ஆட்டநாயகன் 56.1

அத்தியாயம் 56

அன்று காலையில் நல்ல உறக்கத்தில் இருந்த எல்லாளனின் போர்வைக்குள் புகுந்துகொண்டு அவன் முகம் முழுக்க முத்தமிட ஆரம்பித்தாள் ஆதினி.

“டேய் சிலுக்கு! என்னடா?” உறக்கம் விலகாக் குரலில் கேட்டபடி அவளைத் தனக்குள் இழுத்துக்கொண்டவனிடம், “மெல்ல மெல்ல!” என்று பதறினாள் ஆதினி.

மெல்லவா? அவளைப் போட்டு அவன் படுத்தி எடுக்கிற பாடுகளுக்கு முன்னே இதெல்லாம் ஒன்றுமேயில்லை. “என்ன மெல்ல?” என்றான் விழிகளைத் திறந்து.

“என்ர வயித்துக்க இருக்கிற எல்லுக்குட்டிக்கு நோகும் எல்லா?” முகம் முழுக்க நிறைந்த புன்னகையுடன் சொன்னாள் அவள்.

ஒருகணம் விழித்தாலும், “ஆதிம்மா?” என்றான் ஆனந்தத்தில் திக்குமுக்காடி. “உண்மையாவாடி?” ஆசையாய் அவள் வயிற்றை வருடிக் கேட்டவன் விழிகள் வைரமெனக் கண்ணீரில் பளபளத்தன. ஒரு நொடி, காணாமல் போன அவர்கள் குழந்தையின் நினைவு வந்து தாக்கியது. அவளை அணைத்து அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.

“என்னப்பா?” கணவனின் மனம் இப்போது எந்த நிலையில் இருக்கும் என்று தெரிந்து, அவன் பிடறிக் கேசத்தைக் கோதியபடி வினவினாள் ஆதினி.

“உனக்கு ஏலுமா?”

“அத சான்ஸ் கிடைக்கிற நேரமெல்லாம் எனக்குச் சாறி கட்டிவிட ட்ரெயினிங் எடுத்த நேரம் யோசிச்சிருக்கோணும்.”

“ஹாஹா என்னவோ இந்தக் கள்ளிக்கு விருப்பம் இல்லாத மாதிரியே கதைக்கிறாள்!” என்று அவள் கன்னம் கிள்ளிக் கொஞ்சினான் அவன்.

செய்தி அறிந்ததும் மனைவி பிள்ளைகளோடு ஓடி வந்தான் காண்டீபன். அவளின் ஒரு கரத்தை எடுத்துத் தன் கன்னத்தில் பதித்துக் கொஞ்ச நேரம் விழிகளை மூடி நின்றான். வெளியில் காட்டிக்கொண்டது இல்லையே தவிர்த்து தன்னால் எத்தனை அசம்பாவிதங்கள் நிகழ்ந்துபோயிருக்கிறது என்பது அவனுள் பெரும் வேதனையாகவே தங்கியிருந்தது. இன்று ஆதினியின் குழந்தை விடயமும் சரியானதில், “தாங்க்ஸ் மா!” என்றான் கரகரத்த குரலில்.

“அண்ணா!” என்றாள் அவள் ஆதங்கமும் ஆற்றாமையுமாக.

“அண்டைக்கு நான் என்ன நிலமைல இருந்தனான் எண்டு உங்களுக்குத் தெரியாது. ஆனா எனக்குத் தெரியும் என்ன. அப்ப நான்தானே நடுவுக்க வந்திருக்கக் கூடாது. அது நடக்கோணும் எண்டு இருந்திருக்கு. அவ்வளவுதான். எனக்கு இப்ப இருக்கிற பெரிய பிரச்சினையே வேற. தீபன் தீபனா வரிசைல இந்தப் பிள்ளைக்கு என்ன பெயர் வைக்கிறது எண்டு யோசிச்சுக்கொண்டு இருக்கிறன். நீங்க என்ன எண்டா..” என்றவளின் பாவனையான பேச்சில் சந்தோசமாய்ச் சிரித்தபடி அவள் தலையைப் பிடித்து ஆட்டிவிட்டான் காண்டீபன்.

சட்டென்று நெகிழ்ந்து நிலைகுலைந்துபோனாள் ஆதினி. அந்த ஒற்றைச் செய்கை அவளுக்குள் உண்டாக்கும் நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் வார்த்தைகளில் வடிக்க முடியாதவை. குழந்தையாய் மாறி அவன் ஒற்றைக் கையைக் கட்டிக்கொண்டு அவன் புஜத்திலேயே தலை சாய்த்துக்கொண்டாள்.

மனைவியின் மனநிலை புரிந்த எல்லாளன், “ஆதிம்மா, போய் எல்லாருக்கும் குடிக்க ஏதாவது கொண்டு வா!” என்று அவள் சிந்தனையை மாற்றிவிட்டான்.

அவளுக்கு ஐந்து மாதம் நடந்துகொண்டிருந்தது. அன்று காலையில் வழமை போன்று ஓடிவிட்டு வந்து, குளித்து உடை மாற்ற அறைக்குள் வந்தவனை ஓடிவந்து கட்டிக்கொண்டாள் மிதிலா.

“டேய் என்ன?” அரும்பிய முறுவலோடு மனைவியின் முகம் நிமிர்த்தி வினவினான்.

“தீபன் அது…” பரபரப்பாக என்னவோ சொல்ல ஆசைப்பட்டாள். ஆனால், அதி சந்தோசத்தில் அவளால் முடியவில்லை. கண்ணீரில் தத்தளித்த விழிகளும் புன்னகையில் நடுங்கிய இதழ்களுமாக நின்றவள் அழகு முகம் அவனை ஈர்க்க, அந்த ஈர இதழ்களில் ஒருமுறை ஆழப்பதிந்து எழுந்து, “என்னம்மா?” என்று குழைந்தான் அவன்.

“நீங்க… நீங்க அப்பா ஆகப்போறீங்க தீபன்.”

அவனால் நம்பவே முடியவில்லை. இருவருமே இந்தக் கொஞ்ச நாள்களாக இன்னொரு குழந்தைக்கு ஆசைப்பட்டுக்கொண்டுதான் இருந்தார்கள். ஆவலாகக் காத்திருந்தார்களும் கூட. என்றாலும் இப்படி ஒரு காலைப் பொழுதில் இனிய அதிர்ச்சியாக இதைச் சொல்வாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. என்ன பேசுவது, சொல்வது என்று தெரியாமல் அவளையே சில கணங்களுக்குப் பார்த்தவன் அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான்.

அவன் கைகளில் தெரிந்த நடுக்கமும், இதயத்தின் அதிவேகத் துடிப்பும் மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறான் என்று சொல்லிற்று.

“தீபன், என்னப்பா?” அவன் முதுகை இதமாக வருடிவிட்டபடி வினவினாள்.

“அப்பாவே எனக்கு மகனா வேணும் மிதும்மா.” என்றான் அவன் கரகரத்த குரலில்.

கடவுள் அவனைக் கைவிடவில்லை. கொடுத்த துன்ப துயரங்கள் எல்லாம் போதும் என்று முடிவுகட்டிவிட்டான் போலும். அடுத்த பத்தாவது மாதத்தில் ஒன்றுக்கு இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்திருந்தாள் மிதிலா.

ஆனந்த மிகுதியில் தன் பிள்ளைச் செல்வங்களைக் கைகளில் ஏந்தி அழுதிருந்தான் காண்டீபன். ஏதோ ஒரு வகையில் அவனால் உயிர் விட்ட அவன் தகப்பனும் சகோதரனும் திரும்பி அவனிடமே வந்துவிட்ட உணர்வு அவனுக்கு.

ஆதினிக்கும் ஆண் குழந்தை பிறந்து சில மாதங்களாகியிருந்தன. தீபச்செல்வன் என்று பெயரிட்டிருந்தாள். விடயமறிந்து எல்லோரையும் கூட்டிக்கொண்டு விரைந்து வந்தான் எல்லாளன்.

அவனிடம் கையிலிருந்த குழந்தைகளைக் காட்டி, “ஒண்டுக்கு ரெண்டு முத்துகள் மச்சான்!” என்றான் கண்ணீரிலும் புன்னகையில் நிறைந்திருந்த முகத்தோடு.

மனைவியையும் பிள்ளைகளையும் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக்கொண்டான் காண்டீபன். அவன் வாழ்க்கையை அழகிய சோலையாக மாற்றிக்கொடுத்த மிதிலா இன்னுமின்னும் அவனுக்கு உயிராகிப்போனாள்.

டைகர் காண்டீபனோடே இருந்துகொண்டான். இங்கே இரண்டு சின்னவர்கள் என்பதில் அவன் கடமையும் பொறுப்பும் இங்கே அதிகமாகத் தேவைப்பட்டன. காண்டீபனும் அதிரனும் இல்லாத பொழுதுகளில் மிதிலாவுக்குத் துணையாக இருந்து சின்னவர்களைக் கவனித்துக்கொள்வது அவன்தான். சிறு துரும்பு கூட அவர்கள் மீது பட விட மாட்டான்.

எங்காவது வெளியில் போய்விட்டு வருகையில், பிள்ளைச் சதையும் குண்டுக் கன்னங்களுமாக இருக்கிற குழந்தைகள், விறாந்தைத் தரையில் விரிப்பில் படுத்திருந்து, அவனை இனம் கண்டுகொண்டு கைகால்களைப் போட்டு அடித்துக்கொண்டு, தமக்குத் தெரிந்த மழலையில் என்னென்னவோ சொல்லி, பொக்கை வாய் திறந்து சிரிக்கும் அழகில் இந்த உலகையே மறந்துவிடுவான் காண்டீபன்.

கைகால்கள் அலம்பிக்கொண்டு வந்து பெரியவனோடு தானும் அந்த இடத்தில் சரிந்தான் என்றால், நேரம் காலம் பாராமல் அவர்களோடே இருப்பான்.

ஆனால் ஒன்று. தீபனாவின் முன்னே அது காண்டீபனாக இருந்தாலும் சரிதான், எல்லாளனாக இருந்தாலும் சரிதான் சின்னவர்களைத் தூக்கக் கூடாது. தூக்கினால் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு, கைகளையும் இறுக்கிக் கட்டிக்கொண்டு சென்று ஒரு மூலையில் அமர்ந்துவிடுவாள்.

பிறகு அப்பனும் மாமனும் அவள் கால்களில் விழாத குறையாக அவளைச் சமாதானம் செய்ய வேண்டும்.

காலம் வேகமெடுத்து ஓடிற்று. தன் பரீட்சசைகளில் சித்தியடைந்து, இன்னுமே கற்பிக்கக்கூடிய தகுதியோடு இருக்கிறேன் என்று நிரூபித்து, மறுபடியும் யாழ் பல்கலையின் பேராசிரியனாகப் பணியாற்ற ஆரம்பித்திருந்தான் காண்டீபன்.

முதல் நாள் இனிய படபடப்பும் ஆர்வமுமாகத் தயாராகி வந்தவனைக் கண்டு, மிதிலா அப்படியே நின்றுவிட்டாள். என்னவோ நடுவில் நடந்தவை எல்லாம் கனவோ என்பது போலொரு தோற்றம். ஓடிப்போய்க் கடவுளை வணங்கிக் கணவனின் நெற்றியிலும் திருநீற்றினைத் தீட்டிவிட்டாள்.

“நீயும் பிள்ளைகளும் கவனம் என்னம்மா!” என்றுவிட்டுப் புறப்பட்டான். மகனைக் கொண்டுபோய்ப் பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு பல்கலைக்கு வந்து சேர்ந்தான். எப்போதும் அவன் நிறுத்தும் இடத்தில் இன்றும் பைக்கை நிறுத்திவிட்டு இறங்கி நடந்து வந்தவனின் முன்னே, இரண்டு சப்பாத்துக் கால்கள் தென்பட்டன.

நிமிர்ந்து பார்த்தான். காக்கி உடையில் கம்பீரமாக எல்லாளன் நின்றிருந்தான். “டேய் மச்…” என்று ஆரம்பித்தவன் சின்ன முறுவலோடு, “ஹல்லோ எஸ்எஸ்பி!” என்றபடி அவன் முன்னே கையை நீட்டினான். அதைத் தட்டி விட்டுவிட்டுத் தன் கரங்களை விரித்தான் எல்லாளன். சட்டென்று அன்றைய நாள் நினைவில் மின்னிற்று. பனித்துவிட்ட விழிகளோடு சத்தமாகச் சிரித்தபடி நண்பனை ஆரத்தழுவிக்கொண்டான் காண்டீபன்.

“வாழ்த்துகள் மச்சான். இன்னும் நிறையப் பிள்ளைகளுக்கு நீ வழிகாட்டியா இருக்கோணும்.” என்று அவன் தோள் தட்டிக்கொடுத்தான் அந்த உயிர் நண்பன்.

error: Alert: Content selection is disabled!!