ஆட்டநாயகன் 54.2

பதிவுத் திருமணம் மிக எளிமையாய் அழகாய் நிறைவேறிற்று. உணவகம் ஒன்றில் விருந்து ஏற்பாடாகியிருந்தது. அதன்போதெல்லாம் சின்னவர்களையும் கவனித்தபடி சிரிப்பும் பேச்சுமாய் இருந்த கணவனிடமிருந்து மிதிலாவினால் விழிகளை எடுக்கவே முடியவில்லை.

ஒரு வகை நெகிழ்ந்த மனநிலையோடு அவனின் ஒவ்வொரு அசைவையும் தன் நெஞ்சுப் பெட்டகத்தினுள் பாதுகாப்பாகப் பதுக்கிக்கொண்டிருந்தாள். வாழ்ந்த காலத்தில் அப்படி ஒரு இழப்பு வந்து அவனை முற்றிலுமாகக் கொண்டுபோகும் என்று கனவிலும் எண்ணியிருந்ததில்லை. அதனாலோ என்னவோ அந்த நாள்களை அதன் இயல்போடு கடந்திருந்தாள்.

ஆனால் இப்போது அவனோடான இந்த வாழ்க்கையின் ஒவ்வொரு நொடித்துளிகளையும் உணர்ந்து, உள்ளார்ந்து, அனுபவித்து வாழத் துடித்தாள்.

உணவு முடித்து வெளியே வருகையில், “இனி கதிரவனுக்குத்தான்.” என்று சொன்னாள் ஆதினி

எல்லோரும் அவனைக் கேள்வியாகப் பார்க்க அவன் தீபனாவோடு விளையாடுவதுபோல் காட்டிக்கொண்டான்.

“எனக்கு விளங்கிற மாதிரிக்கு அவன் ஆரிட்டயோ வசமா மாட்டியிருக்கிறான். நடுவுக்க ஏதோ ஒரு பிரச்சினை இருக்கு. அதான் வாயே திறக்கிறான் இல்ல.” என்றான் எல்லாளன்.

“அப்பிடியா கதிரவன்?”

அவன் சிரித்தான்.

“அப்ப உண்மை அது.”

அதற்கும் சின்னவளைத் தூக்கிக் கையில் வைத்துக்கொண்டு சிரித்தான். அவளின் குண்டுக் கன்னத்தில் அழுத்தி இதழ் பதித்தவனின் விழிகளில் என்ன இருந்தது?

யாருமறியா வலியா, ஏக்கமா? ஆதினியால் தெளிவாக அதைப் பிரித்தறிய முடியவில்லை. அவ்வளவு வேகமாக மறைத்துக்கொண்டிருந்தான் அவன். அதுவே அவனை மேலும் மேலும் சீண்ட வேண்டாம் என்று சொல்ல, “உங்களுக்குப் பிடிச்சவள மீட் பண்ணினா எங்களுக்கும் காட்டுவீங்கதானே கதிரவன்.” என்று கேட்டாள்.

“என்ன மேம் கேள்வி. நீங்க எல்லாரும்தானே எனக்குக் குடும்பமே. உங்களுக்கு காட்டாம இருப்பனா?” என்றான் அவன் ஆழ்ந்த குரலில்.

அன்றிலிருந்து கணவன் மனைவியாகிவிட்டவர்களை வாழ்த்தி, அவர்கள் வீட்டில் விட்டுவிட்டு அவரவர் வீடு வந்தபோது எல்லோரிடத்திலும் சுகமான அயர்ச்சி.

காலையில் சொன்னதுபோலவே கணவனையும் மகனையும் நிற்க வைத்துச் சுற்றிப் போட்டாள் மிதிலா. அதன்போது நெகிழ்ந்து கலங்கியிருந்த அவள் விழிகளைக் கவனித்துவிட்டு, மகன் இல்லா நேரமொன்றில் அவளைத் தன் கைகளுக்குள் கொண்டுவந்து, “என்னம்மா?” என்றான் காண்டீபன்

“தெரியா தீபன். ஒவ்வொரு நாளும் சொர்க்கம் மாதிரி இருக்கு. ஆனாலும் ஒரு பயமும் நெஞ்சைப் போட்டு ஆட்டுது. என்னவோ இதெல்லாம் கனவு எண்டு ஆரும் சொல்லிப்போடுவினமோ எண்டு.” என்று கண்ணீர் வடித்தாள் அவள்.

ஆரம்ப காலங்களில் அவனுக்கும் இப்படி இருந்திருக்கிறது. பல வருடங்களாக வாழ்ந்த சிறையும், அந்த நெருக்கடியான வாழ்க்கை முறையும் முடிந்துவிட்டது என்பதை நம்ப முடியாமல் ஒரு வகையான உறைந்த மனநிலையோடு இருந்திருக்கிறான். அதைப்போலத்தான் அவளுக்கும்.

கடந்துவந்த துன்பங்களும் துயரங்களும் இன்னுமே அவளை விட்டு அகலவில்லை. அதுதான் எந்தச் சந்தோசத்தையும் முழுமையாக அனுபவிக்க விடாமல் ஒரு பயம் போட்டு அவளைப் பயமுறுத்துகிறது. அவளை இழுத்து இறுக்கமாய் மார்போடு அணைத்துக்கொண்டான்.

அவளும் அடங்கினாள். “இது பொய் இல்லையே தீபன்? நீங்க, இந்த அணைப்பு, நான் உணருற உங்கட வாசம், கதகதப்பு இதெல்லாம் பொய் இல்லையே?” கண்ணீர் மணித்துளிகள் கீழிமையில் வந்து கூடு கட்டி நிற்கக் கேட்டவளையே சில கணங்களுக்குப் பார்த்துவிட்டு, அவள் இதழ்களை அழுத்தமாய்ச் சிறை செய்தான் அவன்.

உன் உயிரோடும் ஊனோடும் கலந்தவன் உயிரோடு இருப்பது உண்மைதான் என்று சொல்லும் அழுத்தமான உறவாடல் அது. அவளும் விலகவில்லை. மூடிய இமைகளில் இருந்து கசிந்த கண்ணீருடன் கணவனோடு தானும் ஒன்றினாள்.

தன்னால் முடிந்த வரையில் அவனை இறுக்கி அணைத்து, அவன் தேகம் வருடி, அவன் அணைப்புக்குள் அடங்கித் தன் ஆழ்மனத்திற்கு அவன் இருப்பது உண்மைதான் என்று செய்தி அனுப்ப முயன்றாள்.

மகனின் சத்தம் கேட்டு விலகினான் காண்டீபன். அப்போதும் அவள் முகத்தோடு தன் முகம் வைத்து இழைந்து, “நடக்கிறது எல்லாமே உண்மைதான் மிதும்மா. உன்ர தீபன் உன்னோடதான் இருக்கிறான். இனி எப்பவும் இருப்பான் சரியா?” என்று அவன் சொன்னபோது, கண்ணீரும் புன்னகையும் அரும்ப எம்பி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவன் கன்னத்தில் அழுத்தி இதழ் பதித்துவிட்டு மகனைக் கவனிக்க ஓடினாள்.

அதுவரை எதுவும் தெரியவில்லை. உள்ளத்தின் ஏக்கத்திற்கும் உணர்வுகளின் வெளிப்பாட்டுக்கும் ஏற்ப அவனோடு இயைந்திருந்தாள். ஆனால் அதன் பிறகும் கணவனின் பார்வை அவளையே தொடரவும் அவளால் அவன் முகம் பார்க்க முடியாமல் போயிற்று.

சிறு வெட்கமும், மெல்லிய எதிர்பார்ப்பும் சேர்ந்து அவளைப் பாடாய்ப் படுத்தின.

அணிந்துபோன உடைகளை அலசிப்போட்டு, இரவுக்கான சமையலைப் பார்த்து, மகனை உறங்க வைத்து என்று எண்ணெயில் இட்ட சக்கரம் போன்று அன்றைய நாளின் மிகுதி வேலைகளைப் பார்த்தாலும் அந்த இனிதான படபடப்பு மட்டுப்படுவதாக இல்லை.

அவள் படபடப்புச் சரியே என்பதுபோல் சின்னவன் உறங்கியதும் அவளைத் தூக்கிக்கொண்டு அடுத்த அறைக்கு வந்தான் அவன். ஆனால், அவள் எதிர்பார்ப்புக்கு மாறாக அவளைத் தன் மார்பில் தாங்கி, முதுகுக்குத் தலையணையைக் கொடுத்துச் சரிந்தவன் ஒன்றுமே சொல்லாமல் அமைதியாக இருந்தான்.

சற்று நேரம் பொறுத்துப் பார்த்துவிட்டுத் தலையை மாத்திரம் உயர்த்திக் கேள்வியாகப் பார்த்தாள் மிதிலா.

“முதலே எனக்கு நினைவு திரும்பி இருந்தாலோ, இல்லை எல்லாளனை முதலே சந்திச்சு இருந்தாலோ அப்பாவையும் மாதவன்ர முதல் வைஃப்பையும் காப்பாத்தியிருக்கலாம் மிது. அப்பா…” எனும்போதே மேலே பேச முடியாமல் நிறுத்தியிருந்தான்.

அவளைப் போலவே அவன் தந்தையும் மகனை இழந்த சோகத்தில் பாதி உயிராகத்தான் வாழும்வரை வாழ்ந்தார். இன்று அவர் இருந்திருக்கலாம். அவனோடு கொஞ்சக் காலம் இருந்துவிட்டுப் போயிருக்கலாம். அவளுக்கே அவரை நினைக்கையில் நெஞ்சடைக்கும். அப்படியிருக்க அவன்?

ஒரு கரத்தை அவன் கன்னத்தில் வைத்து ஆறுதல் சொல்ல முயன்றாள். அந்தக் கரத்திலேயே கன்னத்தைச் சாய்த்து, கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு, “போன உயிர்களத் திருப்பிக் கொண்டுவாற வல்லமை எனக்கு இல்ல மிது. ஆனா ஏதோ ஒரு வகைல மாதவன் குழந்தையோட தனிச்சு நிக்க நான் காரணம். இண்டைக்கு அவருக்கு ஒரு கலியாணம் நடந்ததும், கேதகிக்கு ஒரு நல்லது நடந்ததும் மனதுக்கு நிறைவா இருக்கு.” என்றான் அவன்.

“நீங்க சொன்னதுதான். போன உயிர்களை எங்களால கொண்டு வரேலாது. ஆனா எங்க இருந்தாலும் நீங்க உயிரோட இருக்கிறதைப் பாத்து மாமா சந்தோசப்படுவார். கவலைப்படாதீங்க.”

அதை ஆமோதிப்பவன் போன்று அவள் தலையைக் கோதிவிட்டபடி அமைதியாக இருந்தான் அவன்.

சிறிது நேரத்தில் அவன் விரல்கள் காது மடலை வருடி கழுத்தோரத்துக்கு வரவும் அவள் தேகம் கூசிச் சிலிர்த்தது. அதில் இலேசாய் வியப்புற்றுக் குனிந்து பார்த்தான். அவள் தன் முகத்தை அவன் மார்பில் மறைக்க முயல, அவன் முகத்தில் அழகிய முறுவல்.

அவள் தாடையைப் பற்றித் தன்னைப் பார்க்க வைத்தான். அவளால் அவன் பார்வையை நொடி நேரம் கூடத் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அவன் முகத்தில் விரிந்த சிரிப்பு. அவளைக் கட்டிலில் கிடத்தி, அவள் புறம் தானும் சரிந்து, “மிதும்மா, என்னைப் பார்!” என்றான்.

அவள் மறுத்தாள். “என்னடி இது இவ்வளவு வெக்கம்?” என்று கேட்டுச் சிரித்தான் அவன்.

அவளுக்கும் புரியவில்லை. இப்போதெல்லாம் இறுகிய அணைப்புகளும் ஆழ்ந்த முத்தங்களும் அவர்களுக்குள் இயல்பாகியிருந்தன. அதுவும் மகன் இல்லாத சிறு பொழுதொன்று அவனுக்கு வசமாக அமைந்துவிட்டால் போதும். அதன் பிறகு அவனை நிமிர்ந்து பார்க்க முடியாதளவுக்கு அவளைச் சிவக்க வைத்துவிடுவான்.

“தப்பித்தவறி உன்னை நோகடிச்சிட்டா சொல்லு என்ன?” அவள் கன்னம் பற்றிக் காதலோடு சொன்னவன் அப்படி ஒரு சூழ்நிலையை உருவாக்கவே இல்லை.

உடல் தொட்டு, உயிர் தீண்டி, உணர்வுகளைப் பரிமாறி, இளைப்பாறும் பொழுதுவரை அவளைப் பூவைப் போன்று கையாண்டான். தனித்தனியாய் இருந்த உயிர்க்கூடுகள் தம் இணையைச் சேர்ந்தன. இருவருக்குமே உடல் ஆனந்த மயக்கத்தில் மிதந்தது. தன் நிறைவைச் சொல்லும் விதமாய் அவன் நெற்றி முத்தம் பதித்தபோது விழியோரம் அரும்பிய கண்ணீரோடு கணவனின் முகம் தாங்கி, உதட்டினில் இதழ் பதித்தாள் மிதிலா.

என்னதான் ஆசையும் ஆவலும் நிறைந்துகிடந்தாலும் இந்த உறவை நிறைவாய்ப் பூர்த்தி செய்ய அவனால் இயலுமா என்கிற பயம் அவளிடம் இருந்துகொண்டேயிருந்தது. அவனுக்கும் அது இருந்தது போலும். “மிதும்மா!” என்றபடி அவளோடு ஒன்றியவனை அவள் விலக்கவில்லை. கண்களும் நெஞ்சமும் நிறைந்து தளும்ப, தன்னோடு அவனைச் சேர்த்தணைத்து அவன் முதுகை ஆறுதலாக வருடிக்கொடுத்தாள்.

error: Alert: Content selection is disabled!!