இடைவெளி வலிக்குதே 18 – 2

இவள் என்ன அந்தளவுக்கு முட்டாளா என்று பார்த்தான் அவன். சரி, இவளுக்குத்தான் தெரியவில்லை என்றால் இவளின் தகப்பனுக்கும் மாமாக்களுக்கும் கூடவா யோசிக்கத் தெரியவில்லை? இதைப் பற்றி மேலும் பேசி அவர்களுக்குள் இன்னொரு பிரச்சனையைக் கொண்டுவர விரும்பாமல், “சரி, அது உங்கட விருப்பம். வேர்வை சிந்தி உளைச்ச காசைக் கொண்டுபோய் மண்ணாக்கப் போறம் எண்டு நிண்டா நான் என்ன செய்ய? இப்ப என்னத்துக்கு இதையெல்லாம் என்னட்டச் சொல்லுறாய்?” என்று விசயத்துக்கு வந்தான்.

“அது… அது உங்களிட்ட இருந்தா… இருக்குத்தானே. சிவரூபன் மச்சானுக்குக் குடுக்க எண்டு வச்சிருக்கிறது. அதைத் தாங்க. கடம்பன் திருப்பித் தருவான்.” கணவன் தந்துவிட வேண்டும் என்கிற பரிதவிப்புடன் கேட்டு முடித்தாள்.

அவன் இதை எதிர்பார்க்கவில்லை. சட்டென்று மறுக்க முடியாமல் நின்றான். ஆனாலும் அவர்கள் பணத்தை ஏமாறுவது போதாது என்று அவனுடையதையும் சேர்த்துப் பறி கொடுக்க விடுவதா என்று தோன்றிவிட, “அதை அவனுக்குத் தாறன் எண்டு சொல்லீட்டன்.” என்றான் பார்வையை அவளிடமிருந்து அகற்றிக்கொண்டு.

“இப்பவும் நீங்க குடுங்கோ. அதுக்கு முதல் கடம்பனுக்குத் தாங்கோ. அவன் திருப்பித் தருவான். இல்லையோ ரெண்டு மாதத்தில என்ர சீதனக்காசு திரும்ப எடுக்கலாம். ஒரு வருச டிப்போசிட் முடியுது. அதில இருந்தாவது எடுத்துத் தருவன். என்ன, சிவரூபன் மச்சான் ஒரு ரெண்டு மாதம் பொறுக்க வேண்டி வரும். அவ்வளவுதான். ப்ளீஸ் மாட்டன் எண்டு சொல்லிப்போடாதீங்கோ. இது அவன்ர வாழ்க்கைப் பிரச்சினை.” என்று கெஞ்சினாள்.

அப்படிக் கெஞ்சும் மனைவியிடம் மறுக்க மனம் வரமாட்டேன் என்றது. செந்தாளனுக்குமே இது ஒரு கடினமான சூழ்நிலை. சமாளிக்கச் சிரமப்பட்டான். ஆனால், ஏமாறப்போகிறார்கள் என்று உறுதியாகத் தெரிந்த ஒன்றுக்கு எப்படிக் கொடுப்பான்?

“உனக்கு நான் என்ன சொல்லுறன் எண்டு விளங்கேல்லையா கானவி? உண்மையாவே நடக்கும் எண்டு தெரிஞ்சா யோசிக்காம எடுத்துத் தருவன். இங்க ஏஜென்சி ஏமாத்திட்டா என்ன செய்வாய்? அது ஒண்டும் சும்மா வந்த காசு இல்ல. ஒவ்வொரு ரூபாயா நான் உழைச்சுச் சேர்த்தது. எங்களுக்கு எண்டு வீடு கட்ட எடுத்து வச்சது. பிள்ளை பிறக்கப்போற இந்த நேரம் அத எவனுக்கோ குடுத்து ஏமாற என்னால ஏலாது.” என்றான் கொஞ்சம் கோபம் தொனிக்கும் குரலில்.

“அவன் ஏமாற மாட்டான் எண்டுதான் சொல்லுறேனே.” தழுதழுத்த குரலில் கெஞ்சினாள். ஏற்கனவே பணத்தை வைத்து அவர்களுக்குள் பெரும் பிரச்சனை ஒன்று நடந்திருக்க, திரும்பவும் அதே பணத்திற்காக அவனிடம் கெஞ்சும் இந்த நிலை அவள் நெஞ்சை அறுத்தது.

“எனக்கு நம்பிக்கை இல்ல!” என்றான் அவன் தன் முடிவிலிருந்து இறங்கி வராதவனாக.

“சரி, நீங்க ஏஜென்சிக்கு எண்டு நினைக்காதீங்க. எனக்குத் தாங்கோ. நான் உங்களுக்குத் திருப்பித் தாறன்.”

“உனக்கு நான் கடன் தர நீ வேற நான் வேறயா? அறிவில்லாம எதையாவது உளறாத கானவி! இப்பவே பேசின பேச்ச மாத்தி இங்க இவ்வளவு தா எண்டு கேக்கிறவே, அவனை இடையில எங்கயாவது ஒரு நாட்டில வச்சுக்கொண்டு, இன்னும் தா எண்டு கேட்டா என்ன செய்வீங்க? இல்ல, உங்களிட்ட இருந்து எல்லாக் காசையும் பிடுங்கிப்போட்டு, சரி வரேல்ல எண்டு சொல்லித் திரும்பக் கொண்டுவந்து விட்டா என்ன செய்வீங்க?” என்றான் சுள் என்று ஏறிய சினத்துடன்.

எதிர்மறையாகவே பேசுகிற கணவனைப் பரிதவிப்புடன் பார்த்தாள் கானவி. இப்படி எல்லோரும் யோசித்திருந்தால் யாருமே வெளிநாடு சென்றிருக்க மாட்டார்களே.

“இதுக்குப் பேசாம அவ்வளவு காசையும் போட்டு இங்கயே தொழில் செய்யச் சொல்லு. இல்ல, சிவாவோட ரெண்டு வருசத்துக்கு நிண்டு வேலையப் பழகச் சொல்லு. பிறகு அவனுக்கும் ஒரு கடை போட்டுக் குடுக்கலாம்.”

“அவனுக்கு வெளிநாட்டுக்குப் போகத்தான் விருப்பம்!” என்றாள் இன்னதென்று பிரித்தறிய முடியாத குரலில்.

“அதுக்கெல்லாம் என்னால காசு தரேலாது!” அவனும் முகத்துக்கு நேராகவே சொன்னான்.

எவ்வளவு உறுதியாக மறுக்கிறான்? மளுக்கென்று அவள் விழிகளில் நீர் திரண்டுபோயிற்று.

“வார்த்தைக்கு வார்த்தை ஏமாறப்போறான், போகமாட்டான் எண்டு எதிர்மறையாவே சொல்லுறீங்க. உங்கட தம்பி மட்டும் தொழிலில நல்லா வருவார் எண்டு எப்பிடி நம்புறீங்க? இங்கயும் தொழில்ல நொடிஞ்சுபோன ஆக்கள் இருக்கினம்தானே?” என்றவளை முறைத்தான் அவன்.

“அவனுக்கு அனுபவம் இருக்கு. இவ்வளவு காலமும் வேலை செய்து நீக்குப்போக்கு, நெளிவு சுளிவு எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கிறான். அதவிட அவன் காரியக்காரன். உன்ர தம்பி மாதிரி இல்ல. அவன் தோக்க மாட்டான்.” என்றான் அசைக்க முடியா நம்பிக்கையோடு.

உன்ர தம்பி மாதிரி இல்லை என்றால் அதன் அர்த்தம் என்ன? அவள் தம்பி முட்டாள் என்பதா? கானவிக்கு மிகவும் வலித்தது. ஆனாலும் அதை ஒதுக்கி, “அப்ப நான் என்ர நகைகளை வச்சுக் குடுக்கட்டா?” என்று கேட்டாள்.

“உனக்கு நான் சொல்லுறது விளங்குதா இல்லையா கானவி?” என்றான் பொறுமையை இழந்த குரலில். “அவங்கள் ஏத்த மாட்டாங்கள் எண்டு சொல்லுறன். காச வாங்கிப்போட்டு ஏமாத்தப் போறாங்கள் எண்டு சொல்லுறன். அது விளங்காம நகையை வைக்கவா எண்டுறாய். அதையாவது வச்சிரு. உன்ர தம்பி திரும்பி வந்து நிப்பான். அப்ப ஏதாவது செய்ய உதவும்.”

இப்போது அவளுக்குக் கோபம் வந்தது. “அப்பிடியெல்லாம் நடக்காது. அவன் கட்டாயம் போவான்.” என்றாள் அவளும் நம்பிக்கை நிறைந்த குரலில்.

“அவன் போறான், போகேல்ல. அதைப் பற்றி எனக்கு அக்கறை இல்ல. ஆனா நீ நகைகளைக் குடுக்கக் கூடாது! அவ்வளவுதான்!” என்றான் முடியாக.

“அத நீங்க சொல்லேலாது!” அவளும் விடுவதாய் இல்லை.

“நான் சொல்லாம வேற ஆர் சொல்லோணும் உனக்கு?” பார்வையில் கூர்மை ஏறக் கேட்டான்.

“உங்கட தம்பிக்குக் காசு குடுக்காதீங்க எண்டு நான் சொன்னா கேப்பீங்களா?”

“உனக்கு ஏற்கனவே சொல்லீட்டன். அவன் உருப்படுறதுக்கு கேக்கிறான் எண்டு.” என்றான் முறைத்துக்கொண்டு.

“நானும் உங்களுக்குச் சொல்லீட்டன். என்ர தம்பியும் உருப்படுறதுக்குத்தான் வெளிநாடு போறான் எண்டு.”

“சரி போய் உருப்படட்டும். ஆனா நீ நகையைக் குடுக்கக் கூடாது. அவ்வளவுதான்.”

“அது என்ர நகை. அத நான் ஆருக்குக் குடுக்கிறது, குடுக்கக் கூடாது எண்டு நான் முடிவு செய்றன்.”

அந்தப் பேச்சு அவனை இன்னுமே ஏற்றிவிட்டது. “கானவி! திரும்ப எங்களுக்க இன்னொரு சண்டை வேண்டாம் எண்டு பாக்கிறன். பேசாம போ!” என்றான் வாசலைக் காட்டி.

“உங்கட காசைத் தரமாட்டன் எண்டு நீங்க தாராளமாச் சொல்லலாம். என்ர நகையைக் குடுக்கக் கூடாது எண்டு நீங்க சொல்லேலாது. அது என்ர நகை. நான் குடுக்கத்தான் போறன்!” அவனின் உறுதியான மறுப்பே அவளை அப்படிப் பேச வைத்தது.

“அப்பிடிக் குடுத்தியோ அதுக்குப் பிறகு இந்த வீட்டில நீ இருக்கேலாது.” என்றான் பட்டென்று.

அதிர்ந்து அவனையே பார்த்தாள் கானவி.

“நான் சொல்லுறதைக் கேட்டு ஒழுங்கா இருக்கிறதா இருந்தா இங்க இரு. இல்லையோ உன்ர வீட்டுக்கே நடையைக் கட்டு. இந்தப் பக்கம் வந்திடாத!” என்றுவிட்டுப் போனான் அவன்.

ஏற்கனவே ஒருவர் மீதான கோபங்கள் மற்றவர் மனத்தில் நிறைந்து கிடந்தன. அவை பேசப்படாமல், தீர்வு காணப்படாமல் அப்படியே இருக்கையில் ஒரு அளவு தாண்டிப் பொறுமையாக இருவராலும் போக முடியவில்லை. வார்த்தைகள் தடித்து, வாழ்க்கை மீண்டும் கேள்விக்குறியாகி நின்றது.

error: Alert: Content selection is disabled!!