ஆட்டநாயகன் 53.3

“உங்களுக்க நடக்கிற மற்றம் விளங்குதா உங்களுக்கு?” ஆர்வமாக அவன் முகம் பார்த்து வினவினாள்.

அவனும் பனித்திருந்த விழிகளோடு ஆம் என்று தலையசைத்தான்.

“இப்பிடியே எல்லாம் மாறும். என்ர தீபனுக்கு என்னை எவ்வளவு பிடிக்கும் எண்டு எனக்குத் தெரியும். அவர் என்னை எவ்வளவு சந்தோசமா வச்சிருந்தவர் எண்டும் எனக்குத்தான் தெரியும். அண்டைக்கு நீங்க சொன்ன மாதிரி நாங்க சந்தோசமா வாழுவோம். எதையும் நிறைய யோசிக்காதீங்க.” அவனைத் தன் மார்பில் சேர்த்துத் தட்டிக்கொடுத்தாள்.

அதன் பிறகான அவர்களின் நாள்கள் இன்னுமின்னும் அழகாய் நகர்ந்தன. இருவருமே எதையும் தாமாகத் தூண்டப்போகவில்லை. அதுவாய் மாயம் நிகழ்த்தும் நாளுக்காய்க் காத்திருந்தார்கள்.

இப்போதெல்லாம் மகன் உறங்கியதும் அவள் உறக்கம் அவன் கைகளுக்குள் என்றாகிப் போயிற்று. அணைப்பும் முத்தங்களும் நெருக்கமான நிலைகளும் அவர்களுக்குள் சாதாரணமாகிற்று.

இரண்டு மாதங்கள் கழிந்திருந்தன. கேதகிக்கு இன்னும் என்ன முடிவு எடுப்பது என்று தெரியா நிலை. கொழும்பில் இருக்கும் அவளின் நெருங்கிய தோழி இரண்டாம் தாரமாய்ப் போகுமளவுக்கு உனக்கு என்ன குறை என்று கேட்டாள். நியாயம்தானே என்று சிந்தனை ஓடிய அதே வேளை, அவள் குடும்பப் பின்னணி என்ன சிறப்பாகவா இருக்கிறது என்கிற கேள்வியும் உண்டாயிற்று.

இரண்டாம் தாரம் என்கிற விடயத்தைக் காட்டிலும் திருமணத்தின் மீதான பற்றுதல்தான் அவளுக்கு வரமாட்டேன் என்றது. மாதவனைப் பார்த்து, அவனோடு பேசிப் பழகக் கிடைத்தால் பரவாயில்லையோ என்று நினைத்தாள்.

ஒரு முறை யாழ்ப்பாணம் சென்று வரலாமா என்று அவள் யோசித்துக்கொண்டிருக்கையில் அன்று மாலை அழைத்துப் பேசிய ஆதினி, மாதவனின் அன்னை விடாத காய்ச்சலினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதைச் சொன்னாள்.

அதை அறிந்த கேதகி தாமதிக்கவில்லை. அடுத்த ஒரு வாரத்துக்கு வீட்டில் இருந்தே வேலை செய்வதாக அனுமதி பெற்றுக்கொண்டு புறப்பட்டு வந்திருந்தாள்.

ஆதினியே இதை எதிர்பார்க்கவில்லை. ஆச்சரியமும் எதிர்பார்ப்புமாக அவள் முகம் பார்த்தாள்.

“இன்னும் முடிவு இல்லை அக்கா. பழகிப் பாத்தா ஏதும் தெளிவு கிடைக்குமா எண்டுதான் வந்தனான்.” என்று சொன்னாள் அவள்.

“நல்ல முடிவு!” என்று அவள் தோள் தட்டிக்கொடுத்தாள் ஆதினி.

வந்ததும் வராததுமாகக் குளித்து, உடை மாற்றிக்கொண்டு, ஆதினியின் புதிய சிலுக்கில் மாதவன் வீட்டுக்குப் புறப்பட்டிருந்தாள். இத்தனை நாள்களில் யாழ்ப்பாணத்தில் குறிப்பிட்ட சில இடங்களுக்குத் தனியாகச் சென்றுவரப் பழகியிருந்தாள்.

அங்கே மாதவன் குழந்தைக்குத் தேவையான மாற்றுடை, கொடுக்க வேண்டிய பால், போத்தல் என்று அனைத்தையும் அவதி அவதியாகத் தயார் செய்துகொண்டிருந்தான். குழந்தையை மிதிலாவிடம் கொடுத்துவிட்டுப் புறப்பட வேண்டும் என்று வீட்டிலிருந்து வெளியே வந்தவன் ஸ்கூட்டியில் வந்திறங்கிய கேதகியைக் கண்டு பெரும் ஆறுதலாய் உணர்ந்தான்.

அடுத்த கணமே எதற்காக வந்திருக்கிறாள் என்று தெரியாமல் அவள் கைகொடுப்பாள் என்று எதிர்பார்த்த தன்னையே நொந்தபடி, “வாங்க கேதகி!” என்றான் இயல்பாக முறுவலிக்க முயன்றபடி.

“அன்ட்ரிக்கு உடம்பு சரியில்லையாம் எண்டு ஆதினி அக்கா சொன்னா. தியாவ என்னட்டத் தந்திட்டு நீங்க போங்க.” என்று வந்து குழந்தையை வாங்கினாள் அவள்.

“இல்.ல அது மிதிலா பாப்பா..”

“தியாவ பாக்கோணும் எண்டுதான் நான் கொழும்பில இருந்து வந்ததே.” என்ற அவளின் பதிலில் திகைத்துப் பார்த்தான் அவன்.

அப்போதுதான் தான் உளறிவிட்டது புரிந்தது. ஒரு கணம் உதட்டைப் பற்றி நின்றாலும், “இல்ல. அது உங்களுக்கு உதவி இல்லை எண்டு தெரியும். அதான்.” என்றவளை அப்போதும் குழப்பமாகப் பார்த்தாலும் அவனுக்கு அதைப் பற்றி மேலே பேசவோ, யோசிக்கவோ நேரமில்லை.

இதற்குள் இவர்கள் குரல் கேட்டு வெளியே வந்த காண்டீபனையும் மிதிலாவையும் கண்டு சங்கடமாக முறுவலித்தாள்.

இவளிடம் மாதவனோடான திருமணப் பேச்சைப் பேசிவிட்டது அவர்களுக்கும் தெரியும் எனபதால் எதையும் காட்டிக்கொள்ளாமல், “வா கேதகி!” என்று இயல்பாய் அழைத்தான் காண்டீபன்.

“இல்ல அது தியா” என்று அவள் தடுமாற, “இப்ப நானும் தம்பியும் வெளிக்கிட்டுடுவம். மிது தனியாத்தான் இருப்பாள். வந்து அவளோட இரு!” என்றுவிட்டு சொன்னது போலவே மகனோடு புறப்பட்டிருந்தான்.

குழந்தையைக் கவனித்து, அவளை உறங்க வைத்து, காலை உணவோடு இருவருமாகத் தேநீர் அருந்திவிட்டு, பகல் சமையலைக் கவனிக்க ஆரம்பித்தார்கள். மாதவனின் அன்னைக்குப் பத்தியச் சமையல் என்பதில் அதை மிதிலா கவனிக்க மற்றவர்களுக்குக் கேதகி செய்தாள்.

“உனக்கு அவரைப் பிடிச்சிருக்கா கேதகி?”

நேரடியாக வந்த கேள்வியில் சற்றுத் திகைத்தாலும், “அக்கா அது..” என்று தடுமாறினாள்.

“கிட்டத்தட்ட ஒரு வருசத்துக்கும் மேல இஞ்ச எங்களோட இருக்கிறார். குழந்தையை வச்சுக்கொண்டு பெரும் சிரமப்படுறார். தியா இரவு முழுக்க முழிச்சுக்கொண்டு இருந்திட்டு பகல்லதான் நித்திரை கொள்ளுவா. அவர் ஒரு டீச்சர். அடுத்த நாள் போய் உசாரா, திடமா நிண்டு பாடம் எடுக்கோணும். ஆனாலும் ஒரு நாள் கூட நிம்மதியா படுத்திருப்பாரா தெரியாது. அவரின்ர அம்மாவும் பிள்ளையை கவனிக்கிற நிலமைல இல்ல. பகால்லயாவது நாங்க ஹெல்ப் பண்ணுவோம். இரவில அது சரி வராதுதானே. ஆனாலும் இன்னொரு கலியாணத்தைப் பற்றி அவர் யோசிக்கவே இல்ல.”

அவள் ஏன் இதைச் சொல்கிறாள் என்று பார்த்தாள் கேதகி.

“அந்தளவுக்கு இறந்துபோன மனுசில பாசம். அவாவை எப்பிடிப் பாத்தவர் எண்டு நான் பாத்திருக்கிறன். அவரைக் கட்டினா உண்மையா நல்லாருப்பாய். கொஞ்சக் காலம் வேலைக்குப் போகாம வீட்டோட இருக்க வேண்டித்தான் வரும். அது கலியாணம் கட்டி குழந்தை குட்டி எண்டு ஆக்கிக்க எல்லா பொம்பிளைகளுக்கும் வாற சிக்கல்தான். அதை யோசிச்சு நல்லவரை மிஸ் பண்ணிடாத. அதுக்காகத்தான் சொல்லுறன். நாளைக்கு உனக்கு ஒரு குலாண்டகி பிறந்து, வளந்த பிறகு இப்ப ஆதினி மாதிரி நீயும் வேலைக்கு போகலாமா. இல்லை, வேலை உனக்கு முக்கியம் எண்டா வீட்டில இருந்து செய்ற மாதிரி எதையாவது தேடலாம்.”

அவளுக்கும் புரிந்தது. இதைப் பற்றியெல்லாம் அவ்வப்போது ஆதினியும் எடுத்துச் சொல்வாள்தான்.

இங்கிருந்த ஒரு வாரமும் அவனுக்கு எத்தனை அலைச்சல் என்று கவனித்துக்கொண்டுதான் இருந்தாள் கேதகி. ஒழுங்கான உறக்கமற்று, அவன் முகத்தில் நிரந்தரமாகத் தங்கியிருக்கும் சோர்வும் களைப்பும் ஒரு வகையாக பரிதாப உணர்வைத் தோற்றுவித்தன.

அதைவிடக் கொஞ்சம் கூடச் சினக்காமல் சீறிப் பாயாமல் குழந்தையையும் அன்னையையும் அவன் பார்த்துக்கொண்ட பாங்கு, தானும் அவன் உறவாகிவிட்டால் தன்னையும் இப்படித்தானே பார்த்துக்கொள்வான் என்று நினைக்க வைத்தது. அதைவிடப் பக்கத்தில் இருந்து பார்க்க பார்க்க அவனைப் பிடிப்பது போலொரு தோற்றம்.

மனம் ஒரு விதமாக தெளிந்துவிட திருமணத்திற்கு சம்மதம் சொன்னாள் கேதகி.

தொடரும் . ..

error: Alert: Content selection is disabled!!