அப்பவும் அவ நெருங்கி வர ட்ரை பண்ணா தான். ஆனா அந்த டைம்ல நான் முறுக்கிட்டு இருந்தேன்.
நான் நெருங்கணும்னு நினைக்கும் போது நீ இங்க வீட்டுக்கு வந்துட்ட. உன் மேல கோபம் இருந்தாலும் உன்னை நினைச்சு கவலையா இருந்தது.
அதுவும் அந்த அசோக் கிட்ட படாத பாடு பட்டுட்டு நீ அரையாளா வந்து நிக்கும் போது ரொம்ப வலிச்சது.
ஆனா நீ வந்ததிலிருந்து அத்தைக்கு இவளை நான் கல்யாணம் பண்ணாம இருந்திருந்தா, எனக்கே பண்ணி வச்சிருக்கலாம்னு ஆசை.
அதை அப்பப்ப சொல்லி புலம்புவாங்க. அதைக் கேட்டு அவ ரொம்ப ஒதுங்கிப் போயிட்டா.
அப்பவும் எனக்கு அவ மேல கோபம். என் மேல கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லாம இருக்கிறாளேன்னு.
நீயும் அப்பப்ப அவளை வம்புக்கு இழுத்துக்கிட்டே இருந்த.
இதுல அக்கா வேற அவளுக்கு ஆறுதலா இருக்கிறது போல நிறைய வேலைப் பார்த்துட்டா. “ என்று ஆழினியின் நடத்தைக்கான காரணத்தை செழியன் கூற.
“நான் ஏன் அப்படி வம்பு இழுத்தேனா
அப்பயாச்சும் கோபப்பட்டு உங்ககிட்ட உரிமையா இருப்பான்னு நினைச்சேன். ஆனா, எப்ப பார்த்தாலும் கண்ணைக் கசக்கிக்கிட்டே இருந்தா என்ன பண்றது? கொஞ்சம் பொறுமையா இருக்கலாம். அதுக்குன்னு இப்படியா இருப்பாங்க? இப்பவும் அவளை வம்புக்கு இழுக்கணும்னுதான் எனக்குத் தோணுது மச்சான்.”
“அடிங்க! “ என்று செழியன் கூற.
“அடேங்கப்பா பொண்டாட்டிக்கு இவ்வளவு சப்போர்ட் கூடாது மச்சான். உண்மையிலேயே சொல்லுங்க என் மேல உள்ள அக்கறையில கல்யாணம் பண்ணனும்னு பார்க்குறீங்களா இல்ல, உங்க பொண்டாட்டிக்காக என்னைத் தொரத்தணும்னு பார்க்குறீங்களா?” என்று தன்ஷிகா குறும்புடன் கேட்டாள்.
அவளை ஆழமாகப் பார்த்த செழியன், எதுவும் பேசாமல் ஒரு கணம் அமைதியாக இருந்தான்.
அவனது பார்வையைப் பார்த்த தன்ஷிகா உடனே சிரித்தபடி,
“சரி, சரி… எனக்கு உங்களைப் பற்றி நல்லாவே தெரியும். நான் நம்பாம இல்லை. ஓகே… பொழைச்சுப் போங்க!” என்று கூறினாள்.
அவள் கூறியதைக் கேட்டு சிரித்தான் செழியன். அதைப் பார்த்த தன்ஷிகாவின் முகத்திலும் சிரிப்பு வர.
இருவரும் முகமெல்லாம் விகசிக்க புன்னகையுடன் ஒன்றாகக் கீழே இறங்கினர்.
அவர்கள் இருவரையும் வலியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆழினி.
அவளது மனம் ஏற்கனவே காயப்பட்டிருந்த நிலையில், அந்தக் காட்சி அவளுக்குள் சொல்ல முடியாத வேதனையை ஏற்படுத்தியது.
“என்னடா செய்யுது? உடம்பு சரியில்லையா? இப்படி கடைக்குப் போகாம நீ இருந்ததே கிடையாதே…” என்று கேட்ட லட்சுமி, பேரனைத் தனது அருகில் அமர வைத்துக் கொண்டார்.
பின்னர் ஆழினியைப் பார்த்து,
“எதுக்கு அப்படியே நின்னுகிட்டு இருக்க? கையில் இருக்குற டீயைக் குடு. சூடா குடிச்சா தான் தலைவலிக் குறையும். எல்லாத்தையும் நானே சொல்லணுமா உனக்கு?” என்று சற்று அதட்டலாகக் கேட்டார்.
அருகில் நின்ற நித்யமயூரியோ, அங்கு நடந்து கொண்டிருந்த அனைத்தையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
டீயைக் குடித்து முடித்த செழியன், “இப்போ ஓகே பாட்டி. நானும், தனுவும் கடைக்குக் கிளம்புறோம்.” என்றான்.
“இன்னைக்கு ஒரு நாள் ரெஸ்ட் எடுத்துக்கோ செழியா.” என்று லட்சுமி அக்கறையுடன் கூற,
“இப்போ நான் நல்லாத்தான் இருக்கேன் பாட்டி.” என்றவன், தன்ஷிகாவைப் பார்த்து, கிளம்பலாமா தனு?” என்று கேட்டான்.
“ஓகே மச்சான்,” என்ற தன்ஷிகா, லட்சுமியிடம் திரும்பி,
“மச்சானை நினைச்சுக் கவலைப்படாதீங்க. அவரைப் பார்த்துக்கத்தான் நான் இருக்கேன் இல்லையா?” என்று புன்னகையுடன் கூறிவிட்டு, ஆழினியை ஒரு பார்த்தாள்.
ஆனால் ஆழினியோ வழக்கம்போல முகத்தில் எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல் இருக்க.
செழியனோ, தன்ஷிகாவின் கை இழுத்தவாறு சென்றவன், “அடங்கமாட்டியா நீ?” என்று காதருகே ரகசியம் பேச.
கிளுக்கி சிரித்தாள் தன்ஷிகா.
கண்கள் கலங்க அங்கிருந்து நகர்ந்தாள் ஆழினி.
அவள் செல்வதையே சில நொடிகள் பார்த்துக்கொண்டிருந்த நித்யமயூரி, லட்சுமியின் அருகில் வந்து,
“என்ன பாட்டி… இங்கே என்ன நடக்குது?” என்று கேட்டாள்.
“இங்கே என்ன நடக்குது? உங்க அண்ணிதான் அங்கேயும் இங்கேயும் நடக்கிறா. உங்க அம்மாவும் பெரியம்மாவும் கூட கிச்சனை விட்டு வெளியே வரவே இல்லையே!” என்று கிண்டலாகக் கூறினார் லட்சுமி.
அதைக் கேட்ட நித்யமயூரி, சிரிக்காமல் பாட்டியைப் பார்த்து முறைத்தாள்.
“அதைக் கேட்கல பாட்டி… உங்களுக்கு ஏன் ஆழினியைப் பிடிக்க மாட்டேங்குது?”
லட்சுமி அமைதியாக அவளைப் பார்க்க, நித்யமயூரி தொடர்ந்தாள்.
“அவ அனாதை ஆசிரமத்துல வளர்ந்ததுதான் அவ செய்த குற்றமா? சின்ன வயசுல உங்களுக்கு அவளைப் பிடிக்காதுன்னு எனக்குத் தெரியும். ஆனா, இன்னமும் இப்படியே இருப்பீங்கன்னு நான் நினைக்கவே இல்ல.”
சிறிது தயங்கியவள், “தனுவுக்காக ஆழினியை வேண்டாம்னு முடிவு பண்ணிட்டீங்களா?” என்று வருத்தத்துடன் கேட்டாள்.
அடுத்த நொடியே லட்சுமி அவளது முதுகில் மெதுவாக ஒரு அடி வைத்தார்.
“கல்யாணமான பொண்ணு… பாக்குறேன்! என்னைப் பத்தி என்ன நினைச்சிட்டு இருக்கே நீ.”
பின்னர் சற்றே அமைதியான குரலில்,
“கல்யாணத்துக்கு முன்னாடி நீ சொல்ற மாதிரி, எனக்கும் அவளைப் பிடிக்காதுதான். ஆனாலும், அவ உன் சிநேகிதின்னு தெரிஞ்சதால, உனக்காகத்தான் பொறுத்துப் போனேன்.”
சிறிது நேரம் அமைதியாக இருந்தவர், பின்னர் ஆழ்ந்த குரலில் கூறினார்.
“ஆனா, இப்போ அவ என் பேரனோட பொண்டாட்டி. அந்த இடத்துக்கான மரியாதையை நான் அவளுக்குக் கொடுக்காம இருப்பேனா?”
நித்யமயூரி அமைதியாக அவரைப் பார்த்தாள்.
“என் பேரனோட அவ சிரிச்சுப் பேசி சந்தோஷமா இருந்தா, நான் ஏன் அவளைத் திட்டப் போறேன்? அவளும் இந்த வீட்டுல சந்தோஷமா இருக்கணும்னுதான் நான் நினைக்கிறேன்.”
“சாரி பாட்டி… இல்ல. அவளுக்கு ஃபேஷன் டிசைனிங் என்றால் அவ்வளவு இஷ்டம். நம்ம கடையிலேயே வேலை பார்க்கணும்னு நிறைய கனவுகள் இருந்துச்சு. படிப்பு முடிச்ச உடனே அவளுக்கு வேலை கிடைச்சது. ஆனா கல்யாணத்தால அந்த வேலையை ரிசைன் பண்ணிட்டா.
சரி, நம்ம கடைக்குத்தான் போவாள்னு நினைச்சேன். ஆனா அவ கடைக்கே போகலை போல? அதுவுமில்லாம தனு போயிட்டு இருக்கா. அதான்… நான் தப்பா நினைச்சுட்டேன்.
என்று நித்யமயூரி சொல்ல,
“உன் அண்ணி வேலைக்குப் போகலைன்னா அதைப் பத்தி அவக்கிட்ட தான் நீ கேட்கணும்.
நான் தான் பொல்லாதவள்னு சொல்லுவீங்க! உங்க அம்மா அவ மருமகளை சும்மா விட்டுருவாளா? எத்தனையோ முறை வேலைக்குப் போகச் சொல்லியிருக்கா.
அவ போனா தானே…”
என்று லட்சுமி சொல்லிவிட்டு தனது அறைக்குச் சென்றார்.
‘இந்த ஆழி ஏன் எப்படி இருக்கான்னே தெரியல. சும்மா விட்டா சரி வராது…’ என்று நினைத்த நித்யமயூரி, கிச்சனுக்குச் சென்றாள்.
அங்கே தனது மாமியார்களுடன் சேர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த ஆழினியைப் பார்த்ததும், அவளை முறைத்தபடி நின்றாள்.
“என்னம்மா மய்யு? என்ன வேணும்? பசிக்குதா?” என்று சுமதி வினவ,
“ஆழியோட கொஞ்சம் பேசலாம்னு வந்தேன் பெரியம்மா.”
“நானும் அதைத்தான் சொல்றேன். இருக்கிற வேலையை நாங்க ரெண்டு பேரும் பார்த்துக்கிறோம். நீ போய் உன் பிரண்ட் கூட பேசிட்டு இரு. நாங்க பார்த்துக்கிறோம்னா கேட்க மாட்டேங்குறா.”
என்று கவிதா தனது மருமகளை செல்லமாகக் கடிந்துகொண்டார்.
“அது வந்து…”
என்று ஆழினி மறுக்க முயன்றாள்.
ஆனால், நித்ய மயூரி ஏற்கனவே ஒரு முடிவோடு வந்திருந்தாள்.
“ அப்புறம் வந்து… மத்ததை நீ எல்லாம் பார்த்துக்கலாம். இப்போ என் கூட வா.” என்றவாறு ஆழினியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அவளைத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றாள் நித்யமயூரி.

