உண்மையில் மிகவுமே சங்கடப்பட்டுப் போனார் புவனாம்பிகை. இந்தப் பெண் கொஞ்சம் சமாளித்துப் போயிருக்கலாம். தாய், தகப்பனை நல்ல முறையில் கவனித்து அனுப்பிவைத்துவிட்டு, ஒரு இரண்டு நாள்களுக்கு இங்கே இருந்துவிட்டுப் போயிருக்கலாம். இது, இரு குடும்பங்களுக்கும் இடையில் தேவையில்லாத மனச் சங்கடங்களையும் கசப்பையும்தான் உருவாக்கப் போகிறது என்றெண்ணி அவள்மீது அதிருப்தி கொண்டார். அதைவிட, பெற்ற பெண்ணுக்குச் சமனாகப் பார்த்த அவர் வார்த்தைக்குக் கூட அவளிடம் மதிப்பில்லாது போயிற்றே!
கானவி அவரின் இடத்திலிருந்து யோசிக்கும் நிலையில் இல்லை. யார் அவளை எப்படிப் பார்த்துக்கொண்டாலும் அவனைத் தொட்டுத்தான் அவர்கள் எல்லோருமே அவளுக்கு உறவு. அவனோடான அந்நியோன்யமான வாழ்க்கையும் பிணைப்பும்தான் அவன் குடும்பத்தின் மீதும் பற்றுதலாகவும் பாசமாகவும் படர்ந்திருந்தது. இன்றைய நிலையில் அவனிடமிருந்தே விலகி நிற்கத்தான் பிரியப்பட்டாள். அப்படியிருக்க மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள், அவர்கள் மனநிலை என்ன என்று யோசிக்கும் அளவுக்கு அவள் தெளிவாய் இல்லை.
சிந்துஜாவுக்கும் கூட அவள் செய்கையில் உடன்பாடில்லை. வெளியே காட்டவோ, எதையும் கதைக்கவோ முடியா நிலையில் பேசாமல் இருந்தாள்.
நடப்பவற்றை எல்லாம் பார்க்கையில் கானவியின் பெற்றோரும் அவளை அழைத்துச் செல்லவே பிரியப்பட்டார்கள். இப்படி ஒவ்வொருவர் மனத்திலும் ஒவ்வொரு விதமான எண்ணங்கள் ஓடிக்கொண்டு இருந்ததில் மீண்டும் இயல்பான பேச்சுத் தடைப்பட்டுப் போயிற்று.
அதை நீக்கும் பொருட்டு, “என்னவோ அவாக்கு அம்மா வீட்டைத் தேடுது போல. கொஞ்ச நாளைக்கு வச்சிருந்திட்டுக் கொண்டு வந்து விடுங்கோவன். எனக்குத்தான் அவா இல்லாம அலுப்படிக்கப் போகுது.” என்று சமாதானமாகச் சொன்னார் புவனாம்பிகை.
அதுவே, அனைத்தையும் சமூகமாகக் கொண்டுபோகவே அவர் விரும்புகிறார் என்று சொல்ல, “ஓமோம். நாங்களும் பாத்துக்கொண்டு போவம் எண்டுதான் வந்தனாங்க. அவாக்கு வரத்தான் விருப்பம் எண்டா வரட்டும்.” என்ற அருந்தவராஜா, “தம்பி, ஓட்டோல இருக்கிற பழங்கள், மரக்கறி எல்லாத்தையும் இறக்கப்பு.” என்றார் கடம்பனிடம்.
கடம்பனும் அனைத்தையும் இறக்கி வைத்தான். வாழைப்பழக் குலை, பலாப்பழம், முழுப் பூசணி என்று நிறைய மரக்கறிகளும் பழங்களும் இருக்கக் கண்டு, “என்னத்துக்கு அண்ணா இவ்வளவு? இங்கயும் தோட்டம்தானே.” என்றார் புவனாம்பிகை.
“ஓம் அம்மா, தெரியும். செய்தி அறிஞ்ச நிமிசம் சந்தோசத்தில என்ன செய்றது, என்னத்தக் கொண்டு வாறது எண்டு தெரியாம இருக்கிறதை எல்லாம் அள்ளிப்போட்டுக்கொண்டு வந்திட்டம்” என்றார் அவர்.
புவனாம்பிகைக்கு மனம் சற்றே நெகிழ்ந்து போயிற்று. கூடவே, மகளுக்கு இங்கு என்னவோ சரியில்லை என்று தெரிந்துமே நல்லமாதிரிப் பேசும் அவர்கள் மீதான நன்மதிப்பும் கூடிப் போயிற்று. ஒரு வார்த்தை பிழையாகக் கதைக்கவில்லையே!
“ஐயா இல்லையோ?” சற்குணத்தாருக்கு வயது எழுபது என்பதில் அப்படியே அழைத்தார் அருந்தவராஜா.
“இவ்வளவு நேரமும் இங்கதான் இருந்தவர். தோட்டத்தை ஒருக்காப் பாத்துக்கொண்டு வாறன் எண்டு இப்பதான் போனவர். வாற நேரம்தான்.”
அதன்பிறகு எல்லோருமாக முயற்சித்துப் பேச்சை இலகுவாக நகர்த்தினாலும் கூட, வெளியே வந்து சொல்லப்போகும் கணவன் மனைவியின் பதில் என்ன என்பதிலேயே அவர்கள் சிந்தனை சிக்குண்டு நின்றது.
*****
கடம்பன் அவளைத் தனியாக அழைத்துச் சென்றதே செந்தாளனைச் சினம் கொள்ள வைத்திருந்தது. அவ்வளவில் அவர்கள் என்ன அவன் தமக்கையைக் கொடுமையா செய்திருக்கப் போகிறார்கள்? இதில், திரும்பி வந்தவன் அவளையும் அழைத்துப் போவதாகச் சொல்லவும் கண்மண் தெரியாத கோபம்தான் வந்தது. அவன் மனைவி வேறு புறப்படுவதற்குத் தயாராகிறாள்.
அக்காவும் தம்பியும் என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறார்களாம் அவனைப் பற்றி? உள்ளுக்குள் பெரும் சினம் கிளர்ந்தாலும் புறப்படுகிறவளைத் தடுப்பதே முதன்மையாகப் பட, அறைக்குள் வந்து முதல் வேலையாகக் கதவடைத்தான்.
அவள், அலமாரிக்குள் இருந்து ஒருசில உடைகளை எடுத்துக் கட்டிலில் வைத்துக்கொண்டிருந்தாள். ஆக, மெய்யாகவே புறப்படுகிறாள்! அவள் கையைப் பற்றித் தன்னை நோக்கித் திருப்பி, “இங்க உனக்கு என்ன பிரச்சினை எண்டு வெளிக்கிடுறாய்?” என்று அதட்டினான்.
அவன் இழுத்து நிறுத்தியது போலவே நின்றாளே தவிர அவனுக்குப் பதில் சொன்னாள் இல்லை.
“கானவி!” என்றான் அதட்டலாக. “அண்டைக்கு நான் கொஞ்சம் நிதானம் இழந்திட்டன். பிழைதான். அதுக்கெண்டு இப்பவே போக நினைப்பியா?”
நிதானம் இழந்தானா? அப்படி அவன் நிதானத்தை இழந்ததால்தானே அவன் மனத்தில் அவள் எந்த இடத்தில் இருக்கிறாள் என்று தெரிய வந்தது? கசந்த முறுவல் ஒன்று உதட்டோரம் வந்து போக, “பயப்பிடாதீங்க, அங்க போனாலும் நீங்க ஆசைப்பட்டுக் கேட்ட உங்கட பிள்ளையக் கவனமாப் பாப்பன்.” என்றாள் அப்போதும் அவனைப் பாராமல்.
“உனக்கு என்ன விசரா? நான் என்ன கதைக்கிறன். நீ என்ன சொல்லுறாய்?” என்று உடனேயே கோபப்பட்டவன், “கொஞ்ச நாள் இங்க இருந்திட்டுப் போ கானவி.” என்றான் இறங்கி வந்து.
அவள் அப்போதும் அசைந்துகொடுக்காமல் நிற்க அவனுக்கு இன்னுமே கோபம் வந்தது.
“என்னவோ பெரிய இவன் மாதிரி உன்ர தம்பி வா எண்டுறான். நீயும் வெளிக்கிடுறாய்.” என்று சீறினான்.
“என்னைப் பற்றி மட்டும் கதைங்க. அவனைப் பற்றிக் கதைக்காதீங்க.” அதற்கு மட்டும் அவனை நேராகப் பார்த்துப் பதில் சொன்னாள் அவள்.
“அப்ப நீ நில்லு! எனக்கு உன்னோட இருக்கோணும். எங்களுக்குப் பிள்ளை பிறக்கப்போற சந்தோசத்தை உன்னோட சேர்ந்து அனுபவிக்கோணும்.” என்றான் கெஞ்சும் குரலில்.
அவள் விழிகளில் கண்ணீர் பெருகிற்று. அதுதான் சாவுக்கும் மறக்காத அளவுக்குக் கொண்டாடிவிட்டானே. இன்னுமா கொண்டாடப் போகிறான்?
அவளை அப்படிப் பார்க்க முடியாமல், “ப்ச் கானவி!” என்றவன் அவளை இழுத்துத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டான். அவள் திமிறியும் விடவில்லை. “அதான் சொறி சொல்லிட்டனே. பேந்தும்(பிறகும்) அதையே பிடிச்சுத் தொங்குவியா? சொறியடி. உண்மையா சொறி.” என்று அவன் அவள் முகம் பார்க்க, அவள் இதழ்கள் அழுகையில் துடித்தன.
அவன் தவித்துப் போனான். பிள்ளையைச் சுமக்கும் இந்த நேரத்தில் போய் இப்படியாகிப் போயிற்றே! “ப்ளீஸ் அழாத! சொல்லுறதக் கேளு. அண்டைக்கு நல்லாப் பயந்துபோனான். ஆரை ஆரையோ எல்லாம் சந்தேகப் பட்டுட்டன். அந்தக் கோவத்தில… ப்ச் இப்ப நீ போக வேண்டாம். கொஞ்ச நாள் போகட்டும். நானே கொண்டுபோய் விடுறன்.” என்று கெஞ்சினான்.
அவள் அசையவே இல்லை. முகம் கசங்கி, மூடியிருந்த இமைகளினூடு கண்ணீர் கசிந்தபோதும் வாய் திறந்தாள் இல்லை. அவளிடம் இப்படி ஒரு பிடிவாதம் இருக்கும் என்று எதிர்பாராதவன் அவளைச் சமாதானம் செய்யும் வழி தெரியாது திகைத்தான்.
“கானவி ப்ளீஸ். நடந்ததை எல்லாம் நினைச்சு நானும்தான் கவலைப்படுறன். கொஞ்ச நாளைக்கு என்னோட இருந்திட்டுப் போ. எனக்கு உன்ர முகத்தில பழைய சந்தோசத்தைப் பாக்கோணும். அதுக்கு நீ என்னோட இருக்கோணும். நீயும் நானும் அம்மா அப்பா ஆகப்போறம். உன்ர வயித்துக்க எங்கட குழந்தை இருக்கு. அந்தச் சந்தோசத்தை நாங்க அனுபவிக்க வேண்டாமா? அந்த ஆசை உனக்கு இல்லையா?” என்றதும் முற்றிலுமாய் உடைந்தாள் அவள்.
அந்த ஆசை கடலளவு இருக்கப்போய்த்தானே என்னென்னவோ எல்லாம் செய்தாள். கடைசியில் காயப்பட்டு நிற்கிறாளே! என்ன வார்த்தைகளையெல்லாம் சொன்னான்! நனைந்த இமைகளோடு விழிகளைத் திறந்து அவனைப் பார்த்தாள்.
அந்த விழிகளில் தெரிந்த துயரில் அவன் அதிர்ந்து நிற்கையிலேயே, “எனக்கு அப்பிடி எந்த ஆசையும் இல்லை.” என்றாள் நடுங்கிய குரலில்.
அப்படியே நின்றுவிட்டான் அவன். விழிகள் அவளையே வெறித்தன. அதற்குமேல் அவளிடம் அவன் கெஞ்சவில்லை. வெளியே வந்து அமர்ந்துகொண்டான்.
கானவி பெற்றோருடன் பிறந்த வீட்டுக்குப் புறப்பட்டிருந்தாள்.

