மௌனம் -21(இறுதி அத்தியாயம்)
“ இன்னும்… நீ பழசை எல்லாம் மறக்கல, ரைட்?” என்று கேட்ட செழியனை அதிர்ந்து பார்த்தாள் ஆழினி.
“அதை ஞாபகம் வச்சிருக்கியே ஆழி! அதுக்கு அடுத்து நடந்ததும் உனக்கு ஞாபகம் இருக்கும் தானே?” என்று கூறி அவன் கண் சிமிட்ட, அவளோ பேந்தப் பேந்த விழித்தாள்.
அவ்வளவுதான்… அவளது சிந்தைக்குள் அன்றைய நாள் நினைவாக வந்து போனது.
அன்று…
திருமணம் முடிந்து, உள்ளுக்குள் பயமும் பதற்றமும் செழியனை நினைத்த கவலையும், “அவனுக்கு என்னைப் பிடிக்குமா? பிடிக்காதா?” என்ற குழப்பமும் நிறைந்திருக்க, அந்த இரவு அவனது அறைக்குள் பதட்டத்துடன் தான் நுழைந்தாள் ஆழினி.
தன்ஷிகா தனது காதலனை விட்டு வீட்டிற்கு வர மாட்டேன் என்று கூறியதால் குடும்பத்துல அனைவரும் வருத்தத்துடனே இருந்தனர். இருந்தாலும் செழியனின் திருமணம் சிறப்பாக நடக்க வேண்டும் என்பதில் கவிதா உறுதியாக இருந்ததால்,
திருமணமும் நல்லப்படியாக முடிந்தது.
அதேபோல மற்ற சடங்குகளையும் எந்தக் குறையும் இல்லாமல் செய்ய முயன்றார்.
இரவு நெருங்கவும் ஆழினியை அலங்கரித்து செழியனின் அறைக்கு அனுப்பி வைத்தார் கவிதா.
அந்த அறை தேவலோகத்தில் இருக்கும் இந்திர சபையோ என்று நினைக்கும் அளவுக்கு அவ்வளவு அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.
திருமணத்திற்கு முன்பே இதற்கான ஏற்பாடுகளை தன்ஷிகா செய்திருந்தாள்.
அதெற்கென இருக்கும் ஆட்களை வரவழைத்து, தனக்குப் பிடித்தபடி ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து அலங்கரிக்கச் சொல்லியிருந்தாள்.
இது எல்லாம் வீட்டில் உள்ளவர்கள் அவளை சந்தேகப்படக்கூடாது என்பதற்காக செய்த செயல்.
உள்ளே நுழைந்த ஆழினியோ அந்த அறையின் அழகை ரசிக்கக்கூட முடியாமல் பதற்றத்துடன் விழித்துக் கொண்டிருந்தாள்.
திருமணம் முடிந்ததும் கீழே உள்ள அறையிலே தங்கியிருந்த செழியன் அப்போது தான் அவனது அறைக்குள் நுழைந்தான். அவனது அறை பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்க, அதைப் பார்த்ததும் அவனது முகம் கருமையாக மாறியது.
அவன் அங்கிருந்த பூக்களையும் அலங்காரங்களையும் கோபத்துடன் ஒவ்வொன்றாக களைத்து,வீசிக் கொண்டிருக்க, அவனது செயலைக் கண்டு பயந்த ஆழினி கதவோரமாக ஒதுங்கி நின்றாள்.
அவளைத் திரும்பிப் பார்த்தவன் இன்னும் கோபத்துடன் மெத்தை மேல் இருந்த பூக்களையும், அங்கிருந்த தோரணங்களையும் தட்டி விட்டவன், பின்னர் மெத்தையில் சென்று படுத்து கண்களை மூடிக்கொண்டான்.
அவனது கோபத்தைக் கண்டு பயந்த ஆழினி, கீழே படுத்துக்கொள்ள நினைத்து அங்கிருந்த பூக்களை எடுக்க முயன்றாள்.
அவளது செயலில் எரிச்சலடைந்தவன்,
“இப்போ ஒன்னும் சுத்தம் பண்ண
வேண்டாம். அதுக்கெல்லாம் ஆளுங்க வருவாங்க. காலையில் அவங்க க்ளீன் பண்ணுவாங்க. ஓவரா ஆக்ட் பண்ணாம படு” என்றான்.
“கீழே… படுக்க…” என்று நடுங்கிய குரலில் கூற.
“என்ன கீழே படுக்க போறியா? ஓவரா சீன் போடாத. இந்த மெத்தையிலேயே படுத்துக்கோ. இருக்கிற டென்ஷன் போதாதுன்னு நீ வேற…” என்று முணுமுணுத்தான்.
அந்த வார்த்தைகள் அவளது மனதை இன்னும் காயப்படுத்த, அவளது கண்களில் கண்ணீர் திரண்டது.
யாருக்கும் தெரியாமல் அதைத் துடைத்துக் கொண்டு, மெத்தையின் ஓரத்தில் படுத்தாள்.
இருவருக்கும் உறக்கம் வருவேனா என்ற நிலைதான்.
இரவு முழுவதும் ஒருவரை ஒருவர் நினைத்தபடியே விழித்துக் கிடந்தனர்.
அதிகாலையில், ஆழினி குளித்துவிட்டு வந்தாள். ஆனால் தலையில் இருந்த ஈரத்தைக் கூடத் துடைக்காமல், பால்கனியில் நின்று வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
உறங்காமல் இருந்த செழியன் அவளைப் பார்த்தான்.
‘தலைக்குளித்திருக்கிறாள் போலிருக்கிறது… ஈரத்தைத் துடைக்காமல் இப்படியே நிற்கிறாளே…’
மனது கேட்காமல் அவள் அருகில் சென்றவன், அவளது தோள்மீது கை வைத்தான்.
திடீரென பதறித் திரும்பிய ஆழினி, அவன் மீது மோதியபடி நின்றாள்.
அவ்வளவு நெருக்கத்தில் நின்றபோது, அவளது நெற்றியில் இருந்து வழிந்த நீர்த்துளிகள் முத்துக்களைப் போல மின்னின. அந்தக் காட்சி அவளது பேரழகை இன்னும் அதிகமாக வெளிப்படுத்தியது.
அதற்கு மேல் அவனால் தன்னை கட்டுப்படுத்த முடியவில்லை.
அவளை அணைத்துக் கொண்டவன், அவளது நெற்றியில் வழிந்த அந்த நீர்த்துளியின் மீது தன் முதல் முத்தத்தைப் பதித்தான்.
விழிகளை விரித்துப் பார்த்தாள் ஆழினி.
அவனது விழிகளில் தெரிந்த உணர்வுகளைப் பார்த்தவள், அதிலிருந்து தன் பார்வையை விலக்க முடியாமல் அமைதியாக நின்றாள்.
அவளைத் தன் கரங்களில் ஏந்திய அந்த நொடியில், கடந்த ஒரு வாரமாக அவனுக்குள் இருந்த சஞ்சலங்கள் அனைத்தும் மெல்ல மெல்ல மறைந்தன.
அந்த நொடியில் இருவரும் தனி உலகில் சஞ்சரித்தனர்.
அவர்களது இனிய உறவின் ஆரம்பத்தை செழியன் நினைவுபடுத்திக் கொண்டிருக்க…
ஆழினிக்கோ, அவன் கோபத்துடன் அந்தப் பூக்களைத் தூக்கிப் போட்ட காட்சிதான் நினைவுக்கு வந்தது.
அதுவும் இன்றும் அதேபோல் ஏதாவது செய்து விடுவானோ என்ற பதற்றம் அவளுக்குள் அதிகரித்தது.
அவளையே பார்த்துக் கொண்டிருந்த செழியன், அவளது தலையில் லேசாகத் தட்டினான்.
“எதுக்கு இவ்வளவு பயப்படுற?”
அவளோ தயக்கத்துடன் அவனைப் பார்த்தாள்.
“உங்களுக்கு என்னைப் பிடிக்காது… அன்னைக்கு இப்படித்தானே பூவெல்லாம் தூக்கிப் போட்டீங்க. அவ்வளவு கோவத்தோட இருந்தீங்க. இன்னிக்கும் அதே மாதிரி…” என்று தயங்கித் தயங்கிக் கேட்டாள்.
அவளது முகத்தைப் பார்த்த செழியன் மெதுவாகச் சிரித்தான்.
“அன்னைக்கு உன்னை புடிக்காமதான் நான் பூவைத் தூக்கிப் போட்டேனா?”
அவள் அமைதியாக அவனைப் பார்த்தாள்.
“அந்த தனு பண்ண வேலைக்காகத்தான் அப்படி நடந்துக்கிட்டேன். அவ பார்த்துப் பார்த்து அந்த ஏற்பாட்டைப் பண்ணுனா. இந்தப் பூ டெக்கரேஷனுக்கு அவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்ணி, ‘இப்படி வேணும்… அப்படி வேணும்’ன்னு ஆளுங்ககிட்ட சொல்லி ரெடி பண்ணிட்டு ஓடிப் போயிட்டா. அதான் அந்த கோபம் வந்தது.”
அவன் சொன்னதைக் கேட்டு ஆழினி புரியாமல் விழித்தவளோ, “அப்புறம் ஏன் இன்னைக்கும் அதே மாதிரி பண்றீங்க..” என்று முகத்தைச் சுளித்தாள் ஆழினி.
“அதுக்கு ஒரு காரணம் இருக்கு. அப்புறம் சொல்றேன். இப்போ? முதல்ல உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு.” என்று கூறியவன், அவளைப் பார்த்து குறும்பாகக் கண் சிமிட்டினான்.
ஆழினியோ திகைத்து நின்றாள்.
“வா… உனக்கு ஒரு சர்ப்ரைஸ் காட்டுறேன்,” என்று கூறியவன், அவர்கள் இருந்த அறையின் மற்றொரு கதவைத் திறந்தான்.
கதவுக்கு வெளியே இருந்தது ஓர் அழகிய தோட்டம். சுற்றிலும் பசுமையும், நடுவில் அழகான ஊஞ்சலும் இருந்தது. அதைப் பார்த்ததும் அவளுக்குள் சிறு குழந்தையைப் போன்ற ஆசை பிறந்தது.
ஊஞ்சலைத் தொட்டுப் பார்த்தவள், அதில் உட்கார்ந்தாள். அவன் அவளை இரண்டு முறை மெதுவாக ஆட்டிவிட்டு,
“இதை எப்ப வேணாலும் உக்காந்து ஆடலாம். இன்னும் உனக்கு நிறைய சர்ப்ரைஸ் இருக்கு. வா காட்டுறேன்,” என்று கூறி அவளை அழைத்துச் சென்றான்.
சிறிது தூரம் சென்றதும் திடீரென்று தோட்டம் முடிந்து, அங்கே படிக்கட்டுகள் இருப்பது தெரிந்தது.
அதைப் பார்த்தவள் புரியாமல் அவனை நோக்கினாள்.
“வா ஆழி! ” என்று அவன் அவளை அழைத்துச் செல்ல,
“எங்க கூட்டிட்டுப் போறீங்க?” என்று பயத்துடன் கேட்டாள்.
“உன்னை எங்கேயோ கூட்டிட்டுப் போய் தள்ளி விட்டுடுவேன்னு பயப்படாதே. நாம ஒன்னும் மலை ஏறல. படியில இறங்க தான் செய்யுறோம். பயப்படாம வா.” என்று சிரித்துக்கொண்டே கூறினான்.
ஒரு நொடி அவனைச் சந்தேகத்துடன் பார்த்தவள், தான் சந்தேகப்பட்ட மடத்தனத்தை நினைத்து நொந்துகொண்டே தலையைக் குனிந்தாள்.
அவளுடைய முகத்தைப் பார்த்தவனுக்கு கோபம் வருவதற்குப் பதிலாக சிரிப்புதான் வந்தது.
அதன்பிறகு படிகளில் இறங்க ஆரம்பித்தாள். ஆனால் படிகள் செங்குத்தாக இருந்ததால் அவளது கால்கள் தடுமாறின. ஒவ்வொரு படியையும் இறங்குவதற்கே சிரமப்பட்டாள். சிறிது நேரத்தில் மூச்சும் வாங்க ஆரம்பித்தது.
“நான் வேணா தூக்கிக்கவா?” என்று அவன் கேட்டான்.
“நடக்கவே சிரமமா இருக்கு. அதெல்லாம் வேண்டாம்.” என்றவள், அவனது கைகளை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு படிகளில் இறங்கத் தொடங்கினாள்.
கீழே இறங்கியதும், அவளுக்கு அங்கே ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருந்தது.
படிகளின் முடிவில் ஆர்ப்பாட்டமில்லாத, அமைதியும் அழகும் நிறைந்த ஓர் அழகிய கடற்கரை!
அந்தக் காட்சியைப் பார்த்தவுடன், இவ்வளவு நேரம் அவளுக்குள் இருந்த குழப்பம், கலக்கம், பயம் அனைத்தும் மெல்ல விலகிப் போயின.
அவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
அவன் அவளது கன்னத்தில் லேசாகத் தட்டிவிட்டு,
“உனக்கு என்ன பிடிக்கும்னு எனக்குத் தெரியாம இருக்குமா?” என்றான்.
அவளுக்குப் பிடித்ததைத் தேடி, அங்கு அவளை அழைத்துக்கொண்டு வந்திருக்கிறான் என்பதை உணர்ந்தவளின் கண்கள் மெல்ல கலங்கின.
அவனை நிமிர்ந்து பார்த்தவள் எதுவும் பேசாமல் நின்றாள்.
“இனி எதற்கும் நீ அழக்கூடாது. உன் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்.” என்று அவன் மெதுவாகக் கூறினான்.

