இடைவெளி வலிக்குதே 11 – 2

அவன் அறைக்குள் வந்ததும் அங்கிருந்த அவளின் கைப்பேசியை எடுத்துக்கொண்டு, அவனை நிமிர்ந்தும் பாராமல் அறையை விட்டு வெளியேறினாள் அவள். அவளையே தொடர்ந்தது அவன் பார்வை. அவள் வீட்டின் பின்பக்கம் போகவும் ஒரு நெடிய மூச்சுடன் அணிந்திருந்த சேர்ட்டினைக் கழற்றிவிட்டு, துவாலையை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு குளிக்கப் போனான்.

அவர்களின் வீட்டின் பின்னால் ஒரு பத்தி இறக்கி இருந்தார்கள். விறகுகளை அடுக்கி வைக்க, மழைக் காலங்களில் உடைகளைக் காயப்போட, பைக்குகளை நிறுத்த என்று அந்த இடத்தை இன்னதற்கு என்று இல்லாமல் தேவைக்கேற்பப் பயன்படுத்துவார்கள். அங்கே, பாவித்துப் பழையதாகிப்போன வாங்கு ஒன்று எப்போதுமே கிடக்கும். அதில் அமர்ந்தவள்தான். அதன் பிறகு அந்த இடத்தை விட்டு அசையவே இல்லை.

அவன் குளித்து, உடை மாற்றி, அன்னை தந்த தேநீரை அருந்தி, அடுத்தநாள் கல்லூரிக்கான வேலைகளைப் பார்த்து என்று தன் அலுவல்களில் கவனம் செலுத்தினாலும் என்ன செய்கிறாள், ஏன் இன்னும் வெளியேயே இருக்கிறாள், இன்னுமே அழுகிறாளா என்று அவள் நினைவுதான் சுற்றிச் சுழன்றுகொண்டு இருந்தது. வேலையில் கவனம் செலுத்த முடியாமல் எழுந்து வந்து அறையின் ஜன்னலால் பின் பக்கம் பார்த்தான்.

பக்கத்தில் கைப்பேசி இருக்க, ஆதரவற்ற அநாதை போன்று சுவரில் தலை சாய்த்து எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தாள். அந்தத் தோற்றம் சுருக்கென்று அவன் நெஞ்சைத் தைத்தது. எவ்வளவு நேரம் என்று தெரியாது அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். எழுந்து உள்ளே வா என்று அழைக்க நினைத்தான். வார்த்தைகள் வரவில்லை.

இரவு உணவைச் சமைத்து முடித்துவிட்டு எல்லோரையும் சாப்பிட அழைத்தார் புவனாம்பிகை. அப்படியே அவளையும் இரண்டு முறை கூப்பிட்டார். அவள் அசையவில்லை. மகனைத் திரும்பிப் பார்த்தார். இப்போது விறாந்தையில் அமர்ந்திருந்தவன் நடப்பவற்றுக்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை என்பதுபோல் தொலைக்காட்சியில் கவனமாயிருந்தான்.

மனோகரன் நண்பன் யாரையோ சந்திக்க வெளியில் சென்றிருந்தான். பணத்துடன் சென்ற சிவரூபன் பிந்தித்தான் வருவேன் என்று ஏற்கனவே சொல்லியிருந்தான். புவனாம்பிகை செய்வதறியாது மகளைப் பார்த்தார்.

“இன்னொருக்கா போய்க் கூப்பிடுங்கம்மா. கட்டினவனுக்குத்தான் அக்கறை இல்லை எண்டா நாங்களும் அப்பிடியே விடேலுமா?” தம்பியாரை முறைத்துக்கொண்டு சொன்னாள் அவள்.

“கானவி, சாப்பிட வாங்கோம்மா. நேரமாயிற்றுது.” அவளைத் தேடிச் சென்று அழைத்தார் புவனாம்பிகை.

“எனக்குப் பசிக்கேல்ல மாமி. நீங்க சாப்பிடுங்கோ.” கரகரத்த குரலில் மெல்ல முணுமுணுத்தாள் அவள்.

“அது எப்பிடிப் பசிக்காம இருக்கும்? சண்டை சச்சரவு எல்லா வீடுகளிலயும் வாறதுதான். அதுக்கெண்டு சாப்பிடாம இருக்கிறதா? அது உங்களுக்குத்தான் கூடாது! வாங்கோ, வந்து சாப்பிடுங்கோ.” என்றவரை அதுவரை தேக்கி வைத்திருந்த கண்ணீர் கன்னத்தில் உதிர்ந்து விழ, திரும்பிப் பார்த்தாள் அவள்.

“இந்த வீட்டில இனி எப்பிடி மாமி சாப்பிடுவன்? அப்பிடி வயித்துப் பசிக்காக ரோசம் கெட்டுச் சாப்பிடுறதுக்குச் சாகிறது மேல்.” என்றதும் அவர் பதறிப்போனார்.

“கானவி! என்ன கதை இது? அப்பிடியெல்லாம் சொல்லுறேல்ல.” என்று அவர் அதட்டுகையில் செந்தாளனின் அறைக்குள் என்னவோ படீர் என்று விழுந்து நொறுங்கும் சத்தம் கேட்டது.

திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தவரால் விளக்குப் போடப்படாத அறையிலிருந்து எதையும் கண்டுகொள்ள முடியவில்லை. சிந்துஜா அவன் அறைக்கு ஓடிப்போய்ப் பார்த்தாள். பெட் சைட் விளக்குத் தரையில் நொறுங்கிக் கிடந்தது.

“என்னடா?” என்றாள் பதறி.

“வயர் கால்ல மாட்டி விழுந்திட்டுது.” அவளைப் பாராமல் சொல்லிவிட்டு, உடைந்திருந்த விளக்கைத் தூக்கிக் குப்பை வாளிக்குள் போட்டான்.

“கேட்ட சத்தத்தைப் பாத்தா அப்பிடித் தெரியேல்லையே. நீ ஓங்கி அடிச்சு உடைச்ச மாதிரி இருக்கே.” அவனைச் சந்தேகத்துடன் பார்த்தபடி இழுத்தாள் சிந்துஜா.

“எப்பிடி உடைஞ்சாத்தான் என்ன? உடைஞ்சிட்டுது. அவ்வளவுதான்.” அவன் அதட்டிய அதட்டலில் வாயை மூடிக்கொண்டு அவனோடு சேர்ந்து அவளும் கவனமாக உடைந்த கண்ணாடித் துண்டுகளை எடுத்துப்போட்டுவிட்டு அந்த இடத்தைக் கூட்டிவிட்டாள்.

இங்கே புவனாம்பிகை எவ்வளவு சொல்லியும் கானவி கேட்கவில்லை. அதில், “தம்பின்ர காசிலதானே சாப்பிட விருப்பம் இல்ல. சரி, அதப் பிறகு கதைப்பம். ஆனா இந்த வீட்டில உங்கட மனுசன்ர காசு மட்டும் இல்ல. சிந்துன்ர, மருமகன்ர, உங்கட மாமான்ர, ஏன் என்ர உழைப்பும் இருக்கு. அதில சாப்பிடுங்கோ. உரிமையாச் சாப்பிடுங்கோ.” என்றார் அவர்.

அவர் ஆயிரம் சமாதானம் சொல்லலாம். ஆனால், அவனைத் தொட்டுத்தான் அவர்கள் எல்லோரும் அவளுக்கு உறவு. அப்படியிருக்க அவர்கள் யார் பணத்தில் சாப்பிட்டாலும் அவனுடையதில் சாப்பிட்டதற்கு ஒப்பானதுதானே!

“இப்ப நீங்க சாப்பிடாட்டி நானும் சாப்பிட மாட்டன்.” என்று அவளருகில் அவரும் அமர்ந்துகொண்டார்.

“எனக்கும் வேண்டாம். நான் வீட்டை போறன் அம்மா.” என்று சிந்துஜாவும் புறப்பட்டாள்

“மச்சாள் ப்ளீஸ்!” அழுகையோடு கெஞ்சினாள் கானவி.

“என்ன ப்ளீஸ் கானவி? இதே மாதிரி ஒரு பிரச்சினை எனக்கு வந்து, நான் சாப்பிடாம இருந்தா அப்பிடியே என்னை விட்டுட்டு நீர் சாப்பிடுவீரா?”

அது எப்படி அவளால் முடியும்?

“அதேதான். நீர் சாப்பிடாம இருக்க உம்மைப் பாக்க வச்சுச் சாப்பிடுற அளவுக்கு நாங்களும் பொல்லாத மனுசர் இல்ல.”

கடைசியில் அவள்தான் தன் பிடிவாதத்தைக் கைவிட்டாள். புவனாம்பிகை கொண்டுவந்து தந்த உணவுத் தட்டில் கையை வைத்தவளுக்குக் கண்ணீர் பெருகி வழிந்தது. அவர்களுக்காக இரண்டு வாயைச் சிரமப்பட்டு விழுங்கினாள். அதற்குமேல் முடியவில்லை. கணவனின் வார்த்தைகள் கன்னத்தில் அறைந்தன. பேசாமல் உணவை வைத்துவிட்டாள். கவனித்தாலும் அதற்குமேல் யாரும் அவளை வற்புறுத்தவில்லை.

“டீ ஒண்டு போட்டுத் தரவாச்சி?” மனம் கேளாமல் வினவினார் புவனாம்பிகை.

“இல்ல மாமி. உண்மையா எனக்கு ஒண்டும் வேண்டாம். நீங்க போய்ப் படுங்கோ.” இந்த முறை அவர் முகம் பார்த்தே சொன்னாள்.

மகன் மீதுதான் கோபம் வந்தது. ஆனாலும் எதையும் கதைத்து, திரும்பவும் ஒரு பிரச்னையை உருவாக்க விரும்பாமல் மகளின் வீட்டுக்கு நடையைக் கட்டினார்.

அவள் வீட்டின் பின்பக்கம். அவன் விறாந்தையில். அந்த வீடு முழுவதும் கனத்த மௌனம். நேரம் பதினொன்றை நெருங்கியும் அவள் அசைவதாக இல்லை. ஒரு நெடிய மூச்சுடன் எழுந்து அவளிடம் வந்தான். அப்போது போலவே சுவரில் தலை சாய்த்து, சோர்ந்து அமர்ந்திருந்தவளைப் பார்க்க இப்போதும் நெஞ்சை என்னவோ செய்தது. ஒருகணம் அவளையே இமைக்காமல் பார்த்தவன் செருமினான்.

அவளுக்கு அதற்கே தொண்டை அடைத்து, நாசி விடைத்து, அழுகை வரப் பார்த்தது. அடக்கிக்கொண்டு அவன் புறம் திரும்பாது அமர்ந்திருந்தாள்.

“இருட்டின நேரம் வெளில இருக்காம உள்ளுக்கு வா!” வழமையான அழுத்தத்தோடு குரல் வரமாட்டேன் என்றது அவனுக்கு.

அப்போதும் அவள் அசையவில்லை.

“கானவி, சொல்லுறது கேக்கேல்லையா உனக்கு? நான் நாளைக்குப் பள்ளிக்கூடம் போகோணும். உன்ன இப்பிடியே விட்டுட்டு, வீட்டையும் திறந்துபோட்டுட்டு என்னால நித்திரை கொல்லேலாது.” அவளை எப்படியாவது வீட்டுக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்று எண்ணிச் சொன்னான்.

ஒரு கணம் அசையாமல் இருந்தவள் பக்கத்தில் இருந்த கைப்பேசியை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் வந்தாள். ‘அப்பாடி! ஒரு மாதிரி வந்திட்டா!’ நிம்மதியோடு கதவைப் பூட்டினான். பின் பக்க மின்விளக்கையும் அணைத்துவிட்டு அவன் வந்தபோது, அவ்வளவு நேரமாக அவன் அமர்ந்திருந்த சோபாவில் ஒரு பக்கமாகச் சரிந்து, அவனுக்கு முதுகு காட்டிக்கொண்டு, கால்களைச் சுருட்டியபடி படுத்திருந்தாள் கனவி.

சட்டென்று ஒரு கோபம்தான் மூண்டது. ஆனாலும் அடக்கிக்கொண்டு வந்து நின்றான். அவள் ஒழுங்காகச் சாப்பிடவில்லை என்று தெரியும். அவளை உண்ண வைக்க வேண்டும். உள்ளே வந்து படுக்கச் சொல்ல வேண்டும். அதெல்லாம் இலகுவாக நடந்தேறும் போலில்லை. என்ன செய்வது என்று தெரியாது நெற்றியைத் தேய்த்துவிட்டான்.

சில வினாடிகளை அப்படியே கழித்துவிட்டு, “சாப்பிடுறியா?” என்றான்.

“…”

“கானவி! உன்னைத்தான் கேக்கிறன், சாப்பிடுறியா?” இப்போது அவன் குரலில் மெல்லிய அழுத்தம் ஏறி இருந்தது.

அவளிடம் அப்போதும் பதில் இல்லை.

“எனக்குப் பசிக்குது. நானும் ஒழுங்காச் சாப்பிடேல்லை. வா சாப்பிடுவம்.”

“…”

“கானவி!” என்றதும் வேகமாக எழுந்து அமர்ந்தவள், “இப்ப என்ன பிரச்சினை உங்களுக்கு? என்னை என்ர பாட்டுக்குப் படுக்க விடுங்க. இல்ல, இப்ப கடம்பனை வரச்சொல்லி எங்கட வீட்டுக்குப் போயிடுவன்.” என்றாள் ஆத்திரத்தோடு.

நொடியில் அவன் முகத்தில் கோபச் சிவப்பேறியது. நன்றாக அவளை முறைத்துவிட்டு அறைக்குள் சென்றுவிட்டான்.

error: Alert: Content selection is disabled!!