக்குத் தன் ஆதரவைக் கொடுத்தான் அவன்.
“இந்த விசயத்த நீதிமன்றுக்குக் கொண்டு வந்ததுக்கு முதல் உங்களுக்கு நன்றி சேர்!” என்று எதிர்த்தரப்பு வழக்கறிஞரிடம் சொல்லிவிட்டு, “இது சாதாரணமா ஒரு நபரைக் கொலை செய்த வழக்கு மட்டுமே இல்ல யுவர் ஓனர். தமிழ் கூட்டணிக் கடசியின் தலைவர் சிவநாதரின் செல்வாக்கின் பெயரில, இலங்கை நாட்டின் காவல்துறை தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, நீதித்துறைக்கு எதிராகச் செய்த மிகப்பெரிய ஏமாற்று வேலை ஒண்டு அடங்கி இருக்கு.” என்றதும் எதிர்த்தரப்பு வக்கீல் மட்டுமல்லாமல் அங்கே உடனுக்குடன் தகவல் பெற்றுக்கொண்டிருந்த டிஐஜிக்கும் வியர்த்து வழிய ஆரம்பித்தது.
அப்போதுதான் ஆத்திரத்திலும் அவசரத்திலும் அறிவிழந்து பேசிவிட்ட தன் தவறை உணர்ந்தார் எதிர்த்தரப்பு வக்கீல்.
2009ல் நடந்த இறுதி யுத்தத்தில் சம்மந்தர் தன் மனைவியும் ஒரு மகனும் இறந்துவிட்டதாக எண்ணி வாழ்ந்ததில் தொடங்கி, அங்கே அவர்கள் உயிருடன் இருந்து, வாசுசேனன் சிறையில் இருந்த காலத்திலேயே காண்டீபனும் கைது செய்யப்பட்டது தொடங்கி, அவனைக் கொல்லத் திட்டம் போட்ட இடத்தில் அவர்களே எதிர்பாராமல் வாசுசேனனைக் கொன்று, அதனாலேயே காண்டீபனை அங்கேயே மறைத்து வைத்துச் சித்திரவதை செய்து, அவன் நினைவை மறக்க வைத்து, அவனையே அவன் குடும்பத்துக்கும் எல்லாளனுக்கும் எதிராகத் திருப்பிவிட முயன்ற சிவநாதரையும், அதற்கு உதவியாக இருந்த காவல்துறை, சிறைச்சாலை அதிகாரிகளைப் பற்றியும் முழுமையாகச் சொன்னாள் ஆதினி.
கேட்டிருந்த நீதிபதிக்கே தலை சுற்றும் நிலை. கிணறு வெட்டப் பூதம் கிளம்பியதுபோல் எங்கோ ஆரம்பித்த வழக்கு எங்கோ சென்று நின்றதில் மொத்த நீதிமன்றமும் உறைந்து நின்றது.
தான் சொன்னதற்குச் சாட்சியாக வாசுசேனன் பற்றிய சிறைச்சாலைக் கோப்பினை நீதிபதியிடம் கொடுத்து, அது பற்றிய எந்தத் தகவலும் இன்று சிறைச்சாலையில் இல்லை என்பதைக் குறிப்பிட்டுச் சொன்னாள்.
அது மாத்திரம் அல்லாமல் வாசுசேனனின் உடலைப் பிரேத பரிசோதனை செய்த வைத்தியர், பழைய ஜெயிலர், ஒய்வு பெற்ற உதவி சிறைக்காவல் அதிகாரி எல்லோரும் எல்லாளனிடம் பேசியதை அவர்களே அறியாமல் எல்லாளன் பதிவுசெய்து வைத்திருந்தான். அதை எல்லாம் ஆதாரங்களாகக் கொடுத்தாள்.
கூடவே அதுவரை அவனுக்கு நினைவு இல்லாமல் அவனே அவனை வாசுசேனன் என்றே நம்பி இருந்திருக்கிறான் என்று சொல்லி, அதன் பிறகு அவனுக்கு நினைவு திரும்பி இன்றுவரை வைத்தியம் பெற்று வருவதையும் சொன்னாள்.
கொதித்துப்போனார் நீதிபதி. சட்டத்துறையையே முட்டாளாக்கிய அத்தனை பேரையும் கைதுசெய்து விசாரணைக்கு உட்படுத்த உத்தரவிட்டார்.
இலங்கை முழுவதிலும் பெரும் பூகம்பம் வெடித்தது. அரசியல் செல்வாக்கும் அதிகாரமும் இருந்தால் இப்படி எல்லாம் நடப்பார்களா என்று சாதாரண மக்கள் முதற்கொண்டு முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் வரை கொந்தளிக்க ஆரம்பித்தார்கள்.
இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட யார் கண்ணில் அகப்பட்டாலும் அவரை நடு வீதியில் வைத்து அடித்து நொறுக்கும் அளவில் மக்கள் வெறிக்கொண்டிருந்தனர். பெரும் சர்ச்சை வெடித்தது. ஆங்கங்கே போராட்டங்கள் வெடித்தன. காண்டீபனுக்காக நியாயம் கேட்டு பொது மக்கள் வீதிக்கு இறங்கினார்கள். பட்டிமன்றங்கள், சூடான விவாதங்கள் என்று இணையம் அலறியது.
கடைசியில் இனி யாராலும் இதைக் கட்டுப்படுத்த முடியாது என்கிற நிலை உண்டாயிற்று. உடந்தையாக இருப்பார் என்று சந்தேகிக்கப்பட்ட அத்தனை காவல்துறை அதிகாரிகளும் காவல்துறையிலிருந்து நீக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார்கள்.
எந்தச் சாட்சியங்களையும் யாராலும் இனி மாற்ற முடியாது. நாளைக்கே தண்டனை கிடைக்கப்போவதில்லைதான். என்றாலும் தண்டனை கிடைக்கிறவரை சிறைவாழ்க்கையை அனுபவித்துவிட்டு, அதன் பிறகும் சிறையிலேயே அவர்கள் எல்லோரினதும் காலம் போகப் போகிறது.
அந்த வழக்கிலிருந்து காண்டீபன் முற்றிலுமாகச் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவனாக வெளியில் வந்திருந்தான்.

