அத்தியாயம் 16
அவர்களின் அறைக்கு வந்த கானவிக்கு அந்த அறை பல நினைவுகளைக் கிளறிவிட்டது. என்னென்னவோ உணர்வுகள் எல்லாம் பொங்கி பொங்கி அடங்கின. எதையும் நினைக்கக் கூடாது எனும் பிடிவாதத்துடன் கொண்டுவந்த உடைகளை எடுத்து அலமாரியில் வைத்தாள்.
“ஏதாவது சாப்பிடத் தரவா கானவி?” அவளைத் தனியே விட மனமற்று வினவினார் புவனாம்பிகை.
“இல்ல மாமி. இனி ஒண்டும் வேண்டாம். நேரம் செண்டு சாப்பிட்டாச் செமிக்கிறேல்ல.”
“நீங்க வருவீங்க எண்டு மாமா வத்தகப் பழம் வாங்கிக்கொண்டு வந்தவர். அத வெட்டித் தாறன். சாப்பிடுங்கோ. அது ஒண்டும் செய்யாது.” புவனாம்பிகைக்கு எப்படியாவது மருமகள் மனத்தைக் குளிரவைத்துவிடும் ஆசை.
“சரி மாமி.”
“இதெல்லாம் ஆறுதலாச் செய்யலாம் பிள்ளை. கொஞ்சம் ஆறி இருங்கோ.” என்றுவிட்டுக் குசினிக்கு வந்தவருக்கு மூத்தவன் மீதுதான் திரும்பவும் கோபம் உண்டாயிற்று.
“உன்ர கொண்ணனும் ஆக வீம்பு பிடிச்சு நிக்கிறார் தம்பி. இது நல்லதுக்கு இல்ல. கானவிய விட்டாலும் தாய் தகப்பன் பாவம் எல்லா. மனம் முழுக்கக் கலக்கத்தோடதான் போகினம்.” அங்கே சமையல் மேடையில் ஏறி இருந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த சிவரூபனிடம் மெல்லிய குரலில் புலம்பினார் புவனாம்பிகை.
“என்னம்மா கதைக்கிறீங்க? அண்ணா என்ன வேணும் எண்டு ஊரைச் சுத்துறாரா? வகுப்பு இருந்தா என்ன செய்றது? அதையெல்லாம் முடிச்சுக்கொண்டுதான் வரோணும்.” தமையனுக்காக வாதாடினான் தம்பி.
ஆனால், அவன் தமையன் ஊரைச் சுற்றவில்லையே தவிர இல்லாத வகுப்பை உருவாக்கி இருந்தான். வார இறுதியில் வைக்க வேண்டும் என்று எண்ணியிருந்த விசேட வகுப்பை இன்றே எடுத்தான். குழந்தை என்று அறிந்த கணத்திலிருந்து அதை அனுபவித்து மகிழக்கூடச் சந்தர்ப்பம் தராமல் புறப்பட்டுப் போனது மாத்திரமல்லாமல், நான்கு மாதங்கள் அங்கேயே இருந்துவிட்டு அவள் விரும்பும் நேரம் வருவாள், நான் ஓடிப்போய்ப் பார்க்க வேண்டுமோ என்கிற கோபம் அவனுக்குள் கனன்றது.
அப்படி, கோப முகமூடியைப் போட்டுக்கொண்டிருந்தாலும் அன்று முழுக்க அவனுக்குள் ஒருவிதப் பரபரப்புத்தான். கடைசி வகுப்பின்போது மாணவர்களை விடவும் அவன்தான் எப்போதடா முடியும் என்று தவித்துப் போனான். கடைசியில் பத்து நிமிடங்கள் முன்னதாகவே வகுப்பை முடித்துக்கொண்டான். ‘வந்திருப்பா.’ கையைத் திருப்பி நேரம் பார்த்துவிட்டு, பைக்கை வீடு நோக்கி விரட்டினான்.
அவனைக் கண்டதும் வீட்டினரின் முகங்களில் தெரிந்த கண்டனத்தை அவன் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. வாசலில் ஓரமாகக் கிடந்த அவள் செருப்பைக் கண்டு அவன் மனம் துள்ளிற்று. ‘வந்திட்டா!’
அந்த நொடியே அவளைக் காண ஆசைப்பட்டாலும் அதைச் செய்யவில்லை அவன். புவனாம்பிகை அவனுக்குச் சொல்லாதபோதும் அவளை வரவழைத்தது சிவரூபனுக்கு நடக்கப்போகும் சம்பந்தக் கலப்பு என்று அவனுக்கே தெரியும். இல்லாவிட்டால் இப்போதும் வந்திருக்க மாட்டாள்தானே? அவளை அவன் விழுந்தடித்துக்கொண்டு சென்று பார்ப்பதா?
முற்றத்தில் இருக்கும் குரோட்டன்களுக்குத் தண்ணீர் விடுவதற்கு என்று அமைக்கப்பட்டிருந்த பைப்பிலேயே கைகால் முகத்தைக் கழுவி, அங்கே வீட்டின் பின்னால் கட்டியிருந்த கொடியில் தொங்கிக்கொண்டிருந்த துவாயில் துடைத்துக்கொண்டு, அன்னை தந்த தேநீர், பலகாரங்களோடு முற்றத்திலேயே அமர்ந்துகொண்டான்.
புவனாம்பிகைக்கு மனத்தில் பரிதவிப்பு. அறைக்குள் இருக்கும் அவளுக்குக் கேட்டுவிடுமோ என்கிற பயத்தில் வாயைத் திறந்து எதையும் சொல்ல முடியாமல் நின்றார்.
ஆனாலும் மனம் கேளாமல், “கானவி வந்திட்டா தம்பி. வயிறு கொஞ்சமாத் தெரிய ஆரம்பிச்சிட்டுது.” என்று நாசூக்காய்க் குறிப்புணர்த்தினார்.
அவனுக்குள் ஒருவிதச் சிலிர்ப்பு. அவளை, அந்த வயிற்றை, அந்த வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையைக் காண ஆவல் கொண்டான். அதையெல்லாம் மறைத்துக்கொண்டு நிதானமாகத் தேநீரை அருந்தினான்.
*****
அவ்வளவு நேரமாக அவர்களின் அறைக்குள்தான் சுற்றிக்கொண்டிருந்தாள் கானவி. அவனுடைய உடைகள், அவன் எழுதப் பயன்படுத்தும் பேனாக்கள், அவன் வாசிக்கும் புத்தகங்கள் என்று அங்கே கிடந்த அவன் பொருள்களைத்தான் ஆராய்ந்தபடி நேரத்தைக் கடத்திக்கொண்டிருந்தாள். என்னவோ அவனுடன் உறவாடுவது போலொரு உணர்வு. அவற்றைத் தொட்டு, உணர்ந்து, அதன்வழி அவனை உணர முயன்றுகொண்டிருந்தாள்.
அப்படி இருக்கையில்தான் அவன் பைக்கின் சத்தம் கேட்டது. நொடியில் அவளுக்குள் பல மாற்றங்கள். அழக் கூடாது, நிதானமாக இருக்க வேண்டும், சாதாரணமாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்று அவ்வளவு நேரமாகச் செய்து வைத்திருந்த அத்தனை தயார்படுத்தல்களும் உடைந்துபோயின. கணவன் வந்துவிட்டான் எனும் நினைப்பே கண்ணீரைத் தளும்பச் செய்தது. ஏன் இவ்வளவு பலகீனமாக இருக்கிறோம் என்று அவளுக்குப் பிடிபடவே இல்லை.
அறைக்குள் வருவான், அவளைப் பார்ப்பான், சூடாக எதையும் சொல்வான் என்று மெல்லிய நடுக்கத்துடன் காத்திருந்தவளை இப்போதும் ஏமாற்றினான் அவன். அந்தளவில் நீ எனக்கு எதுவுமே இல்லை என்கிறானா? என்ன முயன்றும் முடியாமல் துளிர்த்துவிட்ட கண்ணீரைத் துடைத்துக்கொண்டு அறை வாசலில் வந்து நின்றாள்.
திறந்திருந்த வீட்டு வாசற்கதவின் வாயிலாக முற்றத்தில் அமர்ந்திருந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தவன் தெரிந்தான். அவனையே பார்த்தாள். அவள் விழிகளில் நீர் தளும்பியது. அவன் மீதான அத்தனை கோப தாபங்கள், மனக்குறைகளைத் தாண்டி அவனுக்காக இந்தப் பாடு படுகிறாளே. அவனுக்கு இப்படி எதுவுமே இல்லையோ?
எப்படி இருக்கும்?
அவனுக்குத் தகுதியற்ற மனைவி, வீண் செலவுகள் செய்து காசைக் கரியாக்குகிறவள் இவ்வளவு நாள்களும் இல்லை என்று நிம்மதியாக இருந்திருப்பான். அவள் திரும்பி வந்ததுதான் கவலையைக் கொடுத்திருக்குமாய் இருக்கும்.
நெஞ்சைக் கூறுபோட்ட அந்த வலியை அவள் விழுங்க முயன்ற வேளையில் எந்த உணர்வு உந்தியதோ, சிவரூபனிடம் என்னவோ கேட்டுக் கொண்டிருந்தவன் திரும்பிப் பார்த்தான். தன்னையே இமைக்காது பார்த்துக்கொண்டிருக்கும் அவளைக் கண்டதும் அவன் பேச்சு அப்படியே நின்று போயிற்று.
பொலிவிழந்த முகம், கண்களில் காயப்பட்ட வலி, அந்த விழிகளில் ஒருவிதப் பளபளப்பு. அழுகிறாளோ? துணுக்குற்றவன் அவளைக் கூர்ந்து கவனிக்க முயல்கையில் அவள் மீண்டும் அறைக்குள் சென்று மறைந்துகொண்டாள்.
அதற்குமேல் அவனால் அங்கிருக்க முடியாமல் போயிற்று. வீம்பு போன இடம் தெரியவில்லை. விசைக்கு இழுபடுகிறவனாக எழுந்து அறைக்கு வந்தான்.
அங்கே, ஜன்னலின் கம்பிகளைப் பற்றிக்கொண்டு முதுகு காட்டி நின்றுகொண்டிருந்தாள் கானவி. விழிகளில் திரண்டிருந்த நீரை இழுத்துப் பிடித்தபடி செவிகளைத் தீட்டிக்கொண்டிருந்தாள்.
அவளையே பார்த்தான் செந்தாளன். அவனுக்குள்ளும் நிறையப் பரிதவிப்பு. பிரிவு அவனையும் ஒரு ஆட்டு ஆட்டுவிக்காமல் இல்லை. ஆனாலும் கூட இறங்கிப்போக அவன் தயாராய் இல்லை. இதே அறைக்குள் நின்று, போகாதே என்று எவ்வளவு கெஞ்சினான்? இன்று வரைக்கும் அவன் குழந்தையைப் பற்றி அவன் அறிந்துகொண்டதெல்லாம் அன்னை வழியாக மட்டும்தானே! ஆற அமர அவள் வயிற்றைத் தொட்டு உணர்ந்தது கூட இல்லை. அப்படிச் செய்தவளிடம் அவனுக்கு என்ன பேச்சு?
கையிலிருந்த புத்தகங்களை எல்லாம் மேசையில் வைத்துவிட்டு, அணிந்திருந்த உடைகளைக் களைந்தான். வீட்டுடைக்கு மாறினான். அப்படியே வெளியே செல்லப் போக, அதற்கு மேலும் முடியாமல் திரும்பி, “என்னட்டக் கேக்க உங்களுக்கு ஒண்டுமே இல்லையா?” என்றாள் உடைந்து கரகரக்கும் குரலில்.
ஏன் இல்லாமல்? அது நிறைய உண்டே! ஆனால், அப்படிக் கேட்டு மட்டுமே அறியும் நிலையில் அவனை நிறுத்தியது அவள்தானே? நிதானமாகத் திரும்பி, “என்ன கேக்கோணும்?” என்று திருப்பிக் கேட்டான்.
கேட்பதற்கு ஒன்றுமே இல்லையா? வேதனையில் விழிகள் அகல அவனைப் பார்த்தாள் கானவி.
“சொல்லு! என்ன கேக்கோணும்? நீயாப் போனாய். நீயா வந்திருக்கிறாய். இதில நான் கேக்க என்ன இருக்கு?” என்றான் மீண்டும்.
ஓ! அவள்தான் அதிகமாக எதிர்பார்த்துவிட்டாள் போலும். அதுசரி! அவன் ஆசையும் எதிர்பார்ப்பும் நிறைவேறியாயிற்று. இன்னும் மூன்றோ நான்கு மாதங்களில் குழந்தை அவன் கையில் தவழும். பிறகு என்ன கேட்கக் கிடக்கிறது? “ஒண்டும் இல்லதான்.” என்று முணுமுணுத்துவிட்டு அறையை விட்டு வெளியேறினாள்.

