அவ்வளவுதான் அவர்களுக்குள் நடந்த பேச்சுவார்த்தை.
இந்த நான்கு மாதங்களில் மறுபடியும் இங்கேயே இரவில் உறங்குவதை வழக்கமாக்கியிருந்தார்கள் மற்ற மூவரும். அதுவே இப்போதும் தொடரவும் கானவியால் விறாந்தையில் படுக்க முடியவில்லை. உடலும் ஒத்துழைக்கும் என்கிற நம்பிக்கை இல்ல. அவர்களின் கட்டிலிலேயே ஒரு பக்கமாகச் சுருண்டுகொண்டாள்.
உறக்கம் வருவேனா என்று நின்றது. இடைவிடாது கண்கள் மட்டும் கசிந்தன. அவனைப் பிரிந்திருந்தது ஒரு வேதனை என்றால், அவனைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு யாரோபோல் தள்ளி நிற்பது இன்னொரு வேதனையாய் இருந்தது. எல்லாமே கொடுமைதான். அவன் விழித்துவிடுவானோ என்கிற பயத்தில் திரும்பி திரும்பிப் படுக்கவும் முடியவில்லை. ஒரு கட்டத்துக்கு மேல் முடியாமல் மெதுவாக எழுந்து அமர்ந்தாள்.
அவன் நன்றாக உறங்கி இருந்தான். நிம்மதியான உறக்கம். அவளுக்கு மட்டும் ஏன் இது வாய்க்கவில்லை? இப்படி ஏன் மனத்துக்குள் போட்டு உழல்கிறாள்? எதையும் இலகுவாக எடுக்க முடியாமல் ஏன் இந்தத் தவிப்பு?
எழுந்து மெல்ல மெல்ல அறைக்குள்ளேயே நடந்தாள். கால்கள் ஓய்ந்து, உடல் சோரவும்தான் உறக்கம் வந்தது.
அன்றிலிருந்து அதுவே வழக்கமாயிற்று.
ஒருநாள் எதேற்சையாக விழித்தவன் அவள் நடப்பதைக் கண்டு பயந்து, “என்ன? என்ன செய்யுது?” என்று பதறிக்கொண்டு எழுந்தான்.
அந்த இரவின் நிசப்தத்தில் அவன் குரலை எதிர்பாராதவளும் பதறித் திரும்பி, “என்ன என்ன?” என்றாள் அவனை விடவும் பதற்றமாக
ஒன்றும் விளங்காமல் சில கணங்களுக்கு அவளையே பார்த்தவன், “இந்த நேரத்தில ஏன் எழும்பி நிக்கிறாய்? உடம்புக்கு என்ன செய்யுது?” என்றுகொண்டு அவளிடம் வந்தான்.
“அது…” என்று ஆரம்பித்தவள் ஆரம்பித்த வேகத்திலேயே நிறுத்தினாள். இத்தனை நாள்களும் இல்லாமல் இப்போது மட்டும் என்ன கரிசனையாம் என்று மனம் குமுற, “ஒண்டுமில்ல.” என்றாள் அவனைப் பாராது.
“ஒண்டும் இல்லாமையா இந்த நேரத்தில எழும்பி நடக்கிறாய்?”
அன்று விசாரிக்க ஒன்றுமில்லை என்றவனுக்கு இப்போது மட்டும் என்ன கேள்வி? “அதத் தெரிஞ்சு என்ன செய்யப் போறீங்க? நானே போயிட்டு நானே வந்த மாதிரி இது நானே சுமக்கிற பிள்ளை. அதால வாற பிரச்சினைகள நானேதானே பாக்கவும் வேணும். இதுக்கும் உங்களுக்கும் என்ன சம்மந்தம் இருக்கு எண்டு கேக்கிறீங்க?” என்று அவனை நேராகப் பார்த்துக் கேட்டுவிட்டுத் தன் நடையைத் தொடர்ந்தாள்.
நிச்சயம் இப்படியொரு பதிலடியை அவன் எதிர்பார்க்கவில்லை. சில கணங்களுக்கு அவளையே பார்வையால் தொடர்ந்தவன் அவள் கையைப் பற்றி நிறுத்தி, “இப்ப நீ சொல்லோணும். இல்ல, நான் அம்மாவை எழுப்புவன்.” என்றான் உறுதியான குரலில்.
என்னவாவது செய் என்கிற பிடிவாதத்துடன் அவளும் முகத்தைத் திருப்பிக்கொண்டு நின்றாள். அவளையே பார்த்தான். அவள் அசைவதாக இல்லை என்றதும், “ஓகே! நான் அம்மாவையே எழுப்பிறன். அவா கேட்டாச் சொல்லுவதானே.” என்று அவன் வேண்டுமென்றே இரண்டடி எடுத்து வைக்க, “தயவு செய்து பேசாம இருங்க. எனக்கு ஒண்டும் இல்ல. நித்திரை வரேல்ல, அதால நடக்கிறன். முதல் பிள்ளை, ஆறு மாதம் முடியப்போகுது, நல்லா நடந்தாத்தான் ஈஸியா பிறக்குமாம்.” என்று சிடுசிடுத்தாள் அவள்.
இல்லாவிட்டால்? அப்படி என்ன நடந்துவிடுமாம்? நெஞ்சம் நடுங்க அவளைப் பார்த்தான்.
அவன் மனநிலையை உணராதவள் மீண்டும் நடந்தாள். முடியவில்லை. அவனின் விடாத பார்வை அவளைத் தொந்தரவு செய்தது. இப்படி விழித்திருந்துவிட்டு நாளைக்குப் பள்ளிக்கூடத்தில் சென்று தூங்குவானாமா? அப்படி அவனைப் பற்றி அவளுக்குள் ஓடும் இந்த யோசனையும் பிடிக்கவில்லை. பாத்ரூமுக்கு சென்றுவிட்டு வந்தபோதும் அவன் அசையவில்லை. அதே இடத்திலேயே நின்றிருந்தான். அது அவளைக் கொஞ்சம் அசைத்துத்தான் பார்த்தது. ஆனாலும், பேசாமல் சென்று படுத்துக்கொண்டாள்.
ஒருகணம் உதட்டைக் கடித்தவன், “ஏதாவது செய்யுதா?” என்று கனத்த குரலில் மெல்ல வினவினான்.
பெரிய அக்கறை! சத்தி(வாந்தி) எடுத்துவிட்டுத் தலையை நிமிர்த்தக்கூட முடியாமல் கிடந்தபோது வராதவன், உண்ணவும் முடியாமல் தலைச் சுற்றலைத் தாங்கவும் முடியாமல் சுருண்டு சுருண்டு கிடந்தபோது திரும்பியும் பார்க்காதவன், தன் நிலை மறந்து எதையாவது வேகமாகச் செய்துவிட்டு உலகம் தட்டாமாலை சுற்றுவதைக் கண்டு பயந்து நடுங்கியபோது கை தராதவன், அவன் அணைப்புக்கும் அருகண்மைக்கும் ஏங்கிய நாள்களில் எல்லாம் திரும்பியும் பாராமல் இருந்தவன் இப்போது மட்டும் வந்து கேட்கிறான்!
மனம் புழுங்கிற்று. எதற்கு இந்தக் கழிவிரக்கம் என்று அது வேறு கண்ணீரைக் கசிய வைக்கிறேன் என்று நின்றது.
“கானவி.” பரிதவிப்புடன் அழைத்தான். அவன் மனம், குழந்தை சுகமாகப் பிறக்காவிட்டால் என்னாகும் என்பதில் நடுங்கிக்கொண்டிருந்தது. இல்லை, அப்படி ஒன்றும் நடக்காது, பயப்படாதே என்று அவள் தைரியம் தரமாட்டாளா என்று அவள் முகம் பார்த்தான்.
அவள் அப்போதும் அசைந்தாள் இல்லை. அவளைப் போல வீம்பு பிடிக்கத் தைரியமற்று, கட்டிலைச் சுற்றிக்கொண்டு வந்து அவள் பக்கத்தில் அமர்ந்தான். ஒரு பக்கமாகப் படுத்திருந்தவளின் வயிறு குவிந்து அவன் கண்களுக்குக் காட்சி தந்தது. தொட்டுத் தடவி, குழந்தையை உணர ஆசையாக இருந்தது. அதை விடவும் அவளைத் தன் அரவணைப்புக்குள் கொண்டுவரத்தான் பிரியப்பட்டான். அப்போதுதான் காரணமற்று நடுங்கும் அவன் நெஞ்சு அமைதி கொள்ளும் போலிருந்தது.
இந்த முறை அவள் கையை எடுத்துத் தன் கரங்களுக்குள் பத்திரப்படுத்தி, “என…க்குப் பயமா இருக்கு. ஏதும் எண்டா சொல்லு, பிளீஸ்!” என்றான்.
அதற்குமேல் அவளால் முடியவில்லை. அழுகையும் ஆத்திரமும் சேர்ந்தே பொங்கிற்று. “இந்தப் பயமும் அக்கறையும் இவ்வளவு நாளும் எங்க போனது? என்ன திடீர் எண்டு வந்து புதுசு புதுசாக் கதைக்கிறீங்க?” என்று சீறினாள். கண்ணில் மட்டும் கண்ணீர். ஆத்திரத்துடன் அதைச் சுண்டி எறிந்துவிட்டுக் கண்களை மூடிக்கொண்டு படுத்துவிட்டாள்.
அவனுடைய இந்த அக்கறைக்கும் கவனிப்புக்கும்தான் ஏங்கினாள். நான் உனக்கு ஒரு பொருட்டு இல்லையா என்று அழுதாள். அதையே அவன் தர முன்வந்தபோது கோபம்தான் வந்தது. நீயும் தேவையில்லை, உன் அக்கறையும் தேவையில்லை என்றுதான் இருந்தது. எதிர்பார்க்கிறபோது கிடைக்காத எதற்கும் மதிப்பில்லையே! அப்படித்தான் அவன் அக்கறை, பயம், பதற்றம் எதுவும் அவள் மனத்தைத் தொடவில்லை.
அப்படியே எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தானோ அவளுக்குத் தெரியாது. நடந்ததும் தன் மனக்குமுறலைக் கொஞ்சமாவது அவனிடம் கொட்டிய நிம்மதியும் சேர்ந்ததில் விரைவிலேயே உறங்கியிருந்தாள் அவள்.
அடுத்தநாள் காலை எழுந்து பள்ளிக்கூடத்துக்குத் தயாராகி வந்தவன், “அம்மா, அவளுக்கு உடம்பு ஏதும் சரியில்லையா தெரியா. இரவிரவா நடக்கிறாள். என்ன எண்டு கேளுங்க.” என்றான் புவனாம்பிகையிடம்.
“அதையெல்லாம் பாக்க வேண்டியது நீங்க தம்பி. நான் இல்ல!” அவன் முகம் பார்த்துத் தெளிவாகச் சொன்னார் அவர்.
“என்ன எண்டு கேளுங்கம்மா!” அவர் கோபத்தைப் பொருட்டில் கொள்ளாமல் அழுத்திச் சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.
அவன் போனதும் அவளை அழைத்து விசாரித்தார்.
“ஒண்டும் இல்ல மாமி. டொக்டரும் இனி இனி நல்லா நடக்கோணும் எண்டு சொன்னவா. எனக்கும் நடந்தா நல்லா நித்திரை வரும். அவ்வளவுதான். அவர் சும்மா பயப்பிடுறார்.”
அவருக்கும் புரிந்ததுதான். என்றாலும், “எதுக்கும் அடுத்த முறை டொக்டரை பாக்கப் போகேக்க கேட்டுக்கொண்டு வருவம். வேற என்ன எண்டாலும் சொல்லோணும் என்னம்மா. முதல் பிரசவம், நல்ல கவனமா இருக்கோணும்.” என்று சொன்னார்.
அவளுக்கும் அந்தப் பயம் இருந்ததில், “சரி மாமி.” என்று சொன்னாள்.

