அவளும் வந்தாள். முதல் வேலையாக அறையின் கதவைச் சாற்றினான. மெல்லிய சோர்வைச் சுமந்த முகமும் மேடிட்ட வயிறுமாக நின்றவளைக் கண்டு அவன் கோபம் சற்றே மட்டுப்பட்டது.
“உன்ர தம்பிட்ட என்ன சொன்னனீ?” என்றான் நிதானமாக.
“என்ன சொன்னனான்? ஒண்டும் சொல்லேல்லையே.” இவன் கூப்பிட்டுக் கேட்கும் அளவுக்கு அப்படி என்ன சொன்னோம் என்று யோசித்தபடி சொன்னாள்.
“பொய் சொல்லாத கானவி. திரும்பவும் கோபப்பட்டு எங்களுக்க இன்னொரு சண்டை வர வேண்டாம் எண்டு பாக்கிறன். உண்மையச் சொல்லு. வளைகாப்புச் செய்றதுக்குக் கேக்கச் சொல்லி நீ அவனிட்டச் சொல்லேல்லையா?” என்றான் அவன் இழுத்துப்பிடித்த பொறுமையுடன்.
பொய்யா? அவளுக்குச் சுருக்கென்று தைத்தது. சிவரூபனின் வார்த்தைகளையும் நினைவூட்டியது. கூடவே, அவளுக்காகக் கடம்பன் இவனிடம் கேட்டிருக்கிறான் என்று விளங்கிற்று. அது அவனின் அன்பு. ஆனால் இவன்? அவள் வார்த்தைகளை நம்பவே தயாரில்லை. பிறகு எதற்கு விளக்கம் சொல்ல? என்னவோ மீண்டும் மனம் விட்டுவிட அவனுக்குப் பதில் சொல்லாது அறையை விட்டு வெளியேறினாள்.
செந்தாளனுக்குத் திகைத்த நிலை. கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் என்ன இது பார்வை? அப்படி என்ன தவறாகக் கேட்டானாம்? இவள் சொல்லாமல் அவன் வந்து கேட்கப் போவதில்லையே! பிறகு எதற்கு அப்படிப் பார்த்தாள்? அவளைத் தேடிப்போய்க் காரணம் கேட்கவும் முடியவில்லை.
என்னவோ அவர்களுக்கிடையில் ஒன்று மாற்றி ஒன்று என்று ஏதோ ஒன்று நடந்துகொண்டே இருந்தது. உடையைக்கூட மாற்றாமல் அப்படியே கட்டிலில் அமர்ந்தவனுக்கு ஒருவிதச் சலிப்பு உண்டாயிற்று.
கானவியின் கோபம் முழுக்க இப்போது கடம்பன் மீது திரும்பிற்று. வேகமாக அவனுக்கு அழைத்தாள்.
அவ்வளவு நேரமாக அத்தானோடு கதைத்திருக்க வேண்டாமோ என்று யோசித்துக்கொண்டிருந்த கடம்பன், தமக்கையிடமிருந்து அழைப்பு வந்ததிலேயே ஏதோ பிரச்சனை என்று புரிந்துகொண்டான். தயக்கத்துடன் அழைப்பை ஏற்று, “அக்கா!” என்றான்.
“உன்னை ஆரடா இவரப் போய்ப் பாக்கச் சொன்னது? நான் கேட்டனானா உன்னட்ட வளைகாப்புச் செய்யச் சொல்லி? என்னத்துக்குக் கிழட்டு வேலை எல்லாம் பாக்கிறாய்?”
“அக்கா அது உனக்கு விருப்பம் எண்டு…” அவன் சொல்வதைக் கேட்கும் பொறுமையற்று, “தேவை இல்லாத வேலைகள் இனியும் பாக்காத கடம்பா! முந்தி மாதிரி நீயும் நானும் மட்டும் இல்லையடா, எங்களுக்குப் பிடிச்ச மாதிரி மட்டுமே இருக்க. என்ன செய்றதா இருந்தாலும் ஒரு வார்த்த கேட்டுப்போட்டுச் செய்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
தலையைப் பற்றிக்கொண்டு அப்படியே அமர்ந்துவிட்டான் கடம்பன். அவனுக்கு விரைவில் பயணம் சரிவந்துவிடும் என்று அவர்களின் மாமா சொல்லியிருந்தார். அப்படிப் புறப்படுவதற்கு முதல் அவள் ஆசைப்பட்ட ஒன்றைச் செய்து, அவளைச் சந்தோசப்படுத்த நினைத்தான். அது இப்படியாகிவிட்டதே! தேவை இல்லாத வேலை பார்த்துவிட்டோம் என்று திரும்ப திரும்ப தன்னையே நொந்துகொண்டான்.
கானவிக்கு மனது சரியில்லாமலேயே போயிற்று. திருமணமான புதிதில் போன்று மனம் விட்டுப் பேசுவதோ சிரிப்பதோ அவர்களுக்குள் இல்லைதான். இருந்தாலும் இப்போதெல்லாம் ஒருவித அமைதி நிலவிக்கொண்டிருந்தது. அதனாலேயே அமிழ்ந்துபோகத் துவங்கியிருந்த நிகழ்வுகள் எல்லாம் மீண்டும் மேலெழுந்து வந்து நின்றன. அவற்றையெல்லாம் எண்ணி எண்ணி மனம் பழையபடி பரிதவிக்கத் தொடங்கிற்று.
அன்றிரவு நேரத்துக்கே உணவை முடித்துக்கொண்டு வந்து படுத்துக்கொண்டாள். உறக்கம் வருவேனா என்று நின்றது. என்ன வாழ்க்கை இது? எத்தனை கனவுகளோடும் கற்பனைகளோடும் ஆரம்பித்தாள்? இன்று ஒன்றுமே பிடிக்காமல், மனம் முழுக்க வெறுமையையும் காயத்தையும் சுமந்துகொண்டு, வயிற்றில் இருக்கும் குழந்தையைக் கொண்டாடக்கூட முடியாமல் ஏதோ ஒன்று தொண்டையை நசுக்கும் உணர்வு. அழக் கூடாது எனும் பிடிவாதத்துடன் விழிகளை மூடியிருந்தாள். அவன் வந்து கதவடைப்பது தெரிந்தது. உடல் ஒருவிதமாக விறைக்க அப்படியே கிடந்தாள்.
தன் பக்கம் வந்து அமர்ந்தான் செந்தாளன். படுக்க முடியவில்லை. இத்தனை நாள்களும் அவளைத் தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டுதான் படுப்பான். வாயால் பேசிக்கொண்டதில்லையே தவிர இருவர் மனங்களும் பேசிக்கொள்ளும். அவள் அவனோடு ஒன்றிக் கொள்வதும் அவன் அவளை வருடிக் கொடுப்பதும் ஒருவர் மற்றவரோடு பரிமாறிக்கொள்ளும் உணர்வுகள். அது தரும் இதத்துக்கு இணையாய் எதுவும் இருந்ததில்லை.
இன்று அது நடக்கும் போலில்லை. கூடவே, கோபப்பட்டது பிழையோ, கடம்பனும் அக்காவுக்குத் தெரியாது என்றுதானே சொன்னான், உண்மையில் அவளுக்கு அவன் கேட்டது தெரியாதோ என்றெல்லாம் யோசனை ஓடிக்கொண்டிருந்தது. அன்று, சற்குணத்தாரைக் கொண்டு காரியம் சாதித்தது போன்று இன்று கடம்பனைக்கொண்டு தன் ஆசையை நிறைவேற்றிக்கொள்ளப் பார்க்கிறாள் என்று நினைத்தானே! அது தவறோ?
“கானவி!” மெல்ல அழைத்தான். “உனக்குத் தெரியாம அவன் வந்து கேக்க மாட்டான் எண்டு நினைச்சன்.” என்றான் தன்னிலை விளக்கமாக.
“…”
“நீயா என்னட்டக் கேக்கப் பயந்து அவனைக் கொண்டு கேட்டிருக்கிறாய் எண்டுற கோவத்துல…” ஒரு அளவு தாண்டி இறங்கிப்போய் விளக்கம் சொல்ல அவனுக்கு வரவும் மாட்டேன் என்றது. “நீ இப்பிடி முகத்தைத் திருப்பிக்கொண்டு படுக்கிற அளவுக்கு இங்க ஒண்டும் நடக்கேல்ல கானவி. சின்ன விசயத்த எல்லாம் பெருசாக்கிக்கொண்டு நிக்காத!” சின்ன எரிச்சலும் கண்டிப்புமாகச் சொல்ல, வேகமாக எழுந்து அமர்ந்தாள் கானவி.
“என்னைப் பொய்காரி எண்டு சொல்லுறதும் நான் சொல்லுறத நம்பாம இருக்கிறதும் உங்களுக்குச் சின்ன விசயமா?” என்றாள் விழிகளில் அனல் பறக்க.
“உண்மையச் சொல்லுங்க, செவ்வாய்க் குற்றம், கலியாணம் பொருந்துதே இல்லை எண்டு பொருந்தி வந்த என்னைக் கட்டிப்போட்டு, இப்ப ஏனடா இவளைக் கட்டினோம் எண்டு கவலைப்படுறீங்களா? நான் படிக்கேல்ல, வேலைக்குப் போகேல்ல, உழைக்கேல்ல எண்டுறது உங்களுக்குக் கேவலமா இருக்கா? அப்பிடி ஏதும் எண்டால் தயவு செய்து வெளிப்படையாச் சொல்லுங்க. அடுத்தது என்ன எண்டு நான் பாக்கிறன். அதை விட்டுப்போட்டு சும்மா சும்மா கேவலப்படுத்தாதீங்க.” என்றவளை வேகமாக இடையிட்டு, “அப்பிடி என்ன பாக்கப் போறாய்?” என்றான் அவன் புயலை உள்ளடக்கிய குரலில்.
“ஓ! அப்ப அப்பிடித்தான் நினைச்சுக்கொண்டு இருக்கிறீங்களா?” என்று திருப்பிக் கேட்டாள் அவள்.
“அடுத்தது என்ன எண்டு என்ன பாக்கப் போறாய்? அதச் சொல்லு முதல் நீ!” அவன் அதட்டினான்.
“அதுக்கு முதல் அப்பிடித்தானா எண்டு நீங்க சொல்லுங்க!” அவளும் விடுவதாக இல்லை.
“நீயா அர லூசுத்தனமா நினைக்கிறதுக்கெல்லாம் நான் பதில் சொல்லேலாது.”
“நானா நினைக்கேல்ல. என்னை நினைக்க வச்சது நீங்க. உங்கட பேச்சு! நீங்க நடந்துகொள்ளுற விதம்.” என்றுவிட்டுப் படுத்துக்கொண்டாள் அவள்.
அவன் விடவில்லை. ஒவ்வொரு முறையும் அவள் அவனை மிரட்டுவது போலிருக்க, கட்டிலைச் சுற்றிக்கொண்டு அவளிடம் வந்தான்.
“கதைக்கிறதையும் கதைச்சுப்போட்டுப் படுப்பியா நீ? எழும்பு முதல்! இண்டைக்கு இதுக்கு ஒரு முடிவு தெரியோணும் எனக்கு!” என்று அவளைப் பற்றி எழுப்பி நிறுத்தினான்.
“சொல்லு! அப்பிடி என்ன பாக்கப் போறாய்? இப்ப எனக்குத் தெரிஞ்சே ஆகோணும்!”
இந்தளவு தூரத்துக்குப் பிடித்த பிடியாய் நின்று கேட்பான் என்று எதிர்பாராதவள் சற்றே துணுக்குற்றாள். நீயும் எதையாவது கதைத்துப் பிரச்சனையைப் பெருசாக்காதே என்று உள்மனம் கையைப் பிடித்து இழுத்தாலும் அவளாலும் அமைதியாகப் போக முடியவில்லை. “என்னைப் பிடிக்காதவரோட, என்னை மதிக்காதவரோட வாழவேணும் எண்டு எனக்குக் கட்டாயமில்லை!” என்று சொல்லி முடிக்க முதலே அவள் தாடையைப் பற்றியிருந்தான் அவன்.
“என்னோட வாழாம வேற எ…” பல்லைக் கடித்தபடி வார்த்தைகளைத் துப்பப் போனவன் நிறுத்திவிட்டு அவளை ஒரு பார்வை பார்த்தான்.
கானவிக்கு நெஞ்சுக்கூடு நடுங்கிற்று.
“வயித்தில பிள்ளை இருக்கிறதால உன்ன விடுறன். இல்லை எண்டு வை, கன்னம் பழுத்திருக்கும். அவ்வளவு திமிராடி உனக்கு? இந்தளவுக்கு யோசிக்கிறதுக்குத் தைரியம் வந்திருக்கே? உன்னை எல்லாம்…” என்றவன் அவளைப் பார்வையாலேயே எரித்துவிட்டு அறையை விட்டு வெளியேறினான்.

