புவனாம்பிகை பதறிப்போனார். “தம்பி! என்ன கதை இது? அவா உங்கட மனுசி. அவாக்கு இல்லாத உரிமை இந்த வீட்டில ஆருக்கும் இல்ல! கோபத்தில கண்டதையும் கதைக்காமப் பேசாம இருங்கோ” என்று அதட்ட, அங்கே விறாந்தையில் சினத்தை அடக்க முடியாமல் அடக்கிக்கொண்டு அமர்ந்திருந்த சிவரூபன் சீறிக்கொண்டு எழுந்தான்.
“என்னவோ அவா செய்தது பிழையே இல்லை எண்டுற மாதிரிச் சொல்லுறீங்க அம்மா. அவ்வளவு உரிமை இருக்கிறவா சொல்லிப்போட்டு எடுத்திருக்கோணும். கொஞ்சத்துக்கு முதல் என்ர பிரண்ட்ஸ சொன்னீங்க. இப்ப விளங்குதா ஆர் களவெடுத்தது எண்டு?” என்றான் எரிச்சலுடன்.
துடித்து நிமிர்ந்தாள் கானவி. அதுவரையில் அவமானத்தில் குறுகி நின்றவள் ஆத்திரத்தில் கொதித்தெழுந்தாள். விறுவிறுவென்று அறையை விட்டு வெளியே வந்து, “தேவை இல்லாமக் கதைக்காதீங்க மச்சான். நான் களவெடுத்தத நீங்க பாத்தீங்களா?” என்று சீறினாள்.
“அம்மாச்சி விடுங்கோம்மா. அவன் என்னவோ யோசிக்காமாகக் கதைக்கிறான் எண்டு பாத்தா நீங்களும் என்ன இது?” என்ற புவனாம்பிகையின் பேச்சு அங்கு எடுபடவில்லை.
“அப்ப என்னத்துக்கு அண்ணா கேக்கேக்க பொய்யச் சொன்னனீங்க? தைரியமா உள்ளதைச் சொல்லியிருக்க வேண்டியதுதானே!” என்றவன் பேச்சை, “சிவா!” என்ற செந்தாளனின் அதட்டல் நிறுத்தி இருந்தது. “பேசாமப் போய் வெளில நில்லு! நான் காசைக் கொண்டுவாறன்!” என்றான் கண்டிப்புடன்.
“நீயும் போ உள்ளுக்கு!” என்றான் கானவியிடம்.
“நான் ஏன் போகோணும்? அவர் களவெடுத்தனான் எண்டு சொல்லுறார். பொய் சொன்னனான் எண்டு சொல்லுறார். நீங்களும் கேட்டுக்கொண்டு நிக்கிறீங்க.” கண்களில் நெருப்புப் பறக்கச் சீறினாள் அவள்.
சிவரூபனே அவன் சொன்னதைக் கேட்டு அடங்கி நிற்க, அவள் எதிர்த்துப் பேசியது பிடிக்காமல், “இப்ப அதுக்கு என்ன செய்யச் சொல்லுறாய்? நீ ஒழுங்கா இருந்திருக்க இதெல்லாம் நடந்தே இருக்காது!” என்று அவனும் பதிலுக்குச் சீறினான்.
அப்படியே நின்றுவிட்டாள் கானவி. இமைக்காது கணவனையே பார்த்தாள். கட்டிய மனைவியின் மீது கள்ளிப் பட்டம் சுமத்தப்பட்டிருக்கிறது. பொய் சொன்னதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அது அவனுக்குச் சுடவில்லை. மாறாக அதற்குக் காரணமும் அவள் என்கிறான்.
விழிகளை ஒருமுறை இறுக்கி மூடித் திறந்தாள். உழைப்புப் பிழைப்பில்லாமல் குந்தி இருந்து சாப்பிடுகிறவளுக்கு ரோசம் தேவை இல்லை என்கிறானா அவள் கணவன்? உள்ளே நெஞ்சுக் குழிக்குள் சுருக்கென்று எதுவோ பாய்ந்தது போலிருக்க, விருட்டென்று அறைக்குள் நுழைந்துகொண்டாள்.
சிவரூபனுக்கு நடந்த ஒன்றும் பிடிக்கவில்லை. செய்வதையும் செய்துவிட்டு அதைக் கேட்டதற்குச் சீறிக்கொண்டு வருவாளா இந்தப் பெண்? அவன் தமையனிடம் காசு கேட்டதால்தானே இவ்வளவும் என்று தோன்றிவிட, “எனக்கு உங்கட காசே வேண்டாம் அண்ணா! நான் வேற ஏதாவது வழி பாக்கிறன்!” என்று வெறுப்புடன் மொழிந்துவிட்டு வாசலுக்கு நடந்தான்.
“டேய் சிவா, நில்லு!” என்றபடி அவனிடம் விரைந்தான் செந்தாளன்.
“தம்பி இதென்ன பழக்கம் உனக்கு? தேவை இல்லாம எல்லாம் கோவம் வருது.” என்றபடி புவனாம்பிகையும் பின்னால் ஓடினார்.
“என்ன உனக்கு அவ்வளவு ரோசம்? முப்பதுதானே குறையுது. அத நாளைக்கு பாங்க்ல இருந்து எடுத்துத் தாறன். இப்ப இருக்கிறதக் கொண்டு போ!” என்றவன் மீண்டும் அறைக்குள் வந்தபோது, அவனுக்குத் தெரியாமல் அவளின் மேக்கப் பொருட்கள் அடங்கிய பெட்டிக்குள் ஒளித்து வைத்திருந்த பரிசுப் பெட்டியை எடுத்துக்கொண்டிருந்தாள் கானவி.
ஒருவித ஆவேசத்துடன் அதைச் சுற்றியிருந்த பேப்பரைக் கிழித்து எறிந்தாள். அது ஒரு கைப்பேசி. நிச்சயம் அதை அவனுக்காகத்தான் வாங்கி இருப்பாள். நெஞ்சை ஏதோ ஒன்று தாக்க அப்படியே நின்றான் செந்தாளன்.
கண்களையும் முகத்தையும் கையாலேயே பரபரவென்று துடைத்துக்கொண்டு, அந்தக் கைப்பேசிப் பெட்டியையும் ஹாண்ட் பாக்கையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டாள்.
என்ன செய்யப் போகிறாள் என்று விளங்கிவிட, “எங்க போறாய்?” என்றான் அவளை வழிமறித்துத் தடுத்தபடி.
ஒன்றும் சொல்லாமல் அவனைச் சுற்றிக்கொண்டு நடந்தவளைப் பிடித்து நிறுத்தி, “அதக் குடுக்க வேண்டாம், விடு. நான் நாளைக்கு பாங்க்ல இருந்து அவனுக்கு எடுத்துக் குடுக்கிறன்.” என்றான் சற்றே இறங்கிய குரலில்.
அதற்குமேல் அவளால் கட்டுப்படுத்த முடியாமல் போயிற்று. விழிகள் தழும்பிவிட அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவளால் பேச முடியவில்லை. உதடுகள் துடித்து அழுகை வந்தது.
நீயா இப்படி என்று கேட்டாளா? உன்னிடம் இதை எதிர்பார்க்கவில்லை என்று சொன்னாளா? இல்லை, இப்படி ஏன் என்னைக் காயப்படுத்தினாய் என்று அழுதாளா? அவனால் பிரித்தறிய முடியவில்லை. செந்தாளனின் நெஞ்சை ஏதோ ஒரு வலி குடைந்தது. அவன் சமாளித்துக்கொண்டு நிமிர்வதற்குள் அவள் அவன் கையைப் பிரித்து விட்டுவிட்டு அறையை விட்டு வெளியேறியிருந்தாள்.
அங்கே, அவள் கிழித்து எறிந்திருந்த பேப்பர்களோடு ஒரு துண்டும் கிடந்தது. குனிந்து எடுத்துப் பார்த்தான்.
“நீங்க ஆசைப்பட்ட ஒண்டு என்னட்ட இருக்கு. கண்டு பிடிங்க வாத்தி!” என்று எழுதி, சிரிக்கும் ஸ்மைலி ஒன்றையும் வரைந்திருந்தாள். அதன் கீழே ‘எஸ் கே’ என்று கையெழுத்திட்டிருந்தாள்.
மிகுந்த அழகோடும் கம்பீரத்தோடும் நிமிர்ந்து நிற்கும் எஸ்ஸுக்குள் ‘கே’ தன்னைத் தொலைத்து நிற்பது போன்ற கையெழுத்து. நெஞ்சைப் பிசையும் உணர்வுடன் மெல்ல அதை வருடிக் கொடுத்தான். அவளும் அவளின் அழுத விழிகளும் மீண்டும் கண்ணுக்குள் வந்து போயின.
நெடிய மூச்சு ஒன்றுடன் அதை எடுத்துப் பத்திரமாக வைத்துவிட்டு, சிவரூபனுக்கான பணத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் அவன் வெளியே வந்தபோது, அங்கே அவளைப் போகவிடாது மறித்துக்கொண்டிருந்தார் புவனாம்பிகை.
விடச்சொல்லி எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் தடுப்பவர் மீதும் கோபம் வர, “விடுங்கோ மாமி, ப்ளீஸ்!” என்று வார்த்தைகளை அழுத்திச் சொல்லிவிட்டு, கையையும் அவரிடமிருந்து உருவிக்கொண்டாள்.
அவளின் அந்தச் செய்கை செந்தாளனுக்கு மீண்டும் கோபத்தை உண்டாக்கிற்று. ‘அவ்வளவு திமிரா இவளுக்கு? செய்றதையும் செய்துபோட்டு அம்மாட்டையே தன்ர குணத்தைக் காட்டுறாள்!
“நீங்க ஏனம்மா மறிக்கிறீங்க. விடுங்க. எங்க எண்டாலும் போகட்டும்.” என்றான் அழுத்தமாக.
‘அதுதானே! உழைப்புப் பிழைப்பில்லாம உன்ர காசுல குந்தி இருந்து தின்னுறவள் இருந்தா என்ன, எங்கயாவது போய்ப் பிரண்டாத்தான் என்ன?’ கசப்புடன் எண்ணியவள் ஸ்கூட்டியை கிளப்பிக்கொண்டு பறந்தாள்.
புவனாம்பிகைக்குத் தான் அவ்வளவு சொல்லியம் கேட்காமல் புறப்பட்டுவிட்ட மருமகளின் செய்கை கொஞ்சமும் பிடிக்கவில்லை. அந்தக் கோவம் மகன் புறம் திரும்பிற்று.
“நடக்கிறது ஒண்டும் நல்லதுக்காத் தெரியேல்ல தம்பி! இப்பிடி நீங்க ஒரு பக்கமும் அவா ஒரு பக்கமும் எண்டு பிடிவாதமா இருந்தா குடும்பம் குடும்பமா இருக்காது. அவ்வளவுதான் சொல்லுவன்!” என்று எச்சரித்தார்.
அவன் அவரிடம் ஒன்றும் சொல்லாமல் சிவரூபனுக்குப் பணத்தைக் கொடுத்து அனுப்பி வைத்தான். அவருக்குத்தான் மனம் சமன் படவேயில்லை.
“கொஞ்சமாவது நிதானம் வேணும். விட்டுக்குடுத்துப் போற பழக்கம் வேணும். என்ன வார்த்தையெல்லாம் சொல்லிட்டீங்க? இதெல்லாம் அவான்ர வீட்டில தெரிய வந்தா என்ன நினைப்பீனம்? வேலைக்குப் போகேல்ல, உழைக்கேல்ல, படிக்கேல்ல எண்டுறதெல்லாம் உங்களுக்கு இண்டைக்கா தெரிய வந்தது? அது பிடிக்காட்டி முதலே சொல்லியிருக்கோணும். இதென்ன கட்டி வாழ்ந்த பிறகு குத்திக் காட்டுறது? இதுக்கா ஒரு குறை வைக்காம, அவ்வளவு சிலவழிச்சுக் கட்டித் தந்தவே?” அவருக்கு மனம் ஆறவே இல்லை. அவனை வாங்கு வாங்கென்று வாங்கினார்.
அவன் அசையவேயில்லை. வேலை முடிந்து வந்த மனோகரனும் சிந்துஜாவும் விடயம் அறிந்து திகைத்துப் போயினர். அவர்களுக்கும் செந்தாளன் மீதுதான் கோபம். அவனைத்தான் பேசினர். யாருக்கும் எந்தப் பதிலையும் கொடுக்காமல் வாசலையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான் செந்தாளன்.

