ஆழியின் மெளனம் ஏனோ 20 – 2

“பயப்படாத ஆழினி. நீ தைரியமா இருந்தாலே உன் வாழ்க்கை நல்லபடியாக அமையும். நீ உடனே அண்ணா கிட்ட பேசு.”

“பேசுறேன் மய்யூ. இப்போ இதைப் பற்றிப் பேசினா உங்க அண்ணன் டென்ஷன் ஆவாரு. வெட்டிங் டே முடிஞ்சதும் நான் பேசட்டுமா?” என்று தயங்கித் தயங்கிக் கேட்டாள் ஆழினி.

“என்னைக்கோ பேசு. இனியாவது சந்தோஷமா இரு. அவ்வளவுதான்!” என்றாள் நித்திய மயூரி.

“சரி! நான் அத்தைக் கிட்ட போறேன்.” என்று தெளிவான முகத்துடன் வீட்டிற்குள் சென்று விட்டாள் ஆழினி.

நித்யமயூரிக்கு அப்படி ஒரு நிம்மதி! இவ்வளவு எளிதாகவே இந்த விஷயம் முடியும் என்று அவள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. ஆழினிக்கு அண்ணனுடைய அன்பை எப்படிப் புரியவைப்பது என்று எண்ணிக்கொண்டிருந்தவளுக்கு, ஆழினியின் இந்தப் புரிதல் அவளது மனதிற்கு நிம்மதியைத் தந்தது.

‘ஓ காட்! லண்டன்ல இருந்து வந்ததுல இருந்து ஒரே ஸ்ட்ரெஸ்
இனியாவது நம்ம ஊரைச் சுத்திப் பார்க்கணும். எவ்வளவு வருஷமாச்சு! அதுக்கு முதல்ல நம்ம ஆளை கவனிக்கணும்!’ என்று எண்ணியவாறு தன் கணவனைத் தேடிச் சென்றாள் நித்திய மயூரி.

“மேடம்! இப்போதான் நான் உங்க கண்ணுக்குத் தெரியுறேனா? நான் இருக்கிறதே இப்போதான் உங்களுக்கு ஞாபகம் வந்ததோ?” என்று அவளது நவீன் கிண்டலடித்தான்.

“நீங்க என்னைப் புரிஞ்சிப்பீங்கன்னு தெரியும்!” என்றவள் ஆத்மார்த்தமாக அவனது நெஞ்சில் சாய்ந்தாள் நித்ய மயூரி.

***************

செழியன் ஆழினியின் ஐந்தாவது திருமண நாள் அந்த வீட்டில் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

ஊரில் இருந்த முக்கியமான உறவினர்களும், நண்பர்களும் வந்திருக்க, வீடே மகிழ்ச்சியில் நிறைந்திருந்தது.

மயூரியும், தன்ஷிகாவும் செழியனைக் கேலி செய்துகொண்டிருக்க, அவனும் சளைக்காமல் இருவருக்கும் பதிலடி கொடுத்துக்கொண்டிருந்தான். எல்லோருடைய முகத்திலும் அத்தனை சந்தோஷம்!

ஆனால், சிந்தூரா மட்டும் தயக்கத்துடன் தம்பியைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவனும் பட்டும் படாமலும்தான் அவளிடம் பேசினான். மற்றவர்களுக்கு அதில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. ஆனால், சிந்தூராவிற்கு மட்டும் தன் தம்பி முன்புபோல் இயல்பாகப் பேசவில்லை என்பது புரிந்தது.

தான் செய்த காரியத்தின் விளைவு இதுதான் என்பதை உணர்ந்தவள், பெருமூச்சு விட்டபடி ஒதுங்கிக்கொண்டாள்.

எல்லோரிடமும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த செழியன், தன் மனைவியை மட்டும் ஒருமுறைகூடத் திரும்பிப் பார்க்கவில்லை. அதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த ஆழினியின் மனம் வலித்தது.

எப்போதும்போல் தன் வலியை வெளிக்காட்டாமல் அமைதியாக இருந்தாள்.

ஒருவழியாக, விசேஷம் நல்லபடியாக முடிந்தது. எல்லோரும் உறங்கச் செல்லாமல் பேசிக்கொண்டிருந்தனர்.

லட்சுமி தன் பேரனிடம் ஏதோ பேசிக்கொண்டிருக்க, அவனோ ஆழினியைப் பார்த்து,

“ஆழி, மாடிக்கு வா!” என்று கூறிவிட்டு வேகமாகச் சென்றான்.

அவன் திடீரென அழைத்ததும் பதற்றமடைந்தவள், அவனைப் பின்தொடர்ந்து மாடிக்குச் சென்றாள்.

அங்கே செழியன், ஆழினியின் துணிமணிகளை எல்லாம் ஒரு பெட்டியில் அடுக்கிப் பேக் செய்துகொண்டிருந்தான்.

அதைப் பார்த்ததும் அவளது கண்கள் கலங்கின.

ஏதோ சொல்ல வாயெடுத்தவளை இடைமறித்தவன்,

“எதுவும் சொல்லத் தேவையில்லை. கிளம்பு!” என்றான்.

இரவு நேரம்னு கூடப் பார்க்காமல் நம்மளைக் கிளம்பச் சொல்றாரு. நம்மளை உண்மையிலேயே அவருக்குப் பிடிக்கலைதான் போல! என்று எண்ணியவள், கண்ணீரை அடக்கிக்கொண்டு பெட்டியை எடுக்கப் போனாள்.

“எங்க போற, லூசு? இந்த டிரஸ்ஸை முதல்ல மாத்திட்டு வா.

நம்மளோட ட்ரெஸ் எல்லாம் பேக் பண்ணிட்டேன். நீ ரெடியானதும் நாம வெளியே போறோம்!” என்றான் செழியன்.

“ஹான்…” என்று விழித்தாள் ஆழினி.

அவளுடைய குழப்பத்தைப் பார்த்தவன் புன்னகையுடன்,

“இன்னைக்கு என்ன நாள் தெரியுமா? நம்ம வெட்டிங் டே! கல்யாணம் முடிஞ்ச பிறகுதான் நம்மால ஹனிமூன் போக முடியல‌. அதான் இன்னைக்காவது கிளம்பலாம்னு எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு.

கேப் ட்ரைவரும் வந்தாச்சு.
சீக்கிரம் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்தின்னா நாம கிளம்பலாம்!” என்று உற்சாகமாகக் கூறினான்.

அவன் கூறியதைக் கேட்டவளுக்கு, நடப்பதெல்லாம் உண்மைதானா என்று நம்பவே முடியவில்லை.

இவ்வளவு நேரம் தன்னைப் புறக்கணித்தவன், இப்போது திடீரென இப்படி உற்சாகமாகப் பேசுகிறானே!

இது நிஜமா? இல்லை, தன் மனம் காணும் கனவா?

தயக்கத்துடனே தயாரானாள் ஆழினி.

கீழே வந்ததும் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டனர். அங்கிருந்தவர்கள் யாரும் அதிரவில்லை. அப்ப இது எல்லோருக்கும் முன்பே தெரிந்திருக்குமோ? என்று எண்ணியபடி செழியனுடன் நடந்தாள்.

வெளியே, இவர்களை அழைத்துச் செல்வதற்காகக் கார் தயாராக நின்றிருந்தது.

டிரைவர் இருப்பதால் செழியனிடம் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்துகொண்டாள். பயணக் களைப்பில் கண்களை மூடி உறங்க முயன்றாள்.

அரைகுறையாக உறங்கிக்கொண்டிருந்தவள், சிறிது நேரத்திற்குப் பிறகு விழித்துப் பார்த்தாள்.

கார் செல்லும் பாதையைப் பார்த்ததும் அவளுக்குச் சற்றே ஏமாற்றமாக இருந்தது.

மலைப்பாதையில் கார் சென்றுகொண்டிருந்தது.

ஊட்டியில் பிறந்து வளர்ந்தவளுக்கு மலைகளும், குளிரும் புதிதல்ல. எப்போதுமே அவளுக்குக் கடல் பகுதிக்குச் செல்ல வேண்டும் என்றுதான் ஆசை.

அதுவும், தன் மனதுக்குப் பிடித்தமான ஒருவருடன் கடற்கரையில் அமர்ந்து, அலைகளின் ஓசையைக் கேட்டுக்கொண்டே நேரத்தைச் செலவிட வேண்டும் என்பது அவளுடைய சின்னஞ்சிறு கனவு, ஆசை.

ஆனால், அதைப்பற்றியெல்லாம் கேட்காமல் செழியன் தன் விருப்பப்படி ஓர் இடத்திற்கு அழைத்துச் செல்வதை உணர்ந்ததும் அவளுடைய மனம் சற்றே வலித்தது.

இருந்தாலும், எப்போதும்போல் தன் மனதைத் தானே சமாதானப்படுத்திக்கொண்டாள்.

பரவாயில்லை… அவருக்குப் பிடித்த இடத்திற்குத்தானே அழைத்துச் செல்கிறார். அதுவே போதும்! என்று எண்ணியவள் மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள்.

பொழுது விடியும்போது இருவரும் கேரளாவில் இருந்தனர்.

அங்கிருந்த அழகிய ரிசார்ட்டுக்கு அவளை அழைத்துச் சென்றான் செழியன்.

ரிசார்ட்டின் பணியாளர்கள் இருவரையும் அன்புடன் வரவேற்றனர். அவர்களிடம் வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்ட செழியன், ஆழினியையும் அழைத்துக்கொண்டு அறைக்குச் சென்றான்.

அவன் பின்னால் அமைதியாகச் சென்றாள் ஆழினி.

அவளுடைய மனதிலோ இன்னமும் ஆயிரம் கேள்விகள்!

இத்தனை நாட்களாகத் தன்னிடம் முகம் கொடுத்துக்கூடப் பேசாதவன், இன்று திடீரென இப்படி ஒரு பயணத்திற்கு அழைத்து வந்திருப்பதன் காரணம் என்ன?

அவளுக்குப் புரியவில்லை.

ஆனால், அவளுக்குத் தெரியாத ஒன்று இருந்தது.

இந்தப் பயணம் அவளுக்காகச் செழியன் மனதில் வைத்திருந்த காதலின் ஓர் அழகான தொடக்கம் என்பதை!
மகிழ்ச்சியுடன் அந்த அறைக்குள் நுழைந்தவன், அங்கிருந்த மெத்தையில் செய்யப்பட்டிருந்த பூ அலங்காரத்தைப் பார்த்ததும் முகம் மாறினான். உடனே தான் அறை புக் செய்திருந்த எண்ணிற்கு அழைத்து, ஏதோ பேசிவிட்டு வந்தான்.

அவனது முகமாற்றத்தையும், அவன் செய்த செயல்களையும் ஆழினி அமைதியாகப் பார்த்துக் கொண்டுதான் இருந்தாள்.

அடுத்த நொடி, செழியனின் செயலைக் கண்டவளுக்குக் கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன. மெத்தையில் இருந்த பூக்கள் அனைத்தையும் வேகமாகத் திரட்டியவன், அவற்றைக் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு அவளைத் திரும்பிப் பார்த்தான்.

அவளது முகத்தைப் பார்த்ததுமே அவள் மனதில் ஓடிக்கொண்டிருப்பதை ஓரளவுக்குப் புரிந்துகொண்ட செழியன், லேசாகப் புன்னகைத்தான்.

“ஆழி! பழசையெல்லாம் இன்னும் மறக்கல போல… ரைட்?” என்று வினவினான் செழியன்.

error: Alert: Content selection is disabled!!