அத்தியாயம் 52
அன்று இரவு வேலை முடிந்து வீடு வந்தவனோடு சண்டை பிடிக்க வேண்டும் என்பதற்காகவே குழந்தைகளை நேரத்திற்கு உறங்க வைத்துவிட்டுக் காத்திருந்தாள் ஆதினி.
அவனோ அவன் கண்களுக்குக் குளிர்ச்சியைப் பரப்பும் விதமாக விரித்துவிட்ட கூந்தல், முழங்கால் வரையிலான கையில்லாத நைட்டி என்று குளுகுளுப்பாக இருந்தவளைக் கண்டு, சட்டென்று தொற்றிக்கொண்ட உற்சாகத்தோடு கண்ணைச் சிமிட்டி உல்லாசமாக விசிலடித்தான்.
இத்தனை வருடங்களின் பின்பும் மொத்த இரத்தமும் முகத்திற்குப் பாயும் உணர்வு அவளுக்கு. உள்ளே என்னவோ உருகிக் கரைந்தாலும் முறைத்து நின்றிருந்தாள்.
“கோவம்?” ஒற்றைப் புருவம் உயர்த்திச் சீண்டியபடி தன் சட்டை பட்டன்களை கழற்றிக்கொண்டு அவளை நெருங்கினான்.
அவள் சட்டென்று உஷாரானாள். “இண்டைக்குப் பெரிய சண்டையே இருக்கு. அதுக்கு முதல் கிட்ட வந்தா கொல்லுவன்!” என்று விரல் நீட்டி எச்சரித்தாள்.
“நானும் இண்டைக்கு உன்னட்ட மொத்தமா சாகிற ஐடியாலதான் இருக்கிறன்!” சட்டையைக் கழற்றிக் கடாசிவிட்டு அவள் மீது சாய்ந்தான்.
அவன் பதிலில் உண்டான சிரிப்பை மறைப்பதே அவளுக்குப் பெரும் பாடாயிற்று. “அண்ணாவையும் வச்சுக்கொண்டு என்ன எல்லாம் கதைக்கிறீங்க?” அவள் குரல் கோபத்திற்குப் பதிலாகக் குழைந்தது.
“இண்டைக்கு ஏன் பிள்ளைகள் நேரத்துக்கே நித்திரை ஆயிட்டினம்?” அவளைத் தன் அணைப்பினுள் கொண்டுவந்து தாடையோரத்தில் உதடுகளை உரச விட்டபடி கிசுகிசுத்தான் அவன்.
நிறைய நாள்களுக்குப் பிறகான கணவனின் அதீத நெருக்கத்தில் அவளுக்குத் தேகமெல்லாம் கூசிச் சிலிர்த்தது. “அவேக்கு நித்திரை வந்திட்டுதாம்.” என்று கள்ளச் சிரிப்புடன் முணுமுணுத்தாள்.
“எனக்கு என்னவோ இண்டைக்கு என்ர சிலுக்குக்கு முழிச்சிருக்கிற ஐடியா வந்திட்டுது மாதிரி இருக்கே…” அவன் குழைந்தான். அவள் மறுக்கவில்லை. மாறாக அவன் வெற்று மார்பில் உதடுகளை அழுத்தமாய்ப் பதித்து அப்படித்தான் என்றாள்.
ஆவலும் ஆசையும் உந்த அவள் முகம் தாங்கிப் பார்த்தன். அதில் ஏறியிருந்த சிவப்பில் என்னவோ அனைத்தும் புதிதாக நிகழப்போவதுபோல் அவன் உள்ளம் துள்ளிற்று. அவள் இதழ்களில் ஆழ்ந்து முத்தமிட்டுவிட்டு, “குளிச்சிட்டு வாறன்!” என்று குளியலறைக்கு ஓடினான்.
சிவந்துவிட்ட முகமும் சிரித்த இதழ்களுமாகக் கீழே சென்று இருவருக்குமான உணவைச் சூடாக்கினாள் ஆதினி. சாப்பிட்டு மேல வந்தவர்கள் சேர்ந்தே சென்று குழந்தைகளைப் பார்த்தார்கள். இருவரும் நல்ல நித்திரை. தீபனா தமையன் மீது கால்களைப் போட்டுக்கொண்டு சுகமாய் உறங்கிக்கொண்டிருந்தாள்.
தீபன் அவனைப் போன்று பொறுப்பு என்றால் தீபனா அவளைப் போன்று துறுதுறுப்பு. இருவரையும் இறுக்கி அணைத்து, அப்பா என்று சிணுங்கிய குழந்தைகளைக் கொஞ்ச நேரம் தன் மார்பில் போட்டுக்கொண்டு படுத்தான்.
அவர்களோடு நேரம் செலவழிக்க அவனுக்குக் கிடைப்பதேயில்லை. பணி இடை நீக்கத்தில் இருந்தபோது கூட அவன் வீட்டில் இருந்தது சொற்ப நேரங்களே. அதனாலோ என்னவோ குழந்தைகள் அவனை அளவுக்கதிகமாகத் தேடுவார்கள். அது தந்த வாஞ்சையுடன் இருவர் கேசங்களையும் கோதிக்கொடுத்தான்.
“அப்புக்குட்டி…” பூனைக் குட்டியாக அவன் கழுத்து வளைவில் முகம் உரசி, ஆழ்ந்த நித்திரையிலும் தமையனைத் தள்ளி விட்டுவிட்டு, மொத்தமாக அவனைத் தன் பிஞ்சுக் கரங்களால் ஆக்கிரமித்துக்கொண்ட மகளின் செய்கையில் சந்தோசமாகச் சிரித்தான் அவன்.
அவனுக்கு எப்படி அவள் செல்லம் கொஞ்சும் பொழுதுகளில் அம்முக்குட்டியோ அப்படித்தான் அவளுக்குச் செல்லம் மேலிடுகிற பொழுதுகளில் அவன் அப்புக்குட்டி. தன் இரு பூனைக் குட்டிகளையும் மார்பில் தாங்கிக்கொண்டவனின் முகம் அந்த உலகத்தையே வசப்படுத்திவிட்ட பூரிப்பில் மலர்ந்திருந்தது.
மீண்டும் அவர்கள் ஆழ்ந்து உறங்கிய பிறகு, மெதுவாகக் கட்டிலில் கிடத்தி, நெற்றியில் முத்தமிட்டு, போர்வையைப் போர்த்திவிட்டுத் தங்கள் அறைக்குத் திரும்பியவனின் உள்ளம் நிறைந்திருந்தது.
அங்கே அவன் மனைவி இரவு நேரத் தாமரையாகக் கட்டிலில் பூத்திருந்தாள். அவன் மனநிலை முற்றிலுமாக மாறிப்போயிற்று. “சிலுக்கும்மா!” என்று நெருங்கியவனின் ஆசையும் ஆவலும் கண்டு என்றும்போல் இன்றும் கிறங்கினாள் ஆதினி.
*****
தயாநிதி குடும்பக் கொலை வழக்குக் கிட்டத்தட்ட ஒரு முடிவுக்கு வந்துவிட்டதால் மறுபடியும் கொழும்பு சென்றுவிட்ட கேதகியை ஒருமுறை யாழ்ப்பாணம் வந்து போகும்படி சொல்லியிருந்தார் இளந்திரையன். இந்த இடைப்பட்ட நாள்களில் அவளும் அவருக்கு ஒரு மகள் போன்று ஆகியிருந்தாள்.
அன்று வந்தவளிடம், “அடிக்கடி லீவு எடுத்ததால வேலைல ஏதும் பிரச்சினையாம்மா?” என்று விசாரித்தார் இளந்திரையன்.
“இல்லை அப்பா. நடந்தது எல்லாம் அவேக்கும் தெரியும்தானே. அதைவிட அண்ணா கதைச்சவர். அதால ஒரு பிரச்சினையும் இல்ல.” என்று புன்னகைத்தாள் அவள்.
“பிறகு?”
என்ன பிறகு? அவளுக்குப் புரியவில்லை. கேள்வியும் குழப்பமுமாகப் பார்த்தாள்.
“எதிர்காலத்தப் பற்றி என்னம்மா யோசிச்சு வச்சிருக்கிறீங்க?”
அவளுக்கு இப்போதும் எதுவும் பிடிபடவில்லை. அவர் எல்லாம் இப்படிச் சுற்றி வளைத்துப் பேசுகிறவர் இல்லையே.
“என்னப்பா, என்னட்ட ஏதும் சொல்லோணுமா? இல்லை கேக்கோணுமா?” என்றவளைப் புன்னகையுடன் ஏறிட்டார் அவர்.
ஏதோ ஒரு வகையில் பருவ வயது ஆதினி நினைவில் வந்து போனாள்
“ஓம் அம்மாச்சி. கேக்கோணும்.” என்றுவிட்டு, “உங்களுக்குக் கலியாணம் செய்து வைக்க யோசிக்கிறனம்மா.” என்று சொன்னார்.
அவளிடத்தில் மெல்லிய அதிர்ச்சி
“அப்பா, அது எனக்கு இப்ப…”
“வயசு சரியேம்மா.”
“ஆனாப்பா…”
“இப்பிடி உங்களத் தனியாவே பாக்கிறதுக்காம்மா நாங்க இருக்கிறம்?” என்றதும் சட்டென்று விழிகளில் கண்ணீர் தேங்கிற்று அவளுக்கு.
இப்படியான அன்பான வார்த்தைகளை அன்னைக்குப் பிறகு கேட்கிறாள்.
“என்னம்மா?” என்றார் அவர் கனிவுடன்.
“பயம்மா இருக்கப்பா.”
வாழ்வில் பல பக்கங்ககளில் இருந்தும் அனாதரவாக்கப்பட்டவளின் பயம் இது. உள்ளே வலி பரவ, “இந்தப் பயம் போறதுக்குத்தானம்மா கட்டச் சொல்லுறன்.” என்றார் கனிவுடன்.
“கடந்துபோன காலத்தில எங்களுக்குக் கிடச்ச கசப்பான அனுபவங்கள், எதிர்காலத்தில கவனமா இருக்கிறது எப்பிடி எண்டு சொல்லித்தரோணுமே தவிர வாழ்க்கைல இருக்கிற நம்பிக்கையையோ பிடிப்பையோ இல்லாமச் செய்யக்கூடாது, என்னம்மா?” என்றார் அவர் இதமான குரலில்.
ஏன் என்றே தெரியாமல் மளமளவென்று கண்ணீர் கொட்டிற்று அவளுக்கு.
“என்னை எல்லாம் ஆரப்பா…”

