ஆட்டநாயகன் 53.1

அத்தியாயம் 53

இப்போதெல்லாம் எடுத்துக்கொண்டிருந்த மருந்து மாத்திரைகளைப் பெருமளவில் குறைத்திருந்தான் காண்டீபன். இயல்பாகவே இரவுகளில் உறக்கம் வர ஆரம்பித்திருந்தது. அலைபாய்தல்களும் அமைதியற்ற நிலையும் மனத்திலிருந்து மறைந்திருந்தன.

காலையும் மாலையும் செய்யும் உடற்பயிற்றி, எல்லாளனுக்கு நேரமிருக்கையில் கோவளம் கடற்கரையில் சென்று உடல் சோரும் வரை நீந்துவது, பார்க்கும் தோட்ட வேலை, தினமும் சென்று வரும் பேராசிரியப் பயிற்சிக் கல்லூரி, புது மனிதர்களோடான பழக்கங்கள் என்று வாழ்வின் மீதான பிடித்தம் அவனுக்கும் உண்டாயிற்று.

எதிர்காலம் பற்றிக் கூட யோசிக்க ஆரம்பித்திருந்தான். எப்படியாவது வேகமாக ஆசிரியப் பயிற்சியை முடித்து, பரீட்சசைகளை எழுதிச் சித்தியடைந்துகொண்டு, பல்கலைக்குள் எப்போதடா நுழைவோம் என்றிருந்தது.

புதிதாக கட்ட ஆரம்பித்திருந்த அவனுக்கான அறையின் வேலை முடிந்திருந்தது. ஸ்மார்ட் போர்ட் ஒன்றினை மாட்டி இணையம் வழியாகவும் நேராகவும் பள்ளிக்கூட மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க ஆரம்பித்திருந்தான்.

பணம் என்பதைக் காட்டிலும் அவனுக்குத் தன்னைப் பழையபடி தகவமைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. அதில் இப்போதைக்கு இலவசமாக ஆரம்பித்திருந்தான்.

இதற்கான செலவுகளை எல்லாம் பார்த்துக்கொள்வது எல்லாளன்தான். அதைக் குறித்துக் காண்டீபனுக்கு எந்த மனக்கிலேசமும் இல்லை. தப்பித்தவறி மறுத்தால்தான் ஆதினி சண்டைக்கு வருவாள்.

சிவநாதர் அவனுக்கென்று வைப்புச் செய்திருந்த பணம், அந்த வீடு எல்லாவற்றையும் தன் நண்பர்களுக்கே கொடுத்துவிட்டான். தன் இறந்தகாலத்தின் எந்த எச்சங்களை தன்னோடு வைத்துக்கொள்ள அவனுக்கு விருப்பமில்லை.

தினமும் மாலையில் மகனுக்கும் பாடம் சொல்லிக்கொடுப்பான். அவனுக்குக் கால்பந்தில் ஆர்வம் என்று தெரிந்து அதற்கான பயிற்சிக்கு அழைத்துப்போவான். அவனும் இவனோடு பக்கத்தில் இருக்கிற மைதானத்திற்குச் சென்று விளையாடுவான். வாரத்தில் குறைந்தது மூன்று நாள்களாவது தியேட்டர், பார்க், கடற்கரை, உணவகம் என்று மனைவி மகனை வெளியே அழைத்துப்போவான்.

அப்படியான பொழுதுகளில் அவர்கள் இருவரின் முகங்களும் மலர்ந்து விகசிப்பதைப் பார்க்கையில் அவனுக்குள் பெரும் நிறைவு.

மகனை நடுவில் விட்டு மனைவியோடு பைக்கில் பயணிக்கும் பொழுதுகள் அவனுக்கு மிக மிகப் பிடிக்கும். சில நேரங்களில் எங்கென்றில்லாது பைக்கில் சுற்றிவிட்டு ஐஸ்கிரீமோ, குளிர்பானமோ அருந்திவிட்டு வருவது கூட பெரும் மகிழ்வைத் தந்தது.

அன்றும் அப்படித்தான் மிதிலாவுக்கு வேண்டுதல் என்று நல்லூர் முருகன் கோயிலுக்கு அழைத்து வந்திருந்தான். நல்லூரானைத் தரிசிக்க வரும் ஆண்கள் கட்டாயமாக மேலாடை கழற்றி, வேட்டி அணிந்திருக்க வேண்டும். அப்பா மகன் இருவரும் அப்படித்தான் வந்திருந்தனர்.

தன் தேகத்தின் காயங்களின் அடையாளங்களை வெளியில் காட்டப் பிரியப்படாத காண்டீபன், சால்வை ஒன்றினால் தன்னை மூடியிருந்தான்.

நல்லூரானின் முன்னே கரங்களைக் கூப்பி, மனமுருகி
வேண்டிய மிதிலாவின் விழிகள் கசிந்துகொண்டே இருந்தன.

அதைக் கவனித்துவிட்டு, “மிதும்மா!” என்றான் காண்டீபன் மெலிதாகக் கண்டிக்கும் குரலில்.

சிறு வெட்கமும் கூச்சமுமாகக் கண்களைத் துடைத்துக்கொண்டு, “என்னவோ மனமெல்லாம் சந்தோசமா இருக்கு தீபன்.” என்று புன்னகைத்தாள் அவள்.

“அதுக்கு அழுவியா?”

“நீங்க இல்லை எண்டு தெரிஞ்ச நேரம் செத்திடலாம் மாதிரி இருந்தது தீபன். வாழவே பிடிக்கேல்ல. தம்பி வயித்தில இல்லாம இருந்திருந்தா சத்தியமா நானும் உங்களிட்டயே வந்திருப்பன்.” என்றவளைத் திகைப்புடன் பார்த்தான் அவன்.

“அந்த நேரம் இந்தக் குழந்தை ஏன் என்ர வயித்தில வந்தது எண்டு கூட அழுதிருக்கிறன். ஆனா கடவுள் முக்காலமும் அறிஞ்சவர் என்ன. அதான் போல தம்பிய தந்து, என்ர உயிரைப் பிடிச்சு வச்சு, திரும்பவும் உங்களைப் பாக்க வச்சிருக்கிறார்.” என்றவளிடம் என்ன சொல்லுவான்?

வீட்டுக்கு வந்து சின்னவன் தியாவைப் பார்க்க மாதவன் வீட்டுக்கு ஓடியதும் அவளை அறைக்குள் கொண்டு வந்து எலும்புகள் அத்தனையும் நொறுங்கிவிடுமோ என்னுமளவில் இறுக்கி அணைத்துக்கொண்டான்.

காரணம் புரியாமல் திகைத்தவள் முகத்தைக் கைகளில் ஏந்தி, “என்ன எல்லாம் சொல்லுறாய்? நான் திரும்பி வந்த நேரம் நீ இல்லாம இருந்திருந்தா நான் என்னாகியிருப்பன் சொல்லு?” என்றவனுக்கு விழிகள் கூட பனித்துப்போயின.

என்னவாகியிருப்பான்? அவளைப் போலவே அனலில் விழுந்த புழுவாகத் துடித்திருப்பான். அவளுக்காவது பற்றுக்கோலாக மகன் இருந்தான். அப்படி ஒன்று நடந்திருந்தால் அவனுக்கு இவர்கள் இருவருமே இருந்திருக்க மாட்டார்களே. வீண் கற்பனைதான். ஆனாலும் யாருமே இல்லாமல் தனியனாகப் பரிதவித்து அவன் நிற்கும் காட்சி கண்முன்னே வந்துவிட அவள் விழிகள் நிறைந்து வழிந்தன.

அவனுக்கும் அதே யோசனை ஓடியது போலும். ஒரு வேகத்துடன் அவள் முகம் முழுவதும் முத்தமிட்டுவிட்டு அவளை இழுத்துத் தன் மார்போடு இறுக்கிக்கொண்டான்.

“எனக்கு உன்னோட சந்தோசமா வாழோணும் மிது. ஆளுக்கு ஒரு பக்கமா கிடந்து இத்தின வருசமும் துடிச்ச துடிப்புக்கெல்லாம் சேத்து வாழோணும்.” என்றான் ஒரு வேகத்துடன்.

“எனக்கும்!” என்று கண்ணீர் சிந்தினாள் அவள்.

*****

அன்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இணைய வகுப்பை முடித்துக்கொண்டு, “மிது ஒரு தேத்தண்ணி!” என்று குரல் கொடுத்துக்கொண்டே வீட்டுக்குள் வந்தவன், கட்டிலில் சாய்ந்து அமர்ந்துகொண்டு, தியாவை மார்பில் போட்டுத் தட்டிக்கொடுத்துக்கொண்டிருந்த மனைவியைக் கண்டு அப்படியே நின்றுவிட்டான்.

அவளின் அந்தத் தாய்மைக் கோலம் அவன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. இப்படித்தானே அதிரனையும் மார்பிலும் மடியிலும் போட்டு வளர்த்திருப்பாள்.

இளம் முறுவலோடு, “தம்பி எங்…” என்றவனை மேலே பேச விடாமல் வாயில் விரல் வைத்து, “ஷ்!” என்று அவனை அடக்கிவிட்டு, ‘சின்னவள் நித்திரை. அவன் அங்கே மாதவன் வீட்டுக்குப் போய்விட்டான்.’ என்று கண்களாலும் கையினாலும் அவள் படித்த அபிநயத்தில் அவன் உதடுகளில் ரசனை முறுவல். நின்று அவளையே பார்த்தான்.

என்னவென்று புருவமுயர்த்தினாள் அவள். கையில் இருந்த புத்தகத்தை மேசையில் வைத்துவிட்டு வந்து அவளருகில் கட்டிலில் சரிந்தான் காண்டீபன்.

அவள் விழிகளில் கேள்வியும் தடுமாற்றமும். ஒரு கையால் தலையைத் தாங்கி, அவளைப் பார்ப்பதுபோல் ஒரு பக்கமாகப் படுத்து, அவள் கரம் பற்றித் தன் விரல்களைக் கோர்த்தான்.

அந்த விரல்களுக்கு அவன் கொடுத்த அழுத்தமும், அவன் பார்வையில் இருந்த காந்தமும் அவள் முகத்தில் சூடேற்றின. குழந்தையையும் வைத்துக்கொண்டு என்ன செய்கிறான் இவன்? அதுவும் இத்தனை நாள்களும் இல்லாமல்?

error: Alert: Content selection is disabled!!