ஆட்டநாயகன் 53.2

கொஞ்ச நாள்களாகவே அவன் பார்வை தன்னைத் தொடர்வதையும், ரசனையுடன் தன் மேல் படிவதையும் அவள் கவனிக்காமல் இல்லை. ஆனால் இன்று…

அவனிடமிருந்து பார்வையைத் தழைத்து குழந்தையைப் பார்த்தாள். பூப்போன்ற குட்டி முகம். இப்படி ஒரு குழந்தை மறுபடியும் அவனுக்கும் அவளுக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்?

அந்த உணர்வு தந்த தித்திப்புடன் அவனைப் பார்த்துவிட்டு குழந்தையின் நெற்றியில் தன் உதடுகளை ஒற்றி எடுத்தாள் தனக்கே கிடைத்ததுபோன்று அவன் உதடு கடித்தான். அவளை மெல்லத் தன்னிடம் இழுக்க அவள் பதறிப்போனாள். பார்வையாலேயே கணவனை அதட்டி அடக்கிவிட்டு குழந்தையைக் கொண்டுபோய் அவளுக்கென்று தரையில் விரித்திருந்த விரிப்பில் கிடத்திப் போர்த்திவிட்டாள்.

அதற்காகவே காத்திருந்தவன் போன்று அவளை இழுத்துத் தன் மீது போட்டுக்கொண்டான் காண்டீபன். அவளில் மெல்லிய ஆனந்த அதிர்ச்சி. அணைப்பதும் நெற்றியில் முத்தமிடுவதும் அவர்களுக்குள் நடப்பதுதான். ஏன் சில நேரங்களில் இரவுகளில் மகனை உள்ளே விட்டுவிட்டு அவளைத் தன்னிடம் இழுத்தும் கொள்வான். ஆனால் இது? கேள்வியும் வெட்கமுமாய் அவள் அவனை பார்க்க, “எனக்கு?” என்றான் அவன் கரகரத்த குரலில்.

என்ன கேட்கிறான்? முத்தமா? அரும்பிய வெட்கச் சிரிப்புடன் அவன் நெற்றியில் உதடுகளை ஒற்றி எடுத்தாள்.

“இதெல்லாம் காணாது மிது.” என்றான் மூடியிருந்த விழிகளைத் திறக்காமல். வேறு என்ன வேண்டுமாம்? உள்ளே உள்ளம் கிளர்ச்சி கொண்டது. இப்போது அவன் விழிகளில் தன் உதடுகளை ஒற்றி எடுத்தாள்.

“நான் என்ன குழந்தையா?” அவன் முகம் உடலோடு சிணுங்கிற்று.

உண்மையில் பச்சைக் குழந்தையாக மாறி அடம்பிடித்துக்கொண்டிருந்தான் அவன். அவன் கேட்பதையெல்லாம் வாரி வழங்கிவிட உள்ளம் ஆவல் கொண்டாலும், “தம்பி வந்தாலும்.” என்றாள் சின்னவள் எழுந்துவிடாத இரகசியக் குரலில்.

“அவர் வரேக்கையே அம்மா எண்டு உன்னை ஏலம் விட்டுக்கொண்டுதான் வருவார்.”

உன் முத்தப் பரிசுகளைத் தொடர் என்கிறானா? முகம் அவன் மீதான நேசத்தில் மலர, அவன் மீது இருந்தபடியே அடர்ந்த கேசத்தினும் விரல்களை நுழைத்துக் கோதினாள். அவன் தலையில் இருந்த அந்த அடையாளம் கண்ணில் பட்டது. அவன் கேட்கும் தேவையே இல்லாமல் அந்த இடத்தில் தன் உதடுகளை ஒற்றி எடுத்தாள் மிதிலா.

“மிதும்மா” அந்தக் கிறங்கிய அழைப்பும், அவள் இடையில் அவன் கொடுத்த அழுத்தமும் அவன் தேவை என்னவென்று சொல்லின. பூவின் மீது வந்தமரும் பட்டாம் பூச்சியைப் போன்று சிறகடிக்கும் விழிகளோடு அவன் முகமெங்கும் தன் ஈர முத்தங்களைப் பதித்தாள் மிதிலா.

அவனுக்கு அந்தப் பிஞ்சு முத்தங்கள் போதாது போலும். அவளைக் கட்டிலில் சரித்து, ஒற்றை விரலால் அவள் முகத்தின் வரிவடிவத்தை அளந்தான். அவள் பார்வையைச் சந்தித்த அவன் கண்களில் ஆசையும் மோகமும் நர்த்தனமாடுவதைக் கண்டவள் விழிகள் ஆனந்தத்தில் கண்ணீரைச் சொரிந்தன.

“மிதும்மா ஓகேயாடா?” என்றான் கெஞ்சலாய்.

அவள் விழிகளில் மீண்டும் கண்ணீர் ததும்பிற்று. அலட்டிக்கொள்ளாத ஆளுமையோடு அவன் எப்போதுமே இப்படித்தானே. “தீபன்” இதழ்கள் அவன் பெயரை உச்சரிக்க, அவன் முகத்தைத் தன்னிடம் இழுத்தாள்.

அவன் உள்ளம் துள்ளிற்று. ஆனந்தக் கூச்சலிட்டது. ஆசைப்பட்ட மிட்டாய் கிடைத்துவிட்ட குழந்தையைப்போல ஆசையாய் அவள் இதழ்களைச் சிறை செய்தான்.

அவன் உடைக்கப் பயந்துகொண்டிருந்த மதில் சுவர் அது. இன்று தானாகவே நொறுங்கிப் போயிற்று. ஒரு முறையோடு அவனால் விலக முடியவில்லை. திரும்ப திரும்ப அவள் இதழ்களை நாடினான். இதற்கா பயந்தோம், இதையா தவிர்த்தோம் என்று ஆச்சரியப்பட்டான்.

அவள் கன்னம் வருடிய விரல்களும், ஆரத் தழுவிய கரங்களும், உதடுகள் தந்த ஆசை முத்தங்களும், அதன்போது அவன் காட்டிய நெருக்கமும் மிதிலாவை ஆகாயத்தில் மிதக்க வைத்தன.

அவள் அவள் வசத்தில் இல்லை. அலையில் அடித்துச் செல்லும் துரும்பாய் அவன் இழுப்புக்கு இசைந்துகொண்டிருந்தாள்.

எங்கிருந்தோ ஒரு சிணுங்கல். மிதிலாவினால் தன் சிந்தனையை ஒருமுகப் படுத்தி அதை என்னவென்று இனம்காண முடியவில்லை. அவ்வளவு நிதானத்தில் அவள் கணவன் அவளை விடவில்லை.

ஆனால், தொடர்ந்த சிணுங்கல் அவன் கவனத்தைக் கலைத்தது. மனைவியைத் தன் நெருக்கத்தில் வைத்தபடியே எட்டிக் குழந்தையைப் பார்த்தான். அவள்தான் சிணுங்கிக்கொண்டிருந்தாள்.

அப்போதுதான் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதே அவனுக்குப் புத்தியில் உறை த்தது. சின்ன வெட்கமும் சிரிப்புமாக மனைவி முகம் பார்த்தான். குங்குமமாகச் சிவந்துவிட்ட முகத்துடன் அவள் விழிகள் மூடிக் கிறங்கிக் கிடந்தாள்.

அவள் உதட்டின் மீது தன் உதடுகளை அழுத்தி ஒற்றிவிட்டு, அவள் முகம் மீதே முகம் பதித்துத் தன் உணர்வுகளை மெல்ல மெல்லக் கட்டுக்குள் கொண்டுவந்தான்.

“சின்னவா அழுறா மிது!” என்றபடி விலகிப் படுத்தான். உடலிலும் உள்ளத்திலும் வார்த்தைகளில் வடிக்க முடியா பரவசம். உடலின் எடை வற்றிப் போனது போலொரு சுகம். கொஞ்ச நேரம் விழிமூடி அந்த உணர்வுகளில் திளைத்துவிட்டு, திரும்பி மிதிலாவைப் பார்த்தான்.

அவள் இன்னுமே தன்னை மீட்டுக்கொள்ளவில்லை என்று கண்டு அவனிடத்தில் முறுவல் அரும்பிற்று. அவளைத் தன்னிடம் இழுத்து முதுகை வருடிக்கொடுத்தான். ஓரளவுக்கு அவள் தேறிக்கொண்டதும் நெற்றியில் இதழ் பதித்து, “சின்னவாவ கவனி!” என்றான் அவள் முகம் பார்த்து.

அவள் முகம் சிவந்து போயிற்று. அவனைப் பாராமல் எழுந்துபோய் அவளைத் தட்டிக்கொடுத்தாள். குழந்தை விடாமல் சிணுங்கினாள். அவள் அணிந்திருந்த உடைகளைத் தளர்த்திவிட்டு, மார்பில் போட்டுத் திரும்பவும் தட்டிக்கொடுத்தாள். அவன் பார்வை அவளை விட்டு அகலவேயில்லை. அவளால் முகத்தை நிமிர்த்தவே முடியாமல் போயிற்று.

குழந்தையைக் கிடத்திவிட்டு அவள் அறையை விட்டுப் போக முயல, “மிது!” என்று அழைத்து ஒற்றைக் கரத்தை அவளிடம் நீட்டினான். உதடு கடித்து தலை கவிழ்ந்தாலும் தன் கரத்தைக் கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள் மிதிலா.

மெல்ல அவளை இழுத்து மறுபடியும் தன் மீது சாய்த்து, “எப்பவும் ஒரு அளவுக்கு மேல போகப் பயம்மா இருக்கும். ஆனா இண்டைக்கு…” என்று நிறுத்தினான் அவன்.

தன் கூச்சம் வெட்கம் எல்லாம் களைந்து அவன் முகம் பார்த்து, “இண்டைக்கு?” என்று எடுத்துக்கொடுத்தாள்.

“இன்னுமின்னும் வேணுமா இருக்கு”

எவ்வளவு பெரிய விடயத்தைச் சொல்கிறான்? அவளுக்கு வெட்கம் வரவில்லை. சந்தோசத்தில் கண்ணீர் அரும்பிற்று. உள்ளம் ஆனந்தக் கூத்தாட அவன் முகத்தை இழுத்து முத்தமிட்டாள். அந்த முத்தங்களில் தன் உள்ளத்தின் மகிழ்ச்சியை அவனிடம் சொல்லிவிடும் ஒரு வேகம் இருந்தது. அழுத்தம் இருந்தது.

error: Alert: Content selection is disabled!!