அத்தியாயம் 10
அன்று வேலை முடிந்து வந்த செந்தாளனின் பின்னாலேயே சுற்றிக்கொண்டிருந்தாள் கானவி. என்னவோ அவளுக்கு அலுவலாகவேண்டி இருக்கிறது என்று கண்டுகொண்டவன் சிரிப்பும் முறைப்புமாக அவளை அறைக்குள் பிடித்து நிறுத்தி, “என்ன பிரச்சினை உனக்கு இப்ப?” என்று அதட்டினான்.
“எனக்குக் காசு கொஞ்சம் வேணும்!” நீ தந்தேயாக வேண்டும் என்னும் குரலில் கேட்டாள் அவள்.
“அதுதானே. உனக்கு வேற என்னதான் தேவைப்பட்டிருக்கு?” என்று முறைத்தான் அவன்.
“என்ன நக்கலா? நான் ஒண்டும் சும்மா சிலவளிக்கக் கேக்கேல்லை. ஒரு மேக்கப் கோர்ஸ் நடக்கப் போகுது. அதுவும் அவா லண்டனிலிருந்து வந்து ஒரு நாள் கிளாஸ் எடுக்கிறா. அதுக்குத்தான் கேக்கிறன்.”
“எவ்வளவு காசு?” ஒரு நாள் என்றால் பெரிதாக இராது என்றெண்ணி வினவியவனுக்கு அவள் சொன்ன தொகையைக் கேட்டுத் தலை சுற்றியது.
“சும்மா முகத்துக்கு நாலு பெயிண்ட் அடிக்கிறதுக்கு இவ்வளவு காசு குடுக்க நினைப்பியா நீ? அதுவும் ஒருநாள் கூத்துக்கு!”
“நாலு பெயிண்ட் அடிக்கிறதோ? இதைவிட மோசமா மேக்கப்பை கேவலப்படுத்தேலாது. எனக்குப் போகோணும். காசு தாங்க. இல்லாட்டி அப்பாட்டக் கேப்பன்.” என்றதுமே, “எரிச்சலக் கிளப்பாத கானவி!” என்றான் அவன்.
திருமணமாகி வந்த கொஞ்ச நாள்களிலேயே அவளின் மாமா இவளின் செலவுக்கென்று பணம் அனுப்பியிருந்தார். இவளும் டவுனுக்குச் சென்று பணத்தையும் எடுத்துக்கொண்டு, அதில் இவர்கள் எல்லோருக்கும் உடைகள், அது இது என்று வாங்கிக்கொண்டு வந்திருந்தாள். விசயம் அறிந்த செந்தாளன் நன்றாகவே அவளைக் கடிந்துகொண்டிருந்தான். அன்றே உன் அப்பாவிடமோ மாமாவிடமோ பணம் வாங்கக் கூடாது என்றும் சொல்லியிருந்தான்.
“அப்ப காசுக்கு நான் என்னதான் செய்றது? அங்க வாங்கக் கூடாது எண்டா நீங்க தாங்க, எனக்குக் கட்டாயம் அந்த வகுப்புக்குப் போகோணும்!”
“அப்பிடி எல்லாம் ஒரு கட்டாயமும் இல்ல. உருப்படியா பாக்கிற வேலை ஏதாவது இருந்தா அதைப் போய்ப் பார்!”
“ப்ளீஸ்…” என்று கெஞ்ச ஆரம்பித்தவளைக் கதைக்க விடாது, “இதுக்கு மேல எனக்குப் பொறுமை இல்ல கானவி. கோவப்பட வைக்காத. எனக்கு முதல் நோட்ஸ் எடுக்கோணும். அறைய விட்டு வெளில போ!” என்றான் கண்டிப்புடன்.
இனி மாறமாட்டான். முகம் வாடிவிட வந்து முற்றத்தில் அமர்ந்துகொண்டாள். என்னவோ அந்த வகுப்பைத் தவறவிட மனமேயில்லை. அப்போது அங்கு வந்த சற்குணத்தார் ஒற்றைப் பார்வையிலேயே மருமகளின் முகவாட்டத்தைக் கண்டுகொண்டார்.
“என்னம்மா?”
“எல்லாம் உங்கட மகனால மாமா…” என்று ஆரம்பித்து அவள் முறையிட, அவளுக்கு விருப்பமான இளநீரை வெட்டிக் கொடுத்துவிட்டு மகனைத் தேடி வீட்டுக்குள் வந்தார்.
“தம்பி!”
தன் முன்னே இருந்த புத்தகத்தில் கவனமாக இருந்தவன் திரும்பிப் பார்த்தான்.
“மருமகளுக்கு அந்தக் காசை நான் குடுக்கட்டோ?”
பாடத்தில் கவனமாக இருந்தவனுக்கு முதலில் அவர் எந்தக் காசைப் பற்றிக் கதைக்கிறார் என்று பிடிபடவில்லை. பிடிபட்டதும், “அவள் வந்து சொன்னவளா உங்களிட்ட?” என்று கோபக்குரலில் வினவினான்.
“அவா சொல்லேல்ல. நானாத்தான் கேட்டனான்.” என்றார் அவர் அவசரமாக. “சின்ன பிள்ளை அப்பு, போய்ட்டு வரட்டுமன். ஓம் எண்டு சொன்னா சந்தோசப் படுவா.”
அவரே அப்படிக் கேட்ட பிறகு அவனால் மறுக்க முடியவில்லை. எப்போதும் தன் முடிவுகளை அவள் மாற்றுவது அவனுக்குப் பிடிக்காது. அது தெரிந்தும் அவர் மூலம் காரியம் சாதிக்க நினைக்கிறவள் மீது கோபம் உண்டானாலும் காட்டிக்கொள்ளாமல், “நானே குடுக்கிறன்.” என்றான் சுருக்கமாக.
துள்ளலோடு பணம் கட்டி, அந்த வகுப்புக்கும் சென்று வந்தாள் கானவி.
*****
அன்று மாலை வீடு வரும்போது அண்ணனும் தம்பியும் சேர்ந்தே வந்தனர். மெல்லிய வியப்புடன் பார்த்தாள் கானவி. எப்போதும் சிவரூபன் வீடு வர இரவு ஒன்பது பத்தைத் தாண்டிவிடும். அவள் கணவனுக்கும் இது வகுப்பு இருக்கும் நேரமாயிற்றே! என்ன அலுவலோ?
“அம்மா, தேத்தண்ணி இருந்தாத் தாங்க!” வீட்டுக்குள் பார்த்துக் குரல் கொடுத்தபடி கைப்பேசியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றான் சிவரூபன். செந்தாளன் நேராக அவர்களின் அறைக்கு நடந்தான்.
அவன் போன வேகம் அவளையும் பின்தொடரச் சொன்னது. ஆனால், புவனாம்பிகை வீட்டுக்குப் பின்னால் நிற்பதால் சிவரூபன் சொன்னது அவருக்குக் கேட்டிருக்காது என்று தெரிந்து, தேநீர் ஊற்றக் குசினிக்கு நடந்தவளை, “கானவி! இஞ்ச(இங்க) ஒருக்கா வந்திட்டுப் போ!” என்ற செந்தாளனின் குரல் தடுத்தது.
அவள் அறைக்குள் போனபோது, அங்கே அவன் அவர்களின் அலமாரியைக் கிண்டிக்கொண்டிருந்தான். அவளைத் திரும்பிப் பார்த்துவிட்டு, “லாச்சிக்க ரெண்டு லட்சம் காசு கிடந்தது. இப்ப முப்பது குறையுது. நீ பாத்தியா?” என்றான் இன்னும் தேடிக்கொண்டே.
கானவிக்கு ஒருமுறை திக் என்று இருந்தது. அவன் பார்ப்பதற்குள் தன்னைச் சமாளித்துக்கொண்டு, “இல்லையே… நான் பாக்கேல்லையே!” என்றாள் அவசரமாக.
“அப்பிடி எங்க வச்சனான்? கை தவறி வைக்க மாட்டனே!” தனக்குத் தானே கேட்டபடி இன்னும் தேடினான்.
“அப்பிடி எங்க போகக் கிடக்கு? இஞ்ச எங்கயும்தான் இருக்கும். அதப் பிறகு பாருங்கோ, இப்ப வாங்க தேத்தண்ணி ஊத்துறன்.” என்றுவிட்டு அங்கிருந்து ஓடி வந்துவிட்டவளுக்கு நெஞ்சு படபடவென்று அடித்துக்கொண்டது.
அந்தப் பதற்றத்தோடே இருவருக்கும் தேநீர் ஊற்றிக்கொண்டு வந்து விறாந்தையில் இருந்த குட்டி மேசையில் வைத்தாள். இருவரையும் தேநீர் அருந்தும்படி சொல்லிவிட்டுச் சத்தம் இல்லாமல் வீட்டுக்குப் பின்னால் நழுவினாள்.
அங்கே, புவனாம்பிகை அவர் வளர்க்கும் கோழிகளைக் கவனித்துக்கொண்டிருந்தார்.
“மாமி, இவரும் மச்சானும் வந்திட்டினம். தேத்தண்ணி ஊத்திக் குடுத்தனான்.”
“என்ன நேரத்துக்கே வந்திட்டினம்? ஏதும் அலுவலாமோ?” இறைச்சிக்கு என்று ஒரு வகை, முட்டையிடும் கோழிகள் ஒரு பிரிவு, வளர்ந்துவரும் பருவத்தில் ஒன்று என்று மூன்று கூடுகளில் மூன்று பருவத்தில் கோழிகள் வைத்திருந்தார் புவனாம்பிகை. அவற்றுக்கு ஏற்ற வகையில் தனித்தனியாகத் தீனி இட்டுக்கொண்டிருந்தவர் வினவினார்.
“தெரியேல்லயே மாமி. நான் கேக்கேல்லை.”
“சின்னவன் இந்த நேரம் வரமாட்டானேம்மா.” யோசனையாக இழுத்தவருக்குக் காரணம் அறியத் தோன்றியது. “இந்தக் குஞ்சுகளை ஒருக்கா பாத்துத் திரும்பவும் கூட்டுக்க அடைச்சு விடுங்கோம்மா. நேற்றும் ஒரு குஞ்சக் கீரிப்பிள்ளை தூக்கிக்கொண்டு போயிற்றுது. நான் ஒருக்கா என்ன எண்டு கேட்டுக்கொண்டு வாறன்.” என்று பொறுப்பை அவளிடம் ஒப்படைத்துவிட்டு, அங்கிருந்த பைப்பில் கைகால்களைக் கழுவிக்கொண்டு வீட்டிற்குள் நடந்தார்.
தப்பித்தோம் பிழைத்தோம் என்று இங்கேயே நின்றுகொண்டாள் கானவி. ஆனாலும் மனத்தின் படபடப்பு அடங்கேன் என்றது. என்னவோ தவறு செய்வதாக உறுத்தியது.
அவள் பணத்தை எடுத்து நான்கு நாள்களாயிற்று. இவ்வளவு நாள்களும் பொறுத்தவன் இன்னும் ஒரு நாள் பொறுத்திருக்கக் கூடாதா? நாளைக்கு அவர்களின் இருநூறாவது திருமண நாள். அந்த நாளில் அவனுக்கு ஒரு இனிய அதிர்ச்சியைக் கொடுக்க ஆசைப்பட்டாள். அதற்குத்தான் பணம் போதாமல் அவனுடையதிலிருந்து எடுத்திருந்தாள்.
இப்போது சொன்னால் ஏன் எடுத்தாய் என்று கேட்பான். பிறகு அவளின் ‘சப்ரைஸ்’ உடைந்துவிடும்! புவனாம்பிகை சொன்னது போன்று கோழிக்குஞ்சுகளைக் கூட்டுக்குள் அடைத்துவிட்டு, கைகால்களைக் கழுவிக்கொண்டு அவள் வீட்டுக்குள் சென்றபோது, அங்கே எல்லோர் முகத்திலும் கலவரம். ஆளுக்கு ஒரு பக்கமாகத் தேடிக்கொண்டிருந்தனர்.
சற்றே சமன்பட்டிருந்தவள் மீண்டும் பதற்றமானாள்.
“வடிவாத் தேடிப் பாருங்கோ தம்பி. அப்பிடி என்னெண்டு காசு குறையும்? நீங்கதான் எங்கயோ கைதவறி வச்சிட்டீங்க.” விறாந்தையில் தேடிக்கொண்டே சொன்னார் புவனாம்பிகை.
“அப்பிடி எப்பயம்மா கவனமில்லாம நடந்திருக்கிறன்? இந்த லாச்சிக்கதான் எப்பவும் வைக்கிறனான். ஏற்கனவே இருந்த காசோட சேர்த்து நேற்றும் இதுக்கதான் முப்பது கொண்டுவந்து வச்சனான். எனக்கு நல்லா நினைவிருக்கு.” மெல்லிய சினம் துளிர்க்கச் சொன்னான் செந்தாளன்.
எப்போதும் எல்லாவற்றிலும் கவனமாக இருக்கிற அவனைப்போய்ப் பொறுப்பற்றவன் போன்று சொன்னால் எப்படி?

